கச்சா எண்ணெய் உற்பத்திச் சந்தையின் முடிசூடா மன்னனாக விளங்கும் சவுதி அரேபியாவும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான ஒபெக் கூட்டமைப்பும் (OPEC - Organization of the Petroleum Exporting Countries) கச்சா எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, விலை வீழ்ச்சியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என முடிவு செய்திருக்கின்றன.
ஆனால், இந்த முடிவுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், 'எங்கள் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தியை எந்தக் காரணத்தைக் கொண்டும் குறைக்க முடியாது' எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஜீரோ டாலருக்குக் கீழ் சரிந்த 'WTI' கச்சா எண்ணெய்!

ரஷ்யா எடுத்திருக்கும் இந்த அதிரடி முடிவால், 'வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட்' என்கிற 'WTI' கச்சா எண்ணெய்யின் 'மே 2020 ஃப்யூச்சர்' கான்ட்ராக்டின் விலை, 'NYMEX' சந்தையில், தாறுமாறாகச் சரிந்துள்ளது. 'WTI' கச்சா எண்ணெய், ஒரு பேரல் 20 முதல் 22 டாலர் விலையில் வர்த்தகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல்-20-ம் தேதி, வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரத்தில், அதிகப்படியாக 300 சதவிகிதம் சரிந்து, அதாவது 56.720 டாலர் விலை குறைந்து. ஒரு பேரல் மைனஸ் 37 டாலருக்கு வர்த்தகமானது. கச்சா எண்ணெய் வர்த்தக வரலாற்றிலேயே ஜீரோ டாலருக்கு கீழ் விலை சரிந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
அமெரிக்காவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகளவில் இருக்கும் காரணத்தால் தொழிற்துறை மற்றும் பொருளாதார நிகழ்வுகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால் 'WTI' கச்சா எண்ணெய் தேவை உள்நாட்டிலேயே அதிகளவில் குறைந்துள்ளது. வெளிநாட்டுச் சந்தையில் அரபு நாடுகள் அதிக தள்ளுபடி விலையில் 'பிரெண்ட்' கச்சா எண்ணெய்யை விற்பனை செய்யும் காரணத்தால், அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதுவும் WTI பியூச்சர் விலையைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.

இந்த விலை போரின் நோக்கம் என்ன... இதனால் யாருக்குப் பாதிப்பு... இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இதனால் என்ன பயன், கச்சா எண்ணெய் விவகாரத்தில் ஒபெக் நாடுகளில் செயல்பாடுகள் என்ன? - இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
முதலில் ஒபெக் கூட்டமைப்பு பற்றியும், கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் மற்றும் ஏற்றுமதியில் இந்த அமைப்பின் செயல்பாடு குறித்தும் முழுமையாகத் தெரிந்துகொள்வோம்.
ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு
ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு, நடப்பு ஆண்டில் வெற்றிகரமாக 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 1960-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி, பாக்தாத்தில் நடைபெற்ற மாநாட்டில் இந்த அமைப்பானது நிறுவப்பட்டது.
இரான், இராக், குவைத், சவுதி அரேபியா, வெனிசூலா ஆகிய 5 நாடுகள் இந்த அமைப்பின் நிறுவன உறுப்பினர்கள். பின்னர் பல நாடுகள் உறுப்பினராக இணைந்து இன்று அல்ஜீரியா, நைஜீரியா, அங்கோலியா, காங்கோ, ஈக்குவேடார், லிபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈக்குவேடார் கினி என மொத்தம் 13 நாடுகள் இந்தக் கூட்டமைப்பில் உள்ளன.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளை ஒருங்கிணைத்தல், அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளை வகுத்தல், பெட்ரோலியம் சம்பந்தமான பொருள்களுக்கு விலை நிர்ணயித்தல், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளுக்கான சேவையைத் தடையின்றி சிறப்பாகச் செயல்படுகிறதா என்று கண்காணித்தல், இந்தத் துறையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் வகையில் செய்தல் ஆகியன இந்த ஒபெக் கூட்டமைப்பின் செயல்பாடுகள்.

ஒபெக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகம் ஆஸ்திரியாவிலுள்ள வியன்னாவில் அமைந்துள்ளது. இதுவே தலைமை அலுவலகமாகவும் செயல்படுகிறது. உலக அளவில் 79.4 சதவிகிதம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ஒபெக் உறுப்பின நாடுகள் மேற்கொண்டிருப்பதை 2018-ம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 20.6 சதவிகிதம் ஒபெக் உறுப்பினர்கள் அல்லாத நாடுகள் ஏற்றுமதி செய்துள்ளன.
ஒபெக் அமைப்பும் ரஷ்யாவின் பிடிவாதமும்!
கச்சா எண்ணெய் சந்தையின் இரண்டு பெரிய ஜாம்பவான்கள் என்றால் அது சவுதி அரேபியாவும் ரஷ்யாவும்தான். சவுதி அரேபியா உலகிலேயே கச்சா எண்ணெய்யை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடாக இருப்பதால், ஒபெக் அமைப்பில் தன் ஆதிக்கத்தைத் தொடர்ந்து செலுத்தி வருகிறது. இந்நாட்டின் மொத்த பொருளாதாரமும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நம்பி மட்டுமே உள்ளது.
ஆனால், ரஷ்யாவின் பொருளாதாரம் அப்படியல்ல. கச்சா எண்ணெய் வணிகத்தை மட்டுமே நம்பியில்லாமல், இதர பொருளாதார வாய்ப்புகளையும் ரஷ்யா கொண்டிருக்கிறது. ஒபெக் அமைப்பில் இல்லாமல், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் தனித்து ஆட்சி செய்துவரும் நாடாகவும் ரஷ்யா தொடர்ந்து இருந்து வருகிறது.

தற்போது இவ்விரு நாடுகளுக்கு இடையில் ஆரம்பமாகியிருக்கும், வரலாறு காணாத வர்த்தகச் சண்டை, அமெரிக்கப் போன்ற வல்லரசு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வர்த்தக யுத்தம்!
சில சமயங்களில் ஒபெக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளும் அதில் இல்லாத நாடுகளும் இணைந்து பணியாற்றும். இதற்கு 'ஒபெக் +' என அழைக்கப்படுகிறது. 'ஒபெக் +' செயல்பாட்டின்படி, ஒபெக் அமைப்புடன் ரஷ்யா உட்பட குறிப்பிட்ட நாடுகள் இணைந்து 2.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தமானது, கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டதால், இனி வரும் நாள்களில், அதாவது ஜூன் வரையிலான நாள்களில் கூடுதலாக 1.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க வேண்டுமென 'ஒபெக் அமைப்பு' கோரிக்கை வைத்திருந்தது.

இந்தக் கோரிக்கையை ஒபெக் நாடுகளும் மற்ற கூட்டணி நாடுகளும் ஒப்புக்கொள்ள, ரஷ்யா திட்டவட்டமாக 'முடியாது' என மறுத்துவிட்டது.
ரஷ்யாவின் எதிர்ப்பை ஏதிர்கொள்ள முடியாத சவுதி, ரஷ்யாவின் வர்த்தகத்தைச் சீர்குலைக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருப்பதுதான் உலகநாடுகளுக்கிடையே அச்சத்தை வரவழைத்திருக்கிறது. இதனால், ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யும் 9.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் அளவை, 12 மில்லியன் பேரலாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், 'எங்களிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்பவர்களுக்கு, கடந்த 20 வருடத்தில் இல்லாத சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வழங்குகிறோம்' எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
ரஷ்யா ஏன் மறுக்கிறது தெரியுமா?
"ஒபெக் அமைப்பின் விலை கட்டுப்பாட்டின் காரணமாக அமெரிக்காவின் 'WTI' கச்சா எண்ணெய் ஆனது சந்தையில் அதிக லாபத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் உற்பத்தி குறைப்பின் மூலம் கண்டிப்பாகக் கச்சா எண்ணெய் விலை உயரும். இது கண்டிப்பாக அமெரிக்காவுக்குச் சாதகமாக அமையும் இந்த வாய்ப்பை அமெரிக்காவுக்குக் கண்டிப்பாக உருவாக்கித் தரக் கூடாது" என ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளதாக துறைசார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

"தற்போது இருக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு குறைக்கப்படவில்லை எனில், உலகில் கச்சா எண்ணெய் வர்த்தகம் 90 சதவிகிதம் வரையில் முடங்கும் நிலை ஏற்படும். கொரோனா பிரச்னை தீர்ந்து, கச்சா எண்ணெய் வர்த்தகச் சந்தையானது இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையில், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதுதான் சிறந்த வழி" என லண்டனைச் சேர்ந்த ஐ.ஹெச். எஸ் மார்கிட் (IHS Markit) அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு... என்ன காரணம்?
உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கும் கொரோனா வைரஸ், மக்கள் போக்குவரத்தைப் பெருமளவு குறைத்திருக்கிறது. எனவே, பெட்ரோல், டீசல் தொடங்கி விமான எரிபொருளான 'ஏர் டர்பைன் ஃப்யூயல் (Air Turbine Fuel)' வரை எல்லா எரிபொருள் வியாபாரமும் தேங்கிவிட்டது. கச்சா எண்ணெய்க்கான டிமாண்டே இல்லை.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பும் இன்னும் குறையாமல் இருப்பதால், இந்தியா உட்பட மற்ற உலக நாடுகளின் ஊரடங்கு காரணமாக, கச்சா எண்ணெய் தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது.

பெரும்பாலான உலக நாடுகள், அடுத்த ஆறு மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய்யை வாங்கிச்சேமித்து வைத்திருக்கின்றன. இனியும் வாங்கி சேமிக்கப் போதுமான சேமிப்புக் கிடங்குகள் இல்லாத நிலை உருவாகியிருப்பதால், கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அந்த நாடுகள் முனைப்பு காட்டவில்லை என்பதும் விலை சரிவுக்குக் காரணமாகும்.
தன் நாட்டில் கச்சா எண்ணெய் சேமித்து வைக்க இடமில்லாத காரணத்தாலும், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் தேவை அதிகளவில் குறைந்துவிட்டதாலும், பாகிஸ்தான் அரசு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு முற்றிலுமாகத் தடை வித்துள்ளது. இதனால் டேக்கர் கப்பல்கள் கச்சா எண்ணெய் இருப்புடன் கடலில் தத்தளித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்தியாவுக்கு இது நல்ல வாய்ப்பு!
உலகின் இரு முக்கிய எண்ணெய் தயாரிப்பு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் மோதலால் சர்வதேச அளவில் எண்ணெய் விலை குறைந்துள்ளது. இரண்டாவது காரணம் கொரோனா குறித்த அச்சம் உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளது. இது இந்தியாவுக்கு அருமையான ஒரு வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், இந்தியா 80 சதவிகித கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.
கிரெடிட் சேவை வழங்கும் கேர் (CARE) நிறுவனம், 'கச்சா எண்ணெய் விலையில் ஒரு டாலர் இறங்கினாலும், எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவால் 10,700 கோடி ரூபாயைச் சேமிக்க முடியும்' என்கிறது. மற்றோர் ஆய்வறிக்கைபடி, எண்ணெய் விலையில் 10 டாலர் குறைந்தால், அது இந்திய பொருளாதாரத்துக்கு 15 பில்லியன் டாலர்கள் வருவாயாக இருக்கும். அது இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் 0.5% சதவிகிதமாகும் என்பதும் தெரியவந்துள்ளது.
"இந்த ஆண்டு தொடக்கத்தில் 70 டாலருக்கு விற்கப்பட்ட ஒரு பேரல் கச்சா எண்ணெய், கொரோனா வைரஸ் தாக்கத்தால் தற்போது சுமார் 20 டாலருக்கு விற்கப்படுகிறது. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மற்ற உலக நாடுகள் பல மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய்யை வாங்கிச் சேமித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவிடம் மூன்று மாதத்துக்குத் தேவையான கச்சா எண்ணெய்யைச் சேமித்து வைக்கும் வசதி மட்டுமே உள்ளது.
ஆக, நீண்ட நாள்களுக்குத் தேவையானவற்றை வாங்கிச் சேமிக்க இயலாத சூழலில் இந்தியா உள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில், நமக்குத் தேவையான கச்சா எண்ணெய்யை முன்கூட்டியே புக் செய்துகொள்ள முடியும் ஆப்ஷன் இருப்பதால், அதற்கான நடவடிக்கையில் இந்தியா களமிறங்கியிருப்பது நல்ல விஷயம். இதனால் பல்லாயிரம் கோடி ரூபாயை இந்தியாவால் சேமிக்க முடியும்" என்றார் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்.
தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் பதற்றம், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் சரிவுகள் மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவை உலக நாடுகளைப் பெரிய அளவில் பாதித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதும் ஒருவகையில் நல்லதுதான்.