Published:Updated:

மூன்று யுனிகார்ன் நிறுவனங்கள்... பிசினஸில் ஜெயித்த ஜெட்வொர்க் ஶ்ரீநாத்!

ஶ்ரீநாத், அம்ரித், விஷால் சௌத்திரி, ராகுல் சர்மா
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீநாத், அம்ரித், விஷால் சௌத்திரி, ராகுல் சர்மா

பிசினஸ்

மூன்று யுனிகார்ன் நிறுவனங்கள்... பிசினஸில் ஜெயித்த ஜெட்வொர்க் ஶ்ரீநாத்!

பிசினஸ்

Published:Updated:
ஶ்ரீநாத், அம்ரித், விஷால் சௌத்திரி, ராகுல் சர்மா
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீநாத், அம்ரித், விஷால் சௌத்திரி, ராகுல் சர்மா

ஒரு யுனிகார்ன் நிறுவனத்தை உருவாக்குவதே பெரிய சாதனைதான். ஆனால், ஶ்ரீநாத் மூன்று யுனிகார்ன் நிறுவனங்களின் உருவாக்கத்தில் பங்கு வகித்திருக்கிறார். முதலில் ஆப் பிசினஸ் நிறுவனம், அடுத்து பிளாக்பக் என்னும் ஸ்டார்ட்அப் என்று தொடர்ந்தவர், மூன்றாவதாகத் தன் நண்பர்களுடன் இணைந்து ஜெட்வொர்க் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இப்போது இந்த மூன்று நிறுவனங்களுமே தற்போது யுனிகார்ன் நிறுவனங்களாக ஜொலித்துக்கொண்டிருக்கின்றன.

ஜெட்வொர்க் நிறுவனம் சமீபத்தில் நிதி திரட்டியபோது, அதன் சந்தை மதிப்பு 2.7 பில்லியன் டாலர். பெங்களூருவில் பிசியான செட்யூலில் இருந்த ஶ்ரீநாத் தனது பிசினஸ் பயணத்தை தொலைபேசியில் நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

உடுமலைப்பேட்டை டு சென்னை...

‘‘சொந்த ஊர் உடுமலைப்பேட்டை. விவசாயக் குடும்பம். அப்பா, சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.டெக் படித்தார். நான் பள்ளியில் படிக்கும்போது ஒருமுறை நாங்கள் சென்னை வந்தோம். அப்போது ஐ.ஐ.டி வளாகத்தைக் காண்பித்து, ‘‘நீ இங்குதான் படிக்க வேண்டும்’’ என்றார். அப்போது முதல் ஐ.ஐ.டி-யில் படிக்கவேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.

10-ம் வகுப்பு வரை திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பள்ளியில் படித்தேன். அதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி கோச்சிங்குக்காக ஹைதராபாத் சென்றேன். அங்குதான் 11 மற்றும் 12-வது படித்து முடித்த பின், ஐ.ஐ.டி சென்னையில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தேன்.

அப்போதுதான் பல ஊர்களைச் சேர்ந்தவர்களைப் பார்த்தேன். ஒவ்வொருவருடைய திட்டமும் இலக்கும் வெவ்வேறாக இருந்தது என்று புரிந்தது. இருந்தாலும், விவசாயக் குடும்பம் என்பதால், விவசாயம் சார்ந்து ஏதாவது செய்யலாம் எனத் திட்டமிட்டேன். கல்லூரியில் என் புராஜக்ட் விவசாயம் சார்ந்தே இருந்தது. ஜி.இ நிறுவனம் அறிவித்த போட்டியில் எங்களுடைய புராஜக்ட்டுக்கு முதல் பரிசு கிடைத்தது. 2010-ம் ஆண்டு ரூ.5 லட்சம் என்பது மிகப்பெரிய பரிசு.

உடனே ஸ்டார்ட்அப் தொடங்கலாம் என்னும் பேச்சு இருந்தது. ஆனால், என்னுடன் இருந்தவர்கள் மேற்படிப்பு, வேலை எனச் சென்றுவிட்டதால் நானும் ஐ.டி.சி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கும் விவசாயம் சார்ந்த பிரிவில்தான் இருந்தேன். விவசாயத்தில் இயந்திரங்களை எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதில் கவனம் செலுத்தினேன். அப்போது ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று விவசாயத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். ஐ.டி.சி-யில் இருந்த ஐந்தாண்டுகள் மிகச் சிறப்பாக இருந்தது.

மூன்று யுனிகார்ன் நிறுவனங்கள்... பிசினஸில் ஜெயித்த ஜெட்வொர்க் ஶ்ரீநாத்!

அப்பா விடுத்த அழைப்பு...

அப்போது இந்தியாவில் ஸ்டார்ட்அப்கள் அதிக அளவுக்கு உருவான நேரம். வழக்கமாக, வேலையில் இருந்து வெளியேறுவதைப் பெற்றோர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால், ‘‘இன்னும் ஏன் வேலையில் இருக்கிறாய்? ஏதாவது சொந்தமாகத் தொடங்கலாமே...’’ என என் அப்பா கேட்டார். அதனால் ஸ்டார்ட்அப் குறித்து சிந்திக்கத் தொடங்கினேன்.

திருமணம் முடிந்த சில மாதங்களில் வேலையை விட்டேன். அப்போது நண்பர்கள் மூலமாக ஆப் பிசினஸ் நிறுவனத்தின் நிறுவனரைச் சந்தித்தேன். அவர் என்னை விட வயதில் மூத்தவர். தவிர, மேட்ரிக்ஸ் பார்ட்னர் எனும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனத்தில் பணியாற்றியவர். எனக்கு அப்போது வரை ஃபைனான்ஸ் குறித்து பெரிதாக எதுவும் தெரியாது. அதனால் ஆப் பிசினஸ் நிறுவனத்தில் இணை நிறுவனராக இணைந்தேன்.

இது பி-டு-பி தொழில். பல நிறுவனங்களை ஒருங்கிணைத் தோம். கடுமையான உழைப்பு. சீட், சீரியஸ் ஏ, சீரியஸ் பி வரையில் முதலீட்டைத் திரட்டும் வரையில் அங்கு இருந்தேன். நிதி நிர்வாகம் தொடர்பாக பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். ஜீரோவில் இருந்து 200 நபர்கள் வரும் வரை ஆப் பிசினஸ் நிறுவனத்தில் இருந்தேன்.

2016-ம் ஆண்டு தொழிலில் ஒரு மந்தநிலை இருந்தது. அதனால் என்.பி.எஃப்.சி தொடங்க இயக்குநர் குழு அனுமதி வழங்கியது. எனக்கு என்.பி.எஃப்.சி தொழில் குறித்து பெரிய ஐடியா இல்லை. அதனால் நான் அங்கிருப்பது சரியாக இருக்காது என வெளியேறினேன். ஆனால், இன்றும் அந்த நிறுவனத்துடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது.

அப்போது பிளாக்பக் நிறு வனம் வளர்ந்துவரும் நிறுவன மாக இருந்தது. அந்த நிறுவனர் எனக்கு நல்ல நண்பர். அந்த நிறுவனத்தின் சில முக்கியமான பிரிவுகளை எடுத்துக்கொள்ள முடியுமா எனக் கேட்டார். அந்த நிறுவனத்துக்காகப் பல வேலை களைச் செய்திருக்கிறேன். லாரிகளை ஒருங்கிணைக்கும் நிறுவனம் இது என்பதால், நாடு முழுவதும் இருக்கும் லாரி ஓட்டுநர்களைச் சந்தித்தேன். அதனால் இந்தியா முழுவதும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

ஆப் பிசினஸ் நிறுவனத்தில் சீரியஸ் பி முதலீடு வரை இருந் தேன். பிளாக்பக் நிறுவனத்தில் சீரியஸ் பி முதலீட்டில் இருந்து அடுத்தடுத்த ரவுண்ட் நிதி திரட்டும் வரை இருந்தேன்.

இந்தச் சமயத்தில் என் மனைவியுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட, ஒரு மாத காலம் எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் இருந்தேன். அப்போது என்னுடன் ஐ.ஐ.டி-யில் படித்த அம்ரித் ஆச்சார்யா அமெரிக்காவில் இருந்து வேலையை விட்டுவிட்டு பெங்களூருக்கு வந்தார். அவர் மெக்கென்ஸியில் இருந்தவர். ஆனால், இந்தியாவுக்கு வர விசா கிடைக்காமல் இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் இப்படிக் காத்திருக்க முடியாது என்று நினைத்து, அந்த வேலையில் இருந்து விலகி சென்னைக்கு வந்துவிட்டார். புதிதாக நிறுவனம் ஒன்றைத் தொடங்கலாம் என்னும் யோசனையைக் கூறினார்.

உருவானது ஜெட்வொர்க்...

இதற்கிடையே என் அப்பா வேலையில் இருந்து விலகி திருச்சியில் ஒரு எஸ்.எம்.இ நிறுவனத்தை நடத்தி வந்தார். ஆரம்பத்தில் சிறப்பாகச் செயல்பட்ட நிறுவனத்துக்கு திடீரென ஆர்டர் இல்லை. எஸ்.எம்.இ நிறுவனங்களால் அவர்களது எல்லையைத் தாண்டி ஆர்டர் பிடிக்க முடியாது. ஒருவேளை, ஆர்டர் கிடைத்தாலும் பணம் கிடைக்குமா என்னும் சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. அதனால் எஸ்.எம்.இ நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் நிறுவனத்தைத் தொடங்க நாங்கள் தொடங்கியதுதான் ஜெட்வொர்க்.

நான், அம்ரித், ராகுல் சர்மா, விஷால் சௌத்திரி என நால்வரும் சேர்ந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். ஆரம்பத்தில் தென் இந்தியாவில் மட்டுமே கவனம் செலுத்தினோம். அதிலும் ஒரு பிரிவில் மட்டுமே கவனம் செலுத்தினோம்.

இந்தியா முழுவதும் பல்வேறு கிளஸ்டர்கள் உள்ளன. ஒவ்வோர் ஊரிலும் ஒரு தொழில் சிறப்பாக இருக்கும். டேர்ன்ஓவர் சீராக உயர்ந்துகொண்டே இருந்தது. ஆரம்பிக்கப்பட்ட ஆண்டில் டேர்ன்ஓவர் ரூ.16 கோடி அளவுக்கு இருந்தது. அதைத் தொடர்ந்து ரூ.330 கோடி, 900 கோடி ரூபாய் அளவுக்கு டேர்ன் ஓவர் வளர்ந்தது. கடந்த நிதி ஆண்டில் ரூ5,100 கோடி அளவுக்கு வருமானம் உயர்ந்து, நாங்கள் லாபம் சம்பாதித்தோம்.

உற்பத்தித் துறை ஸ்டார்ட்அப்...

இத்துடன் தொடர்ந்து நிதி திரட்டிக்கொண்டே வந்தோம். சமீபத்தில் சீரியஸ் இ முதலீட்டைத் திரட்டி இருக்கிறோம். பல சர்வதேச முதலீட்டாளர்கள் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். எங்களுடைய பணியாளர்களின் எண்ணிக்கையும் 1,200 என்னும் அளவில் இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து எங்களுடைய ஸ்டார்ட் அப்க்கு வருகிறார்கள். எங்களுடைய நெட்வொர்க்கில் 10,000 எஸ்.எம்.இ நிறுவனங்கள், 2,000 பெரு நிறுவனங்கள் உள்ளன.

எல்லாவற்றையும்விட நாங்கள் முக்கியமாகக் கருதுவது, வெளிநாட்டுப் பிரிவைதான். எங்களுடைய வருமானத் தில் சுமார் 13% (650 கோடி) வெளிநாட்டுப் பிரிவின் மூலம் கிடைக்கிறது. அதாவது, வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங் களுக்கான தேவையை இந்தியாவில் இருந்து செய்கிறோம்’’ என்றார் நாத்.

டெக்னாலஜி, ஃபைனான்ஷியல் சர் வீசஸ் ஸ்டார்ட்அப் நிறுவனங் களுக்கு மத்தியில் உற்பத்தித் துறையில் ஒரு ஸ்டார்ட்அப் ஜெட்வொர்க் உரு வெடுத்து, வேகமாக வளர்ந்து வருவது நிச்சயம் பாராட்டத்தக்கது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism