Published:Updated:

ஏர் இந்தியா: 68 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் `டாடா'வின் கைசேருமா?

டாட்டா சன்ஸ் நிறுவனம் வசமே ஏர் இந்தியா செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இது மட்டும் நடந்தால், 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா மீண்டும் டாடா குழுமத்துடன் இணையும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஏர் இந்தியா நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இந்த நிறுவனத்தை மீட்டெடுப்பதற்கு ஒன்றிய அரசு 2011-ம் ஆண்டு முதல் 30,000 கோடி ரூபாய் வரை பங்களிப்பு செய்துள்ளது. என்றாலும், நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாகத் தனியாருக்கு விற்பனை செய்ய ஒன்றிய அரசு கொள்கை ரீதியான முடிவை எடுத்தது.

Air India Flight which travelled from San Fransico to Banglore
Air India Flight which travelled from San Fransico to Banglore

இதன் தொடர்ச்சியாக, தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தைக் கையகப்படுத்த டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் தொகையில் 15 சதவிகிதத்தை வைப்பு நிதியாக நிறுவனங்கள் ஒன்றிய அரசுக்குச் செலுத்த வேண்டும். அதிக டெண்டர் உரிமை தொகை கோரும் நிறுவனத்துக்கு ஏர் இந்தியா நிறுவனம் விற்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாகப் பல நிறுவனங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கான போட்டியில் இறங்கின. இந்த டெண்டர் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் டாடா சன்ஸ் நிறுவனம் அதிக தொகையைத் தனது டெண்டரில் குறிப்பிட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. ஆனால், பின்னர் அரசு தரப்பிலிருந்து அதை மறுத்துவிட்டனர். இந்த டெண்டர் விவரங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு விரைவில் எந்த நிறுவனத்துக்கு ஏர் இந்தியா விற்கப்பட இருக்கிறது என்பதற்கான அதிகார பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது.

டாட்டா சன்ஸ் நிறுவனம் வசமே ஏர் இந்தியா செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இது மட்டும் நடந்தால், 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா மீண்டும் டாடா குழுமத்துடன் இணையும்.

ஏர் இந்தியா, டாடா சன்ஸ் நிறுவனம் வசமானால் நமது நாட்டில் உள்ள 4,400 உள்நாட்டு மற்றும் 1,800 வெளிநாட்டு விமான பார்க்கிங் இடங்கள் டாடா சன்ஸ் நிறுவனத்திடம் செல்லும். மேலும், வெளிநாடுகளில் உள்ள 900 பார்க்கிங் இடங்கள் டாடா சன்ஸ் நிறுவனத்துக்குக் கிடைக்கும்.

இதன் மூலம் நமது நாட்டின் ஒரே பொதுத்துறை விமான சேவை வழங்கும் நிறுவனம் என்ற அந்தஸ்தை ஏர் இந்தியா இழக்கவிருக்கிறது. தற்போது விமான சேவை வழங்குவது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. கிங்பிஷர், டெக்கான் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ் போன்ற பல விமான சேவை நிறுவனங்கள் கடுமையான நஷ்டம் காரணமாக இழுத்து மூடப்பட்டன. நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவை லாப பாதைக்கு டாடா சன்ஸ் நிறுவனம் மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Ratan Tata
Ratan Tata
`அன்று நுசர்வன்ஜி கண்ட கனவுதான் இன்றைய டாடா!' மாபெரும் சாம்ராஜ்யமாக டாடா எழுந்தது எப்படி?

ஏர் இந்தியா நிறுவனம் 1932-ம் ஆண்டு அக்டோபர் 15 அன்று டாடா ஏர் சர்வீசஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இதைத் தொடங்கியவர் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (சுருக்கமாக ஜேஆர்டி டாடா). இவர்தான் நமது நாட்டில் முதல் வணிக விமான ஓட்டி உரிமம் பெற்றவர் ஆவார். முதலில் டாடா ஏர் சர்வீசஸ், சரக்கு சேவையில்தான் ஈடுபட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகு டாடா ஏர் சர்வீசஸ் படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. பயணிகள் போக்குவரத்தை திருவனந்தபுரம், சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கிடையே இயக்கத் தொடங்கியது. 1938-ம் ஆண்டு டாட்டா ஏர் சர்வீஸஸ் என்ற பெயர் டாட்டா ஏர்லைன்ஸ் என்று மாற்றப்பட்டது. இலங்கை, பர்மா போன்ற அண்டை நாடுகளுக்கும் விமான சேவைகள் தொடங்கப்பட்டன.

அதன் பிறகு 1946-ம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டு டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயர் ஏர் இந்தியா என்று மாற்றம் செய்யப்பட்டது. பின் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை இந்திய அரசு கையகப்படுத்தியது.

1953-ம் ஆண்டு இந்திய அரசு ஏர் கார்ப்பரேஷன் சட்டத்தை நிறைவேற்றியது. டாடா சன்ஸ் நிறுவனத்திடம் இருந்த பெரும்பான்மையான பங்குகளை இந்திய அரசு வாங்கியது. அதனால் ஏர் இந்தியா நிறுவனம் பொதுத்துறை நிறுவனப் பட்டியலில் சேர்ந்தது. ஜேஆர்டி டாட்டா ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக 1977-ம் ஆண்டு வரை தொடர்ந்தார்.

Flight (Representational Image)
Flight (Representational Image)
Image by RENE RAUSCHENBERGER from Pixabay
`1932-ல் டாடா ஏர்லைன்ஸ்.. இப்போது ஏர் இந்தியா' - மீண்டும் பழைய நிறுவனத்தைத் தன் வசப்படுத்துமா டாடா?!

1994-ம் ஆண்டு வரை நாட்டின் ஒரே விமான சேவை வழங்கும் நிறுவனமாக ஏர் இந்தியா மட்டுமே இருந்தது. அதன் பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதுவரை லாபத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா தனியார் துறையின் போட்டி காரணமாக நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. தற்போதய நிலவரப்படி கடந்த ஆண்டில் அதிக நஷ்டத்தை சந்தித்த மூன்று பொது துறை நிறுவனங்களில் ஏர் இந்தியா உள்ளது. 2018-19 காலகட்டத்தில் இந்த நிறுவனம் ரூ. 7,636 கோடி நிகர நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் டாடா சன்ஸ் நிறுவனத்திடமே ஏர் இந்தியா செல்ல இருக்கிறது.

தற்போது ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் டாடா சன்ஸ் கூட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஏர் ஏசியா நிறுவனத்தில் 30 சதவிகித பங்குகளை டாடா சன்ஸ் கொண்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு