Published:Updated:

`2019-ல் ரியல் எஸ்டேட் துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்!’ -நிபுணர்கள் கணிப்பு

`2019-ல் ரியல் எஸ்டேட் துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்!’ -நிபுணர்கள் கணிப்பு
`2019-ல் ரியல் எஸ்டேட் துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்!’ -நிபுணர்கள் கணிப்பு

"ரெரா சட்டம் வந்தபிறகு, ரியல் எஸ்டேட் துறையில் முறையாக செயல்படுபவர்களால் மட்டுமே நீடிக்க முடிகிறது. ஏமாற்றுவேலை செய்பவர்களால் நீடிக்கமுடியாமல் இந்தத் துறையைவிட்டே வெளியேறிவிட்டார்கள்."

ந்தியாவில் பணமதிப்பு நீக்கம்... ஜி.எஸ்.டி அமலாக்கத்துக்குப் பிறகு, ரியல் எஸ்டேட் துறையில் மந்தமான போக்கு ஏற்பட்டது; வீடு, வீட்டுமனை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தது; ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் இருந்த பலரும் வெவ்வேறு துறைகளுக்கு மாறும் சூழல் வந்தது. வீட்டுமனைகளை அங்கீகரிக்கப்பட்ட மனைகளாக மாற்றம் செய்வது தொடர்பான மாநில அரசின் கெடுபிடியும் ரியல் எஸ்டேட் துறையை குழப்பத்துக்கு உள்ளாக்கியது. 

பத்திரப்பதிவு, பட்டா வாங்குவது, பட்டா பெயர் மாற்றம் என ரியல் எஸ்டேட் தொடர்பான அனைத்துப் பணிகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பிறகு, அனைத்திலும் நடைமுறைச் சிக்கல்கள் அதிகரித்தன. டிஜிட்டல் மயமாக்குவதால் அதிக விலைக்கு விற்பனையாவதும், கறுப்புப்பணப் புழக்கமும் கட்டுப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டாலும், அதற்கு நேர்மாறாகவே நடந்துவருகிறது. இந்தச் சூழலில் 2019-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் துறை மீண்டெழுமா அல்லது இதே போக்கு தொடருமா என அந்தத் துறை சார்ந்தவர்களிடம் கேட்டோம்.

``2019-ம் ஆண்டு, ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை மிகவும் நம்பிக்கையளிக்கும் ஆண்டாக அமையும்" என்றார், நவீன் ஹவுஸிங் & பிராப்பர்ட்டீஸ் பி. லிட்., இயக்குநர் குமார். அவர் மேலும் கூறும்போது, ``பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டம் வரும் மார்ச் 31, 2019-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் வீட்டுக்கடன் தவணைக்காக ரூ.2.5 லட்சம் வரை நிதியுதவி கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தத் திட்டம் குறித்து இதுவரை விழிப்புஉணர்வு இல்லாத மக்களும், இன்னும் மூன்று மாத அவகாசமே இருப்பதால் விரைவாக வாங்க முற்படுவார்கள். இதன் காரணமாக நிறைய வீடுகள் விற்பனையாகும் வாய்ப்பு உள்ளது.

2019-ம் ஆண்டில் பொதுத்தேர்தல் வரவுள்ளது. இந்த ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள மக்களிடம் நன்மதிப்பைப் பெறவேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளது. எனவே, ரியல் எஸ்டேட் துறைக்கும் சாதகமான நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. வீட்டுக்கான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்படலாம். அடுத்த பொதுபட்ஜெட்டுக்குப் பதிலாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படக்கூடும். இதில் பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்க முடியாது என்றாலும், ஜனவரி மாதமே மக்களைக் கவரக்கூடிய சலுகை அறிவிப்புகள் வரலாம்.

பொதுத்தேர்தல் முடிவடைந்த பிறகு புதிய அரசு பதவியேற்கும்போது, அது எந்த அரசியல் கட்சியின் அரசாக இருந்தாலும், தங்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் மனம்குளிர முதல் ஆறு மாதங்களுக்கு நல்ல பல திட்டங்களை அறிவிப்பார்கள். ஆகமொத்தத்தில், வரவுள்ள 2019-ம் ஆண்டு மக்களுக்கு மிகவும் நல்ல காலம். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அவர்களுடைய மக்கள் சக்தியை வெளிக்காட்டக்கூடிய ஆண்டாக அமையக்கூடும். எனவே, ரியல் எஸ்டேட் துறைக்கு நல்ல ஆண்டாகவே அமையும்" என்றார்.

சாய் பில்டர் மணிசங்கர் அவர்களிடம் கேட்டபோது, ``தமிழகத்தைப் பொறுத்தவரை ரியல் எஸ்டேட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. சமீபத்தில் ரியல் எஸ்டேட் வீடு கட்டுவதற்கான தளப் பரப்பளவுக் குறியீடு 1.5 என்பதிலிருந்து 2 ஆக உயர்த்தப்பட்டது. மல்ட்டிஸ்டோரேஜ் கட்டடங்களுக்கு 3.5 வரை குறியீடு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தத் துறையினர் உற்சாகமடைந்துள்ளனர். 

கட்டட அனுமதிக்கான விதிமுறைகளைத் தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரி முறைப்படுத்தியுள்ளார்கள். எனவே, இதில் எங்கே தவறு நேர்ந்தாலும் கண்டுபிடிப்பதும் சரிசெய்வதும் எளிது. இதன் காரணமாக இதுவரை இருந்துவந்த தேக்கநிலை மாறிவருகிறது. இந்தத் துறையில் தற்போது வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துவருவதும் சாதகமான விஷயமாகும்.

ரியல் எஸ்டேட் வளர்ச்சியைப் பார்த்தோமானால், இதுவரை ஏதாவது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே ஒட்டுமொத்தமான வளர்ச்சியும் இருந்துவந்தது. மக்களும் அதை நோக்கியே குவிந்தனர். தற்போது, அனைத்து பகுதிகளும் பரவலாக வளர்ந்துவரும் மாற்றம் வந்துள்ளது. கட்டுமானங்கள் அனைத்து பகுதிகளிலும் பரவலாக நடந்துவருகின்றன.

அடுத்ததாக, ரெரா சட்டம் வந்த பிறகு, ரியல் எஸ்டேட் துறையில் முறையாகச் செயல்படுபவர்களால் மட்டுமே நீடிக்க முடிகிறது. ஏமாற்றுவேலை செய்பவர்களால் நீடிக்க முடியாமல் இந்தத் துறையைவிட்டே வெளியேறிவிட்டார்கள். இதில் கடுமையான சட்டதிட்டங்கள் இருப்பதால், ஏமாற்றி தொழில் செய்வது இயலாமல்போனது. எனவே, மக்களுக்கும் இதன்மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. 

தளப் பரப்பளவுக் குறியீட்டை அதிகரித்திருப்பதால், நிறைய அதிகாரங்கள் கார்ப்பரேஷன் வசம் போகின்றன. பஞ்சாயத்து வரை அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒப்புதல் பெறுவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால், வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை மேலும் நன்முறையில் செயல்படும். அனைத்தும் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளதால் தேவையற்ற அலைச்சல், நேர விரயம், தேவையற்றச் செலவுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இது நல்ல மாற்றமாகும்" என்றார்.

ரியல் எஸ்டேட் துறைசார்ந்த நிபுணர்களின் கருத்துகளைக் கேட்கும்போது இனிவரும் 2019-ம் ஆண்டில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். பலரது சொந்தவீட்டுக் கனவு நிறைவேறும் ஆண்டாக 2019-ம் ஆண்டு இருக்கும் என்றால் மிகையல்ல.

அடுத்த கட்டுரைக்கு