Published:Updated:

`கடனில் முத்தெடுத்த எஸ் பேங்க் ராஜ தந்திரி!’ - ராணா கபூரின் மோசடிகளைப் பட்டியலிட்ட அமலாக்கத்துறை

ராணா கபூர்
ராணா கபூர்

எஸ் பேங்க் விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

`எஸ் பேங்க்’ நிறுவனரும் முன்னாள் தலைவருமான ராணா கபூர் அவரின் மனைவி பிந்து, மகள்களான ரோஷினி கபூர், ராகி கபூர் மற்றும் ராதா கபூர் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது. லண்டன் செல்வதற்காக மும்பை விமான நிலையத்தில் காத்திருந்த ரோஷினியை அமலாக்கத்துறையினர் நேற்று தடுத்து நிறுத்தினர். ராணா கபூரை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், புதன்கிழமை வரை அவரை கஸ்டடியில் எடுத்துள்ளனர்.

எஸ் பேங்க்
எஸ் பேங்க்

நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில், ``திவான் ஹவுஸிங் & ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 3,700 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை எஸ் பேங்க் வாங்கியுள்ளது. இந்த நிறுவனமானது ராணாவின் மகள்களான ரோஷினி கபூர், ராகி கபூர் மற்றும் ராதா கபூருக்குச் சொந்தமான DOIT நிறுவனத்தில் ரூ.600 கோடி கடன் வழங்கியிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ராணா கபூர் மறுத்துள்ளார். அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்கு எதிர்வாதம் வைத்த ராணாவின் வழக்கறிஞர் ஜெய்ன் ஷராஃப், ``எஸ் வங்கிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆர்பிஐ. வாடிக்கையாளர்கள் வங்கியிலிருந்து 50,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் ஆத்திரத்தில் உள்ளனர். ராணா கபூரை இந்த விவகாரத்தில் பலிகடா ஆக்குவதற்கு இப்படிக் கூறுகின்றனர்” என்றார்.

கைது
கைது

எஸ் பேங்க் நிதிநெருக்கடிக்கு உள்ளானதற்கு ராணா கபூர் மற்றும் அவரது குடும்பத்தினரும் காரணம் என அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளதாக ஆங்கில ஊடகமான இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அமலாக்கத்துறையினரின் எஃப்.ஐ.ஆரில் ராணா கபூர் உட்பட 7 பேரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. இந்த எஃப்.ஐ.ஆரில் திவான் ஹவுஸிங் & ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த கபில் மற்றும் ராஜேஷ் குமார் இருவரின் பெயர்களும் உள்ளன.

தப்பிச் செல்ல முயன்ற மகள்.. நீதிமன்றத்தில் கண்ணீர்விட்ட தந்தை! -`எஸ் வங்கி' விவகாரத்தில் இறுகும்பிடி

இந்த எஃப்.ஐ.ஆரில் தீவான் ஹவுஸிங் & ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (Dewan Housing Finance Corporation Limited), DO IT அர்பன் வென்சர்ஸ் (India) பிரைவேட் லிமிடெட், ஆர்.ஏ.பி (RAB) எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், மோர்கன் கிரெடிட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆர்.கே.வி (RKV) டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 5 நிறுவனங்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ராதா கபூர்
ராதா கபூர்

எஸ் பேங்க் மோசடியில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ள ராணா கபூர், எஸ் பேங்க் நிறுவனர், அவரின் மனைவி பிந்து கபூர் ஆர்.ஏ.பி (RAB) டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர். மகள் ராகி கபூர். மோர்கன் கிரெடிட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர். ராதா கபூர் மோர்கன் கிரெடிட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் DOIT அர்பன் வென்சர்ஸ் (India) பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் இயக்குநராக இருக்கிறார்.

ராணா கபூர் எஸ் பேங்கில் தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் மனைவி மற்றும் மகள்கள் இயக்குநர்களாக உள்ள வங்கிகளின் மூலம் சட்டவிரோதப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டுகிறது. ராணாவின் மகள்கள் இயக்குநராக இருக்கும் DO IT அர்பன் வென்சர்ஸ் (India) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு தீவான் ஹவுஸிங் & ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ரூ.600 கோடி கடனாக வழங்கியுள்ளது. எஸ் வங்கியானது தீவான் ஹவுஸிங் & ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கடன் பத்திரங்களில் ரூ.3,700 கோடியை முதலீடு செய்ததை இன்றளவும் மீட்கவில்லை. இந்த 3,700 கோடி மட்டுமல்லாமல் ஆர்.கே.வி (RKV) டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.750 கோடியை எஸ் பேங்க் கடனாக வழங்கியுள்ளது. குடியிருப்புகளை கட்டுவதாகக் கூறி எஸ் பேங்கில் இருந்து கடன் பெற்றுள்ளது.

நிறுவனம்
நிறுவனம்

இந்த ஆர்.கே.வி நிறுவனமானது தீவான் ஹவுஸிங் & ஃபைனான்ஸ் லிமிடெட் குழுமத்துக்குச் சொந்தமானது. எந்த புராஜெக்டிலும் முதலீடு செய்யாமல் அந்தத் தொகையை அப்படியே தீவான் ஹவுஸிங் & ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த நிறுவனத்தின் கடன் பத்திரங்களில் எஸ் பேங்க் முதலீடு செய்ததன் மூலம் ராணாவின் மனைவி மற்றும் மகள்களின் நிறுவனத்தின் மூலம் ஏராளமான நிதிப்பலன்களை ராணா அனுபவித்து வந்துள்ளார் என்கிறது அமலாக்கத்துறை. இந்தப் பணப்பரிமாற்றங்கள் எல்லாம் ராணா எஸ் வங்கியின் தலைவராக இருந்தபோது நடந்துள்ளது.

2004-ம் ஆண்டு ராணா கபூர், அசோக் கபூர் இருவரும் இணைந்து எஸ் பேங்க்கைத் தொடங்கினார்கள். இவர்களில் அசோக் கபூர், 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பலியானதையடுத்து ராணா கபூர் மட்டுமே அந்த வங்கியின் தலைவராகச் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு அடுத்த மூன்றாண்டுகளுக்கு எஸ் பேங்கின் தலைமைச் செயல் அதிகாரியாக ராணா கபூர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரிசர்வ் வங்கி இதை ஏற்கவில்லை. அவரது பதவிக்காலத்தை 2019, ஜனவரி 31 ஆகச் சுருக்கியது. 2019, மார்ச் 1-ம் தேதி புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ரவ்னீத் கில் பொறுப்பேற்றார்.

ராணா கபூர்
ராணா கபூர்

தலைமைப்பதவியில் இருந்து விலக்கப்பட்டதற்குப் பின் தன் பங்குகளை விற்பனை செய்தார் ராணா. தன் குடும்ப நிறுவனமான எஸ் கேப்பிட்டல் (இந்தியா), மோர்கன் கிரெடிட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வசமிருந்த பங்குகளை விற்பனை செய்தன. 2019, டிசம்பர் மாதத்தில் ராணா கபூர் வசம், எஸ் பேங்கின் எந்தப் பங்கும் இல்லையென்று எஸ் பேங்க் அறிவித்தது.

வாராக்கடன் பிரச்னையால் எஸ் பேங்க் நிதிநெருக்கடியை சந்தித்தது. தற்போது எஸ் பேங்கை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது

அடுத்த கட்டுரைக்கு