நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஆன்லைன் கேமிங்கில் கொட்டிக்கிடக்கும் அட்டகாசமான வாய்ப்புகள்...!

ஆன்லைன் கேமிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் கேமிங்

ஆன்லைன் கேமிங்

கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து, பூப்பந்து போன்ற விளையாட்டுகள் விளையாடுவதையே தொழிலாகக் கொண்டு பணமும் புகழும் சம்பாதிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் `ஆன்லைன் கேமிங்’ விளையாடினாலும் பேரும் புகழும் சம்பாதிக்க முடியும் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த இணைய உலகில் அனைத்தும் சாத்தியமே என்பதற்கு வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் `மொபைல் கேமிங்’ சந்தை ஓர் உதாரணமாகும்.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

ஸ்டாடிஸ்டா (Statista) என்கிற இணையதளத்தின் புள்ளி விவரத்தின்படி, 2020-ம் ஆண்டு இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறையின் வருமானம் சுமார் 1.2 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பின்படி, சுமார் 9,000 கோடி) ஆகும். இது 2030-ம் ஆண்டில் 3.5 பில்லியன் டாலராகவும், 2025-ம் ஆண்டில் 10.2 பில்லியன் டாலராகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருக்கிறது.

2015-ம் ஆண்டு பெங்களூருவில் பொறியியல் படிக்கும் போது எட்டு நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் கேமிங் ஆடிய பிரஷாந்த் பாண்டே 2018-ம் ஆண்டு ஒரு நாளைக்கு சுமார் 15 மணி நேரம் ஆன்லைன் கேமிங்கில் நேரத்தைச் செலவழித்தார். இவர் அமெரிக்காவில் நடந்த கிளாஸ் ராயல் லீக் (Clash Royale League) போட்டியில் இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண் டார். அதன்பின், ஆன்லைன் கேமிங் மூலமே ஆறு இலக்க சம்பளத்தை சம்பாதிக்க ஆரம்பித்தார்.

இந்த ஆண்டு க்ளான் (Qlan) என்கிற பெயரில் ஆன்லைன் கேமிங் சமூகத்துக்கென ஒரு நெட்வொர்க்கை ஆரம்பித்திருக் கிறார். இதன் மூலம் ஆன்லைன் கேமிங்கில் `கில்லி’ என நினைப்பவர்கள் வேலை தேடலாம்; தங்களது திறமையை உலகத்துக்குத் தெரிவிக்கலாம்; கேமிங் குறித்து தங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

மும்பையில் இருக்கும் பாண்டே, ‘‘இந்தியா வின் ஆன்லைன் கேமிங் துறை முன்பு இருந்தது போல இப்போது இல்லை. ஓய்வுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் விளையாடிய தெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது கிரிக்கெட் வீரர்கள் பி.சி.சி.ஐ-யிடமிருந்து சம்பளம் பெறுகிற மாதிரி, ஆன்லைனில் கேம் விளையாடுகிற பலருக்கும் அது ஒரு முழு நேர `வேலை’யாக மாறியிருக்கிறது.

ஆன்லைன் கேம் விளையாடுபவர்கள் ஒரு குழுவின் சார்பாக விளையாடும்போது மாதம் ரூ.1.5 லட்சம் வரை சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்’’ என்கிறார்.

ஆன்லைன் கேமிங்கில் கொட்டிக்கிடக்கும் அட்டகாசமான வாய்ப்புகள்...!

2000-வது ஆண்டுகளில் கவுன்ட்டர் ஸ்டிரைக், ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் (Counter-Strike, Age of Empires) ஆகியவை இந்தியர் களுக்கு ஆன்லைன் கேமிங்கை அறிமுகப்படுத்தியது. இன்று இருபதாண்டுகளுக்குப் பிறகு, உலகத்திலேயே வேகமாக வளர்ந்துவரும் மொபைல் கேமிங் சந்தை இந்தியாதான். இந்தத் துறை ஆண்டுக்கு 22% வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வளர்ச்சிக்குக் காரணம், இந்தியாவில் இணையத்தை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 56 கோடி என்பதுடன், இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் `க்ளவுட் கேமிங்’கின் வளர்ச்சியும், சந்தா அடிப்படையிலான ஆன்லைன் கேமிங் தளங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் ஆகும்.

கடந்த ஆண்டு ஸ்டாட்டிஸ்ட, நசாரா மற்றும் ஐ.என்.சி24 ( Statista, Nazara and INC24) ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வின்படி, 2025-ம் ஆண்டு இந்தத் துறையின் வருமானம் 10.2 பில்லியன் டாலராக இருக்கும் என தெரிய வந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், இ-ஸ்போர்ட்ஸ் தளமான எ.எஃப்.கே கேமிங் (AFK Gaming) வழங்கும் மொத்த பரிசுத் தொகை 2016-ம் ஆண்டு ரூ.77 லட்சமாக இருந்தது, 2018-ம் ஆண்டு சுமார் ரூ.3.84 கோடியாக அதிகரித்திருக்கிறது.

இந்தத் துறையைச் சார்ந்தவர்களின் கணிப்புப்படி, ஏறத்தாழ 80,000 பேர் ஆன்லைன் கேமிங் துறையானது, தங்களுக்கு வேலையளிக்கும் ஒரு துறையாக எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறுகிறார்கள். ‘‘பலரும் தொழில்ரீதியாக வீடியோ கேம்களைத் தேர்ந்தெடுத்து அதன் அடிப்படையில் நல்ல விளையாட்டுகளை உருவாக்கி வருகிறார்கள்” என்று உலக அளவில் மிகப் பெரிய ஆன்லைன் கேமிங் நிறுவனமாக இருக்கும் `மொபைல் பிரீமியர் லீக்’கைச் சேர்ந்த மூத்த துணைத் தலைவர் நாமன் ஜாவர் (Naman Jhawar) கூறுகிறார்.

2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐ.எ.எம்.எ.ஐ (Internet And Mobile Association of India) வெளியிட்ட அறிக்கையின்படி, டிஜிட்டல் கேம்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் துறையானது இந்தியாவில் பல வேலைவாய்ப்புகளுக்கு பிள்ளையார்சுழி போட்டிருக்கிறது. இந்தத் துறை சார்ந்த வேலைகள் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.3 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் எனவும் தெரிய வந்திருக்கிறது.

ஆன்லைன் ஆட்டக்காரர்கள் மூன்று விதமாகப் பணம் சம்பாதிக்க முடியும் அவை: பரிசுத் தொகை, ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள், ஆன்லைனில் நேரலை ஒளிபரப்பு. இவர்கள் ஏதாவது ஒரு குழுவைச் சேர்ந்த வராக இருந்தால், மாதம்தோறும் கூட சம்பளம் ஈட்ட முடியும்.

ஆட்டக்காரர்களுக்கான வாய்ப்புகள் போக சந்தைப் படுத்தல், விற்பனை, தரவைப் பகுப்பாய்வு செய்தல் (data analytics), விளையாட்டை வடிவமைத்தல், தொழில்நுட்பம் என ஆன்லைன் கேமிங் சார்ந்த உபதுறைகளிலும் நேரலை ஒளிபரப்பு செய்வது, பயிற்சி யாளர்கள், ஆலோசகர்கள் போன்ற வேலைகளுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தொழிலில் முதலீடு செய்யும் வென்ச்சர் கேப்பிடலிஸ்ட்கள் மற்றும் பல பெரிய நிறுவனங்கள் ஆன்லைன் கேமிங் துறையில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக் கின்றன. இதில் ஃபேஸ்புக், நெட்ஃப்ளிக்ஸ், பேடிஎம் (Paytm) ஆகியவையும் அடங்கும். சென்ற ஆண்டு பேடிஎம் ஃபர்ஸ்ட் கேம்ஸ், இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்ட கேமிங் ஸ்டூடியோஸ், விளையாட்டை உருவாக்கு பவர்கள், வடிவமைப்பவர்கள் ஆகியோருக்கு உதவி செய்யும் வகையில் ரூ.10 கோடி முதலீடு செய்தது. ஃபேஸ்புக்கும் நெட்ஃப்ளிக்ஸும் ஆன்லைன் கேம் சம்பந்தமாக எவ்வளவு முதலீடு செய்திருக்கிறது என்பதை வெளியிடவில்லை. ஆனால், 234 மில்லியன் `கேம்ப்ளே’ நிகழ்வுகள் நடந்திருப்பதாக ஃபேஸ்புக் பதிவு கூறுகிறது. இது இந்தியாவை உலக அளவில் மூன்றாவது இடத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

ஆன்லைன் கேம்களில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ், திறமையை வெளிப்படுத்தும் செஸ், லூடோ, கேண்டி க்ரஷ், டெம்பிள் ரன் போன்ற கேஷுவல் விளையாட்டுகள், பல ஆட்டக்காரர்கள் பங்கு பெறும் இ-ஸ்போர்ட்ஸ் (உதாரணம், பப்ஜி, லீக் ஆஃப் லெஜன்ட்ஸ் போன்றவை), எஜுகேஷனல் கேம்ஸ் (புதிர்கள், விநாடி-வினா போன்றவை).

இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவதால் ஆன்லைன் விளையாட்டுகளையும் பல மொழிகளில் அறிமுகப்படுத்த ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் வேலை செய்துவருகின்றன. தனியார் முதலீட்டு நிறுவனங்களான கலாரி கேப்பிடல், சிகோயா கேப்பிடல் (Sequoia Capital) போன்ற நிறுவனங்கள் கடந்த ஆண்டு சுமார் 173 மில்லியன் டாலர் வரை இந்தத் துறையைச் சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக ட்ராக்‌ஷன் டெக்னாலஜீஸ் (Tracxn Technologies) தெரிவித்திருக்கிறது.

இந்தத் துறையைச் சார்ந்த ஸ்டார்ட்அப்களில் சில: ட்ரீம் 11 (ஈட்டிய முதலீடு 100 மில்லியன் டாலர்), ஸ்மாஷ் என்டெர்டெயின்மென்ட் (ஈட்டிய முதலீடு 82.6 மில்லியன் டாலர்), நசாரா டெக்னாலாஜிஸ் (ஈட்டிய முதலீடு 79 மில்லியன் டாலர்). 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் சுமார் 544 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்திருக்கின்றன. நசாரா டெக்னாலாஜியில் முதலீடு செய்திருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் இந்தியாவின் வாரன் பஃபெட் என அறியப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.

இனிவரும் ஆண்டுகளில் 5ஜி அறிமுகமும் க்ளவுட் கேமிங்கும் இந்தத் துறையை மிக வேகமாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஆன்லைன் கேமிங் துறையில் இந்தியாவில் மட்டும் சிறியதும் பெரியதுமாகக் கிட்டத்தட்ட 400 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், இனிவரும் ஆண்டுகளில் இந்தத் துறையில் ஒருங்கிணைப்பு நடைபெற வாய்ப்பு இருக்கிறது. அதன்படி, சிறிய நிறுவனங்கள் பல ஒன்று சேரவும் அல்லது மிகப் பெரிய, பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களைக் கையகப்படுத்துவதின் மூலம் ஆதிக்கம் செலுத்தும் வகையில் 10 முதல் 15 நிறுவனங்கள் எனச் சுருங்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஆன்லைன் கேம்களை ஒழுங்கு படுத்தும் நோக்கில் திருத்தியமைக்கப் பட்ட சட்ட விதிமுறைகளை அரசு வடிவமைத்து அமலுக்குக் கொண்டு வரக்கூடும். ஆந்திரா, அஸ்ஸாம், நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சில ஆன்லைன் கேம்கள் தடை செய்யப் பட்டிருக்கின்றன.

இது நடக்கும்பட்சத்தில் முன்னெப் போதும் இல்லாததைவிட இந்தத் துறை ஒரு பெரும் வீச்சை ஏற்படுத்தக்கூடும் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் நம்புகிறார்கள்.

(‘பிசினஸ் டுடே’ இதழில் ப்ரேர்னா லித்தூ எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கமான தமிழாக்கம். நன்றி: பிசினஸ் டுடே)