நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஆண்டு முழுவதும் விற்பனை வாய்ப்பு... வெர்ஜின் கோக்கனட் ஆயில்!

 வெர்ஜின் கோக்கனட் ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
வெர்ஜின் கோக்கனட் ஆயில்

தொழில் பழகுவோம் வாங்க! - 5

தென் இந்தியர்களின் உணவில் தவிர்க்க இயலாத உணவுப் பொருள் தேங்காய். வட மாநிலங் களிலும், பல்வேறு நாடுகளிலும் தென்னை அதிக அளவில் வளர்க்கப்படாததால், அந்தப் பகுதி களுக்கெல்லாம் தென் இந்தியாவிலிருந்தே தேங்காய்கள் விற்பனையாகின்றன. தேங்காயிலிருந்து மதிப்புக்கூட்டல் மூலம் தயாரிக்கப்படும் வெர்ஜின் கோக்கனட் ஆயில் மற்றும் தேங்காய் பவுடருக்கான வரவேற்பு அதிகரித்துவரும் நிலையில், அந்தத் தொழில் குறித்து இந்த வாரம் வழிகாட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

வெர்ஜின் கோக்கனட் ஆயில் என்றால்..?

கொப்பரைத் தேங்காயை வெயிலில் காய வைத்து, மரச்செக்கில் அல்லது இயந்திரத்தில் அரைத்து எண்ணெய் பிரித்தெடுக்கும் முறையே நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கிறது. இந்த முறையில் காய வைக்கும் தேங்காயில் சில நேரம் பூஞ்சைகள் மற்றும் தூசுகள் படிய வாய்ப்புள்ளது. அந்தக் கொப்பரையை அப்படியே அரைப்பதால், பிரித்தெடுக்கப்படும் எண்ணெயின் தரம் குறையலாம். தேங்காய்ப் பாலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வெர்ஜின் கோக்கனட் எண்ணெய், கலப்படம் ஏதுமின்றி சத்துகள் மிகுந்த தாக இருக்கும். கொப்பரையைச் செக்கில் ஆட்டும் முறையில் ஆயில் தயாரிக்க அதிக காலம் தேவைப்படும். ஆனால், உடைத்த தேங்காயிலிருந்து அன்றைய தினமே ஆயிலைத் தயாரித்துவிட வேண்டும்.

ஆண்டு முழுவதும் விற்பனை வாய்ப்பு... வெர்ஜின் கோக்கனட் ஆயில்!

ஆயில் பிரித்தெடுக்கும் முறை...

தேங்காய்க்குச் சேதாரம் ஏற்படாதவாறு அதைச் சுற்றியிருக்கும் சிரட்டையை நீக்கி, தேங்காய் பின்புறமிருக்கும் பிரவுன் நிறத் தோல் பகுதியை நீக்க வேண்டும். வெள்ளை நிற பந்து வடிவில் இருக்கும் தேங்காயிலிருந்து நீரைப் பிரித்தெடுத்ததும், இயந்திரங்களின் உதவியுடன் அந்தத் தேங்காயை முதலில் துருவலாக மாற்றி, அதிலிருந்து பால் பிரித்தெடுக்கப்படும். எண்ணெயும் தண்ணீரும் கலந்த அந்தப் பாலிலிருந்து (Emulsion) எண்ணெய் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டதும், தனியாகக் கிடைக்கும் தண்ணீரில் இனிப்புச் சுவை கூட்டி குளிர்பானமாக விற்பனை செய்யலாம். பிரித்தெடுக்கப்படும் வெர்ஜின் கோக்கனட் ஆயிலானது நிறம் மற்றும் வாசனையின்றி இருக்கும். பிசுபிசுப்புத் தன்மையும் குறைவாகவே இருந்தாலும், இந்த எண்ணெய் கலங்கல் ஏதுமின்றி மிகத் தெளிவாக இருக்கும். சமையல், மருத்துவத் தேவைகள், தலை மற்றும் சருமத்தில் பயன்படுத்தவும் இந்த எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது.

பவுடர் பிரித்தெடுக்கும் முறை...

ஆயில் தயாரிப்புக்காகப் பால் நீக்கப்பட்ட தேங்காய் சக்கை யானது பவுடராக மாற்றப்பட்டு காய வைக்கப்படும். இந்த டெசிகேட்டட் கோக்கனட் பவுடரில் கொழுப்புச்சத்துக் குறைவாக இருக்கும். இவை பேக்கரி மற்றும் உணவுத் தயாரிப்புகளுக்குப் பயன்படும். சிரட்டையிலிருந்து பிரித் தெடுக்கப்படும் தேங்காயிலிருந்து பால் பிரித்தெடுக்கப் படாமல், எண்ணெய் நீக்கப்படாமல், தேங்காய் அரைத்து பவுடராக மாற்றப்படுவது கொழுப்புடன்கூடிய டெசி கேட்டட் கோக்கனட் பவுடர். இந்தப் பவுடருக்குக் கூடுதல் விலை கிடைக்கும். தண்ணீர் புகாமல் பாதுகாப்புடன் வைத்திருந்து இதை பல மாதங்களுக்குப் பயன்படுத்தலாம்.

ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

பொள்ளாச்சியில் தேங்காய் கொள்முதல்...

தினமும் பத்தாயிரம் தேங்காய் பயன்படுத்தி ஆயில், பவுடர் தயாரிக்கும் முறைக்குத் தோராய மாக ரூ.1 கோடி முதலீடு தேவைப் படும். கிராமம் முதல் நகரம் வரை எல்லாப் பகுதிகளி லும் இந்த ஆலையை அமைக்க லாம். பின்னர், ‘FSSAI’ சான்றிதழ் பெற்று உற்பத்தி மற்றும் விற்பனையை மேற்கொள்ளலாம். ஆயில் மற்றும் பவுடர் தயாரிப்பு முறை மிகவும் எளிமை யானது என்பதால், ஓரளவுக்கு அனுபவத்துடன் யார் வேண்டு மானாலும் இந்தத் தொழிலில் இறங்கலாம். தென்னை மரங்கள் அதிகம் விளையும் பொள்ளாச்சி பகுதியில் தேவையான அளவு தேங்காயைச் சற்றுக் குறைவான விலையில் மொத்தமாகவும் கொள்முதல் செய்யலாம். மட்டை உரிக்காத முத்தின தேங்காயாகப் பார்த்து ஒரு காய் (500 கிராம்) சராசரியாக 15 ரூபாய்க்கு மொத்தமாக வாங்குவது நல்லது.

ஆண்டு முழுவதும் விற்பனை வாய்ப்பு... வெர்ஜின் கோக்கனட் ஆயில்!

பலவிதமான வருமானம்...

தேங்காய் நார், செடி வளர்ப்புக் கான தேங்காய்நார்க் கழிவு அல்லது தேங்காய்நார்க் கட்டி தயாரிக்கப் பயன்படும். தேங்காய் மேலிருக்கும் பிரவுன் நிற லேயரை காய வைத்து, சோப்பு ஆயில் தயாரிப்புக்கு விற்கலாம். தேங்காய் சிரட்டையைக் காய வைத்து எரிபொருள் தேவைக்கு அல்லது பவுடராக்கி ஊதுவத்தி, கொசு வத்தி தயாரிப்புக்கு விற்பனை செய்யலாம். தேங்காய் நீரானது பேக்கரியில் உணவுப் பொருள்கள் தயாரிப்புக்குப் பயன்படும்.

வங்கிக் கடன், விற்பனை வாய்ப்பு..

‘நீட்ஸ்’ திட்டத்தில் தோராயமாக ரூ.1 கோடி முதலீட்டுக்கு ரூ.72 லட்சம் வங்கிக் கடன் கிடைக்கும். அதில், அசையா சொத்துகளில் 25% மானியம் பெறலாம். தென்னை சாகுபடி அதிகம் நடக்காத மற்றும் வெளிநாடுகளில் வெர்ஜின் கோக்கனட் ஆயில் மற்றும் தேங்காய் பவுடருக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. சுற்று வட்டாரப் பகுதிகளிலும், மெடிக் கல் மற்றும் உணவுக் கடைகளிலும் நம் தயாரிப்புகளை விற்பனை செய்யலாம். சோப்பு, ஆயில் உள்ளிட்ட பல்வேறு காஸ்மெடிக்ஸ் சாதனங்களின் தயாரிப்பிலும் வெர்ஜின் கோக்கனட் ஆயில் பயன் படுவதால், அந்தத்துறை சார்ந்த நிறுவனங்களுடன் வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்திப் பயன் பெறலாம்.

ஒரு நாளில் 1.8 லட்சம் வருமானம்...

10 கிலோ தேங்காயிலிருந்து ஒரு லிட்டர் ஆயில் வீதம், பத்தாயிரம் தேங்காய்களிலிருந்து 500 லிட்டர் எண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டருக்குச் சராசரியாக 400 ரூபாய் வீதம் 500 லிட்டருக்கு 2,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். பத்தாயிரம் தேங்காய் களிலிருந்து 350 கிலோ தேங்காய் பவுடர் கிடைக்கும். ஒரு கிலோ பவுடர் சராசரியாக ரூ.160 வீதம் 350 கிலோவுக்கு ரூ.56,000 கிடைக்கும். ஒரு கிலோ ரூ.10 வீதம் மொத்தம் 250 கிலோ தேங்காய் சிரட்டை விற்பனையில் ரூ.2,500 கிடைக்கும். ஒரு தேங்காய் மட்டை ரூ.1.5 வீதம் 10,000 தேங்காய்க்கு ரூ.15,000 கிடைக்கும். மொத்தம் ஒரு நாளைக்கு பத்தாயிரம் தேங்காயிலிருந்து ரூ.2,73,500 வருமானம் கிடைக்கும்.

(தொழில் பழகுவோம்)

யுவராஜ் சாந்தகுமார்
யுவராஜ் சாந்தகுமார்

மார்க்கெட்டிங்கில் கூடுதல் கவனம் தேவை!

பொள்ளாச்சி ‘அம்பாள் இம்போர்ட் & எக்ஸ்போர்ட்’ நிறுவன உரிமையாளரான யுவராஜ் சாந்தகுமார், “கோயம்புத்தூரில் கால்சென்டர் நிறுவனத்தை நடத்திவந்த நான், ஐந்து ஆண்டுக்கு முன் வேறு தொழிலுக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்கள் சொந்த ஊரான பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் தென்னை விளைச்சல் அதிகமுள்ளதால், என் வாடிக்கையாளர் ஒருவரின் யோசனையில், இந்தத் தொழிலில் இறங்கினேன். வீட்டிலிருந்தபடியே இந்தத் தொழிலை ஆரம்பித்த நிலையில், பின்னர் தனித் தொழிற்சாலை அமைத்தோம். மார்க்கெட்டிங் துறையில் அனுபவம் இருந்ததால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆர்டர்களைப் பிடித்தேன். படிப்படியாக வளர்ந்து, தற்போது தினமும் 15,000 தேங்காய்களைக் கொள்முதல் செய்து, ஆயில், பவுடர், இதர மதிப்புக்கூட்டல் பொருள்களைத் தயாரிக்கிறோம். மார்க்கெட்டிங் வாய்ப்பை உறுதி செய்த பின்னர் இந்தத் தொழிலில் இறங்கினால் நிலையான வளர்ச்சியை அடையலாம்” என்கிறார்.