Published:Updated:

வேலை டு சொந்தத் தொழில்... நீங்கள் தயாரா..? - உங்களை மதிப்பிடும் சில அம்சங்கள்...

தொழில்
பிரீமியம் ஸ்டோரி
News
தொழில்

BUSINESS

த்தவங்கக்கிட்ட கையைக் கட்டி வேலை பார்க்குறது எனக்குப் புடிக்கல. அதனால வேலையை ராஜினாமா பண்ணிட்டு நானே சொந்தமா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணப்போறேன்” - உங்களின் நண்பரோ, சக அலுவலரோ, நீங்களேகூட அடிக்கடி இந்த வசனத்தைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

உண்மையில், ஒரு நல்ல வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்கி சாதிப்பது அவ்வளவு சுலபமான விஷயமா..? சுலபம் என்று நினைத்து, பார்த்துக்கொண்டிருந்த நல்ல வேலையை உதறித் தள்ளிவிட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்கவும் முடியாமல், நிதிப் பிரச்னையில் சிக்கிக்கொண்டு தவிப்பவர்களையும் அன்றாடம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஒருவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சொந்த மாகத் தொழில் தொடங்க விரும்பும் பட்சத்தில், அவர் என்னென்ன விஷயங்களை எல்லாம் கவனிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார் நிதி ஆலோசகர் பா.பத்மநாபன்.

பத்மநாபன்
பத்மநாபன்

‘கையிருப்புத் தொகை’ அவசியம்!

“ஒருவர் தான் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, உடனே வேறு வேலையில் சேரப்போகிறார் என்னும்பட்சத்தில் பிரச்னை இல்லை. அதுவே, வேலையை ராஜினாமா செய்த பிறகு, சொந்தமாக பிசினஸ் செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தால், அவர் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘கையிருப்புத் தொகை.’ குறைந்தபட்சம் அடுத்த மூன்று வருடங்களுக்குக் குடும்பத் தேவை களைப் பூர்த்தி செய்யும் அளவுக்குச் சேமிப்பு அவர் கையில் இருந்தால் மட்டுமே அவர் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்யும் முடிவை எடுப்பது நல்லது.

ஏனெனில், புதிதாக ஒரு தொழில் தொடங்கி அதில் வெற்றி பெறத் தோராயமாக மூன்று வருடங்கள் ஆகும். இந்த மூன்று வருடங்களிலும் உங்கள் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகள் எந்தக் குறையும் இல்லாமல் பூர்த்தியானால் மட்டுமே நீங்கள் பிசினஸில் முழுக் கவனத்தை யும் செலுத்த முடியும். அப்படி இல்லாதபட்சத்தில் தேவை இல்லாத மன உளைச்சல், நிதி நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். அதனால் உங்கள் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்குக் கணிசமான தொகை கையில் இருக்க வேண்டியது அவசியம்.

ஆழ, அகலங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!

‘கையிருப்புத் தொகை’க்கு அடுத்ததாக நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயம், நீங்கள் தொடங்கவிருக்கும் பிசினஸ். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிசினஸின் மீது உங்களுக்கு முழு ஆர்வமும் நம்பிக்கையும் இருக்க வேண்டியது அவசியம்.

தவிர, ‘இந்தத் தொழில் செய்தால் சீக்கிரம் முன்னேறிவிடலாம்’ என்ற எண்ணத்தில் உங்களுக்கு ஆர்வமே இல்லாத தொழிலைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நிச்சயம் அதில் வெற்றி பெற முடியாது. அதனால் நீங்கள் என்ன தொழிலைத் தேர்ந்தெடுக்க உள்ளீர்கள் என்பதை நன்கு அலசி, ஆராய்ந்து முடிவெடுங்கள்.

அப்படி ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்த பிறகு, உடனே அதில் இறங்காமல் அதன் வியாபார நுணுக் கங்கள், அந்தத் துறையில் உங்களுக்கு இருக்கும் சக போட்டியாளர்கள், அதில் நீங்கள் புதிதாகச் செய்ய வேண்டிய விஷயங்கள், செய்யவே கூடாத தவறுகள் என எல்லா ஆழ, அகலங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். முடிந்தால் அதற்கான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லுங்கள். நீங்கள் செய்ய விரும்பும் தொழிலைச் செய்யும் நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஆறு மாதங் களுக்கு வேலை பார்ப்பதும் அனுபவம் பெறுவதும் மிகச்சிறந்த ஆலோசனையே!

தொழில்
தொழில்

இப்போது எது ஜெயிக்கும்..?

நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழிலில் உங்களுக்கு ஆர்வமும் உந்துதலும் இருப்பதைக் காட்டிலும், அந்தத் தொழில் இப்போதைய காலகட்டத்தில் வெற்றி பெறுமா என்பதைக் கவனிக்க வேண்டியதும் அவசியம்.

மேலும், மக்களுக்கு மத்தியில் எந்தப் பொருள்களுக்கான தேவையும் பற்றாக் குறையும் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு, அது சார்ந்த பிசினஸில் முழு முனைப்புடன் ஈடுபடும்பட்சத்தில் வெற்றி நிச்சயம்.

வாடிக்கையாளர்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றும் சிறந்த நிறுவனங்களையே தேடிச் செல்வார்கள். அவர்களின் ‘குட் புக்’கில் இடம்பிடிக்க நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு மொபைல் ஷோரூம் தொடங் குவதாக வைத்துக்கொள்வோம். ஏற்கெனவே, பல மொபைல் ஷோரூம்களும், ஆன்லைன் விற்பனைகளும் இருக்கும் நிலையில் அவர்கள் உங்கள் கடையைத் தேடி வருவதற்கான அவசியம் குறைவாக இருக்கும்.

அந்த நிலையில், அவர்களுக்கு புதுப்புது ஆஃபர்கள், சர்வீஸ் வசதிகள் போன்றவற்றைச் செய்து தருவதன் மூலம் அவர்களை உங்கள் ஷோரூம் நோக்கி வர வழைக்கலாம். மேலும், வாடிக்கை யாளர்களின் தேவையறிந்து செயல்பட்டால் எளிதில் வெற்றியை எட்டிப்பிடிக்கலாம்.

படிப்படியான வளர்ச்சியே நல்லது!

சிலர், தாங்கள் தொழில் ஆரம்பித்த உடனேயே உச்சத்தை அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இல்லையென்றால், உடனடியாக வேறு பிசினஸுக்கு தாவி விடுகிறார்கள். இது ஆரோக்கியமான நிலை அல்ல. படிப்படியாகக் கிடைக்கும் வெற்றியே உறுதியானது.

எந்தவொரு துறையிலும் வெற்றி பெறக் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும் என்பதால், நம்பிக்கையோடு கடின முயற்சியைத் தொடர்ந்து அளிக்க வேண்டியது அவசியம்.”

வேலையிலிருந்து பிசின ஸுக்குத் மாற வேண்டும் என நினைக்கிறவர்கள் நிதி நிபுணர் பத்மநாபன் சொல்லும் இந்த விஷயங்களை நன்கு புரிந்து கொண்டு, அதன்பிறகு முடிவெடுப்பது சரியாக இருக்கும்!

எதற்காக ராஜினாமா முடிவை எடுக்கிறீர்கள்..?

வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்கிச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பாராட்டத்தக்கதுதான். எனினும், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விடும்முன் நன்கு சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்படும் கோபம், வேலைப் பளுவால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக நீங்கள் பார்த்துவரும் வேலையை ராஜினாமா செய்வது தவறான முடிவு. இது ஆக்கத்துக்கான வழி அல்ல. நீங்கள் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் துறையைவிட, உங்களுக்குப் பிடித்த வேறு ஒரு துறையில் நீங்கள் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது என்னும்பட்சத்தில் மட்டும் வேலையை ராஜினாமா செய்வது நல்லது!