Published:Updated:

`தேசநலனைவிட உங்கள் கம்பெனி முக்கியமா?' - டாடா குழுமத்தை விமர்சித்த பியூஷ் கோயல்; நீக்கப்பட்ட வீடியோ

அமைச்சர் பியூஷ் கோயலின் சர்ச்சைகுரிய 19 நிமிட பேச்சு சிஐஐ யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இதனுடைய திருத்தப்பட்ட வீடியோவும் வெளியிடப்பட்டது. ஆனால் அதுவும் பிறகு நீக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்திய தொழிலக கூட்டமைப்பில் நிகழ்ச்சி ஒன்று கடந்த வியாழன் அன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ்கோயல் கூறிய கருத்து கடும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்பு இ-காமர்ஸ் துறைக்கான விதிமுறையை மத்திய வர்த்தக அமைச்சகம் உருவாக்கியிருந்தது. இதில் சில விதிமுறைகளை டாடா குழுமம் எதிர்த்திருந்தது. இந்த நிலையில் டாடா குழுமத்தைக் குறிப்பிட்டு, ``நீங்கள் ஒரிரு வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கிவிட்டால் தேசிய நலனை விட உங்கள் நலன் முக்கியமானதாக போய்விடுமா?" என பியூஷ்கோயல் கூறியுள்ளார்.

பியுஷ் கோயல்
பியுஷ் கோயல்
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021: இந்த 20 முக்கிய விஷயங்களை கவனிச்சீங்களா?

``இதனை டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனிடம் கூட தெரிவித்திருக்கிறேன்" எனக் கூறிய இவர், ``டாடா ஸ்டீல் நிறுவனம் கொரியாவிலோ அல்லது ஜப்பானிலோ ஸ்டீலை விற்க முடியுமா? அந்த நாடுகள் இறக்குமதியை அனுமதிக்கவில்லை. ஆனால் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி பேசும்போது பின்னோக்கிய பார்வை, பழைய சிந்தனை என கூறுவீர்கள். ஜப்பான் அல்லது கொரியாவை பார்த்து யாராவது கூறமுடியுமா?" என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும், ``நாட்டின் வளர்ச்சிக்கு அரசாங்கம் மட்டுமே அனைத்தையும் செய்ய முடியாது. தொழில்துறையினரும் முன்வரவேண்டும். மேலும் அதிக பணம் சிலரிடம் மட்டுமே இருக்க கூடாது. தேவைப்படுபவர்களுக்கு பணம் சென்றடைய வேண்டும்.

மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க போதுமான அளவுக்கு தொழில்துறையினர் முதலீடு செய்யவில்லை. சில ஸ்டார்ட் அப்களில் உங்களின் முதலீடு திரும்பகிடைக்கவில்லை என்றால் நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என இந்திய தொழிலக கூட்டமைப்பில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்த நிலையில் அடுத்த நாள் சர்ச்சைக்குரிய இந்த கருத்தினை தெரிவித்திருக்கிறார்.

பெட்ரோல் விலைக் குறைப்பு முதல் புதிய டைடல் பூங்காக்கள் வரை; தமிழக பட்ஜெட்டின் டாப் 10 ஹைலைட்ஸ்!

இதுகுறித்த செய்தி வெளியானவுடன் சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பு நிலவியது. எதிர்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

``குருட்டு நம்பிக்கைக்கும் தேசபக்திக்கும் வித்தியாசம் தெரியாமல் பா.ஜ.க அமைச்சர்கள் உள்ளனர்'' காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில் தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

பிரியங்கா சதுர்வேதி
பிரியங்கா சதுர்வேதி
Photo: Twitter/ @priyankac19

சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி கூறும்போது, ``அமைச்சரின் இந்தப் பேச்சு வெட்கக்கேடானது. இதற்கு அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிஐஐ வலியுறுத்த வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் கருத்தரங்கில் டாடா குழுமத்தின் கட்டுமான பிரிவின் தலைவர் பன்மாலி அகர்வாலும் பங்கேற்றார் என்பது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில், அமைச்சரின் சர்ச்சைகுரிய 19 நிமிட பேச்சு சிஐஐ யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இதனுடைய திருத்தப்பட்ட வீடியோவும் வெளியிடப்பட்டது. ஆனால் அதுவும் பிறகு நீக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு