Published:Updated:

உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு வருமா?

மளிகைப் பொருள்
பிரீமியம் ஸ்டோரி
மளிகைப் பொருள்

தொடர் முடக்கம் தரும் அச்சம்!

உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு வருமா?

தொடர் முடக்கம் தரும் அச்சம்!

Published:Updated:
மளிகைப் பொருள்
பிரீமியம் ஸ்டோரி
மளிகைப் பொருள்
ந்தியா முழுவதும் சுமார் ஒரு மாத காலமாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியத் தேவையான மளிகைப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல பொருள்களின் விலை அதிகரித்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

`அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுவருவதில் எவ்விதத் தடையும் இல்லை’ என்று அரசாங்கம் கூறிவந்தாலும், அரிசி தவிர பருப்பு வகைகளுக்கும், எஃப்.எம்.சி.ஜி பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலையும் உயரவே செய்திருக்கிறது. இது குறித்து அந்தந்தத் துறை சார்ந்த வணிகர் சங்கப் பிரதிநிதிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தோம். அவர்கள் சொன்னவை...

உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு வருமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘எண்ணெய் உற்பத்தியில் சிக்கல்!’’

வி.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் செயலாளர், மதுரை, எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் சங்கம்.

“நம் நாட்டுக்கு ஓராண்டுக்கு சுமார் 2.30 லட்சம் கோடி டன் சமையல் எண்ணெய் தேவை. நம் உள்நாட்டு உற்பத்தி 30% மட்டுமே. மீதி 70% வெளிநாட்டு இறக்குமதியையே நம்பியிருக்கிறோம். ஆண்டுக்கு 1.5 கோடி மெட்ரிக் டன் சமையல் எண்ணெயை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். இவற்றில் 90 லட்சம் மெட்ரிக் டன் பாமாயிலும், 60 லட்சம் மெட்ரிக் டன் சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெயும் அடக்கம்.

சமையல் எண்ணெயைப் பொறுத்தவரை, பாமாயில்தான் விலை குறைவானது. நம்முடைய சமையல் எண்ணெய் இறக்குமதியில் மலேசியாவும் இந்தோனேஷியாவும் முக்கியப் பங்குவகிக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, சமையல் எண்ணெய்த் தயாரிப்பில் எள் மற்றும் நிலக்கடலை முக்கியப் பங்குவகிக்கின்றன. வட ஆற்காடு, தென்னாற்காடு மாவட்டங்களில் எள் அதிக அளவில் விளைகிறது. தஞ்சாவூர், விருத்தாசலம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் நிலக்கடலை அதிக அளவில் விளைகிறது. இன்றைய ஊரடங்குச் சூழலில், நம் தேவைக்கேற்ற அளவுக்கு சமையல் எண்ணெய் கைவசம் இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனினும், சமையல் எண்ணெய் தொடர்ச்சியாகக் கிடைப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. எண்ணெய் தயாரிப்பு ஆலைகள் அனைத்தும் இயங்கினாலும், பணியாளர்கள் குறைவாகவே வேலைக்கு வருகிறார்கள். எனவே, உற்பத்தி அளவு 30% என்ற அளவில்தான் இருக்கிறது.

வி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.ஜெயபிரகாசம்
வி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.ஜெயபிரகாசம்

ரீஃபைனரிகளில் உற்பத்தி நடந்தாலும் அவற்றை பேக்கிங் செய்யும் பொருள்களின் உற்பத்தியும் முக்கியம். பேக்கிங் பவுச், அட்டைப்பெட்டி, பெட் பாட்டில் போன்றவற்றின் இருப்பு குறைந்துவருகிறது. எனவே, அவற்றின் தயாரிப்பு நிறுவனங்களும் இயங்க வேண்டியது அவசியம். பார்கோட் இங்க், ரீஃபைண்டு கெமிக்கல்களும் பற்றாக்குறையாக உள்ளன. பாய்லர்களுக்கான விறகு பற்றாக்குறையாக இருக்கிறது. விறகுக் கடைகளைத் திறப்பதற்கும், விறகு லோடு ஏற்றி வருவதற்கும் அனுமதியளிக்க வேண்டும்.

நல்லெண்ணெய் உற்பத்தியைப் பொறுத்த வரை, 85% அளவுக்கு கொல்கத்தாவிலிருந்து வரும் எள் பயன்படுத்தப்படுகிறது. கொல்கத்தாவிலிருந்து கிடைக்கும் எள் வித்துகள் மூலமாக, 15 கிலோ நல்லெண்ணெய் (1 டின்) தயாரிப்பதற்கு, சுமார் 3,300 ரூபாய் ஆகிறது. அதுவே உள்ளூர் எள் மூலமாக 15 கிலோ நல்லெண்ணெய் தயாரிப்பதற்கு சுமார் 4,000 ரூபாய் ஆகிறது. எனவே, கொல்கத்தா எள் வித்துகள் வர வேண்டியது கட்டாயம்.

தற்போது நேஷனல் பெர்மிட் லாரிகள், வட மாநிலங்களி லிருந்து வந்த பிறகு திரும்ப எடுத்துச் செல்வதற்குப் பொருள்கள் கிடையாது. எனவே, 10 லாரிகள் வர வேண்டிய இடத்தில் 2-3 லாரிகள்தான் வருகின்றன. தற்போது தமிழகத்தில் எள் வித்துகள் விளைச்சல் சீஸன். எனவே, விவசாயிகள் வயல் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினால் எள் வித்துகள் வரத்து அதிகரிக்கும்.

கடலெண்ணெய் தயாரிப்புக்கு உதவும் நிலக்கடலை பெரும்பாலும் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்துதான் கொண்டு வரப்படும். ஆந்திரா, கர்நாடகாவிலிருந்தும்கூட வரும். தற்போது அங்கே நிலக்கடலை மண்டிகள் மூடப்பட்டிருப்பதால், நிலக்கடலை வரத்து இல்லை. உள்ளூரில், தஞ்சாவூரிலிருந்துதான் நிலக்கடலை வருகிறது. இதன் விலை ஒரு மூட்டைக்கு 6,700 ரூபாயாக இருக்கிறது. ஆலங்குடியிலிருந்து கிடைக்கும் நிலக்கடலை, ஒரு மூட்டை 7,000 ரூபாய் விலைக்கு வாங்கப்படுகிறது. இவற்றிலிருந்து மூட்டைக்கு 30 கிலோ எண்ணெய் கிடைக்கும். குஜராத்திலிருந்து வரும் நிலக்கடலையிலிருந்து ஒரு மூட்டைக்கு 36 கிலோ எண்ணெய் வரை எடுக்க முடியும். மூட்டை விலையும் சுமார் 6,300 ரூபாய் என்ற அளவில்தான் இருக்கும். இந்தத் தட்டுப்பாடுகள் அனைத்தும் விரைவில் சரியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

மளிகைப் பொருள்
மளிகைப் பொருள்

வியாபாரிகள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல்தான் மக்களின் தேவை உணர்ந்து, ஒரு சேவையாகக் கடை திறந்து வியாபாரம் செய்துவருகிறார்கள். அவர்களைப் பதுக்கல்காரர்கள் என்பதுபோல சிலர் அடையாளப்படுத்த நினைப்பது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது.”

‘‘மளிகைப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு!’’

எஸ்.பி.ஜெயபிரகாசம், தலைவர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்.

“தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, காய்கறிகள் மட்டுமே தமிழ்நாட்டிலேயே விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. மளிகைப் பொருள்கள் 80% வட மாநிலங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகாவிலிருந்தும் வருகின்றன.

தற்போதைய சூழலில் சப்ளை மற்றும் தேவைப்பாடு குறித்த தெளிவு யாருக்கும் இல்லை.

பொதுவாக, எங்களுக்குக் கூடுதல் தேவையிருந்தால் திருச்சி போன்ற மற்ற ஊர்களிலிருந்து வரவழைப்போம். ஆனால், தற்போது அவர்களிடமும் கூடுதலாகப் பொருள் இருப்பு இல்லாத நிலை. சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம் ஆகிய நான்கு பொருள்களும் குஜராத்திலுள்ள உஜ்ஜா பகுதியில் அமைந்திருக்கும் மார்க்கெட்டிங் கமிட்டி யார்டிலிருந்துதான் வாங்கப்படுகின்றன. தற்போது அந்த யார்டு மூடப்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் இன்னும் சில நாள்களில் இந்த நான்கு பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். தமிழ்நாடு, கேரளாவில் உணவில் பட்டாணி மாவு அதிகமாகச் சேர்த்துக்கொள்வார்கள். சென்னை, தூத்துக்குடி, மும்பை ஆகிய துறைமுகங்களுக்கு வந்திறங்கிய பட்டாணி மாவு, தவறாக ஏற்றிக்கொண்டு வரப்பட்டதாகக் கூறி வழக்கு விசாரணை நடக்கிறது. இப்போதிருக்கும் சூழலில் அந்த வழக்கை ரத்து செய்துவிட்டு, துறைமுகத்தில் தேங்கியிருக்கும் பட்டாணி மாவை சப்ளை செய்யும்படி அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி செய்வதால், உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி அது தடை செய்யப்பட்டிருந்தது. அந்தத் தடையை விலக்க வேண்டும் என்று கடந்த மார்ச் 31-ம் தேதி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியிருந்தோம். இந்த மாதம் 13-ம் தேதி சில நிபந்தனைகளுடன் இறக்குமதிக்கான தடை விலக்கப்பட்டிருக்கிறது. எனவே, சமையல் எண்ணெய்க்கான தட்டுப்பாடு விலகிவிடும்.’’

‘‘உற்பத்திக் குறைவால்தான் பாதிப்பு!’’

ஜி.பால்ராஜ், தலைவர், மதுரை பலசரக்கு, சில்லறை வணிகர்கள் சங்கம்.

“பலசரக்குகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் நாம் அண்டை மாநிலங்களையும், வட மாநிலங்களையும் சார்ந்திருக்கிறோம்.

பொதுவாக தமிழ்நாட்டில் கோதுமை, ரவை, மைதாவை அதிகம் சேர்ப்போம். தற்போது ஹோட்டல், பேக்கரி, மாலை நேர உணவகங்கள் மூடப்பட்டிருப்பதால், மைதா விற்பனையில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. மத்தியப் பிரதேசம், குஜராத்தில் கோதுமை ஆலைகள் மூடப்பட்டிருப்பதால், இவற்றின் வரவு தடைப் பட்டுள்ளது. மைதா தயாரிப்பு ஆலைகள் திண்டுக்கல், விருதுநகர் பகுதிகளில் அதிகம் உள்ளன. ஆனால், தற்போது மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திலிருக்கும் தடை காரணமாக விநியோகச் சங்கிலி துண்டிக்கப்பட்டிருக்கிறது.

ஜி.பால்ராஜ், ஏ.எஸ்.வி.ஏ.மாதவன்
ஜி.பால்ராஜ், ஏ.எஸ்.வி.ஏ.மாதவன்

தற்போது பிராண்டடு கோதுமை மாவு வருவதில்லை. எனவே, நாங்களே கோதுமையை அரைத்துப் பயன்படுத்துகிறோம். கோதுமை அரைப்பதற்கான கூலி இரு மடங்காகி விட்டதால் விலையும் அதிகரித்துள்ளது. எங்கள் சிரமங்கள் குறித்து தமிழக அரசிடம் தெரிவித்திருக்கிறோம். விரைவில் நிலைமை சரியாகும் என்று நம்புகிறோம்.”

‘‘சப்ளை செய்வதில் நிறைய பிரச்னை!’’

ஏ.எஸ்.வி.ஏ.மாதவன், தலைவர், மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்.

“நுகர்வோர் பொருள்களைப் பொறுத்தவரை, தயாரிப்புகளை டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு சப்ளை செய்வதற்கு அத்தியாவசியப் பொருள்கள் என்ற வகையில் தயாரிப்பு நிறுவனங்களுக்குரிய பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, லாரி மூலம் ஏற்றி அனுப்பிவிடுகிறார்கள்.

ஆனால், டிஸ்ட்ரிபியூட்டர்கள், டீலர்களுக்கு சப்ளை செய்வதற்கு இத்தகைய பாஸ் வழங்கப்பட வில்லை. இதன் காரணமாக பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. நாங்கள் எங்கள் வாகனத்தின் மூலம் பொருள்களை எடுத்துச் சென்றால், காவல்துறையினர் வண்டிகளைப் பறிமுதல் செய்து வைத்துக்கொள்கிறார்கள். ஓட்டுநர்கள்மீதும் வழக்குப் பதிகிறார்கள்.

எனவே, எங்களால் பொருள்களைக் கொண்டு சென்று தர முடியாததால் கடைக்காரர்கள் டிஸ்ட்ரிபியூட்டர்களின் இடத்துக்கே வந்துவிடுகிறார்கள். அப்படி வருபவர்களுக்கு நாங்கள் டோக்கன் போட்டுச் சமூக இடைவெளியுடன் வழங்க முயன்றாலும், கூட்டம் சேர்ந்துவிடுகிறது. காவல்துறையினர் இதைப் பார்த்ததும் டிஸ்ட்ரிபியூட்டர்களை அழைத்துச் சென்று விசாரிக்கிறார்கள். ஒரு டிஸ்ட்ரிபியூட்டர்மீது முதல் தகவல் அறிக்கையே பதிந்துவிட்டார்கள். எனவே, டிஸ்ட்ரிபியூட்டர்கள் `நமக்கு இது தேவையில்லாத அவமானம், இப்படியெல்லாம் விற்பனை செய்யத் தேவையில்லை’ என்று கூறி வருகின்றனர்.

அரசுத் தரப்பில் இதற்குத் தீர்வு காணாதவரை நிறுவனத்தைத் திறக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். இது தொடர்பாக தமிழக அரசோடு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், குறிப்பிட்ட அளவு டிஸ்ட்ரிபியூட்டர்களுக்காவது பாஸ் வழங்கினால் பிஸ்கட், ஆயில் மற்றும் கோதுமை மாவு போன்ற பொருள்களைத் தட்டுப்பாடு ஏற்படாதபடி கொண்டு சேர்க்கலாம் என்று கூறியிருக்கிறோம். இப்போதே பிஸ்கட் தட்டுப்பாடு காரணமாக 10 ரூபாய் பிஸ்கட்டுகள் 15 ரூபாய் வரை விற்பனையாகின்றன. விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.”

வணிகர்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, கைவசமிருக்கும் அத்தியாவசியப் பொருள்களைக் கடைக்குக் கொண்டுபோய் சேர்ப்பதில் ஓர் ஒழுங்கைக் கொண்டுவந்தால், பற்றாக்குறை, தட்டுப்பாடு என்ற பேச்சே வராமல் இந்தக் கொடிய காலத்தைக் கடந்துவிடலாம். மக்களின் வருமானம் குறைந்திருக்கும் இந்த நேரத்தில், அதிக விலை தந்து பொருள்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர்களின் கோபத்தைப் பிற்பாடு சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும்!