Published:Updated:

வரும் ஏப்ரல் முதல் உங்களின் மாதச் சம்பளம் குறையலாம்... புதிய மாற்றங்களால் யாருக்கு நன்மை?

Rupee
Rupee ( Image by Free stock photos from www.rupixen.com )

புதிய ஊதியக் கொள்கையின்படி அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கான ஊதிய கூறுகளை மாற்றியமைத்தால் ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளத்தின் (Take Home Salary) அளவு குறையும்.

கடந்த சில வருடங்களாகப் பேசப்பட்டு வந்த புதிய ஊதியக் கொள்கையை, கடந்த 2019-ம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசாங்கம் நிறைவேற்றியிருந்தது. அதன்படி, வருகிற 2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து `புதிய ஊதியக் கொள்கை 2021' அமலுக்கு வரக்கூடிய நிலை உருவாகி இருக்கிறது. இதற்கான வரைவு புதிய ஊதியக் கொள்கை 2021-ம் வெளியாகி இருக்கிறது.

இந்தப் புதிய விதிமுறையின்படி, ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை (Basic Pay) குறைந்தபட்சம் 50 சதவிகிதமாகவும் அல்லது அதற்கு மேலும் வைத்திருக்க வேண்டும் என்றும், டிராவல் அலவன்ஸ், வீட்டு வாடகை அலவன்ஸ், ஃபுட் அலவன்ஸ் போன்ற மற்ற விஷயங்களின் விகிதம் 50 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் வரைவில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், இந்த புதிய ஊதிய விதி அமலுக்கு வந்தால், பல தனியார் நிறுவனங்களில் ஊதிய கூறுகளில் (Salary Structure) பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Salary  (Representational Image)
Salary (Representational Image)
Image by mohamed Hassan from Pixabay

புதிய ஊதியக் கொள்கையின்படி அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கான ஊதிய கூறுகளை மாற்றியமைத்தால் ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளத்தின் (Take Home Salary) அளவு குறையும் என நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

``கொரோனா நோய்த்தொற்று காரணமாக வேலையிழப்பு, சம்பளம் குறைவு போன்ற பல காரணங்களால், மக்கள் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் புதிய ஊதியக் கொள்கையை அரசு அமல்படுத்துவது, மக்களின் நிதிச் சிரமத்தை மேலும் அதிகரிப்பதாகத்தானே அமையும்?" என்கிற கேள்வியையும் ஒருசாரர் எழுப்புகிறார்கள்.

புதிய ஊதியக் கொள்கையை அரசு இந்த நேரத்தில் அறிவிப்பதற்கான காரணம் என்ன, இதனால் யாருக்கு என்ன லாபம், ஊழியர்களுக்கு இந்தப் புதிய ஊதியக் கொள்கை எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்கிற பல்வேறு கேள்விகளுடன் SlashDr.com நிறுவனத்தின் சி.இ.ஓ கோகுல் விஸ்வேஸ்வரனிடம் பேசினோம்.

SlashDr.com நிறுவனத்தின் சி.இ.ஓ கோகுல் விஸ்வேஸ்வரன்.
SlashDr.com நிறுவனத்தின் சி.இ.ஓ கோகுல் விஸ்வேஸ்வரன்.

சம்பளம் குறைவதால் நன்மையே!

``மத்திய அரசாங்கம் கடந்த சில வருடங்களாகவே புதிய ஊதியக் கொள்கையைக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. அதைத்தான் இப்போது நடைமுறைக்கு கொண்டு வரப்போகிறார்களே தவிர, கொரோனா காலத்துக்கும், இந்தப் புதிய ஊதியக் கொள்கை அமல்படுத்துவதற்கும் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்த முடியாது.

தற்போதைய நிலையில் பல்வேறு நிறுவனங்கள், ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியப் பட்டியலை, அவர்களின் வசதிக்கு ஏற்றாற்போல மாற்றி பயன்படுத்தி வருகிறார்கள். இதை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளைத்தான் இந்தப் புதிய ஊதியக் கொள்கை வரையறுக்கிறது. குறைந்தபட்சம் அடிப்படை சம்பளம் 50 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்தால், வருகிற ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, சம்பளப் படிவத்தில் அலவன்ஸ்களை அதிகமாகக் காட்டி, அடிப்படைச் சம்பளத்தைக் குறைத்துக்காட்ட நிறுவனங்களால் முடியாது. இதனால் சிறிய, பெரிய நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரியான சம்பள விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது நல்ல விஷயம்தான்.

அடிப்படைச் சம்பளத்தை அதிகமாக்கும்போது, தங்களுடைய பி.எஃப் கணக்கில் ஊழியர்கள் செலுத்தும் பி.எஃப் தொகையும் அதிகமாகும், நிறுவனங்கள் ஊழியர்களுக்காக செலுத்தும் பி.எஃப் பங்களிப்புத் தொகையும் அதிகரிக்கும். இது தவிர, புதிய ஊதியக் கொள்கையின் கீழ் ஊழியர்களுக்கான பணிக்கொடை (Gratuity) விகிதமும் அதிகமாகும். ஏனெனில், அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில்தான் பணிக்கொடை கணக்கிடப்படுகிறது. இது நீண்ட காலத்துக்கு ஊழியர்களின் சேமிப்பையும் அதிகரிக்கும். எனவே, ஒவ்வொரு மாதமும் நீங்கள் வாங்கும் சம்பளம் குறைந்தாலும் நீண்ட கால அடிப்படையில் உங்களுக்குப் பெரிய தொகை கிடைக்கும்" என்றார்.

பி.எஃப், கிராஜுவிட்டி பணத்தை எப்படி முதலீடு செய்வது?
பி.எஃப், கிராஜுவிட்டி பணத்தை எப்படி முதலீடு செய்வது?
Model

பி.எஃப் கணக்குகளில் பணம் சேரும்!

அடிப்படைச் சம்பளம் அதிகமாகும்போது, நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் சார்பில் பி.எஃப் கணக்குக்கு செலுத்தக்கூடிய பணம் அதிகமாகும் என்பதால், அரசு நிர்வகிக்கும் பி.எஃப் தொகையின் அளவு கணிசமாக உயரும். இது ஒருவகையில் அரசுக்கு நன்மை தரும் விஷயம்தான். அதே சமயம், பி.எஃப் கணக்குகளில் செலுத்தப்படும் தொகையை பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டு, அரசுப் பத்திரங்கள் எனப் பல முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தை அரசு பி.எஃப் பயனாளர்களுக்கு வட்டியாகத் (பி.எஃப் சேமிப்புக்கான தற்போதைய வட்டி விகிதம் 8.50 சதவிகிதம்) தருகிறது. வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புகளில் கிடைக்கும் வட்டி விகிதத்தைவிடவும், பி.எஃப் கணக்கில் கிடைக்கும் வட்டி விகிதம் அதிகம் என்பதால், பயனாளர்களுக்கு இது நன்மையே.

ஆக, இந்தப் புதிய ஊதிய முறை அமலுக்கு வந்தால், ஏப்ரல் மாதத்திலிருந்து கையில் கிடைக்கும் மாதச் சம்பளங்களில் ஒரு சில ஆயிரங்கள் குறைந்தாலும், அரசின் புதிய ஊதியக் கொள்கையால் ஓய்வுக்காலச் சேமிப்பு அதிகரிக்கும் என்பது நல்ல விஷயமே!

அடுத்த கட்டுரைக்கு