Yes Bank: `ரூ.15,000 கோடி மதிப்பிலான FPO; 6% சரிந்த பங்குகள்!' - நிபுணர்கள் கருத்து
``தொழிலநுட்பத்தில் யெஸ் பேங்க் நிறுவனம் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. இதன் 40 சதவிகித பங்குகள் யுபிஐயிடமே உள்ளன.”
யெஸ் வங்கியின் பங்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகத்தின் முடிவில் 6 சதவிகிதம் சரிந்து காணப்பட்டது. இதற்கு முன்னர் 13.7 சதவிகிதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யெஸ் பேங்க் நிறுவனத்தின் எஃப்.பி.ஓ ஜூலை 15-ம் தேதி தொடங்கி, ஜூலை 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் அடிப்படை விலையானது 55 சதவிகித சலுகையுடன் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ₹ 2 மதிப்புள்ள ஒவ்வொரு ஈக்குவிடி பங்குகளின் விலையும் ₹ 12 - ₹ 13 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ₹ 20.75 ஆக இருந்த ஈக்குவிடி பங்குகளின் விலை 6.11 சதவிகிதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. யெஸ் பேங்கின் எஃப்.பி.ஓ பற்றி ஆய்வாளர்களிடையே வெவ்வேறான கருத்துகள் நிலவி வருவதும் கவனிக்கத்தக்கது.

இதுதொடர்பாக நிர்மல் பேங்க் ஈக்குவிடி நிறுவனம், ``பங்குகளின் விலையானது, கடந்ந நிதி ஆண்டைவிட ஒரு மடங்கு குறைவாகவே உள்ளது. இப்போதுள்ள பொருளாதார சூழலுக்கு இந்த விலை சரியானதுதான். இதற்கு முந்தைய வருடங்களில் நாம் கண்ட அதே 30 சதவிகித வளர்ச்சி விகிதத்தைதான் இப்போதும் எதிர்பார்க்கிறோம். அடுத்த ஆண்டுக்கான கடன் புத்தக வளர்ச்சியும் எந்த ஏற்றதாழ்வும் இன்றிதான் காணப்படும். இத்தகைய காரணங்களால் நிறுவன முதலீட்டாளர்கள், இதில் முதலீடு செய்ய அவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டார்கள். இதே பி.எஃப்.எஸ்.ஐ துறையிலேயே அதிக முதலீடு வாய்ப்புகள் நல்ல முறையில் உள்ளதால் அதில் முதலீடு செய்யவே விரும்புவர்” என்று தெரிவித்துள்ளது.
ஆனால், இதற்கு நேரெதிரான கருத்துக்களையும் சில துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். யெஸ் பேங்க் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஈக்குவிடி பங்குகளுக்கான விலையை 50 சதவிகித சலுகையுடன் நிர்ணயித்தபோதே பங்குகள் சரிவை சந்தித்திருக்க வேண்டும். மாறாக அன்று சரியவில்லை. இதற்கு அடுத்த திங்கள்கிழமை, பங்குகளின் விலை 13 சதவிகிதமாக சரிந்த போதும், அதன் விலையானது ₹ 20 என்ற அளவிலேயே இருந்தது. தற்போதுள்ள விலைக்கும், எஃப்.பி.ஓ விலைக்கும் உள்ள வித்தியாசம் அவ்வளவு எளிதில் குறைந்து விடாது. ஏற்கனவே யெஸ் பேங்கின் பங்குகளை விற்கும் எண்ணத்தில் இருந்தவர்கள் திங்கள்கிழமையே அதை விற்றிருக்க கூடும். இதனால் நீண்ட கால முதலீட்டாளர்களும் பங்குகளை மாறி மாறி வாங்கவும் விற்கவும் செய்யும் முதலீட்டாளர்களும் நிச்சயம் லாபம் அடையக் கூடும். எஃப்பிஓவிற்கு ஈக்குவிடி பங்குகளின் விலை ₹ 12 - ₹ 13 முதல் இருப்பது சிறந்த ஒன்று தான், என்கின்றனர்.

``யெஸ் பேங்க் நிறுவனத்தின் ₹ 15,000 கோடி பப்ளிக் ஆஃபரானது மூலதன விகிதங்களை மட்டும் உயர்த்த பயன்படாது. இதனுடன் அடுத்த இரண்டு ஆண்டுக்கான நிதி வளர்ச்சியையும் பெற்று தரும். இது பற்றி யெஸ் பேங்க் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பிரசாந்த் குமார் பேசும்போது, ``இந்த ₹ 15,000 கோடி மூலம் தற்போதுள்ள core equity tier -1 விகிதமானது 6.3 சதவிகிதத்திலிருந்து 13 சதவிகிதத்திற்கு உயர்ந்து விடும். இதனால் அடுத்த இரண்டு ஆண்டுக்கான எங்களது வளர்ச்சியையும் பார்த்துக் கொள்ளும்" என்றும் ஒருதரப்பினர் சொல்கிறார்கள்.
மேலும், இப்போது வரை தொழிலநுட்பத்தில் யெஸ் பேங்க் நிறுவனம் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. இதன் 40 சதவிகித பங்குகள் யுபிஐயிடமே உள்ளன. தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்துள்ளதன் மூலம் எதிர்காலத்தில் இவர்களின் சந்தை வாய்ப்பானது பிரகாசமாகவே உள்ளது. அதனால், அதிக முதலீடுகளை யெஸ் பாங்க் நிறுவனம் ஈர்க்க கூடும் என்பதே துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.