Published:Updated:

`சீனாவுக்கு பூஜ்ஜியம்; பருத்தி நூல் ஏற்றுமதியில் பெரும்சரிவு!' - என்ன காரணம்?

Yarn Export
Yarn Export

புத்தாண்டிற்குப் பிறகு பருத்தி நூலை வாங்க சீனர்கள் ஆர்வம் காட்டினர். ஆனாலும் அதன் ஏற்றுமதியும் வணிகமும் இன்னும் முன்னேறவில்லை.

கொரோனா வைரஸ் காரணமாக, பருத்தி நூலின் ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. தற்போது சீனாவுக்கான ஏற்றுமதி பூஜ்ஜியத்தில் இருப்பது கவலைக்குரிய ஒன்று. சீனா இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 27 சதவிகிதத்திற்கும் அதிகமாகப் பருத்தி நூல்களை இறக்குமதி செய்யும்.

corona outbreak
corona outbreak

இதுபற்றி ஏற்றுமதியாளர்கள் சிலரிடம் பேசினோம், ``பிப்ரவரி மாதம் மட்டும் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் கொரோனா வைரஸால் சீனாவில் வணிகச் செயல்பாடுகள் குறைந்ததே ஆகும்" என்றனர்.

இந்நிலைப்பற்றி சாலோனா காட்ஸ்பின்னின் (salona cotspin ) இயக்குநர் அருண் ஜாஜாரியா கூறுகையில், ``ஜனவரி மாதத்தை விட, பிப்ரவரி மாதம் 40 சதவிகிதம் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் குறைந்தே காணப்பட்டது. சீனாவிற்கான ஏற்றுமதி பூஜ்ஜியமாகச் சரிந்துவிட்டது. ஆனால், வங்கதேசத்திலும் வியட்நாமிலும் அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவர்கள் பொதுவாக சீனாவிடமிருந்துதான் பருத்தி நூலை இறக்குமதி செய்வார்கள். இதனால் ஏற்றுமதியின் நிலமை சற்றே உயர்ந்து வருகிறது" என்றார்.

`மொத்தமாக பணமில்லா பரிவர்த்தனைகளை நோக்கி நகர்கிறதா இந்தியா?!’- Razorpay அறிக்கை சொல்வது என்ன?

பருத்தி நூலின் தேவை குறைந்துள்ளதால் அதன் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் ஏற்றுமதி ரகத்தின் விலை 3 சதவிகிதம் முதல் 4 சதவிகிதம் வரை குறைந்து ஒரு கிலோவிற்கு ₹185 முதல் ₹200 வரை விற்கப்படுகிறது. புத்தாண்டிற்குப் பிறகு பருத்தி நூலை வாங்க சீனர்கள் ஆர்வம் காட்டினர். ஆனாலும் அதன் ஏற்றுமதியும் வணிகமும் இன்னும் முன்னேறவில்லை. ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பருத்தி நூலின் ஏற்றுமதி 9 சதவிகிதம் குறைந்தே காணப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் இந்தத் துறையில் ஏற்றுமதி சற்றே உயர்ந்தாலும் உடனே 39 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்தது.

பருத்தி ஏற்றுமதி
பருத்தி ஏற்றுமதி

இதுபற்றி டெக்ஸ்ப்ரோகில்லின் தலைவர் கே.வி.சீனிவாசன், ``கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதியில் சிறிது ஏற்றத்தைக் கண்டோம். தற்போது தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஏற்றுமதியில் சரிவைச் சந்திக்க உள்ளோம்" என்றார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்கு வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் பங்குச் சந்தைகூட வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பாதிப்பிலிருந்து மீண்டு வர சில காலம் எடுக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அடுத்த கட்டுரைக்கு