நாட்டில் மிகப்பெரிய பணக்காரராக இருந்த கௌதம் அதானியின் நிறுவன பங்குகள் கடந்த சில நாள்களாக கடுமையான சரிவை சந்தித்துள்ளன. அதானி தனது நிறுவனத்தின் பங்குகளின் விலையை செயற்கையாக அதிகரித்ததாகவும், நிதி குளறுபடியில் ஈடுபட்டிருப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அதானி நிறுவனத்தின் மீது அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவித்திருந்தது.

இதனால் அதானி நிறுவனத்தின் பங்குகள் 30 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது. பங்குச் சந்தையில் இருக்கும் அதானியின் 7 நிறுவன பங்குகளும் தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வருகிறது.
அதானி நிறுவனத்தில் எல்.ஐ.சி நிறுவனம் பல ஆயிரம் கோடி முதலீடுகளைச் செய்துள்ளது. இப்போது அந்த முதலீடு கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதனால் பாராளு மன்றத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் அமலியில் ஈடுபட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில் இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக கௌதம் அதானி அளித்துள்ள பேட்டியில், ``எனது கம்பெனியின் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி காரணம் என்று கூறப்படுவதில் எந்த வித உண்மையும் கிடையாது. நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது போன்ற குற்றச்சாட்டுக்களைக் கூறுகின்றனர். ஆனால், அதில் எந்த வித உண்மையும் கிடையாது. எனது தொழில் வளர்ச்சிக்கு எந்த வித தனிப்பட்ட நபரும் காரணம் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 6 நாள்களில் மட்டும் 100 பில்லியன் டாலர் அளவுக்கு அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்திருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பொதுமக்களிடமிருந்து அதானி 20,000 கோடி முதலீடுகளைத் திரட்டி இருந்தார். ஆனால், தற்போது எழுந்துள்ள சர்ச்சையால் அந்தப் பணத்தைத் திரும்ப கொடுத்துவிடுவதாக அறிவித்திருக்கிறார். சமீபத்தில் அதானி என்.டி.டி.வி செய்தி சேனலை விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.