Published:Updated:

பட்ஸ் முதல் பஞ்சு மெத்தை வரை... கலக்கும் மார்க்கெட்டுகள்! கோவை ரவுண்ட்அப்

கோவை
பிரீமியம் ஸ்டோரி
News
கோவை

A R E A M A R K E T

ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ சிட்டி, தொழில் நகரம் என்ற அந்தஸ்தைப் பெற்ற கோவை சிட்டிக்குள் ஷாப்பிங் மால் களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அனைத்துப் பெரிய பிராண்டுகளும், ஆங்காங்கே முக்கியப் பகுதிகளில் ஷோரூம்களைத் திறந்துவிட்டனர். மேலும், தெருவுக்குத் தெரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் களும் வந்துவிட்டன. ஆனால், இவை எதுவும் கோவை மார்க்கெட் ஏரியாவான டவுன்ஹாலைப் பாதிக்க வில்லை. இப்போதும், கோவையில் அனைத்துத் தரப்பு மக்களும் ஷாப்பிங் செய்யும் ஒரே இடம் டவுன்ஹால்தான். காது குடையும் பட்ஸில் தொடங்கி பஞ்சு மெத்தை வரை, தகரம் முதல் தங்கம் வரை, காய்கறி முதல் கணினி வரை எல்லாமும் கிடைக்கும் ஒரே இடம் டவுன்ஹால்.

மார்க்கெட்
மார்க்கெட்

வரலாற்றுத் தொடர்புகொண்ட சந்தைகள்...

டவுன்ஹால் என்றழைக்கப்படும் நகர் மண்டபம் பெயர் காரணத்துக்கு ஒரு வரலாற்றுத் தொடர்பு உள்ளது. பிரிட்டிஷ் காலத்தில், விக்டோரியா ராணி நினைவாக கோவை மையப் பகுதியில் ஒரு மண்டபம் கட்டப் பட்டது. நகர் மண்டபம் என்றழைக்கப் பட்ட அது, நாளைடைவில் டவுன் ஹாலாக மாறியது. ஒப்பனைக்கார வீதி, ராஜ வீதி, பெரிய கடை வீதி, நவாப் ஹக்கீம் சாலை (என்.ஹெச் சாலை), வெரைட்டி ஹால் சாலை (வி.ஹெச் சாலை) என அனைத்துச் சாலைகளுக்கு ஒரு வரலாற்றுத் தொடர்பு இருக்கிறது.

ஒப்பனைக்கார வீதி டவுன்ஹாலின் பில்லியன் டாலர் பகுதி. அனைத்துப் பெரிய ஜவுளிக் துணிக்கடைகளும் இருக்கும் இடம். அதேபோல, பெரிய நகைக்கடைகள் அதிகம் இருக்கும் இடம் இதுதான். வீக் எண்ட் மற்றும் பண்டிகைக் காலங்களில் இந்த பகுதியில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி வாகனங்கள் ஊர்ந்துதான் செல்லும். டவுன்ஹாலின் மற்றொரு முக்கிய சாலை பெரியகடை வீதி. கர்சீஃப், பட்ஸ், கவரிங், காய்கறி என்று அனைத்தும் கிடைக்கும் பகுதி இது.

டவுன்ஹாலுக்குள் தற்போது தவிர்க்க முடியாத கடையாக சிம்கோ மாறிவருகிறது. பல பிரிவுகளாக இதன் கட்டடங்கள் பிரிந்து இருந்தாலும் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான பொருள்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும். பிரபல பிராண்ட் பொருள்கள்கூட இங்கு குறைந்த விலையில் கிடைப்பதால், எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் கடை இது. டவுன்ஹாலுக்குள் இருக்கும், ‘குட்டி டவுன்ஹால்’ இது.

ராஜவீதி தங்க நகைகளுக்கு பெயர் பெற்ற பகுதி. டவுன்ஹாலின் அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே நகைக் கடைகள் இருந்தாலும், ராஜ வீதியில் உள்ள நகைக்கடைகளில் சென்டி மென்டாக நகைகள் வாங்குவதை மக்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். இது குறித்து தங்கநகை விற்பனையாளர் தியாகராஜனுடன் பேசினோம். “நான் 25 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன். இந்தியாவிலேயே தங்க நகை உற்பத்தியில் மும்பை, கொல்கத்தா, கோவை முக்கிய இடத்தில் உள்ளன. அதிலும், மும்பைக்கு அடுத்தபடியாக தங்க நகைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவது கோவையில்தான். இந்தத் தொழிலை நம்பி 1.5 லட்சம் பேர் இருக்கின்றனர். 15,000-க்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகள் உள்ளனர்.

இங்கு உற்பத்தி செய்யும் தங்க நகைகள் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கும், துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடு களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு செய்யப்படும் நகைகள் பாரம்பர்ய மிக்கதாக இருக்கும். குறைந்த எடையில், நல்ல டிசைன்களைக் கொடுப்பது இதன் சிறப்பம்சம். அதனாலேயே, உலகம் முழுவதும் இதற்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. சராசரியாக ஒரு நாளுக்கு 100 கிலோ அளவுக்கு தங்க நகைகள் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக எடுத்து செல்லப்படுகின்றன. அதுபோல, லோக்கலில் ஒரு நாளுக்கு 15 - 20 கிலோ நகைகள் விற்பனை ஆகும். சராசரியாக ஒரு நாளுக்கு ரூ.15 கோடி அளவுக்கு சில்லறை வணிகத்திலும், பிற பகுதிகளுக்கு அனுப்பப்படும் வணிகம் மூலம் ஒரு நாளுக்கு சராசரியாக ரூ.60 கோடி வரை வணிகம் நடக்கும். ஒராண்டுக்கு மூன்று பில்லியன் டாலர் (ரூ.21,000 கோடி) வரை வணிகம் நடக்கும்” என்றார்.

கோவை மார்க்கெட்
கோவை மார்க்கெட்
தியாகராஜன், இருதயராஜா, அபாஸ்
தியாகராஜன், இருதயராஜா, அபாஸ்

ஃபைவ் கார்னர் என்றழைக்கப் படும் அஞ்சு முக்கு பகுதியில் ஐந்துமுனைகளும் பிசினஸ் ஏரியா தான். ஸ்டேஷனரி பொருள்கள், பேக் கடைகள், புத்தகக் கடைகள் ஆகியவற்றுக்கு பெயர் பெற்றது இந்தப் பகுதி அங்கிருந்து அப்படியே, ஆர்.ஜி சாலை என அழைக்கப்படும் ரங்கே கவுடர் வீதி, டி.கே மார்க்கெட் எனப்படும் தியாகி குமரன் மார்க்கெட் பகுதி மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிக்குப் பெயர்பெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு கோவை மாவட்டத் தலைவர் இருதயராஜா, “ஆர்.ஜி சாலையில் மொத்த வியாபாரமும், டி.கே மார்க் கெட்டில் சில்லறை வியாபாரமும் நடக்கும். அதே நேரத்தில் ஆர்.ஜி சாலையில் குறைந்த அளவுக்கு சில்லறை வியாபாரமும், டி.கே. மார்க்கெட்டில் குறைந்தளவு மொத்த வியாபாரத்திலும் ஈடுபடுவார்கள். மளிகை, அரிசி, எண்ணெய் பொருள்கள் இங்கு கிடைக்கும். டவுன்ஹால் சுற்று வட்டாரங்களில் மளிகை, வீட்டு உபயோகப் பொருள்கள் எல்லாம் சேர்ந்து 2,000 கடைகள் இருக் கின்றன. மொத்த வியாபாரிகளே சில்லறை வணிகமும் செய்வதால், கோவையில் மற்ற இடங்களில் கிடைப்பதைவிட இங்குக் குறைந்த அளவுக்கு பொருள்கள் கிடைக்கும்.

முக்கியமாக, டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைப்பதைவிட பல பொருள்கள் 20% குறைவான விலைக்கு இங்கு கிடைக்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் லோடு வரும். பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை, மேட்டுப்பாளையம், நீலகிரி, திருப்பூர், கேரளா போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்து தினசரி பொருள்கள் செல்லும்.

தினசரி பொது மக்கள், வியாபாரிகள் என்று 10,000 பேர் இங்கு வந்து செல் வார்கள். அதன் அடிப்படையில் இதன்மூலம் மட்டும் ஒரு நாளுக்கு ரூ.100 கோடிக்கு வணிகம் நடக்கும்” என்றார்.

மார்க்கெட்
மார்க்கெட்

டவுன்ஹால் அருகில் உள்ள உக்கடத்துக்குச் சென்றால், மீன் மார்க்கெட் இருக் கிறது. இங்கும், மொத்த வியாபாரம் (லாரி பேட்டை), சில்லறை வியாபாரம் (உக்கடம் பேருந்து நிலையம் எதிரில்) என்று இரண்டு மார்க்கெட்டுகள் இருக்கின்றன. இரண்டிலும் அதிகாலை 4 மணி முதல் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கிவிடும். தினசரி ஆயிரக் கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.

இது குறித்து மீன் வியாபாரி அபாஸ், “என் தந்தை காலத்தில் இருந்து மீன் வியாபாரத்தில் இருக்கிறோம். அப்பா சைக்கிளில் மீன் விற்கத் தொடங்கினார். இப்போது கடை வைத்திருக்கிறோம். நான் இந்த வேலைக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. என் சகோதரரும் இதே தொழில்தான்.

நான் சில்லறை வியாபாரம் செய்து வருகிறேன். ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியா குமரி, எர்ணாகுளம், கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் என்று நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இருந்து தினமும் மீன்கள் வரும். வீக் எண்டில் வியாபாரம் நன்றாக இருக்கும். மற்ற நாள்களில் ஹோட்டல் ஆர்டர்தான் பிரதானம்” என்றார்.

இதுதவிர, சைனா பஜார் சென்றால், குறைந்த விலையில் செல்போன், கணினி, மொபைல் கவர்ஸ், சார்ஜர், இயர் போன், பேட்டரி, ஐ-பேட் போன்றவை கிடைக்கும்.

அதேபோல, பிளாஸ்டிக் வீட்டுப் உபயோக பொருள்கள், குழந்தைகள் விளையாட்டுப் பொருள்களுக்கு தாமஸ் வீதி, குறைந்த விலையில் துணிகளுக்கு உப்புக்கடை சந்து, ஃபர்னிச்சர் பொருள் களுக்கு வெரைட்டி ஹால் சாலை, பழைய புத்தகங்களுக்கு ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, என்.ஹெச் சாலை, பிரகாசம் என்று டவுன்ஹாலின் அனைத்து சந்துபொந்து, இண்டுஇடுக்கு பகுதிகளும் மார்க்கெட் ஏரியாக்கள்தான். ஆக மொத்தத்தில், கோவையின் அனைத்து மார்க்கெட்டுகள் சுறுசுறுப்பாகவே செயல்படுகின்றன!

பிட்ஸ்

வருமான வரித் துறைக்கு போலி ஜி.எஸ்.டி பில்களைத் தந்து ஏமாற்றிய குற்றத்துக்காக எட்டு ஆடிட்டர்கள் உள்பட இதுவரை 258 பேரைக் கைது செய்து விசாரித்து வருகிறது காவல் துறை!