நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

ரியல் எஸ்டேட்... ரியல் அப்டேட்!

நெல்சன் மேத்யூஸ் மதுரம், படங்கள்: சி.தினேஷ் குமார்.

புதிய பகுதி

கடந்த 10 வருடங்களில் ரியல் எஸ்டேட் முதலீடு என்பது பொதுமக்களிடையே பரவலாக அதிகரித்து வந்துள்ளது. இதே காலகட்டத்தில் மனை மற்றும் வீடுகளின் விலை நான்கு மடங்குக்குமேல் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வே முதலீட்டாளர் களை ரியல் எஸ்டேட் பக்கம் கவர்ந்திழுத்தது. எந்த ஒரு சொத்தும் பொருளாதார நிலைமைக்கு ஏற்பவே வருமானம் ஈட்டித் தரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

அந்தவகையில் கட்டுக்கடங்காமல் விலை ஏறிய ரியல் எஸ்டேட் , இன்று பலருக்கும் சாத்தியமில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.  உள்ளபடி பார்த்தால், இப்போது தமிழகம் முழுக்க ரியல் எஸ்டேட் ஒருவிதமான மந்தநிலையில்தான் காணப்படுகிறது.

 இன்றைய நிலையில் தமிழகத்தின் ரியல் எஸ்டேட் நிலவரத்தை அலசும் புதிய பகுதி இது. முகலிவாக்கம் சம்பவத்துக்குப் பிறகு  அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனையானது வேகம் குறைந்திருக்கிறது.

 உச்சத்தில் வீட்டுக் கடன் வட்டி!

ரியல் எஸ்டேட் தேவை குறைவதற்கு  அடுத்த முக்கிய காரணம், வீட்டுக் கடன் வட்டி  தொடர்ந்து அதிகமாகவே இருப்பது. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் நீண்ட காலமாக சுமார் 10.25 முதல் 11 சதவிகிதமாகவே இருக்கிறது. இது  9 சதவிகிதத்துக்குக் கீழே குறையும்போதுதான் பலரும் வீடு மற்றும் மனைகளை வாங்குவது அதிகரிக்கும். இதனால் ரியல் எஸ்டேட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும் என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மை.

ரியல் எஸ்டேட்...  ரியல் அப்டேட்!

ஆனால், கடனுக்கான வட்டியை ஆர்பிஐ இப்போதைக்கு குறைக்கும் சூழ்நிலை இல்லை. 2015, மார்ச் மாத வாக்கில் அது வட்டிக் குறைப்பு நடவடிக்கையில் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி குறைந்த பிறகு இடம் தேட ஆரம்பிக்கலாம் என்று இருந்துவிடக் கூடாது. இப்போதே இடம் பார்க்கத் தொடங்கினால்தான், விலை உயர்வதற்கு முன்பு நமக்கேற்ற நல்லதொரு இடத்தை, ஓரளவுக்கு குறைந்த விலையில் வாங்க முடியும். அந்த வகையில் தற்போதுள்ள தேக்கநிலையைப் பயன்படுத்தி, பேரம்பேசி விலையைக் குறைத்து வாங்குவது புத்திசாலித்தனமாக இருக்கும் என்கிறார்கள் பெரும்பாலான சொத்து ஆலோசகர்கள்.

சொந்த வீட்டுக்கான தேவை இருப்பவர்கள் கடனுக்கான வட்டியைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை. தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அந்தக் கடனை மாறுபடும் வட்டியில் (ஃப்ளோட்டிங் ரேட்) வாங்கிவிட்டால்போதும், பிற்பாடு வட்டி குறைக்கப்படும்போது நாம் வாங்கிய கடனுக்கான வட்டியும் குறைந்துவிடும்.

ரியல் எஸ்டேட்...  ரியல் அப்டேட்!

 தமிழகம் முழுக்க..!

இந்தத் தொடரின் மூலம் தமிழகத்தின் அனைத்து முக்கிய பெரிய, சிறிய நகரங்களில் நிலவும் ரியல் எஸ்டேட் நிலவரத்தை அடுத்தடுத்த வாரங்களில் நாம் பார்க்கப் போகிறோம். என்றாலும், தொடக்கமாக தலைநகர் சென்னையில் ரியல் எஸ்டேட் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை முதலில் பார்த்துவிடுவோம். அதிலும் சென்னையை ஒட்டியுள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் ரியல் எஸ்டேட் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை இந்த வாரம் பார்க்கலாம்.

 கூடுவாஞ்சேரி!

தாம்பரத்தில் இருந்து 13 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது கூடுவாஞ்சேரி. தற்போதைய சூழலில் சென்னை புறநகர்களில் ரியல் எஸ்டேட் ஹாட்ஸ்பாட்-ஆக இருக்கிறது. சென்னையை அடுத்த தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம் பகுதிகளில் மனை மற்றும் வீடுகளின் விலை கணிசமாக ஏறிவிட, இப்போது மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வருமானப் பிரிவினர் கூடுவாஞ்சேரியை நாட ஆரம்பித்தி ருக்கிறார்கள்.
கூடுவாஞ்சேரி நெடுங்சாலையின் இருபுறமும் சுமார் 10 கி.மீ தூரத்துக்கு இருக்கும் இடங்களில் அப்ருவ்டு மனைகள் சதுர அடி ரூ.800 முதல்
ரூ.1,600 வரைக்கும், பஞ்சாயத்து மனைகள் ரூ. 600 முதல் ரூ.1,200 வரைக்கும் கிடைக்கின்றன.

கூடுவாஞ்சேரியில் நடுத்தர மக்கள் வாங்கும் அளவில் 500 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்புகள் கிடைக்கிற  அதேநேரத்தில், ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் வாங்க 1,000 சதுர அடிக்கும்மேல் ஃப்ளாட்கள் கிடைக்கின்றன.

ரியல் எஸ்டேட்...  ரியல் அப்டேட்!

கூடுவாஞ்சேரியை ஒட்டி, ஏறக்குறைய ரூ.12 லட்சம் இருந்தால் 1,200 சதுர அடி மனை வாங்க முடியும்.

கூடுவாஞ்சேரி அருகில் சுமார் ரூ.25 லட்சம் இருந்தால், 700 சதுர அடி அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வாங்க முடியும்.

உள்கட்டமைப்பு வசதிகள்..!

சென்னையை இணைக்கும் பிரதான முனையமான தாம்பரத்துக்கு அருகில் உள்ளது, கூடுவாஞ்சேரியின் சிறப்பு. சென்னை நகர் மற்றும் வெளியூர்களுக்கு பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து தாராளமாக இருக்கிறது. பல கல்வி நிறுவனங்கள், தொழிநுட்ப பூங்காக்கள் (ராம் சிட்டி, மஹிந்திரா வேர்ல்டு சிட்டி) போன்றவை கூடுவாஞ்சேரிக்கு சிறப்புச் சேர்க்கின்றன.

ரியல் எஸ்டேட்...  ரியல் அப்டேட்!

ஒருபுறம் ஓஎம்ஆர் சாலையுடன் இணையும் திருப்போரூருக்கு அருகில் உள்ளது. மறுபுறம் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் படப்பை அருகில் அமைந்து உள்ளது. செங்கல்பட்டு - ஓஎம்ஆர் இணைப்பு சாலை பணிகள் நிறைவு பெற்றால், கூடுவாஞ்சேரியில் ரியல் எஸ்டேட் மதிப்பு இன்னும் உயர்ந்துவிடும். கூடுவாஞ்சேரி அருகில் இருக்கும் வண்டலூரில் தென் மாவட்டங்களுக்கான பிரதான பேருந்து நிலையம் வரப்போகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய தகவல். எனவே, நீண்டநாள் முதலீட்டுக்கு இந்தப் பகுதி மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ரியல் எஸ்டேட்...  ரியல் அப்டேட்!

மனை விலை நிலவரம் (சதுர அடி, ரூபாயில்)

கூடுவாஞ்சேரி பிரதான பகுதி - 1,500 - 1,800
கூடுவாஞ்சேரி உள்பகுதி - 1,300 - 1,500
பொத்தேரி - ரூ.1,200 - 1,900

ரியல் எஸ்டேட்...  ரியல் அப்டேட்!

காயரம்பேடு - 700 - 1,150
நெல்லிக்குப்பம் - 650 - 1,100

அடுக்குமாடி விலை நிலவரம்(சதுர அடி, ரூபாயில்)

கூடுவாஞ்சேரி பிரதான பகுதி - 3,150 - 3,420
கூடுவாஞ்சேரி உள்பகுதி - 2,800 - 3,100
பொத்தேரி பிரதான பகுதி - 3,600 - 4,000
பொத்தேரி உள்பகுதி ரூ.3,000 - 3,600
கூடுவாஞ்சேரி வீடு வாடகை (ரூபாயில்)
சிங்கிள் பெட்ரூம் - 3,500 - 5,000
டபுள் பெட்ரூம் - 6,000 - 12,000

கூடுவாஞ்சேரி அப்பார்ட்மென்ட் வாடகை (ரூபாயில்)

சிங்கிள் பெட்ரூம் - 5,000 - 12,000
டபுள் பெட்ரூம் - 8,000-25,000