Published:Updated:

யெஸ் பேங்க்... புதிது புதிதாகக் கிளம்பும் பூதங்கள்!

யெஸ் பேங்க்
பிரீமியம் ஸ்டோரி
News
யெஸ் பேங்க்

கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

யெஸ் பேங்க் விவகாரத்தில் தோண்டத் தோண்டப் புதுப்புது பூதங்கள் கிளம்பி வந்துகொண்டேயிருக்கின்றன.

`யெஸ் பேங்க்கின் நிர்வாக இயக்குநராக ராணா கபூர் இருந்தபோது, சில நிறுவனங்கள் மோசமான நிலையில் இருப்பது தெரிந்தே கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று அந்த வங்கியின் தற்போதைய சி.இ.ஓ ரவ்நீத் கில் அமலாக்கத்துறையிடம் சொல்லியிருப்பது புதிய பூதமாகக் கிளம்பியிருக்கிறது.

பேங்க்
பேங்க்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த சில மாதங்களாக வங்கித்துறைப் பங்குகளின் விலை கடுமையாகக் குறைந்துவரும் நிலையில், யெஸ் பேங்க் நிறுவனப் பங்கின் விலையும் கணிசமாகக் குறைந்திருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்தப் பங்கின் விலை சுமார் ரூ.60 என்ற அளவில் இருந்தது. தற்போது ரூ.27 என்ற அளவில் வர்த்தகமாகிறது. ‘‘இந்த விலையில் இந்தப் பங்கை வாங்கினால்கூட இன்னும் சில ஆண்டுகளில் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்த விலையை அடைந்துவிடும். அப்போது 100% லாபம் பார்க்கலாம்’’ என்ற ஆசையில் சிறு முதலீட்டாளர்கள் இந்தப் பங்கை தெரிந்தோ, தெரியாமலோ வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இந்த வங்கியில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த முறைகேடுகள் பற்றித் தெரிந்துகொண்டால், இந்தப் பங்கை வாங்கத்தான் வேண்டுமா என்று நிச்சயம் யோசிப்பார்கள்.

உருப்படாத கம்பெனிகளுக்குக் கடன்!

எந்த வகையிலும் பயனில்லாத நிறுவனங்களுக்கு அள்ளி அள்ளிக் கடன் தந்திருக்கிறார் ராணா கபூர் என்ற உண்மை அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகை மூலம் தெரியவந்திருக்கிறது. உதாரணமாக, ஆர்.கே.டபிள்யூ டெவலப்பர்ஸ், பிலீஃப் ரியல்டர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள். இந்த இரு நிறுவனங்கள் தொடங்கிய கட்டுமான புராஜெக்டுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமலிருப்பதால், இந்த இரு நிறுவனங்களுக்கும் எந்த வங்கியும் கடன் தரக் கூடாது என எச்சரிக்கை விடுப்பதுபோல் ‘சிவப்பு நாடா’வில் வகைப்படுத்தப்பட்டிருந்தன. இந்த உண்மை நன்கு தெரிந்திருந்தும் இந்த நிறுவனங்களுக்கு ரூ.1,700 கோடி கடன் தந்தார் ராணா கபூர். இதில் ரூ.750 கோடி, கடன் தர வங்கி ஒப்புதல் அளித்த அன்றே தரப்பட்டிருப்பது ஆச்சர்யமான விஷயம்.

மீதமுள்ள ரூ.950 கோடியைக்கூட அடுத்துவந்த நாள்களில் யெஸ் பேங்க் தரத் தயாராக இருந்தபோதுதான் இது ரிசர்வ் வங்கியின் கவனத்துக்குச் சென்று, தடை போடப்பட்டது. ரிசர்வ் வங்கியிடமிருந்து உரிய நேரத்தில் ஆட்சேபனை வராமல் போயிருந்தால் இந்த ரூ.950 கோடியும் யெஸ் பேங்க்கின் கையைவிட்டுப் போயிருக்கும் என்பதே உண்மை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடன் பத்திரங்களில் தொலைந்த ரூ.3,700 கோடி

திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், கடந்த 2016 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலத்தில் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டியது. இந்தக் கடன் பத்திரங்களுக்கு முக்கியமான ரேட்டிங் நிறுவனங்கள் `A+’ என்ற ரேட்டிங்கைத் தந்ததன் விளைவாக, சிறு முதலீட்டாளர்கள் உட்பட பலரும் பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்தனர். ஆனால், திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் இந்தப் பணத்தைச் சரியாக நிர்வகிக்க முடியவில்லை. இதனால் சிறு முதலீட்டாளர் களுக்குத் திருப்பித் தர வேண்டிய பணத்தைத் தர முடியாமலே போனது. ஏறக்குறையப் பல ஆயிரம் சிறு முதலீட்டாளர்கள் ரூ.6,000 கோடி அளவுக்குத் தாங்கள் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தை இழந்தனர்.

யெஸ் பேங்க்
யெஸ் பேங்க்

சிறு முதலீட்டாளர் கள்தான் விஷயம் தெரியாமல் திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் டிபென்ச்சர்களில் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், ராணா கபூர் விஷயம் தெரியாதவர் அல்ல. ஒரு வங்கியை நடத்துபவரால் இன்னொரு வங்கிசாரா நிதி நிறுவனத்தின் செயல்பாட்டை ஆராய்ந்து பார்க்கத் தெரியாமல் போக வாய்ப்பே இல்லை. அவருக்கே தெரியாமல் போயிருந்தாலும், அவருடைய வங்கியின் ‘ரிஸ்க் அனாலிசிஸ் விங்’ நிச்சயமாக அலசி ஆராய்ந்திருக்கும்.

இந்த டிபென்ச்சர்களில் பணத்தைப் போடவே கூடாது என்பது தெரிந்த பிறகும் இந்த வங்கியில் அப்பாவி டெபாசிட்தாரர்கள் டெபாசிட் செய்துவைத்திருந்த பணத்தை எடுத்து திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் டிபென்ச்சர்களில் முதலீடு செய்திருக்கிறார் ராணா கபூர். இப்படி முதலீடு செய்தது ரூ.100, 200 கோடி அல்ல, ரூ.3,700 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நன்கு தெரிந்தும் திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் டிபென்ச்சர்களில் ஏன் பணத்தைப் போட்டார் ராணா கபூர் என்பதுதான் சுவாரஸ்யம். ராணா கபூருக்கு மூன்று மகள்கள். இந்த மகள்களில் ஒருவரின் தலைமையில் நடக்கும் நிறுவனம்தான் ‘டுஇட் வென்ச்சர்ஸ்.’ இந்த நிறுவனத்துக்கு எந்த விதமான சொத்தையும் பெறாமலேயே ரூ.600 கோடி கடன் தந்திருக்கிறது திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட். ஆக, ஊரார் வீட்டுப் பணத்தை எடுத்துத் தந்துவிட்டு, தன் மகளின் பேரில் ஆதாயம் பெற்றிருக்கிறார் ராணா கபூர். இந்த உண்மை தெரிய வந்த பிறகு இது மாதிரி இன்னும் என்னென்ன முறைகேடு நடந்திருக்கிறதோ என்று ஆராயத் தொடங்கியிருக்கிறது அமலாக்கத்துறை.

ராணா கபூர்
ராணா கபூர்

துணை நிறுவனங்கள் மூலம் பணப் பரிமாற்றம்!

`யெஸ் வங்கியின் சிறப்பான வளர்ச்சியைப் பார்த்து எல்லோரும் பாராட்டிக்கொண்டிருந்த வேளையில், துணை நிறுவனங்களின் மூலம் விளையாடியிருக்கிறார் ராணா கபூர்’ என்பது அமலாக்கத்துறையின் குற்றப் பத்திரிகையின் மூலம் தெரியவந்திருக்கிறது. எந்தப் பெரிய நிறுவனத்திலும் பல நூறு துணை நிறுவனங்கள் இருக்கவே செய்யும். முதன்மை நிறுவனத்தின் மூலம் செய்ய முடியாத பல விஷயங்கள் இந்த துணை நிறுவனங்கள் மூலம் செய்யப்படும். துணை நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படும் போது, முதன்மை நிறுவனத்தின் லாபம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், ராணா கபூர் வைத்திருந்த பல துணை நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு லாபம் சம்பாதித்துத் தர உதவினவோ இல்லையோ, யெஸ் பேங்க்கின் பணத்தை தங்கள் மூலம் கொண்டு செல்வதற்கு உதவின.

`மார்கன் கிரெடிட்’ என்பது யெஸ் பேங்க்கின் ஒரு ஹோல்டிங் கம்பெனி. இந்த நிறுவனம் உருப்படியான வருமானம் எதையும் சம்பாதிக்காமல், யெஸ் பேங்க் தரும் டிவிடெண்டை மட்டும் வருமானமாகப் பெற்றுவந்தது.

இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் மூலம் ரூ.2,185 கோடி அளவுக்கு யெஸ் பேங்க்கின் பணத்தை வேறு நிறுவனங்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறார் ராணா கபூர். இதேபோல, `ராப் என்டர்பிரைசஸ்’ என்ற துணை நிறுவனத்தின் மூலம் பல நூறு கோடி ரூபாயை பரிமாற்றம் செய்து, வெளியே கொண்டு சென்றிருக்கிறார். யெஸ் பேங்க்குக்குச் சொந்தமான துணை நிறுவனங்களின் மூலமாக மட்டுமே ஏறக்குறைய ரூ.5,050 கோடி காணாமல் போயிருப்பதாக அமலாக்கத்துறை இப்போது கண்டுபிடித்திருக்கிறது.

ஒதுக்கீட்டில் ரூ.2,000 கோடி

கடந்த சில ஆண்டுகளில் யெஸ் பேங்க் பெரும் நிறுவனங்களுக்குக் கொடுத்த கடன் தொகை திருப்பிக் கிடைக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குரூப், எஸ்ஸெல் குரூப், திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட், ஓம்கார் குரூப், ரேடியஸ் டெவலப்பர்ஸ் எனப் பல பெரும் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட பல நூறு கோடி ரூபாய் வாராக்கடனாக மாறியிருக்கிறது.

இந்த வாராக் கடனை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது யெஸ் பேங்க்கின் இன்றைய நிர்வாகம். இந்த வாராக் கடனைச் சமாளிக்க ஏறக்குறைய ரூ.2,000 கோடியை ஒதுக்கீடு செய்துவைத்திருக்கிறது யெஸ் பேங்க் நிர்வாகம்.

பொருளாதார நெருக்கடியாலும், கொரோனா ஊரடங்காலும் வர்த்தகச் சூழல் ஏற்கெனவே மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்திருக்கும் நிலையில், இவ்வளவு பெரிய தொகையை வாராக்கடனுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்து வைத்திருந்தால், முதலீட்டாளர்களுக்கு எப்போது லாபத்தைச் சம்பாதித்துத் தருவது என்ற கவலையில் இருக்கிறது யெஸ் பேங்க் நிர்வாகம்.

`இவ்வளவு குளறுபடிகள் நடந்திருக்கும் நிலையில், இந்தப் பங்கில் முதலீடு செய்யத்தான் வேண்டுமா...’ என்ற கேள்வியை முதலீட்டாளர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்வது அவசியம். மிக அதிகமாக ரிஸ்க் எடுக்க நினைக்கும் முதலீட்டாளர்கள் தவிர, பிற முதலீட்டாளர்கள் இந்த நிறுவனப் பங்கின் பக்கம் கவனம் செலுத்தாமல் இருப்பதே நல்லது என்பதே பங்குச் சந்தை நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. பணவீக்கத்தைவிட அதிக வருமானம் பெறத்தான் பங்குச் சந்தை. மோசமான பங்குகளில் பணத்தை முதலீடு செய்து இழப்பதற்கல்ல!