Published:Updated:

“ஒரு லட்சத்தை முழுசா பார்த்தது `மன்மத ராசா’ பாட்டுலதான்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குடும்பத்தினருடன் யுகபாரதி
குடும்பத்தினருடன் யுகபாரதி

ஆயிரம் முதல் லட்சம் வரை- அனுபவம் பகிரும் பிரபலங்கள்

பிரீமியம் ஸ்டோரி

வசதிக்குப் பணம் இருக்கலாம். ஆனா, ஆடம்பரத்துக்குப் பணம் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான். பணம் இல்லாம சென்னையில சுற்றித் திரிந்த காலத்துலயும் அதே மனநிலைதான். இப்ப எல்லாத் தேவைகளும் பூர்த்தியாகி தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும்போதும் அதே மனநிலைதான்....” - எதார்த்தமாகப் பேசுகிறார் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான யுகபாரதி.

‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்’ பாடலில் தன் திரை வாழ்வை ஆரம்பித்த யுகபாரதி, இன்று தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத பாடலாசிரியர். 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களையும் 25 நூல்களையும் எழுதி தனக்கென தனியிடம் பிடித்திருக்கும் அவரிடம், உங்களது பண அனுபவம் குறித்துச் சொல்லுங்கள் என்று கேட்டோம்.

குடும்பத்தினருடன் யுகபாரதி
குடும்பத்தினருடன் யுகபாரதி

``தஞ்சாவூர்ல சாதாரண விவசாயக் குடும்பம் என்னுடையது. அப்பா, தீவிரமான கம்யூனிஸ்ட். சின்ன வயசுல இருந்தே நிறைய கவிதை எழுதுவேன். அதைப் பத்திரிகைகளுக்கு அனுப்ப ஆரம்பிச்சேன். பிரசுரமாகும் கவிதை களுக்கு ஐம்பது, நூறுன்னு சன்மானம் வரும். தொடர்ந்து கவிதைகள் பிரசுரமாக ஆரம்பிச்ச தால சன்மானம் அடிக்கடி வர ஆரம்பிச்சது. அதைக் கவனிச்ச போஸ்ட் மாஸ்டர், ‘அந்தப் பையனை பாருங்க’ன்னு என்னை ஊர் முழுக்கப் பாராட்டினார். ஊருக்குள்ள நான் கவிஞனா அடையாளப் பட்டது அப்படித்தான்.

லீவ் நாள்கள்ல பக்கத்து வீட்டுப் பிள்ளை களுக்குப் புத்தகங்களை `பைண்டிங்’ பண்ணித் தர்றது, சுவர் விளம்பரங்கள் எழுதுறதுன்னு வாரம் நூறு, இருநூறு கிடைக்கும். அடுத்து என்னன்னு யோசிச்சப்ப, சென்னைக்குப் போய் பத்திரிகையில வேலை செய்யணும்ங்கிற முடிவெடுத்தேன். என் நண்பன் `மெஹந்தி சர்க்கஸ்’ டைரக்டர் சரவணனுடைய உறவினர் ஒருவர், சென்னையில ஒரு பத்திரிகையில ஓவியரா வேலைபார்த்தார். அவர் எங்க ஊருக்கு வந்தப்போ `நீங்க நல்லா கவிதை எழுதுறீங்க. சென்னை வந்தீங்கன்னா நல்ல எதிர்காலம் இருக்கு’ன்னு சொன்னதுடன், அவருடைய முகவரியையும் தந்தார்.

‘வாழ்க்கையில செட்டில் ஆகிடலாம்’ங்கிற எண்ணத்தோட, நானும் சரவணனும் சென்னைக்குக் கிளம்பி வந்தோம். அம்மா மூக்குத்தியை அடகு வெச்சு ரூ.1,300 ரூபாய் தந்தாங்க. சரவணனும் ரூ.1,300 கொண்டுவந்தான். சென்னை வந்து சரவணன் உறவினர் தந்த முகவரிக்குப் போனோம். அவர் அறையைக் காலி செஞ்சுட்டுப் போயிருந்தார். ரெண்டு பேருக்கும் தூக்கிவாரிப் போட்ருச்சு. அடுத்து, என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சப்ப, அந்த அறையில இருந்த தஞ்சை சீனிவாசன்கிறவர், ‘தம்பிகளா, இங்கயே குளிச்சிக் கிளம்புங்க. பத்திரிகை ஆபீஸ்களுக்குப் போய் வேலை தேடிப் பாருங்க’ன்னு சொன்னார்.

சில பத்திரிகை ஆபீஸுகளுக்குப் போனோம். நாங்க போன ஆபீஸ்லயெல்லாம், ‘நீங்க நல்லா கவிதை எழுதுறீங்க. அதுக்காக பத்திரிகையில எப்படி வேலை தர முடியும்?’னு கேட்டாங்க. அப்பதான் கவிதை எழுதுறது வேற, பத்திரிகையில வேலை பார்க்குறது வேறன்னு புரிஞ்சது. அன்னைக்குச் சாயங்காலத்துக்குள்ள எங்களுக்கு ரூ.300-க்கு மேல செலவாகிருச்சு. சாப்பாட்டுக்கே பணம் பத்தாது என்கிறப்ப எங்கே ரூம் எடுத்து தங்குறது? அப்பதான், சுந்தர புத்தன் நினைவுக்கு வந்தார். ம.நடராசன் நடத்திய தமிழரசி பத்திரிகையில் வேலைபார்த்தார் சுந்தர புத்தன். அவரைத் தேடிப் போனோம். அவர் இன்னொரு நண்பருடன் அறை யில் தங்கியிருந்தார். எங்களோட நல்ல நேரம் அவர் ரூம் மேட் வெளியூருக்குப் போயிருந்தார். அவர் வர்ற வரைக்கும் அந்த அறையில அடைக்கலம் கொடுத்தார் சுந்தர புத்தன்.

தினமும் ஒவ்வொரு பத்திரிகை அலுவலகமா ஏறி இறங்கினோம். ஆனா, எங்கேயும் வேலை கிடைக்கலை. இதற்கிடையில சரவணன், வீட்ல சொல்லிட்டு வந்ததுபோல பச்சையப்பன் கல்லூரியில எம்.பில் சேர்ந்திருந்தான். எங்க கையில இருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமா காலியாகி கடைசியா 100 ரூபாய்தான் இருந்துச்சு. அன்னைக்கு சாப்பிட்டுட்டா அடுத்த நாளுக்கு கையில பணம் இல்லைங்கிற நிலைமை. நான் பதற்றமானேன். ஆனா, நண்பன் சரவணன் ரொம்ப கூலாக, ‘அதெல்லாம் கவலைப்படாத... கமல்ஹாசன் நமக்கு 5,000 ரூபாய் தரப் போறார்’னு சொன்னான். எனக்குப் புரியலை. கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சு போட்டி நடத்துறதாவும் முதல் பரிசு 5,000 ரூபாய்னும் சொன்னான். ‘இதெல்லாம் நடக்குற கதையா...’ன்னு கேட்டேன். ‘பரிசு கிடைக்கலைன்னா என்ன? மதியம் அங்கேயே சாப்பிட்டுக்கலாம். கமல் ஹாசனையும் நேர்ல பார்த்துரலாம்’னு சொன்னான்.

கோபாலபுரத்துல உள்ள காதி கிராமோதயா பவன்லதான் பேச்சுப் போட்டி. இப்போ டைரக்டரா இருக்க பத்ரிதான் நிகழ்ச்சியை ஒருங்கிணைச்சார். காலேஜ்ல இருந்து லெட்டர் வாங்கிட்டுப் போகாததால எங்களைப் பேச அனுமதிக்கலை. சாப்பாடு போச்சேங்கிற கவலை யோட, தெரிஞ்ச நண்பரைப் பார்க்கப் போனோம். அவரைப் பார்க்கப் போனதுக்கு பிராயச் சித்தமா டீ, வடை பில் நாங்க கட்ட வேண்டிய நிலைமை. இருந்த காசும் காலி. வெறுங் கையோட மீண்டும் அந்த பேச்சுப் போட்டி நடக்கிற இடத்துக்குப் போனோம்.

“ஒரு லட்சத்தை முழுசா பார்த்தது
`மன்மத ராசா’ பாட்டுலதான்!”

அங்கே இருந்த டைரக்டர் பத்ரி, எங்களைப் பார்த்ததும், ‘நீங்கதானே பேசணும்னு வந்தீங்க... மத்தவங்க எல்லாம் பேசிட்டாங்க. நீங்க பேசுறீங் களா?’ன்னு கேட்டார். சரவணன் தலையாட்ட, மேடை ஏத்தினார். இடையிலே வந்த கமல் சார், சரவணன் பேச்சைக் குறிப் பிட்டுப் பேச, சாப்பிடப்போன எங்களுக்கு எதிர்பாராதவிதமா முதல் பரிசு கிடைச்சது. அந்த 5,000 ரூபாய்லதான் வாழ்க்கையே தொடங்கிச்சு.

அதன்பிறகு, ஒருவழியா எனக்கு ‘ராஜரிஷி’ பத்திரிகையில வேலை கிடைச்சது. மாசம் ரூ.1,250 சம்பளம். அந்தத் தொகை யை கையில வாங்கினப்ப வாழ்க்கையில ஜெயிச்சுட் டோம்’னு தோணுச்சு. ஒரு வருஷத்துல அந்தப் பத்திரிகையை நிறுத்திட்டாங்க. அடுத்த வேலை தேடிக்கிட்டு இருந்தப்ப, ராஜரிஷி பத்திரிகை பொறுப்பாசிரியரா இருந்த நக்கீரன் துரையின் ஆலோசனையின்படி, என் கவிதைகளைப் புத்தகமாக வெளி யிட்டேன். ‘மனப்பத்தாயம்’ கவிதைத் தொகுப்பு வெளியாகி, பலரது பாராட்டையும் பெற்றது. அடுத்து, எனக்குக் கணையாழியில் வேலை கிடைச்சது.

அந்தச் சமயத்துலதான் தியாகுன்னு ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர், ‘எங்க டைரக்டருக்கு உங்க கவிதைத் தொகுப்பு ரொம்ப பிடிச்சிருக்காம். உங்களைச் சந்திக்கணும்னு சொல்றாரு’ன்னு லிங்குசாமி சார்கிட்ட கூட்டிட்டுப் போனார். ‘மெட்டுக்குப் பாட்டெழுதி எனக்குப் பழக்கம் இல்லை சார்...’னு சொன்னேன். ‘நீங்க எழுதிக் குடுங்க நான் மெட்டு போட்டுக்கிறேன்’னு லிங்குசாமி சார் சொன்னார். அப்படித்தான் ஆனந்தம் படத்துக்கு நான் கமிட் ஆனேன். முதல் பாட்டு, ‘பல்லாங் குழியின் வட்டம் பார்த்தேன்’ நல்ல ஹிட். அந்தப் பாட்டுக்கு ரூ.3,000 சம்பளம் தந்தாங்க. ஒரு மணி நேரத்துல இந்தப் பாட்டை எழுதினேன். இதுக்கு ரூ.3,000 தர்றாங்களேன்னு எனக்கு பயங்கர ஆச்சர்யம். இனிமே பாட்டே எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

ஆனா, அடுத்த எட்டு மாசத்துக்கு என்னை யாருமே கூப்பிடல. மறுபடியும் லிங்குசாமி சார்தான் கூப்பிட்டு ‘ரன்’ படத்துல வாய்ப்பு தந்தார். அதில் `காதல் பிசாசு’ங்கிற பாட்டெழுதினேன். ‘‘உங்களுக்கு பேமென்ட் போட் ருக்கு, போய் வாங்கிக்கோங்க’’ன்னு சொன்னார். இன்னொரு ரூ.3,000 வரப் போகுதுன்னு சந்தோஷத்துல போனேன். ரூ.40,000 கொடுத்தாங்க. அதைப் பார்த்ததும் எனக்கு மூச்சடைச்சுப் போச்சு.

அடுத்து, சில பாட்டுகளுக்குப் பிறகுதான், `மன்மத ராசா’ பாட்டெழுதினேன். அது பயங்கர ஹிட். புரொடியூசர் என்னைக் கூப்பிட்டுக் கையில ஒரு கவர் தந்தார். பிரிச்சுப் பார்த்தா, 1.5 லட்சம் ரூபாய். முதன் முதலா ஒரு லட்சம் ரூபாயை முழுசா அப்பதான் பார்த்தேன். ஆனா, பெரியளவுல நான் அதிர்ச்சியாகலை. ஏன்னா, பணத்தைப் பத்தின மதிப்பீடு பயம் எல்லாம் எனக்குச் சமநிலைக்கு வந்துருச்சு. நம்மளால சம்பாதிக்க முடியும்ங்கிற நம்பிக்கை வந்திட்டா போதும், அந்த சமநிலை வந்திரும்னு நினைக்கிறேன். ஆனா, அதுக்கு உழைக்கணும். தீவிரமா வாசிக்கிறது, தீவிரமா எழுதுறதுன்னு என்னைத் தயார் படுத்திக்கிட்டேன். அடுத்து, பல டைரக்டர்கள், பல படங்கள்னு சினிமா கவிஞனா மாறிட்டேன். நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. கொஞ்சம் கொஞ்சமா சேமிக்க ஆரம்பிச்சேன். வாடகை வீடு சொந்த வீடா மாறுனுச்சு, அடகு வச்ச நிலத்தை மீட்டோம், விற்ற அம்மாவோட நகைகளையெல்லாம் திரும்ப வாங்கினோம். ஊர்ல பெரிய வீடு கட்டி அதன் பிறகுதான் நான் கல்யாணம் பண்ணேன்” என்று சொல்லும்போது யுகபாரதியின் குரலில் அத்தனை நிதானம்.

``நான் இயல்பாகவே தேவைக்கு மட்டுமே செலவு பண்ணுவேன். எல்லாரும் 100 ரூபாய்க்குச் சட்டை எடுத்தாங்கன்னா 10 ரூபாய்க்கு சட்டை கிடைக்குதான்னு தேடுற ஆள் நான். அதீதமா செலவு பண்றதோ, செல்வ வளம் மிக்கவனா நான் இருக்கணும்னோ நான் நினைச்சதே கிடையாது. சுருக்கமா சொல்லப்போனா, பணத்தால நான் மனிதர்களை அளவிடுறதே இல்லை!” - நெகிழ்வாக முடிக்கிறார் யுகபாரதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு