மற்ற எபிசோடுகள்
Published:Updated:

96 ஆண்டுகள்... 18 கிளைகள்... வெற்றிப் பயணத்தில் போத்தீஸ்!

பிரியதர்ஷினி, ரமேஷ், வருண்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியதர்ஷினி, ரமேஷ், வருண்

வெற்றித் தலைமுறை - 2

விளம்பரங்கள் மற்றும் மார்க்கெட்டிங் டெக்னிக்குகளில் புதுமை காட்டி ஏராளமான வாடிக்கையாளர்களைக் கவர்ந்த நிறுவனம் போத்தீஸ். ஜவுளி வியாபாரத்தில் ஜாம்பவான்களாகத் தடம் பதித்தவர்கள் தற்போது தங்க நகை வியாபாரத்தில் களம் இறங்கியுள்ளனர். 1926-ம் ஆண்டு போத்தி மூப்பனார் எடுத்த முயற்சியே இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம். விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் போத்தி. ஊர் முழுவதும் தறி நெய்வது பிரதான தொழிலாக இருந்தபோது, தன் ஊரில் நெய்த துணிகளை, கடைகளுக்கு விநியோகம் செய்யும் தொழிலை சிறிய அளவு முதலீட்டில் போத்தி மூப்பனார் தொடங்கியுள்ளார்.

அந்த வியாபாரம் சிறப்பாக நடக்க, பத்தாம் வகுப்பு வரை படித்த போத்தியின் மகன் சடையாண்டி, துணிக்கடை ஒன்று திறக்கும் எண்ணத்தை முன்வைத்துள்ளார். அந்த நேரம் வில்லிபுத்தூரில் பேருந்து நிலையம் உதயமானது. பேருந்து நிலையம் அருகில் இருப்பதால் வியாபாரம் சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கையோடு 1977-ம் ஆண்டு போத்தீஸ் என்ற துணிக்கடை திறக்கப்படுகிறது.

பிரியதர்ஷினி, ரமேஷ், வருண்
பிரியதர்ஷினி, ரமேஷ், வருண்

ஒரு நாளைக்கு 50 ரூபாய், 100 ரூபாய் லாபத்தை எதிர்பார்த்து ஶ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கப்பட்ட அந்தத் துணிக்கடை, அடுத்தடுத்த தலைமுறைகளில் திருநெல்வேலி, சென்னை, பெங்களூரு, புதுச்சேரி உட்பட 18 கிளைகள் வரை விரிந்துள்ளது. போத்தீஸ் பெரியதொரு நிறுவனமாக உருமாறுகிறது. 96 ஆண்டுக் கால வரலாற்று பின்னணியுடன் தற்போது நான்காம் தலைமுறையைக் கண்டுள்ள போத்தீஸ் நிறுவனத்திலிருந்து அதன் வெற்றிப் பயணம் குறித்த தகவல்களைப் பகிர்கிறார்கள் போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷின் மகன் வருண் மற்றும் மகள் பிரியதர்ஷினி. இவர்கள் இருவரும் இந்த நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர்.

“நான்கு தலைமுறை என்று சொன்னாலும், நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறையான எங்க அப்பா மற்றும் அவர்களின் சகோதரர்கள் எடுத்த முயற்சிதான் நிறுவனத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியது என்று சொல்லலாம். அதுவரை வில்லிபுத்தூரில் சிறிய அளவில் இருந்த எங்களுடைய கடையை மிகப்பெரிய பிராண்டாக மாற்ற வேண்டும் என்பது பெரியப்பாவின் கனவு. அதை நோக்கியே அப்பா இயங்க ஆரம்பித்தார். வில்லிபுத்தூரில் இருந்த கடையில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தார். தரமும் வெரைட்டியும் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைத்தார். அந்த நம்பிக்கையில் 1986-ல் திருநெல்வேலியில் எங்களுடைய அடுத்த கிளை யைத் தொடங்கினோம். அது எங்களுடைய மிகப்பெரிய ஆரம்பம் என்று சொல்லலாம்.

எல்லா வகையான துணி வகைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்தது தொடங்கி, பிரமாண்டம் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தது வரை அந்தக் கடைக்கு அப்பா கையாண்ட விளம்பர யுக்தி, துணியின் தரம், வெரைட்டி எல்லாம் மக்களோட பெரிய ஆதரவை எங்கள் நிறுவனத்துக்குக் கிடைக்கச் செய்தது. அப்பா நினைத்திருந்தால் அந்தக் கடையை அதே ஊரில் வேறு மாதிரி டெவலப் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், அடுத்தடுத்த ஊரில் கிளைகள் தொடங்க வேண்டும் என்ற திட்டத்தை தன் சகோதரர்களுடன் சேர்ந்து முடிவெடுத்தார். அந்த இலக்குதான் சென்னை, பெங்களூரு, பாண்டிச்சேரி என இன்று 18 கிளைகள் கொண்ட நிறுவன மாக வளர காரணமாக இருந்தது.

திருநெல்வேலி கடை திறந்த போது எனக்கு சிறு வயது. விடுமுறை நாள்களில் நாங்கள் கடைகளுக்குத்தான் செல்வோம். அப்பா எடுக்கும் அதிரடி முடிவு களைப் பார்த்து வளர்ந்த எங்களுக்கு பிசினஸ், வியாபாரம் பற்றியெல்லாம் சிறுவயதிலேயே விளங்க ஆரம்பித்துவிட்டது. இன்று இயக்குநராக இருந்தாலும் சிறுவயதிலிருந்து இந்த நிறுவனத் தைப் பார்க்கிறேன். எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் இருந்திருக்கிறது. ஆனால், எந்த சூழ்நிலையிலும் அப்பா தான் எடுத்த முயற்சி யிலிருந்து பின்வாங்கியதே இல்லை.

வியாபார விஷயத்தில் முயற்சி செய்யாமல் ‘நோ’ சொல்லக் கூடாது என்பது நாங்கள் அப்பா விடமிருந்து கத்துக்கிட்ட மிகப்பெரிய விஷயம். அதற்கு ஆரம்பப்புள்ளி எங்களுடைய தாத்தா சடையாண்டி. அப்பா 100 சதவிகிதம் ஃபோகஸுடன் உழைக்கும் நபர் எனில் தாத்தா 200 சதவிகிதம் உழைக்கும் நபர். அவருக்கு இப்போது வயது 84. ஆனால், இப்போதும் வியாபாரம் குறித்த சிந்தனையுடன்தான் இருப்பார். வாரத்துக்கு நான்கு நாள்கள் கடைகளுக்குச் சென்று கடையை மேற்பார்வை செய்வது, வாடிக்கையாளர் களுடன் உரையாடுவது என்று இன்னும் நிறுவனத்தின் வளர்ச் சிக்கு உழைக்கிறார்” என்று வருண் முடிக்க அவரின் சகோ தரி பிரியதர்ஷினி தொடர்கிறார்.

“என்னுடைய சகோதரி திவ்யா புதிதாகத் தொடங்கப் பட்டுள்ள நகைக்கடை பணி களை மேற்பார்வை செய்கிறார். நான் போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாகம் சார்ந்த பணிகளில் இயங்குகிறேன். சிறுவயதிலிருந்து நான் பிசினஸைப் பார்த்து வளர்ந் தவள். எங்கள் நிறுவனம் வித்தியாச மான விளம்பர யுக்திகளைக் கையாள வேண்டும் என்பதில் அப்பா எப்போதும் கவனமாக இருப்பார். ஒரு விளம்பரம் என்பது எங்களைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட ஒரு சினிமா போன்று தான். அதற்காக நாங்கள் செய்யும் செலவை ஒரு முதலீடாகத்தான் பார்க்கிறோம். எனக்கு இது புதுத் துறை என்றாலும், எங்களுடைய முந்தைய தலைமுறையினரின் வழிகாட்டுதல்கள் இருக்கின்றன.

எப்போதும் மார்க்கெட்டிங் சார்ந்து நிறைய புதுப்புது முயற்சிகள் செய்துகொண்டே இருக்கிறோம். வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க புதுப்புது வெரைட்டிகள், டிரெண்டுகளை எங்கள் குழு ஃபாலோ செய்துகொண்டே இருக்கிறது. நூற்றுக்கணக்கான உற்பத்தியாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறோம். ஒரு ஆடையின் நிறத்தைத் தேர்வு செய்வது தொடங்கி, அந்த ஆடை வாடிக்கையாளர்களிடம் சென்ற டைவது வரை எல்லாவற்றையும் மிக நுணுக்கமாகக் கவனிக்கிறோம். எங்களுடைய கஸ்டமர் கேர் எங்களுடைய கூடுதல் பலம்” என்று அவர் முடிக்க, போத்தீஸ் கண்டுள்ள வளர்ச்சிகள் பற்றி வருண் பேச ஆரம்பித்தார்.

96 ஆண்டுகள்... 18 கிளைகள்...
வெற்றிப் பயணத்தில் போத்தீஸ்!

“அடுத்தடுத்த தலைமுறையினர் பிசினஸுக்குள் வந்தாலும், எல்லாரும் கூடிப்பேசிதான் எல்லா முடிவுகளும் எடுப்போம். எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை ஆண், பெண் வித்தியாசம் எல்லாம் கிடையாது. நான்காம் தலைமுறை யில் 8 பேருக்கு மேல் இப்போது பிசினஸ் பணிகளில் இறங்கி யுள்ளோம். ஆளுக்கொரு பிரிவில் கவனம் செலுத்துகிறோம். அதனால் எங்களுடைய பிசினஸில் தலைமுறை இடைவெளியோ, தலைமுறைக்கான கருத்து வேறுபாடுகளோ வருவது இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால், இணையதளப் பக்கத்தில் மற்ற பிராண்டுகள் காலடி எடுத்து வைக்கும் முன்னே நாங்கள் அதில் வெற்றியைத் தொட்டோம்.

மற்றோர் உதாரணம், கொரோனா ஊரடங்கை சமாளித்தது. கொரோனா நேரத்தில் ஊரடங்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. எங்களுடைய நிறுவனத்தில் ஒன்பதாயிரம் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். எந்தப் பணி நீக்கமும் இல்லாமல் இயங்க வேண்டும் என்பதால் புதுப்புது ஐடியாக்களை நான்காம் தலைமுறையினர் முன்வைத்தோம். அப்படி உருவானதுதான் வாட்ஸ்அப் மூலம் ஆடைகள் விற்பனை செய்வது. வாடிக்கையாளர்கள் எங்களின் விற்பனைப் பிரிவில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டால் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் ஆடைகளைக் காண்பித்து, அவர்களுக்குப் பிடித்ததைத் தேர்வு செய்யலாம் என்ற வியாபார யுக்தியைக் கையாண்டோம்.

போத்தீஸ் கார்டு, தள்ளுபடி, கிஃப்ட் வகைகள், தீபாவளி ஸ்வீட் என எங்களின் வியாபார நுணுக்கங்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருந்தாலும், வாடிக்கை யாளர்களைத் தக்கவைப்பது மட்டுமே எப்போதும் எங்களுடைய இலக்காக இருக்கிறது” என்ற வருணிடம் நகைக் கடை தொடக்கம் பற்றிக் கேட்டோம்.

“அது எங்கள் நிறுவனத்தின் மற்றொரு புது முயற்சி. ஜவுளி வியாபாரத்தில் தரமானது என்ற பெயரை மக்களிடம் பெற்ற எங்களால், தங்க நகை வியாபாரத்திலும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, அந்தத் திட்டத்தை திருநெல்வேலியில் நடைமுறைப்படுத்தினோம். சினிமா செலிபிரிட்டிகள் விளம்பரம் செய்வதைவிட, இத்தனை ஆண்டுக் காலம் தரத்தை மட்டுமே மக்களுக்குக் கொடுத்த அப்பா அந்த விளம்பரத்தில் நடித்தால் மக்கள் மனதில் கூடுதல் நம்பிக்கை வரும் என்று தோன்றியது. விளம்பரத்தில் அப்பா நடிப்பதற்கு முன்பு நாங்கள் எல்லோரும் சேர்ந்து பல்வேறு ஆலோசனைகள் செய்தோம். அதன் பின்பே அப்பா நடித்தார். நிறைய பாசிட்டிவ் கமென்ட்கள் வந்தன. அதே நேரம் சில கேலி கிண்டல்களும் வரவே செய்தன. ஆனால், நாங்கள் அவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எங்களுடைய இலக்கை நோக்கி நாங்கள் சுழன்றுகொண்டே இருக்கிறோம். அடுத்தடுத்து புது முயற்சிகளுடன் போத்தீஸ் ஆலமரமாக நிச்சயம் விரியும்” என்று முடித்தார்.

புது முயற்சிகள் தொடரட்டும். மாற்றம் ஒன்றே மாறாதது!

(தலைமுறை தொடரும்)