மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

அடுக்குமாடிக் குடியிருப்பு: அசோசியேஷன்தான் தீர்வா?

ஆலோசனை

அடுக்குமாடிக் குடியிருப்பு: அசோசியேஷன்தான் தீர்வா?

சமீபத்தில் கோவை வாசகர் நமக்கு போன் செய்து இப்படி பேசினார்: ''நான் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் சங்கப் பொறுப்பில் இருக்கிறேன். எங்கள் குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் மட்டும் அசோசியேஷனுக்கு கொடுக்க வேண்டிய கட்டணங்களை சரிவர தருவதில்லை. இவரிடமிருந்து பணத்தை எப்படி வாங்குவது என்பது பெரும் பிரச்னையாக இருக்கிறது!'' என்று புலம்பித் தீர்த்தார்.

டுக்குமாடியில் குடியிருக்கும் இது மாதிரியான நபர்களை கட்டுப்படுத்த ஒரே வழி, குடியிருப்போர் நலச் சங்கம் அமைப்பதே. இந்த நலச் சங்கத்தை எப்படி அமைப்பது? அமைத்தபின் என்னென்ன செய்ய வேண்டும்? என்கிற கேள்விகளுக்கு பதில் இதோ:  

குடியிருப்போர் நலச் சங்கம்!  

##~##
அடுக்குமாடிக் குடியிருப்பு களில் வீடு வாங்கியவர்கள் ஒன்று சேர்ந்து முதலில் ஒரு சங்கத்தை உருவாக்குவது அவசியம். குறைந்தபட்சம் ஐந்து வீட்டுக்காரர்கள் சேர்ந்தால்கூட சங்கம் தொடங்கிவிடலாம். புதிதாகத் தொடங்கப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பு எனில் அனைத்து வீடுகளும் விற்ற பிறகு சங்கம் தொடங்க வேண்டும். அதுவரை தற்காலிக சங்கம் நடத்தலாம்.

நிரந்தர சங்கம் உருவான பிறகு அனைத்து வீட்டுக் காரர்களும் இணைந்து சங்கப் பொறுப்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். வாடகைக்குக் குடியிருப்பவர்களை சங்க பொறுப்புகளுக்கு நியமிக்கக் கூடாது.

குடியிருப்பு சங்கத்திற்கு என்று பொதுவான விதிமுறை களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தனிநபர் விருப்பத்திற்கேற்பவோ அல்லது சங்க பொறுப்பாளர்கள் விருப்பத்திற்கு ஏற்பவோ விதி முறைகளை உருவாக்கக்கூடாது. அனைத்து வீட்டுக்காரர்களின் கருத்துக்களையும் அறிந்தபிறகே விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.  

சங்க செயல்பாடு!

இந்த சங்கத்தைப் பதிவு செய்வது அவசியம். இது ஒரு சட்ட ரீதியான பதிவு பெற்ற அமைப்பாக கருதப்படுவதால் சங்கத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து பதிவு செய்வது அவசியம். சங்கத்திற்கு என தனியாக வங்கிக் கணக்கு தொடங்குவது முக்கியம். சங்கக் கணக்குவழக்குகளை முறையாக பராமரிப்பதும், ஆண்டுத் தணிக்கையும் செய்ய வேண்டும். குறைந்த உறுப்பினர்கள் கொண்ட சங்கமாக இருந்தால் பொறுப்பாளர்களே இந்த வேலையை மேற்கொள்ளலாம். அதிக வீடுகள் கொண்ட குடியிருப்பாக இருந்தால் இதற்கு என்று தனி நிர்வாகிகளை அமர்த்திக் கொள்வது நல்லது.  

பொது நிதி!

உறுப்பினர்களிடையே பிரச்னை வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது பணம் சார்ந்த விஷயம்தான். சங்கத்திற்கு என பொது நிதியைத் திரட்டி அதை அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலோடு வங்கியில் வைப்பு நிதியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்து வரும் வட்டியில் பொது செலவுகளை செய்துகொள்வதற்கேற்ப விதிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மின் கட்டணம், குடிநீர் கட்டணம் பராமரிப்பு கட்டணம் மற்றும் பொதுவான செலவுகளுக்கு அவ்வப்போது அறிவிப்பு கொடுக்கும்போது உறுப்பினர்கள் அனைவரும் அதை செலுத்த வேண்டும். இதற்கு உடன்படாத உறுப்பினர் கள் சங்கத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். இதை செலுத்தத் தவறும் உறுப்பினர்களின் வீடுகளுக்கான இணைப்புகளை நீதிமன்ற அனுமதியோடு துண்டிக்கலாம்.  நியாயமான பொதுக் காரணங்களுக்காக பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்ட செலவினங் களை அனைத்து உறுப்பினர் களும் கொடுத்துவிட வேண்டும்.  பொது நிதியின் அனைத்துச் செலவுகளையும் சங்க உறுப்பினர்கள் எப்போதும் கேட்டறியும்படி இருக்க வேண்டும்.

சட்டம் என்ன சொல்கிறது?

சி.ரகுராமன், வழக்கறிஞர்.

அடுக்குமாடிக் குடியிருப்பு: அசோசியேஷன்தான் தீர்வா?

''குறைந்தபட்சம் ஐந்து வீடுகள் இருந்தால்கூட குடியிருப்போர் நலச் சங்கத்தை பதிவு செய்து கொள்ளலாம் என்கிறது சட்டம். குடியிருப்போர் சங்கத்தை பதிவு செய்வது கட்டாயமில்லை என்றாலும், பதிவு செய்யப்படும் போதுதான் அது சட்ட ரீதியான அமைப்பாகக் கருதப்படும்.

அடுக்குமாடிக் குடியிருப்போர் சங்கத்திற்கென பொதுவான விதிமுறைகளோடு, சங்கம் ஏற்படுத்திக் கொள்ளும் தனி விதிகளுக்கு இதன் அனைத்து உறுப்பினர்களும் கட்டுப்பட்டவர்கள் ஆகின்றனர். சங்க வரவு செலவு கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தணிக்கைக்கு உட்படுத்துவதும், ஆண்டு பொதுக்குழு கூட்டங்களை கூட்டுவதும், தேவைகேற்ப அவசரக் கூட்டங்களை கூட்டுவதும், கூட்ட முடிவுகளை உறுப்பினர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கும் சங்கம் கடமைப்பட்டுள்ளது.

சங்க முடிவுகளை மீறுகிற உறுப்பினர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கையை சங்கம் மேற்கொள்ள முடியும். முறையான பராமரிப்புக் கட்டணம் செலுத்தவில்லை என்றால் நீதிமன்ற அனுமதி பெற்று குறிப்பிட்ட உறுப்பினருக்கு மட்டும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து இணைப்புகளையும் நிறுத்த முடியும். மேலும், அவர் செலுத்த வேண்டிய கட்டணங்களையும், நீதிமன்ற செலவினங்களையும் கேட்டு பெற முடியும். ஆனால், பதிவு செய்யப்படாத சங்கம் என்றால் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தனிப்பட்ட முறையில் மட்டுமே வழக்கு தொடுக்க முடியும்.''

ஒத்துழைப்பு!

பெரும்பான்மை உறுப்பி னர்களின் ஆதரவு உள்ள எந்த முடிவுக்கும் இதர உறுப்பி னர்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும். உறுப்பினர்களுக்குள் எழும் முரண்பாடுகள் குடியிருப்பின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டுமே அன்றி, தனிநபர் முரண்பாடுகளாக இருக்கக் கூடாது.

வாடகைக்கு இருப்பவர்கள் சங்கத்தின் கருத்துரிமை உறுப்பினராக மட்டும் இருக்க வேண்டும். அவர்கள் நிரந்தர உறுப்பினர்களின் கருத்துக்கு உடன்பட வேண்டும்.

குடியிருப்புக்கு வண்ணம் பூசுவது, பொது இடங்களில் பயன்பாட்டிற்குரிய பொருட் களை வாங்குவதற்கு கருத் தொற்றுமையோடு நடந்து கொள்ள வேண்டும். சங்கப் பொறுப்பாளர்கள் எல்லா முடிவுகளையும் தாங்களே எடுக்காமல் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து எடுக்க வேண்டும். உறுப்பினர் களிடையே எழும் முரண்பாடு கள், பிரச்னைகளை சங்கத்திற்கு கொண்டு வந்து சுமூகமாக தீர்த்து அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பை உறுதிபடுத்த வேண்டும்.

சகிப்புத்தன்மை!

உறுப்பினர்கள் தங்களது பார்க்கிங் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்திக் கொள்ள வலியுறுத்த வேண்டும். அனுமதி இல்லாமல் பார்க்கிங் செய்திருந்தால் பொதுவான பணியாளர்களிடத்தில் சொல்லி சரி செய்து கொள்ள வேண்டும். நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது.

பொது இடங்களை ஆக்கிரமிக்க யாருக்கும் அனுமதி தரக்கூடாது. இது தொடர்பான ஆட்சேபனைகளை சங்கத்தின் மூலமே தீர்த்துக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் உள்ள பொருட்களை, யாராவது பழுது ஏற்படுத்தினால் சம்பந்தப் பட்டவர்களே சரி செய்ய வேண்டும்.

பொது இடங்கள்!

மாடியில் செல்போன் டவர் வாடகைக்கு விடுவது, கம்யூனிட்டி ஹால்கள் வாடகைக்கு விடுவதன் மூலம் வரும் வருமானங்களை பொதுவான செலவுகளுக்கு பயன்படுத்தலாம். இந்த விதிமுறைகளை குடியிருப்பு வாசிகள் அனைவரும் பின்பற்றினால், பிரச்னை என்பதே வராதே!

- நீரை.மகேந்திரன்
படம்: மகா.தமிழ்ப்பிரபாகரன்