Published:Updated:

ஜோஹோ CEO, இப்போ கிராமத்தில் பள்ளி ஆசிரியர்... ஶ்ரீதர் வேம்புவின் புது அவதாரம்!

ஶ்ரீதர் வேம்பு
ஶ்ரீதர் வேம்பு

இங்கு சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரப்படுவதுடன், இரு வேளைக்கு சாப்பாடு, பள்ளி முடிந்து வீட்டுக்குப் புறப்படும் முன் ஸ்நாக்ஸூம் தரப்படுகிறது.

இந்த கொரோனா காலம் ஒவ்வொரு மனிதரையும் ஒவ்வொரு விதமாக மாற்றியிருக்கிறது. சென்னையின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான `ஜோஹோ'வின் நிறுவனர் ஶ்ரீதர் வேம்புவை ஒரு தொழிலதிபர் மற்றும் பள்ளி ஆசிரியராக மாற்றியிருக்கிறது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த `ஜோஹோ' ஶ்ரீதர் வேம்பு சென்னை ஐ.ஐ.டி-யில் படித்த பின் அமெரிக்காவில் ஆராய்ச்சிப் பட்டம் செய்யத் தொடங்கினார். அந்த ஆராய்ச்சியை அவர் முடித்திருந்தால், கல்லூரியில் ஒரு பேராசிரியராக ஆகியிருப்பார். ஆனால், இந்த ஆராய்ச்சிகளுக்கும் இன்றைய அறிவியலுக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கத் தொடங்கிய ஶ்ரீதர் வேம்பு, சென்னைக்குத் திரும்பி ஏதாவது ஒரு தொழிலைத் தொடங்க முடிவெடுத்து, அட்வன்ட்நெட் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். அதுதான் இன்று ஆண்டுக்கு ரூ.3,000 கோடி டேர்ன் ஓவர் கொண்ட `ஜோஹோ' நிறுவனமாக மாறியிருக்கிறது.

zoho
zoho

சென்னையில் தொழில் தொடங்கிய அவர், நிறுவனம் வளர வளர அமெரிக்காவில் இருக்க வேண்டியது அவசியமாயிற்று. சென்னையிலிருந்து சிலிக்கான் வேலிக்கு தன் இருப்பிடத்தை மாற்றினார். ஆண்டுக்கு ஒன்றிரண்டு மாதங்கள் சென்னைக்கு வந்து, ஜோஹோ நிறுவனத்தில் பணிபுரிவார். மற்றபடி, சிலிக்கான் வேலியிலிருந்தே ஜோஹோ நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அவர் சென்னை வருவது போல, கடந்த ஆண்டும் வந்தார். இந்த முறை அவர் சென்னையில் இருப்பதைவிட தென்காசிக்குப் பக்கத்தில் உள்ள மத்தளம்பாறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு செயல்படத் தொடங்கிய `ஜோஹோ'வின் அலுவலகத்துக்குச் சென்று பணியாற்றத் தொடங்கினார். பொதிகை மலையின் சுத்தமான காற்று, தண்ணீர், எளிமையான உணவு, பரபரப்பற்ற வாழ்க்கை அவரை அங்கிருந்து செல்லவிடவில்லை. இந்த நிலையில், கொரோனா தொற்று நோய் உலகம் முழுக்க பரவத் தொடங்கி, ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அவர் அங்கேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Zoho
Zoho

ஶ்ரீதர் வேம்புவுக்கு எப்போதுமே சமுதாய சிந்தனை அதிகம். வளர்ந்த மேற்கத்திய நாடுகளைப் போல, நம் நாடு ஏன் முன்னேறாமல் இருக்கிறது, கல்வியில் நாம் ஏன் பின்தங்கியிருக்கிறோம், நாட்டின் வளர்ச்சி குறித்து நம்முடைய மக்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பது குறித்தெல்லாம் எப்போதும் யோசித்துக்கொண்டிருப்பார். இது பற்றிய தன்னுடைய சிந்தனைகள் அவர் அபூர்வமாகத் தரும் பேட்டிகளில் தெளிவாக வெளிப்படும்.

இந்த முறை அவர் மத்தளம்பாறையில் இருந்தபோது, கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிக்கூடங்கள் பல மாதங்களுக்குப் பூட்டிக் கிடப்பதைப் பார்த்தார். மத்தளம்பாறையைச் சுற்றியுள்ள கிராமத்துக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருப்பதைப் பார்த்தார். உடனே மத்தளம்பாறையில் `ஜோஹோ' அலுவலக வளாகத்திலேயே ஒரு சிறுபள்ளியைத் திறந்தார்.

இங்கு சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரப்படுவதுடன், இரு வேளைக்கு சாப்பாடு, பள்ளி முடிந்து வீட்டுக்குப் புறப்படும் முன் ஸ்நாக்ஸூம் தரப்படுகிறது. இங்கு ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று மணி நேரம் குழந்தைகளுக்கு பாடம் நடத்தவும் செய்கிறார் ஶ்ரீதர். பாடத்திட்டம், பரீட்சை, மதிப்பெண் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தராமல், அறிவை வளர்க்கும் கற்றல் முறைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்.

ஜோஹோ ஶ்ரீதர்
ஜோஹோ ஶ்ரீதர்

ஜோஹோ நிறுவனம் ஜோஹோ யுனிவர்சிட்டி என்கிற கல்வி முன்னெடுப்பை ஏற்கெனவே நடத்தி வருகிறது. 10, 12-ம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் சிலருக்கு சாஃப்ட்வேர் கோடிங் எழுதும் பயிற்சி தந்து, அவர்களுக்கு ஜோஹோ நிறுவனத்திலேயே வேலையும் தந்திருக்கிறார் ஶ்ரீதர் வேம்பு.

உலக அளவில் ஐந்து கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கும் ஜோஹோ நிறுவனம், கிராமத்து ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும் பாடுபடுவது பாராட்டத்தக்கது.

ஶ்ரீதர் வேம்புவின் நாணயம் விகடனுக்கு அளித்த பேட்டியை வீடியோவில் பார்க்க...

அடுத்த கட்டுரைக்கு