Published:Updated:

'திடீர் வேலைநிறுத்தத்தில் இனி ஈடுபட முடியாது!'- சட்டத்தைக் கடுமையாக்க மத்திய அரசு முடிவு

கடந்த 1947-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தொழில்துறை தகராறு சட்டத்திலேயே, வேலைநிறுத்தம் குறித்து விரிவான விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதானால், 14 நாள்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது.

வேலை நிறுத்தம்
வேலை நிறுத்தம் ( vikatan )

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று (22, அக்டோபர் 2019) இந்தியா முழுவதும் வங்கித்துறை ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இந்த வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் பணிகள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டன.

வேலை நிறுத்தம்
வேலை நிறுத்தம்
vikatan

முன்னதாக, பொதுத்துறை வங்கிகள் இணைப்பு முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென்று தலைமை தொழிலாளர் ஆணையருடன் வங்கி ஊழியர் சங்கங்கள் கடந்த திங்களன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், உடனடியாக மறுநாளே அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, நேற்று நாடு முழுவதும் நடைபெற்ற வேலைநிறுத்தத்தால் வங்கித்துறைப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து, தற்போது வங்கித்துறை உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுச் சேவை நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதானால், 14 நாள்களுக்கு முன்பே அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டுமென்று விதிமுறை கொண்டுவர மத்திய கேபினட் அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம், குறுகிய காலத்தில் வேலைநிறுத்த அறிவிப்பு வெளியிடுவது சட்டவிரோதமாகக் கருதப்படும்.

வேலை நிறுத்தம்
வேலை நிறுத்தம்
vikatan

ஆனால், இந்த விதிமுறை ஒன்றும் புதிதல்ல. 1947-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தொழில்துறை தகராறு சட்டத்திலேயே (Industrial Disputes act 1947) வேலைநிறுத்தம்குறித்து விரிவான விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த விதிமுறைகளில் ஒன்றாக, பொதுப் பயன்பாட்டு சேவைத்துறை சார்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதானால், 14 நாள்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த 14 நாள்களுக்குள், ஊழியர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கலாம். அப்படி எடுக்கப்படும் முடிவு ஏற்புடையதாக இருந்தால், வேலை நிறுத்தம் கைவிடப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைதான் மீண்டும் கட்டாயமாக்கப்படுமெனத் தெரிகிறது.