Published:Updated:

`பெண் தொழில்முனைவோர்கள்; 15 கோடி வேலைவாய்ப்புகள்!'- பெயின்&கம்பெனி சொல்லும் 2030-ம் ஆண்டுக் கணக்கு

பெண் தொழில்முனைவோர்
பெண் தொழில்முனைவோர் ( MICHAEL ZHANG )

தொழிலாளர்களின் நடைமுறை, சமூகத் தடைகள் ஆகியவை பெண் தொழில்முனைவோரை உருவாக்குவதில் சிக்கலை ஏற்படுத்துகின்றன.

``2030-ம் ஆண்டுக்குள், இந்தியாவில் பெண் தொழில்முனைவோருக்கான வேலைவாய்ப்புகளை 150-170 மில்லியன் வரை உருவாக்க முடியும். இது உழைக்கும் வயதினருக்குத் தேவையான புதிய வேலைகளில் 25% அதிகரிக்கும்" என்று அமெரிக்காவைச் சேர்ந்த பெயின் அண்டு கம்பெனி ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்துறையில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகக் கருதப்படும் இந்நிறுவனம் பொது, தனியார் மற்றும் லாப நோக்கம் அல்லாத நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்கிவருகிறது. சமீபத்தில், இந்த நிறுவனத்தின் பங்காளர் மேகா சாவ்லா, பெண் தொழில்முனைவோர் குறித்து இவ்வாறு கூறியிருந்தார்.

நீங்களும் ஆகலாம் பெண் தொழில்முனைவோர்!

மேலும் அவர் கூறுகையில்,``இந்தியாவில் 16 மில்லியன் பெண்களுக்கு, சொந்தமான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்களின்மூலம் சுமார் 27 மில்லியன் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்க முடிகிறது. இந்நிலையில், பெண் தொழில்முனைவோரைத் தொழில் தொடங்குவதற்கும், அவர்களின் தொழில் முனையும் ஆற்றலை உயர்த்துவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதனால் 50-60 மில்லியன் நேரடி வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். மேலும், 100-110 மில்லியன் மக்களின் மறைமுக வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், மொத்த வேலைகளின் எண்ணிக்கையை 2030-ம் ஆண்டுக்குள் 150-170 மில்லியனாக அதிகரிக்கச் செய்யவும் முடியும்.

இந்த அறிக்கை, பெண் தொழில்முனைவோரின் ஆறு முக்கிய பிரிவுகளை அடையாளம் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருந்தபோதிலும், தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பு குறைந்துவிட்டது. தொழிலாளர்களின் நடைமுறை, சமூகத் தடைகள் ஆகியவை பெண்களின் பங்களிப்பு குறைவதற்கான காரணங்களாக இருக்கின்றன.

இதனால் இந்தியாவில் பெண் தொழில் முனைவோரை உருவாக்குவது சிக்கலாக இருக்கிறது. இதைச் சரி செய்வதன்மூலம் பெண்களின் சமூகப் பாதையில் மாற்றம் ஏற்படும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய வழிவகுக்கும். மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் மற்றும் பெண்களுக்கு மாற்றத்தக்க சமூக மற்றும் தனிப்பட்ட அந்தஸ்து ஏற்படும்" என்று சாவ்லா கூறினார்.

Megha Chawla
Megha Chawla

பெயின் அண்டு கம்பெனி வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில், ``பல சந்தர்ப்பங்களில் பெண்களின் எந்த விதமான பங்களிப்பும் இல்லாமல் வெறும் கம்பெனியின் குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் மட்டும் பெண்களின் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலை மாற வேண்டும். மொத்தத்தில், இந்தியாவில் பெண் தொழில்முனைவோர் இன்று 22-27 மில்லியன் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு