Published:Updated:

`கார்பெட் ஏரியா எவ்வளவு என்பதே முக்கியம்..!’ - சொந்த வீடு வாங்க 15 டிப்ஸ்

`கார்பெட் ஏரியா எவ்வளவு என்பதே முக்கியம்..!’ - சொந்த வீடு வாங்க 15 டிப்ஸ்
`கார்பெட் ஏரியா எவ்வளவு என்பதே முக்கியம்..!’ - சொந்த வீடு வாங்க 15 டிப்ஸ்

`கார்பெட் ஏரியா எவ்வளவு என்பதே முக்கியம்..!’ - சொந்த வீடு வாங்க 15 டிப்ஸ்

`சொந்தமாக ஒரு வீடு' என்பது பலருக்கும் தலைமுறைக் கனவு. வாடகை வீட்டு உரிமையாளர்களின் கெடுபிடிகள், கட்டுப்பாடுகள், அசவுகரியங்களே, `கையளவு என்றாலும் சொந்தமாக ஒரு வீடு’ என்ற எண்ணத்தை நடுத்தர மக்களின் மனங்களில் விதைக்கிறது. அடித்தட்டு மக்களைப் பொறுத்தவரை, தாழ்வான ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தள்ளப்படுவது, நிரந்தரமாக ஒரு வசிப்பிடம் இல்லாமல் துரத்தியடிக்கப்படுவது போன்ற கொடுமைகளுக்கு மாற்றாக சொந்தமாக ஒரு வீடு என்ற எதிர்பார்ப்பை நோக்கிச் செல்கிறார்கள். இப்படி எந்த சிக்கலிலிருந்து விடுபடுவதற்காக சொந்தமாக ஒரு வீடு அல்லது வீட்டுமனை வாங்க முற்பட்டார்களோ, அந்த நோக்கமே சிதைவதுபோல் சொந்த வீட்டுக்குச் சென்றபின்பும் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இவற்றுக்கான தீர்வுக்காகத்தான் இந்த நிமிடங்கள்...

சொந்தமாக வீடு அல்லது வீட்டுமனை வாங்க முடிவெடுக்குமுன், எவ்வளவு பட்ஜெட்டிற்குள் வாங்குவது என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் கைக்கு மீறிய பட்ஜெட்டில் மாட்டிக்கொள்ளாதிருக்க முடியும்.

வாங்கவுள்ள வீடு அல்லது வீட்டுமனைக்கு அரசாங்கத்திலிருந்து முழுமையான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். பொதுவாக தரகர்கள்மூலம் வாங்கும்போது அவர்மீதான நம்பிக்கையால் இதையெல்லாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். இதுதான் பின்னாளில் பெரும்பாதிப்பாகிவிடும்.

அடுத்ததாக பட்ஜெட்டுக்கான பணம் ஒதுக்குவது. முழுவதும் நம் சேமிப்பிலிருந்தா அல்லது வங்கிக்கடனிலா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வீடு கட்டுவது என்றால் டவுன் பேமன்ட் தொகையைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வீட்டுக்கடன் வாங்குமுன்பே முதற்கட்ட பேஸ்மென்ட் வரை கட்டிமுடிக்க முடியும். அதன்பிறகே கடன் தொகையை ஒவ்வொரு நிலையில் ரிலீஸ் செய்வார்கள்.

வங்கியில் கடன் வாங்குவதென்றால் அவர்களிடம் ப்ரீ அப்ரூவ்டு லோன் கிடைக்க வாய்ப்புள்ளதா எனப் பார்க்க வேண்டும். எந்த வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி குறைவென்று பார்க்க வேண்டும். நமது க்ரெடிட் ஸ்கோர் எவ்வளவு உள்ளதென்றும் பார்க்க வேண்டும்.

அடுத்து, மனை வாங்குவதற்கு, மனைப்பிரிவுக்கான ஒப்புதல், சி.எம்.டி.ஏ., டி.டி.சி.பி., முனிசிபாலிட்டி அல்லது கார்ப்பரேஷனிலிருந்து பெறப்பட்டுள்ளதா என்று பார்க்கவேண்டும். ஒப்புதல் பெறப்பட்ட வரைபடத்தில் உள்ளதுபோலவே மனை அமைந்துள்ளதா என்றும் சரிபார்க்க வேண்டும்.

வீடு கட்டுவதென்றால் அதற்கான திட்ட அனுமதி, சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி., வசமிருந்து பெறப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். அதேபோல, கட்டட அனுமதி உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். 

வீடு/மனை வாங்கும்போது பார்க்கவேண்டிய இன்னொரு முக்கிய அம்சம், நிலத்தின் ஆவணங்கள் வில்லங்கம் இல்லாமல், விற்பதற்கான முழு உரிமையோடு பட்டா, சிட்டா முதலியவை இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும். நமக்குத் தெரிந்த சட்ட வல்லுநரின் துணையோடு, குறைந்தபட்சம் 13 ஆண்டுகளிலிருந்து 30 ஆண்டுகள் வரைக்கும் சரிபார்த்து வாங்குவது அவசியம்.

அடுக்குமாடி குடியிருப்பில் வாங்குவதென்றால் அதைக் கட்டிய புரமோட்டர் குறித்து விசாரிக்க வேண்டும். அவர்களது முந்தைய புராஜெக்டுகளையும் பார்வையிட்டு, வாங்கியவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்த பின்பே முடிவெடுக்க வேண்டும்.

நாம் வாங்கும் வீடு அல்லது மனைப்பிரிவு புறநகராக இருந்தால் அது நகரத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது, அதற்கான போக்குவரத்து வசதிகள் எப்படி உள்ளன என்று பார்க்க வேண்டும். 

மனைப்பிரிவு தாழ்வானதாகவோ, நீர்வழிக்கு அருகிலோ அமைந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நம் அடிப்படைத் தேவைகளான அன்றாடத்தேவைகளுக்கான கடைகள், கல்விக்கூடம், மருத்துவமனை வசதிகள் அருகாமையில் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும்.

வீட்டுமனையின் நீள அகலம், வீடு கட்டுவதற்கேற்ப இருக்கிறதா என்பதை அறிய வேண்டும். கூடுமானவரை சதுரம், செவ்வகம் போன்ற அமைப்பில் இருப்பது நல்லது. ஒரே நெடுக்குவாக்கில் அமைந்துவிட்டால் வீட்டில் பிரைவஸியான அறைகள் அமைப்பது கடினம்.

வீடு/மனையின் முன்புறமுள்ள சாலையின் அகலத்திற்கேற்பதான் அதன் மதிப்பும் இருக்கும். வீட்டுக்கான அணுகு சாலைகள் குறித்தும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வீட்டின் சதுர அடியை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல், பயன்பாட்டில் இருக்கும் கார்பெட் ஏரியாவின் அளவு எவ்வளவு என்பதைத்தான் முக்கியமாக கவனிக்க வேண்டும். பயன்பாட்டு ஏரியா குறைவாக இருந்தால் அந்த வீட்டின் மதிப்பு குறைவுதான். வீட்டின் காற்றோட்ட வசதி, மேற்கூரை உயரம், வீட்டின் பிரைவஸி போன்றவற்றைக் கவனிக்க வேண்டும்.

சுற்றிலும் வீடுகள் உள்ளனவா, ஆலைகள் ஏதும் உள்ளனவா என்றும் பார்க்க வேண்டும். வீட்டின் கழிவு நீர் எவ்விதம் அகற்றப்படுகிறது என்பதைப் பார்ப்பதோடு, மற்றவர்களின் கழிவுநீர்க் கால்வாய் ஏதும் நம் மனைப்பகுதியில் வருகின்றனவா என்றும் பார்க்க வேண்டும்.

அடுக்குமாடிக்குடியிருப்பில் கார் பார்க்கிங் ஏரியா அமைப்பு, கார் நிறுத்த எடுக்க ஏதுவாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.

ஒரு சொந்த வீடு, மனை வாங்குவதற்குள் இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா என்று மலைப்பாக உள்ளதா? எல்லாம் வாங்கும்வரை மட்டுமே. அதைக்கூட சரிபார்க்காமல் வாங்கிய பின்பு இவற்றில் ஏதேனும் குறை இருந்தால் காலம் முழுக்க அதற்கான சிக்கலை எதிர்கொண்டே ஆகவேண்டும். சொந்த வீடென்பது நம் அடையாளம். நம் வாழ்க்கையின் ஓர் அங்கம். அதைச்செம்மையாகச் சீர்தூக்கிப்பார்த்து வாங்கிவிட்டால் அதைவிட மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்!

அடுத்த கட்டுரைக்கு