Published:Updated:

கல்லூரி ஆசிரியர் டு மருந்து தயாரிப்பு பிசினஸ்... கலக்கும் பெண்மணி!

மேனகா மகேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
மேனகா மகேந்திரன்

பார்மா துறையில் ஜெயித்த மைக்ரோ பயாலஜிஸ்ட்! - E N T R P R E N E U R

தமிழகத்தில் மருந்து மூலப் பொருள் உற்பத்தி நிறுவனத்தை நிர்வகிக்கும் முதல் பெண் என்ற பட்டத்தை மேனகா மகேந்திரனுக்குக் கொடுக்கலாம். வாழ்க்கையில் சாதிக்க அடுத்து அடுத்து என்கிற தேடலுடன் பயணிக்கும் இளம் பெண் தொழில் முனைவோர்தான் மேனகா மகேந்திரன்.

உலகில் 90 சதவிகிதத்துக்கு மேலான நாடுகளுக்கு இந்தியா விலிருந்துதான் மருந்துகள் தயாரிக்கப் பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோவிட்-19 தடுப்பூசி உற்பத்தியில்கூட இந்தியா முன்னிலையில்தான் உள்ளது. மருந்து உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருந்தாலும் அதைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள் களை வாங்குவதற்கு சீனாவைத்தான் நம்பியிருக்கிறோம். “அதிக விலை கொடுத்து மூலப்பொருள்களை வாங்குவதைவிட அதை நாமே தயாரித்தால்...” என மாத்தி யோசித்ததால் உருவாகியிருக்கிறது பயோநீம்டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம். மேனகா எப்படி இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார்?

கல்யாணம்... பிறகு பி.ஹெச்டி...

“நாகர்கோவிலில் எம்.எஸ்ஸி மைக்ரோபயாலஜி படித்து முடித்து விட்டு, எம்.பில் மைக்ரோ பயோ டெக்னாலஜி படிக்கும்போதே சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தேன். கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே திருமணம் நடைபெற்றது. கணவர் மகேந்திரன் வேதியியல் விஞ்ஞானி; தைவானில் பணியாற்றிவிட்டு வந்திருந்தார். திருமணத்துக்குப் பிறகு, சென்னையில் செட்டிலானோம். அந்த நேரத்தில் என் கணவர் பிஹெச்.டி படிப்பதற்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியரிடம் சேர்ந்தார். அந்தப் பேராசிரியரே நான் பி.ஹெச்.டி செய்யவும் வாய்ப்பளித்தார். இருவரும் சேர்ந்தே பிஹெச்.டி படித்து முடித்தோம்.

குழந்தையை வளர்த்த பெற்றோர்...

“ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே பகுதி நேரத்தில் பிஹெச்.டி படித்தார் கணவர். நான் முழு நேரமாகப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எங்களுக்குப் பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை, படிப்பு என இரண்டையும் நிர்வகிப்பது சிக்கலான சூழலாக இருந்தது. அப்போது என் பெற்றோர் தான், ‘நீ படி! நாங்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்கிறோம்’ என்று, பிறந்து எட்டு மாதமான என் குழந்தையைக் கொண்டுபோய் வளர்த்தார்கள். அவளுக்கு இரண்டரை வயதாகும் வரை அங்கேதான் வளர்ந்தாள். அந்தச் சமயத்தில் நான் படிப்பையும் முடித்து விட்டேன்” எனும் மேனகாவுக்கு பேராசிரியர் ஆவதில் ஆர்வம் இருக்கவில்லை.

மேனகா மகேந்திரன்
மேனகா மகேந்திரன்

சீனா போன கணவர்...

“தொழில்முனைவோராக ஆக வேண்டும் என்பதுதான் விருப்பம். சென்னையில் சிறுசேரியில் பெண்கள் பயோடெக் பார்க் என்ற மையம் செயல்பட்டு வருகிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின்கீழ் இந்த மையம் தொடங்கப்பட்டது. தற்போது நேரடியாக மத்திய பயோடெக் துறையின்கீழ் செயல்பட்டு வருகிறது. திருமணமாகி ஆய்வுப்பணிகள் அல்லது வேலையிலிருந்து பிரேக் எடுத்த பெண்கள் மீண்டும் ஒரு தொழில் தொடங்கும் எண்ணமும் கான்செப்ட்டும் இருந்தால், நேர்காணல் நடத்தி அவர்களுக்கு யூனிட் அலாட் செய்யப்படும்.

நான் பிஹெச்.டி படித்தபோது இறுதியாண்டு மாணவர்களின் புராஜெக்ட்டுகளுக்கு ஐந்து ஆண்டுகள் வழிகாட்டி வந்தேன். அதேபோன்று மாணவர்களின் புராஜெக்டுக்குப் பயிற்சியளிக்கும் யூனிட் ஒன்றை சிறுசேரியில் 2013-ல் நானும் கணவரும் சேர்ந்து தொடங்கினோம். சில மாதங்களிலேயே சீனாவிலுள்ள எம்.என்.சி மருந்து நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாகப் பணியாற்றும் வாய்ப்பு வர, கணவர் பறந்துவிட்டார். நான் இங்கே இந்தத் தொழிலைப் பார்த்து வந்தேன். அவர் சீனாவுக்குச் சென்ற ஆறு மாதங்களில் அதே நிறுவனத்தில் மைக்ரோ பயாலஜி நிபுணருக்கான தேவை ஏற்பட்டது.

ஆங்கிலம் தெரிந்தால் பிழைக்கலாம்...

சீனாவில் ஆங்கிலப் பயன்பாடு குறைவு என்பதால், தங்கள் புராஜெக்ட்டு களை ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளுக்குத்தான் கொடுப்பார்கள். புராஜெக்டுகளை செய்யும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களைக் கையாள துறையைச் சார்ந்த நிபுணர்களைப் பணியமர்த்துவார்கள். இந்தப் பொறுப்புக்கு பெரும்பாலும் அவர்கள் தெரிவு இந்தியர்கள்தானம். காரணம், இந்தியர்களின் ஆங்கிலத்தை அவர் களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். பிற நாட்டினரைக் கையாளவும் இந்தியர் கள் தேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதால், அதிக வரவேற்பு தருவார்கள்.

ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால், வெளிநாட்டில் பணியாற்றிய அனுபவம் இருந்தால் அதைத் தொய்வின்றி தொடர்ந்து நடத்த முடியும். இது நல்ல வாய்ப்பு என்பதால், நான் அதை இழக்க விரும்பவில்லை. வழக்கம்போல மகளைப் பெற்றோரிடம் விட்டுவிட்டு 3 வயது மகனுடன் சீனாவுக்குச் சென்றேன். மகனை அங்கே பள்ளியில் சேர்த்தேன். சிறுசேரி யிலிருந்து யூனிட்டை ஒரு குழு வினரை நிர்வகிக்க ஏற்பாடு செய்தேன்.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இரண்டரை மணி நேர வித்தி யாசம். அதனால் காலையில் நான் யூனிட்டுக்குள் செல்வதற்கு முன்பே இங்கிருப்பவர்களுக்கு வேலைகளை ஒதுக்கீடு செய்து விடுவேன். அவ்வப்போது பிரேக் நேரத்தில் அப்டேட்டுகளை வாட்ஸ்அப்பில் தெரிந்து கொள்வேன். மூன்று மாதத்துக்கு ஒருமுறை இந்தியாவுக்கு நேரில் வந்து கண்காணிப்பேன்” எனும் மேனகாவுக்கு அப்போதுதான் மூலப்பொருள் உற்பத்தி செய்யலாம் என்ற எண்ணம் உதித்ததாகச் சொன்னார்.

மூலப்பொருள் தயாரிப்பு...

“மருந்துப் பொருள் நிறுவனங் கள் மருந்துகளைத் தயாரிப்ப தற்காக அமெரிக்கா உணவு மற்றும் மருந்துப்பொருள் துறை உள்ளிட்ட அமைப்புகளிடம் உரிமம் பெற வேண்டும். இதற்கான ஆவணங்களை ஆங்கிலத்தில் தயாரிக்க வேண்டும். ஆங்கில அறிவுடன் தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்றவர்களால் தான் அதைச் செய்ய முடியும். இந்தப் பணியை நான் சீனா விலிருந்து செய்தபோது பல்வேறு வெளிநாட்டினரின் அறிமுகம் கிடைத்தது. இரண்டரை ஆண்டு கள் அனுபவங்களைப் பெற்ற பிறகு வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்குத் திரும்பினேன்.

“மருந்து உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருள்களைத் தயாரித்து அளிப்பதற்கு பல்வேறு வழிகள் உண்டு. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவினர் மூலம் புதிய வழிமுறையில் மூலக்கூறு களைத் தொகுத்துக் கொடுக் கிறோம். அதன்மூலம் ரூ.1,500-க்கு விற்கும் ஒரு கிலோ மூலக்கூறுகளை எங்களால் ரூ.800-க்குத் தயாரிக்க முடியும். இது முதலீட்டாளர் களுக்கு மிகப் பெரும் லாபத்தைக் கொடுக்கும். சீனாவில் பணி யாற்றியபோது தான் இதைப் பற்றிய அறிவு கிடைத்தது. சீனாவிலிருந்து மொத்தமாக மூலப்பொருள்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் இரண்டு மூலப்பொருளை உற்பத்தி செய்தாலே மிகப்பெரிய சாதனையாக இருக்கும்” என்ற முடிவுக்கு வந்தேன்.

இந்தியாவுக்குத் திரும்பி சிறுசேரியில் அதே யூனிட்டில் மூலப்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினேன். முதன்முதலாக ஒரு சீன நிறுவனத்துக்கு மூலப் பொருள்கள் உற்பத்தி செய்து தந்தோம். சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு அவ்வளவு பெரிய வாய்ப்பு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. தவிர, இந்த வேலையை ஒரு பெண்ணிடம் கொடுப்பதா என்ற தயக்கமும் இருந்தது. ஆனால், நான் விடவில்லை. எங்கள் நிபுணர்கள் குழுவின ருடன் இணைந்து பணியாற்றி எங்கள் புராஜெக்ட் பற்றிய பிரசன்டேஷன்களைச் சமர்ப் பித்தும், நேரில் விளக்கமளித்தும் ஒப்புதலைப் பெற்றேன்.

பசுமை வேதியியல் தொழில்நுட்பம்...

மூலப்பொருள்களை உருவாக்குவதற்கு அபாயகரமான வேதிப்பொருள்கள், கரைப்பான்கள், துணைப் பொருள்கள், மனிதப் பாதுகாப்பு இவை யெல்லாம் மிகப்பெரிய சவால்கள். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து பெற வேண்டிய சான்றிதழ் எனப் பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டும். அதற்கான முதலீடும் மிக அதிகமாகத் தேவைப்படும். அதனாலேயே மூலப் பொருள்கள் தயாரிப்பதற்கு இந்திய நிறுவனங்கள் முன்வருவதில்லை.

மூலப்பொருள்களை உற்பத்தி செய்யக் குறைவான வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி, கரைப்பான்களுக்கு வேதிப் பொருள்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து தண்ணீரைக் கரைப்பானாகப் பயன்படுத்தி மூலப்பொருள்களைத் தயாரிக்கிறோம். இதனால் ஆபத்து மிகவும் குறைவு.

புதிய புராஜெக்ட் கையெழுத்தான சமயத்தில் கொரோனா ஊரடங்கு வந்தது. கஷ்டப்பட்டுத்தான் அந்த நாள் களைக் கடந்தோம். தளர்வுகள் அமல் படுத்தப்பட்டவுடன் 50% ஊழியர்களைக் கொண்டு வேலையைத் தொடங்கினோம். ரூ.45 லட்சம் மதிப்புள்ள புராஜெக்டை கோவிட் சமயத்திலும் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்தோம். முதற்கட்டமாக ரத்த உறைவுக்கான மருந்துகளின் மூலப் பொருள்களை 500 கிராம் தயாரித்துக் கொடுத்தோம். வெற்றிகரமாக அதை முடித்துக் கொடுத்ததால் மேலும், சில புதிய புராஜெக்டுகள் கிடைத்தன. 2020 - 2021-ம் ஆண்டில் ரூ.1.5 கோடி வருவாய் கிடைத்தது. அடுத்த நிதியாண்டில் ரூ.3 கோடி இலக்கை எட்டுவோம் என்று நம்புகிறேன்.

குறிப்பிட்ட நிறுவனங்களுக்காக மட்டும் செய்யும் புராஜெக்டுகளுக்கு அடுத்தபடியாக கமர்ஷியல் ரீதியாகவும் மூலப்பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யும் திட்டமும் உள்ளது. ஒரு மாதம் ஒரு டன் மூலப்பொருள் உற்பத்தி செய்யும் அளவுக்கு முதலீடு செய்து உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறோம்” எனத் தன் வெற்றியின் ரகசியம் பகிர்ந்தார் மேனகா.

இவருக்கு வானம் வசப்படட்டும்!

“சவாலான காரியங்களே உயரங்களைத் தொட வைக்கும்!”

“பேராசிரியர் வேலையை விட்டபோதும் நிறைய பேர் ‘பெண்களுக்கு ஏத்த வேலை... கைநிறைய சம்பளம்... இதைவிட்டுட்டு எதுக்கு பிசினஸ் ஆரம்பிக்கணும்’ என்றனர். பிசினஸ் தொடங்கி கொஞ்ச நாள்களிலேயே சீனாவுக்குப் பணியாற்றச் சென்றபோது, ‘‘வீட்டுக்காரர் நல்ல நிலையில இருக்காரு, இங்க பிசினஸும் நல்லபடியாகப் போகுது. அப்புறம் எதுக்கு நீயும் சீனாவுக்குப் போற...’’ என்றார்கள். சீனாவிலிருந்து மீண்டும் இங்கே வந்து பிசினஸ் தொடங்கினபோதும், மீண்டும் அதே பழைய பல்லவிகளைத்தான் பாடினார்கள். ஆனால், எப்பவும் கம்ஃபர்ட் ஸோனில் இருக்க விரும்புறதில்லை. சவாலான காரியங்களைச் செய்யும்போதுதான் தேங்கி நிற்காமல், அடுத்தடுத்த உயரங்களைத் தொட முடியும்” எனச் சொல்லிச் சிரிக்கிறார் மேனகா மகேந்திரன்.

பிட்ஸ்

ற்றுமதியில் இன்னும்கூட கலக்கிக் கொண்டிருக் கிறது சீனா. கோவிட்டுக்குப் பிறகு கடந்த பிப்ரவரியில் சீனாவின் ஏற்றுமதி 154% அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. குண்டூசி முதல் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு வரை அனைத்து பொருள் களையும் தயாரிக்கிறது சீனா!