Published:Updated:

ரியல் எஸ்டேட்... ரியல் அப்டேட்!

செங்கல்பட்டு ஸ்பாட் ரேட் நிலவரம்!பா.ஜெயவேல்

ரியல் எஸ்டேட்... ரியல் அப்டேட்!

செங்கல்பட்டு ஸ்பாட் ரேட் நிலவரம்!பா.ஜெயவேல்

Published:Updated:

சென்னை நடுத்தரவாசிகளின் கனவு இல்லம் இனி புறநகர்களில்தான். குறிப்பாக, சென்னை முதல் செங்கல்பட்டு வரை ரெகுலர் ரயில் மற்றும் பஸ் வசதி இருப்பதால், நடுத்தரக் குடும்பத்தினர் செங்கல்பட்டை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

செங்கல்பட்டு நகரைச் சுற்றியுள்ள செழித்த விவசாய நிலங்கள் அனைத்தும், காங்கிரீட் கட்டடங்களுக்காக காத்துக்கிடக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பால், நாளுக்கு நாள் இந்தப் பகுதியில்  விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தரக் குடும்பங்களால் இங்கே தடம்பதிக்க முடியுமா என்கிற கேள்வி எழுந்திருக்கும் இந்த நிலையில் செங்கல்பட்டு ரியல் எஸ்டேட் நிலவரம் குறித்த  லேட்டஸ்ட் அப்டேட் இதோ.

செங்கல்பட்டைச் சேர்ந்த வெற்றி ரியல்ஸ் உரிமையாளர் வேலாயுதம், “பாலாறு பக்கத்தில் இருப்பதும், நல்ல போக்குவரத்து வசதியும் செங்கல்பட்டுக்கு பலம். இது ஜங்ஷன் ஏரியா என்பதால், மக்கள் புழக்கம் அதிகம். சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நிறைந்திருக் கின்றன. பொறியியல், சட்டம், மருத்துவம், கலை அறிவியல் என அனைத்துவகைக் கல்லூரிகளும் இங்கே இயங்கி வருகின்றன.

அண்ணா நகர் மற்றும் அழகேசன் நகர் ஆகிய இடங்களில் மனை சென்ட் விலை ரூ.15 - 20 லட்சம் வரையிலும் விற்பனையாகிறது.

ரியல் எஸ்டேட்... ரியல் அப்டேட்!

செங்கல்பட்டில் அண்மைக் காலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஓரளவுக்கு அதிகரித்து வருகின்றன. நகர்ப் பகுதியில் 1,500 சதுர அடி டபுள் பெட்ரூம் கொண்ட அபார்ட்மென்ட் விலை ரூ.50 லட்சத்தில் ஆரம்பிக்கிறது. மாமல்லபுரம், கல்பாக்கம் செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலப் பணி முடியும் வரை அங்கே நிலங்களை வாங்க யாரும் ஆர்வம்காட்டாமல் இருந்தார்கள். ஆனால், சில மாதங்களுக்குமுன் ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டதால், போக்குவரத்துப் பிரச்னை வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் இப்போது சக்திநகர், வல்லம் போன்ற பகுதிகளில் விலை பலமடங்கு அதிகரித்துவிட்டது.

செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விலையும் அதிகம்; காலி இடங்களும் குறைவு என்பதால் புறநகர் வீட்டுமனை விற்பனையை நம்பித்தான் ரியல் எஸ்டேட் இருக்கிறது. குறைந்த விலையில் நிலம் கிடைப்பதால், அபார்ட்மென்ட் வாங்குவதைவிட மனைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்” என்றார்.

விஜய் பிராபர்ட்டி டெவலப்பர்ஸ் உரிமையாளர் விஜயகுமார், “செங்கல்பட்டு அருகே உள்ள மஹேந்திரா வேர்ல்டு சிட்டியில் இருநூறுக்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 50,000 பேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்குவதற்கு செங்கல்பட்டு நகரம்தான் பலவகையில் வசதியாக இருக்கிறது. செங்கல்பட்டு சுற்றுவட்டார வீட்டு மனை விலை உயர்வுக்கு முக்கியக் காரணம், இதுவாக இருக்கிறது.

ரியல் எஸ்டேட்... ரியல் அப்டேட்!

செங்கல்பட்டு புறநகர்ப் பகுதிகளில் வாங்கக் கூடிய விலையில் மனை கிடைக்கிறது. வீடு கட்ட மட்டுமல்லாமல், முதலீட்டு நோக்கிலும் பிளாட்டுகளை வாங்கி வருகிறார்கள். பாதாளச் சாக்கடைத் திட்டம், கூட்டுக் குடிநீர் திட்டம், சாலை விரிவாக்கம் போன்றவைக் கிடப்பில் கிடக்கின்றன. சாலை விரிவாக்கம் செய்யப்படா ததால், வெளிமாவட்ட பேருந்துகள் செங்கல்பட்டு நகருக்குள் வருவதில்லை. இவை சரிசெய்யப்பட்டால் செங்கல்பட்டின் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்’’ என்றார்.

மஹேந்திரா லைஃப் ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட் மேனேஜர் ஜோதி கணேஷ், “மஹேந்திரா வேர்ல்டு சிட்டியில் மொத்தம் 1,700 குடியிருப்புகள் வரவுள்ளது. ரூ.19 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை அபார்ட்மென்ட் இருக்கிறது’’ என்றார்.

ரியல் எஸ்டேட்... ரியல் அப்டேட்!

“மத்திய அரசு சார்பாக, தமிழகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய  எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு சிறந்த இடமாக செங்கல்பட்டு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ரயில், பேருந்து வசதிகள் இருப்பதும், சென்னைக்கு அருகாமை என்பதுமே இதற்கு முக்கியக் காரணம். செங்கல்பட்டு அருகிலேயே ரூ.550 கோடியில் மத்திய அரசின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் மருத்துவப் பூங்காவையும் தமிழக அரசு இங்கே துவங்க உள்ளது. இதனால் ஒத்தி வாக்கம், ஒழலூர் போன்ற பகுதிகளில் எதிர்காலத்தில் டெவலப்மென்ட் இருக்கும்” என்றார், மாருதி ரியல் எஸ்டேட் உரிமையாளர் பழனி.

தமிழகம் முழுக்க ரியல் எஸ்டேட் தேக்க நிலையில் இருக்கும்போது செங்கல்பட்டு மட்டும் தனித்து நிற்பது ஆச்சர்யம்தான்!

அடுக்குமாடிக் குடியிருப்பு விலை
(விலை சதுர அடி ரூபாயில்)

மஹேந்திரா வேர்ல்டு சிட்டி - 3,000 -  3,700
செங்கல்பட்டு நகரம் - 3,000 - 4,500

மனை விலை நிலவரம்
(சென்ட் விலை ரூ. லட்சத்தில்)
செங்கல்பட்டு நகரம்

 வேதாச்சலம் நகர் - 24-30
 ஜிஎஸ்டி சாலை - 25-30
 அண்ணா நகர் - 12-15
 அழகேசன் நகர் - 15-20
 சக்தி நகர் - 8-10

செங்கல்பட்டு-புறநகர்ப் பகுதிகள்

சிங்கபெருமாள் கோவில் - 8-15
மஹேந்திரா வேர்ல்டு சிட்டி - 7-15
திம்மாவரம் - 3-10
பாலூர் - 1–3
பழவூர் - 5-8
வேண்பாக்கம் - 3-4
ஒத்திவாக்கம் - 1-1.5
ஒழலூர் - 1-1.5
நென்மேலி - 2- 3
ஆலப்பாக்கம் - 4-8
பாரதபுரம் - 2.5 – 3