நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

காலியாகக் கிடக்கும் ஒரு கோடி வீடுகள்! காரணம் என்ன?

காலியாகக் கிடக்கும்  ஒரு கோடி வீடுகள்! காரணம் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
காலியாகக் கிடக்கும் ஒரு கோடி வீடுகள்! காரணம் என்ன?

பா.பிரவீன் குமார்

கர்ப்புறங்களில் மக்கள் வசிக்கப் போதுமான வீடுகள் இல்லை என்கிற புலம்பல் ஒரு பக்கம்; ஆனால், விளைநிலங்களை  எல்லாம் அழித்துப் புதிது புதிதாகக் கட்டிய பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பல ஆயிரம் காலியாக இருக்கின்றன என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். 

2011-ம் ஆண்டு மேற்கொள்ளப் பட்ட குடியிருப்பு தொடர்பான சென்செஸ் புள்ளிவிவரக் கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுக்க 9 கோடி குடியிருப்புகள் இருப்பதாகவும், இதில், 1.1 கோடி அளவுக்கு வீடுகள் காலியாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இதில், நகர்ப்புறங்களில் 12% அளவுக்கு வீடுகள் காலியாக இருக்கின்றன.

இது ஒருபக்கமிருக்க, ஜவஹர்லால் நேரு நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டம், ராஜிவ் அவாஸ் யோஜனா, பிரதம மந்திரி அவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) ஆகிய திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட வீடுகளில், குறிப்பிடத்தகுந்த அளவு காலியாகவே கிடக்கின்றன.   

மாநிலங்கள் அளவில் மிக அதிகமான வீடுகள் காலியாகக் கிடப்பதில் குஜராத் (19%), ராஜஸ்தான் (17%), மகாராஷ்ட்ரா (15%) ஆகிய மூன்று மாநிலங்கள் முதலிடங்களில் இருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை வெறும் 7 சதவிகித வீடுகள் மட்டுமே காலியாக இருப்பது ஆறுதலான விஷயம்.

காலியாகக் கிடக்கும்  ஒரு கோடி வீடுகள்! காரணம் என்ன?

காலியாகக் கிடக்கும் வீடுகள்

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த மத்திய அரசு, “2016-ம் ஆண்டு வரை, ஜவஹர்லால் நேரு நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் 10,32,443 வீடுகள் கட்டப்பட்டன. இதில் 2,38,448 வீடுகள் காலியாக உள்ளன. இது  23.1% ஆகும். 2017 மார்ச் வரையிலான காலத்தில்  கட்டப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை 11,65,254. இதில், காலியாக இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை  இரண்டு லட்சம். அதாவது, 17.22%. 

மாநிலங்கள் அளவில், மகாராஷ்ட்ராவில் 1,28,386 வீடுகள் கட்டப்பட்டன. இதில் 54,000 வீடுகள் காலியாக இருக்கின்றன.  இது ஏறக்குறைய 42%. டெல்லியில் 27,344 வீடுகள் கட்டப்பட்டன. அதில், 26,228 வீடுகள் காலியாக இருக்கின்றன அதிர்ச்சி தரும் தகவல். இதேபோல, மத்தியப் பிரதேசத்தில் 45 சதவிகித வீடுகளும், சத்தீஷ்கரில் 47 சதவிகித வீடுகளும் ஒதுக்கப்படாமலே இருக்கின்றன.  தமிழகத்தைப் பொறுத்தவரை 11 சதவிகித வீடுகளே ஒதுக்கப்படாமல் உள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

 மாநில அரசு காரணமா?

மத்திய அரசின் உதவியினால் கட்டப்பட்ட வீடுகள் காலியாக இருப்பது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த மத்திய அமைச்சர்கள், மாநில அரசுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.  “கட்டுமானம் மற்றும் வீடு ஒதுக்குவது ஆகிய வேலைகளை மாநில அரசே செய்கிறது. போதுமான அடிப்படை வசதிகள் இன்மை, வாழ்வாதாரத்துக்குப் போதிய சூழல் இல்லாதது போன்ற காரணங்களால் ஏழைகள், இந்த வீடுகளில் குடியேற விரும்பவில்லை. இதனால்தான், காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது’’ என்கிறது மத்திய அரசு. 

காலியாகக் கிடக்கும்  ஒரு கோடி வீடுகள்! காரணம் என்ன? காலி வீடுகள் மீது வரி


‘‘உலக அளவில் பாரிஸ் நகரில் 7.5 சதவிகித வீடுகள் காலியாக இருக்கின்றன. (கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீடுகள்.) இந்தக் காலி வீடுகள்மீதான  வரியை 20%லிருந்து 60% ஆக உயர்த்த பாரிஸ் நகரசபை திட்டமிட்டுள்ளது. கனடாவின் வான்கூவர் நகரத்தில் காலி வீடுகளின் எண்ணிக்கை 6.5 சதவிகிதமாக உயர்ந்தபோது, காலிவீடு மீது வரி விதிக்கப்பட்டது. இதன் மூலம், வரி கட்டுவதற்குப் பயந்தே, வீடுகள் விற்கப்படும் அல்லது வாடகைக்கு விடப்படும். இதுபோன்ற விதிகள் இங்கு ஏதும் இல்லாததால், வீடுகள் காலியாக இருப்பது தொடர்கிறது. இதில், தனியார் கட்டிய குடியிருப்புகள் மட்டுமின்றி, அரசு கட்டிய பல வீடுகளும் காலியாகத்தான் இருக்கின்றன’’ என்கிறார் டாடா இன்ஸ்ட்டியூட் ஆஃப் சோசியல் சயின்சஸ் பேராசிரியர் சஹாஹில் காந்தியும், ஐடிஎஃப்சி இன்ஸ்ட்டியூட்டில் பணிபுரியும் மினாஸ் முன்ஷியும்.

‘ஏழைகளுக்கு வீடு கட்டித் தருகிறோம்’ என்று நிதியை வாங்கிக்கொண்டு, அவர்கள் வாழத் தகுதியற்ற இடத்தில்... அதாவது, அவர்கள் வேலை நிமித்தம் சென்றுவர வசதி இல்லாத, போக்குவரத்து வசதி இல்லாத, பள்ளிக்கூடம், ரேஷன் கடைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில் வீடுகள் கட்டுவதன் மூலம் இந்தத் திட்டங்களின் நோக்கம் சிதைந்து போகிறது.

மக்களின் வரிப்பணம் வீணாவதுடன், ஏழைகளுக்கு எந்தப் பயனும் இல்லாமல் போய்விடுகிறது. இனியாவது அரசுத் துறையினர் புதிய குடியிருப்புகளைக் கட்ட முற்படும்போது, அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்று முதலில்  பார்த்துவிட்டு, குடியிருப்புகளைக் கட்டுவது நல்லது!