ஒரு நாட்டில் தொழில் செய்யும் சூழல் நன்றாக உள்ளதா, கடந்த ஆண்டைவிட தொழில் செய்வதற்கான சூழல் முன்னேற்றம் கண்டுள்ளதா என்பதைனஆய்வு செய்து உலக வங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒரு அறிக்கையை வெளியிடும். இந்த அறிக்கையை இனி வெளியிடப் போவதில்லை என உலக வங்கி அதிகரித்திருக்கிறது. என்ன காரணம், ஏன் இந்த திடீர் அறிவிப்பு?
ஒரு நாட்டில் நிலவும் தொழில் சூழல் எப்படி இருக்கிறது என்பதை உலக வங்கியானது கடந்த சில ஆண்டுகளாகவே `ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்’ (Ease of Doing Business) என்கிற பெயரில் அறிக்கையாக வெளியிட்டு வந்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உலக அளவில் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டில் முதலீடு செய்யலாமா அல்லது கூடாதா என்பதை முடிவு செய்வதற்கு இந்த அறிக்கை மிகவும் உதவி செய்வதாக இருந்தது. இந்த விஷயத்தைப் புரிந்துகொண்ட சில நாடுகள் இந்தப் பட்டியலில் தாங்கள் தொடர்ந்து முக்கியமான இடத்தில் இருக்கும்படி செய்ய ஆரம்பித்தன.
அப்படிச் செய்த நாடுகளில் முக்கியமானது சீனா. கடந்த 2017-ல் இந்த நாடு ஒரே ஆண்டில் 78-ஆம் இடத்திலிருந்து ஏழு இடங்களுக்கு முன்னேற்றம் கண்டது. இந்த வளர்ச்சியைக் கண்டு பல நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்யத் தயாராகின.
ஆனால், உலக வங்கி வெளியிட்ட இந்த அறிக்கையைப் பற்றி பல்வேறு நாடுகளில் இருந்து புகார்கள் வர ஆரம்பித்தன. இதனால் அந்த அறிக்கையை உலக வங்கி நிறுத்தி வைத்ததுடன், இந்தப் புகாரில் உள்ள உண்மைத்தன்மை பற்றி விசாரிக்கத் தொடங்கின. வில்மர் ஹேல் என்கிற சட்ட அமைப்பு இந்த விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், சீனாவின் தொழில் வளர்ச்சி பற்றி வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் உயர்த்திக் காட்டப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் உலக வங்கியின் தலைமை அதிகாரியாக இருந்த கிறிஸ்டியானா ஜார்ஜியோவா உள்பட பலரும் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சீனாவின் தொழில் வளர்ச்சியானது அபாரமாகக் காட்டும் வகையில் இந்த ரிப்போர்ட்டுக்கான அணுகுமுறைகள் மாற்றப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

கிறிஸ்டியானா ஜார்ஜியோவா தற்போது சர்வதேச நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக இருக்கிறார். தன்மீதுள்ள குற்றச்சாட்டை இவர் அடியோடு மறுத்திருக்கிறார். இது தொடர்பான விளக்கத்தை அவர் உலக வங்கியின் தலைவரிடம் தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், `ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்’ அறிக்கைக்கு இப்படி சர்ச்சை எழுந்திருப்பதால், இனிவரும் ஆண்டுகளில் அந்த அறிக்கையை வெளியிடப் போவதில்லை என உலக வங்கி அறிவித்திருக்கிறது.
உலக வங்கியின் இந்த அறிவிப்பினால் நமது மத்திய அரசாங்கம் அதிர்ச்சி அடைந்திருக்கிறது. இதற்குக் காரணம், இந்த அறிக்கையில் முதல் 50 இடங்களில் இந்தியாவைக் கொண்டுவருவதுதான் தனது நோக்கம் என்று பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்குமுன்பு அறிவித்தார். நரேந்திர மோடி பிரதமர் ஆனபிறகு இந்த அறிக்கையில் முக்கியமான இடத்தைப் பிடிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார்.
2014-ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது உலக வங்கி வெளியிட்ட இந்த தொழில் சூழல் அறிக்கையில், இந்தியா 190 நாடுகளில் 142-ம் இடத்தில் இருந்தது.

பின்னர் பி.ஜே.பி ஆட்சியில் 2020-ல், இந்தியா 79 இடங்கள் முன்னேற்றி 63 -வது இடத்தை அடைந்தது. 2018-ல் மட்டும் 23 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு உயர்ந்தது. இந்த அபாரமான வளர்ச்சி உண்மைதானா அல்லது சீனாவுக்கு உலக வங்கி உதவி செய்ததுபோல, இந்தியாவுக்கு உதவி செய்ததா என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
தவிர, உலக வங்கி வெளியிட்ட இந்த அறிக்கையானது இந்தியாவுக்கு அதிகளவில் வெளிநாட்டு மூலதனம் வரக் காரணமாக இருந்தது. இனி இந்த அறிக்கை வராது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இனி நம் தொழில் வளர்ச்சியை எப்படி மக்களுக்குத் தெரிவிப்பது என்று யோசித்து வருகிறது மத்திய அரசாங்கம்.