Published:Updated:

பத்திரப் பதிவு... நெருக்கும் விதிமுறைகள்... தவிக்கும் மக்கள்! என்னதான் தீர்வு?

பத்திரப் பதிவு... நெருக்கும் விதிமுறைகள்... தவிக்கும் மக்கள்! என்னதான் தீர்வு?
பிரீமியம் ஸ்டோரி
பத்திரப் பதிவு... நெருக்கும் விதிமுறைகள்... தவிக்கும் மக்கள்! என்னதான் தீர்வு?

ஆ.ஆறுமுக நயினார், எம்ஏ., பிஎல், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் கூடுதல் பதிவுத் துறை தலைவர்

பத்திரப் பதிவு... நெருக்கும் விதிமுறைகள்... தவிக்கும் மக்கள்! என்னதான் தீர்வு?

ஆ.ஆறுமுக நயினார், எம்ஏ., பிஎல், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் கூடுதல் பதிவுத் துறை தலைவர்

Published:Updated:
பத்திரப் பதிவு... நெருக்கும் விதிமுறைகள்... தவிக்கும் மக்கள்! என்னதான் தீர்வு?
பிரீமியம் ஸ்டோரி
பத்திரப் பதிவு... நெருக்கும் விதிமுறைகள்... தவிக்கும் மக்கள்! என்னதான் தீர்வு?

டந்த 2016 செப்டம்பர் மாதத்தில், தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைகளைப் பத்திரப் பதிவு செய்வதற்குத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு. இந்தத் தடையால் அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை வாங்கிய லட்சக்கணக்கானவர்கள் கடுமையாகப் பாதிப்படைந்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்ட பலரும் வேண்டிக் கொண்டதற்கிணங்க தற்காலிகத் தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் தலைமையிலான முதன்மை அமர்வு, வீட்டு மனைகளாகப் பதிவு செய்யப்பட்ட மனைகளை மீண்டும் பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்தத் தடையை கடந்த மார்ச் மாதத்தில் நீக்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க பல ஆயிரம் வீட்டுமனைகள் விறுவிறுப்பாக மறுவிற்பனையாகத் தொடங்கின. 

பத்திரப் பதிவு... நெருக்கும் விதிமுறைகள்... தவிக்கும் மக்கள்! என்னதான் தீர்வு?

ஆனால், அடுத்து பதவியேற்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, இந்தத் தடையை மீண்டும் கொண்டுவந்து, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை எதிர்பாராத தமிழக அரசாங்கம் வேறு வழி இல்லாமல் அடுத்த ஒரு சில தினங்களில், அரசு அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகள் மற்றும் தனிமனைகளை வரைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையை 4.5.2017 அன்று வெளியிட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனை அடுத்து முதன்மை அமர்வு 12.5.2017 அன்று அரசின் வரன்முறைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, நகரமைப்பு விதிகள் மற்றும் புதிய வரன்முறை விதிகளின்படி, பதிவுச் சட்டம் பிரிவு 22ஏ-யையும் அதன் சலுகையையும் செயல்படுத்துமாறு இடைக்காலத் தீர்ப்பு ஒன்றினை வழங்கியது.

இந்தத் தீர்ப்பில், பிரிவு 22ஏ-யின்படி வீட்டுமனைகளின் மறுபதிவு மீதான தடை நீடிக்கிறதா, இல்லையா என்பது பற்றி தெளிவான வாசகங்கள் அளிக்கப்படாததால், சார்பதிவாளர்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது. ஒரு சிலர் பதிவு செய்யலாம் என்றும், ஒரு சிலர் செய்ய முடியாது என்றும் கருதுவதால், எதற்கு வம்பு என்று எதையும் பதிவு செய்ய மாட்டோம் என்று தடாலடியாக மறுத்து வருகிறார்கள் சார்பதிவாளர்கள். இதில் உச்சகட்டக் கொடுமை என்னவென்றால், இந்த மனைகள் சம்பந்தப்பட்ட அடமானம், குத்தகை, மகன், மகள், மனைவி, பேரன், பேத்திக்குத் தரப்படும் தானம், பாகப்பிரிவினை, விடுதலை போன்ற ஆவணங்களைக்கூடப் பதிவு செய்ய சார்பதிவாளர்கள் மறுப்பதுதான்.

நீதிமன்றமே தனது தீர்ப்பில் பொதுமக்களுக்கு ஏற்படும் குடும்பப் பொருளாதாரப் பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு கருணையோடு இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதாகத் தெளிவாகக் குறிப்பிட்டும், நீதிமன்றம் காட்டிய அந்தக் கருணையை பதிவுத் துறை பிரதிபலிக்காதது வருத்தமே. மேலும், இந்தப் பிரச்னைக்கு இன்று வரை எவ்விதத் தீர்வையும் அரசு வழங்கவில்லை. இப்போது அரசின் வரன்முறைத் திட்டத்தையும், அங்கீகாரம் என்ற பிரச்னையையும் விட்டுவிட்டு, இந்த விவகாரத்தை  ஒட்டுமொத்தமாக அணுகித் தீர்வு காண இயலுமா என்று பார்க்கலாம்.

முதலில், அங்கீகாரம் என்ற பிரச்னையை எடுத்துக்கொள்வோம். எட்டு மனைகளுக்கு மேல் உள்பிரிவு செய்தால், மனைகளுக்கு இடையில் சாலைகள் அமைத்தால் அங்கீகாரத்துக்கு அனுப்ப வேண்டும் என விதிமுறைகள் சொல்கின்றன. ஆனால், சார்பதிவாளர்கள் ஒரு குக்கிராமத்தில் ஒரு விவசாயி ஒரே ஒரு மனையைப் பதிவுக்குக் கொண்டுவந்தால்கூட அதற்கு அங்கீகாரம் பெறவில்லை எனக் கூறி, பதிய மறுத்துவிடுகிறார்கள்.

இரண்டாவதாக, ஒரு படிப்பறிவில்லாத விவசாயி, டிடிசிபி, சிஎம்டிஏ-யின் படிக்கட்டுகளைக் மிதித்துவிட முடியுமா? இந்தக் கடுமையான விதி முறைகளும் கணக்கு வழக்கில்லாத படிவங்களும் அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டனவா? டிடிசிபி அங்கீகாரம் என்றால் குறைந்தபட்சம் 600, 1,200 சதுர அடி மனைப்பரப்பு இருக்க வேண்டும். அப்படியானால், 200, 300 சதுர அடியில் 150 சதுரடி வீடு கட்டி அதில் ஓலைக்கூரை வேய்ந்து ஒரு ஏழை வாழக்கூடாதா?

பத்திரப் பதிவு... நெருக்கும் விதிமுறைகள்... தவிக்கும் மக்கள்! என்னதான் தீர்வு?

மேலும், தமிழ்நாட்டில் பாதி நிலங்கள், ஒருசில மாவட்டங்கள் தவிர்த்து, விவசாயத்துக்குச் சிறிதும் பொருந்தாதவை. கடலோர மாவட்டங்களில் மணற் பாங்கான நிலங்களும் வடக்கு மாவட்டங்களில் பாறைகள் மலிந்த நிலங்களும் ஏராளம். தூத்துக்குடி மாவட்டத்தில் செம்மண் தேரிக்காடு என்று பெரும் நிலப்பரப்பு உள்ளது. அரக்கோணம், திருத்தணி பக்கம் சென்றால் திரும்பும் திசை எல்லாம் மைல் கணக்கில் பாறைகளும் நிலமும் ஊடோடிக் காணப்படும். இதுபோல வீணாகக் கிடக்கும் நிலங்களில் வசதியற்றவர்கள் சக்திக்கு ஏற்ப வீடு, குடிசை அமைத்துக் கொள்வதை ஏன் சட்டம் போட்டுத் தடுக்க வேண்டும்?

அடுத்ததாக, இந்த வரன்முறைத் திட்டத்தில் உள்ள பெரும்குறை, இதில் வெளிப்புறக் கால வரம்பு இல்லை. அதாவது, ஒரு மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, இத்தனை ஆண்டுகள் கழிந்துவிட்டால், அதற்கு விதிவிலக்கு உண்டு என்ற வரம்பு இல்லை. உதாரணமாக, வருமான வரிச் சட்டத்தில் (வேறு சில சட்டங்களும் உண்டு) ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வழக்கை விசாரித்து வரி விதிக்க முடியாது. முத்திரைச் சட்டத்தில் ஒரு நிலம் மீது பத்திரத்தில் குறைந்த விலை காட்டப்பட்டு முத்திரையும் குறைவாகச் செலுத்தப்பட்டது தெரியவந்தால், ஐந்து ஆண்டுகளுக்குபின் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவு விஷயத்தில் எத்தனை ஆண்டுகளுக்கு முந்தியதாக இருந்தாலும் அதற்கு விதிவிலக்கில்லை. உதாரணமாக, 30, 40 ஆண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மனைப் பிரிவுகள், இன்று மிகப் பெரிய நகராகிச் சாலைகள் மற்றும் தெருக்களாக மாறி, கடை வீதி, கோயில் , குளம் என்று ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கான மனைகளுக்கும் அங்கீகாரம் பெற வேண்டுமா என்றால் அரசாணை கூறும் பதில், ‘ஆம்’ என்பதே. இது சாத்தியமா? இப்படியே போனால் வெள்ளைக்காரன் காலத்தில் போட்ட லே அவுட்டுக்கும் பணம் கட்டச் சொல்வார்களோ?

இன்னொரு பிரச்னை, மனைக்கு அங்கீகாரம் அளிக்க கேட்கப்படும் கட்டணம்தான். முதலில் பரிசீலனைக் கட்டணம், அடுத்து அங்கீகாரக் கட்டணம், பிறகு மேம்பாட்டுக் கட்டணம் சதுர மீட்டருக்கு இவ்வளவு என்று விதிக்கப்படுகிறது. இதற்கு மேல், ஓ.எஸ்.ஆர் என்ற திறந்தவெளி விடாததற்கு அபராதக் கட்டணம் செலுத்த வேண்டும். நில வழிகாட்டி மதிப்பில் விடாத பரப்பளவுக்கு 10% கட்டணம் கட்ட வேண்டும். அதுதவிர, வழிகாட்டி மதிப்பில் 3% தனியாகக் கட்ட வேண்டும். இவையனைத்தும் சேர்த்து ஒரு கிரவுண்ட் மனைக்கு ரூ.25,000 முதல் ஊரைப் பொறுத்து பல லட்சங்கள் வரை செலுத்த வேண்டியுள்ளது. அதாவது, 30 ஆண்டுகளுக்குமுன் நீங்கள் ரூ.10 ஆயிரம் கொடுத்து ஒரு கிரவுண்ட் வாங்கியிருந்தால், இன்று அதே மனையை அங்கீகாரம் பெற்றதாக மாற்ற, மனை வாங்கும்போது கொடுத்த பணத்தைவிட பத்து மடங்கு, இருபது மடங்குக்கு மேல் செலுத்த நேரிடலாம். எனவே, அரசு அங்கீகாரம் பெறச் செலுத்தும் தொகை, மனையின் விற்பனை விலைக்கு மிகாமல் இருக்க வேண்டும் அல்லது இந்த ஊருக்கு இவ்வளவு உச்சவரம்பு என்று ஒரு உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும். இதைச் செய்யாவிட்டால் பலரும் அங்கீகாரம் பெற முன்வர மாட்டார்கள். அப்படி செய்யாதவர்கள் மீது அரசினால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? கட்டிய வீடுகள் மீதோ, மின்சாரம், குடிநீர் விநியோகம் மீதோ கைவைத்தால் மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

பத்திரப் பதிவு... நெருக்கும் விதிமுறைகள்... தவிக்கும் மக்கள்! என்னதான் தீர்வு?

எனவே, அங்கீகாரம் பெறாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விஷயத்தில் அரசு தாயுள்ளத்தோடு பரிசீலிக்க வேண்டிய சில தீர்வுகள் இதோ...

1. பிரிவு 22-ன் சலுகையை அதாவது, வீட்டு மனையின் மறுபத்திரப் பதிவை அனுமதிக்க வேண்டும். வரன்முறை வேறு, பத்திரப் பதிவு வேறு என்ற அணுகுமுறை வேண்டும். பதிவு செய்தவர் வீடு கட்ட, வரைபட அனுமதி போன்றவற்றுக்கு அரசினை அணுகும்போது அவரிடம் மேம்பாட்டுக் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலிக்கலாம். செலுத்த மறுத்தால் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு போன்றவற்றை மறுக்கலாம். ஏனெனில், அங்கீகாரம் பெறாத மனைகளின் பதிவு விவகாரத்தில் அரசின் பங்களிப்பும் பாதி உள்ளதால், பொதுமக்களைத் தவறு செய்ய விட்டுவிட்டு, பத்து ஆண்டுகள் சட்டத்தை முடக்கிவிட்டு, திடீரென்று தண்டிப்பது நீதியாகாது. மேலும், இதுபோன்று மனை வாங்கியவர்கள் ஏராளமானவர்கள் நடுத்தர மற்றும் கீழ்மட்ட வருவாய்ப் பிரிவினர் என்பதை உணர வேண்டும்.

2.
அங்கீகாரம் பெறாத மனைப் பிரிவு விற்பனை கொடிகட்டிப் பறந்ததற்கு முக்கியக் காரணம், தவணை முறை விற்பனைதான். மாதா மாதம் ரூ.500, 1,000, 2,000 என்று சிறுகச் சிறுகப் பணம் கட்டி மனைகள் வாங்கியவர்களில் பெரும்பகுதியினர் மாத ஊதியக்காரர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள்தான். இவர்களிடம் தற்போது ஒரே தவணையில் கட்டணத்தைச் செலுத்தச் சொல்வது, அவர்களைக் கடினமான பொருளாதாரச் சுமைக்கு உட்படுத்துவதாகும். இப்படிப்பட்டவர்கள், தங்களது மனைக்கு அங்கீகாரம் கோரி வரும்போது ஒருசில தவணை களில் பணம் செலுத்த அனுமதிக்க வேண்டும்.

3. விவசாய நிலங்களை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும். ஆனால் குக்கிராமங்கள், குடியிருக்கத் தகுதியற்ற கற்பாங்கான, மணற்பாங்கான இதரப் பகுதிகள் போன்றவற்றில் அங்கீகாரம் பெறும் சட்டத்தை அமல்படுத்தாமல் விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

4.
பலப்பல ஆண்டுகளுக்குமுன் மனைகள் பிரிக்கப்பட்டு, காலப்போக்கில் பெரும் நகரங்களாக, முழுமையாகக் குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்ட பகுதிகளில் இந்த விதிமுறைகளை அமல்படுத்தக் கூடாது. எனவே, பத்து ஆண்டுகள் முன்னதாக இந்த விதிமுறைகளுக்கு வெளிப்புறக் காலவரம்பு (Outer Time Limit) நிர்ணயிக்க வேண்டும்.

பத்திரப் பதிவு... நெருக்கும் விதிமுறைகள்... தவிக்கும் மக்கள்! என்னதான் தீர்வு?5.
மனை அங்கீகாரக் கட்டணத்துக்கு நியாயமான உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும்.

6. அங்கீகாரம் பெறாத மனையானாலும் அதன் மீது செய்யப்படும் ஒப்பந்தம், அடமானம், தானம், விடுதலை, பாகப்பிரிவினை, குத்தகை போன்ற ஆவணப் பதிவுகளை அனுமதிக்க வேண்டும்.

7. வீட்டுமனைகளாக மாற்றக்கூடாத முடியாத விளைநிலங்களின் சர்வே எண்களை அரசு, பட்டியலிட்டுப் பகிரங்கமாக வெளியிட வேண்டும்.

8. விவசாயம் நடைபெறத் தகுதியில்லாத பகுதிகளைக் கண்டறிந்து, வீட்டு மனைக்கு அனுமதி வழங்க ஒற்றைச்சாளர முறையில்,  விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் அனுமதி தர ஏற்பாடு செய்ய வேண்டும்.

9.  இறுதியாக, உறுதியாக ஒன்று. சிஎம்டிஏ என்பது பணக்காரர்கள் பறக்கும் சொகுசு விமானம். டிடிசிபி என்பது உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் செல்லும் விரைவு ரயில். அப்படியானால் ஏழைகள், நலிந்தவர்கள் நடந்துதான் போகவேண்டுமா? ஓர் ஏழைக்குத் தலைக்கு மேலே தனது சொந்தக் கூரையின் கீழ் உறங்கும் சொந்த வீட்டு ஆசை இருக்கக் கூடாதா? அவனால் டிடிசிபி வாசலை மிதிக்க முடியுமா? அதுபோடும் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியுமா? வீடுதான் கட்ட முடியுமா?

எனவே சமூக, பொருளாதார ரீதியாக நலிந்த மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினர், வசதியற்றவர்கள், கீழ்நடுத்தர வர்க்கத்தினர் வீடு கட்டிக்கொள்ள சில நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கப்பட வேண்டும்.

அதாவது, வீடு கட்டும் இடம் விளைநிலமாக இருக்கக் கூடாது. வெள்ளப்பகுதி, ஆற்றங்கரை, கால்வாய், குளம் குட்டை போன்றவற்றில் கட்டக்கூடாது. அடிப்படை சுகாதாரம் வேண்டும் என்பது போன்ற அடிப்படை நிபந்தனைகளுடன் வீடு கட்ட அனுமதி தரப்பட வேண்டும். கிராமப் பஞ்சாயத்து மட்டத்திலும், அதற்கு மேல் பஞ்சாயத்து ஒன்றிய அளவிலும், சிஎம்டிஏ, டிடிசிபி தவிர, வீட்டு மனைகளுக்கு அனுமதி வழங்கும் ஓரிரு அமைப்புகளை அரசு உருவாக்க வேண்டும்.

மண், மனை என்பது பணம் படைத்தவர்களின் ஏகபோக உரிமையல்ல; சாதாரண மனிதர்களின் வாழ்நாள் கனவு என்பதைப் புரிந்துகொண்டு, அந்தக் கனவை நிஜமாக்க தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.