Published:Updated:

300 சதுர அடி அப்ரூவல் மனை: ஏமாற்றும் கில்லாடி நிறுவனங்கள்!

300 சதுர அடி அப்ரூவல் மனை: ஏமாற்றும் கில்லாடி நிறுவனங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
300 சதுர அடி அப்ரூவல் மனை: ஏமாற்றும் கில்லாடி நிறுவனங்கள்!

ரியல் எஸ்டேட்டில் இப்போது ஹாட் நியூஸ் என்ன தெரியுமா? தமிழகம் முழுக்க 15,000-30,000 ரூபாய்க்குள் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை என்கிற கவர்ச்சிகரமான அறிவிப்புதான். நகரங்களைச் சுற்றி உள்ள பகுதிகளில் வீட்டு மனை விலை மிகவும் அதிகரித்துள்ளதால் நடுத்தர மக்கள் இந்த அறிவிப்பை பார்த்து, விட்டில் பூச்சிகளாக விழுந்து வருகின்றனர். இந்த கவர்ச்சி அறிவிப்பு சரிதானா, இல்லை ஏமாற்று வேலையா என்று விசாரிக்க களத்தில் இறங்கினோம்.

##~##
ரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு போன் செய்து, இடம் வேண்டும் என்றோம். ''முப்பதாயிரம் ரூபாய்..! இது 300 சதுர அடிக்கான விலை. அரசு அங்கீகாரம் இருக்கிறது; ஆனால் பஞ்சாயத்து அப்ரூவல்'' என்று பல கேள்விகளைக் கேட்டபிறகு எடுத்துச் சொன்னார்கள். இந்த பதில் ஆரம்பத்திலேயே பல சந்தேகங்களை நமக்குள் எழுப்பியது. காரணம், 300 சதுர அடி மனையில் வீடு கட்டும்போது கட்டட அனுமதி கிடைக்குமா? என்பது மிகப் பெரிய கேள்வி.

இதுகுறித்து தமிழகம் முழுக்க மனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் அரசின் அமைப்பான டி.டி.சி.பி-ஐ   (DTCP -Directorate of Town & Country Planning) அணுகி விசாரித்தோம்.

தங்களின் பெயரை வெளியிட வேண்டாமே என்கிற வேண்டுகோளுடன் சில அதிகாரிகள் நம்மிடம் விரிவாகவும், விளக்கமாகவும் பேசினார்கள்.

300 சதுர அடி அப்ரூவல் மனை: ஏமாற்றும் கில்லாடி நிறுவனங்கள்!

''தற்போதைய நிலையில் மனைகளுக்கு பஞ்சாயத்து அப்ரூவல் என்று தனியாக எதுவும் இல்லை. இதற்கு முன் பஞ்சாயத்து எல்லைக்குள் லே-அவுட் போடும்போது, தொடர்புடைய பஞ்சாயத்தில் குறிப்பிட்ட இடத்தில் லே-அவுட் போட்டு மனைகளை விற்க ஆட்சேபனை இல்லை என பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். மேலும், பஞ்சாயத்து தலைவர், லே-அவுட் போட ஆட்சேபனை இல்லை என்று கடிதமும் தந்திருப்பார். இதுவே பஞ்சாயத்து அப்ரூவலாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த முறையில் அதிக முறைகேடுகள் நடந்ததாக கருதி முந்தைய திமுக ஆட்சியில், பஞ்சாயத்து எல்லைக்குள் லே-அவுட் போடும் புரமோட்டர்கள் பஞ்சாயத்து தலைவரிடம் கடிதம் எதுவும் வாங்கத் தேவையில்லை என விதிமுறை கொண்டு வரப்பட்டது.

அதன்பிறகு புரமோட்டர்கள் இஷ்டத்துக்கு லே-அவுட் போட்டு விற்பனை செய்து வருகிறார்கள். இவற்றில் மனைகளின் அளவு குறைவாக இருப்பதோடு, சாலைகளின் அளவுகளும் மிகக் குறைவாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, 300 சதுர அடி மனை, 10 அடி சாலை என்கிற ரீதியில் லே-அவுட் போட்டு விற்றுவிடுகிறார்கள். மக்களும் விவரம் தெரியாமல் வாங்கிவிடுகிறார்கள். இந்த மனையில் வீடு கட்ட அனுமதி கேட்கும்போது பிரச்னை வருகிறது. மேலும், 10 அடி சாலை என்கிறபோது ஒரு கார்கூட திரும்ப முடியாது. அதுபோன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகரித்து விடுகிறது.

அந்த வகையில் பொதுமக்களும் மனை வாங்கும்போது சாலையின் அகலம் மற்றும் மனையின் அளவை கவனிப்பது கட்டாயம்!

தற்போது பஞ்சாயத்தில் போடப்படும் எந்த ஒரு லே-அவுட்டும் தொடர்புடைய பஞ்சாயத்து மூலம் டி.டி.சி.பி.-க்கு  தெரிவிக்கப்பட்டு, எழுத்து மூலம் அனுமதி பெற்றால்தான் செல்லுபடியாகும். டி.டி.சி.பி. அதிகாரிகள், ''எங்களின் அனுமதி பெறும் லே-அவுட்டில் சாலையின் அளவு குறைந்தபட்சம் 23 அடி, மனையின் அளவு குறைந்தபட்சம் சுமார் 1,500 அடி (30 அடிக்கு 50 அடி) இருக்கும். அப்போதுதான் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் வீடு கட்ட வசதியாக இருக்கும்'' என்றார்கள்.

வாய்ப்பு வசதி இருக்கிறவர் கள், இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு மனை வாங்குவது நல்லது.

300 சதுர அடி அப்ரூவல் மனை: ஏமாற்றும் கில்லாடி நிறுவனங்கள்!

''பஞ்சாயத்து பகுதியில் போடப்படும் லே-அவுட்டுக்கு இறுதி ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பஞ்சாயத்து தலைவருக்குத்தான் இருக்கிறது. ஆனால், அது டி.டி.சி.பி.-ன் எழுத்துப்பூர்வமான அனுமதி இருந்தால்தான் செல்லும். மேலும், லே-அவுட்டில் பூங்கா, விளையாட்டுத் திடல், பள்ளிக்கூடம், சமுதாயக் கூடம் போன்றவற்றுக்கு இடம் ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். அப்போதுதான் பஞ்சாயத்தில் போடப்படும் லே-அவுட்டுக்கு டி.டி.சி.பி. அங்கீகாரம் அளிக்கிறது.'' என்றும் அந்த அரசு அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

பஞ்சாயத்து அலுவலகம் பக்கமே செல்லாமல் இஷ்டத்துக்கு மனையைப் பிரித்து லே-அவுட் போட்டு விற்பதுதான் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற லே-அவுட்களில் பூங்கா, சாலை போன்ற பொதுப் பயன்பாட்டு இடங்கள் தானப் பத்திரமாக எழுதப்பட்டு தொடர்புடைய பஞ்சாயத்துக்கு ஒப்படைக்கப்பட்டு இருக்காது. அந்நிலையில், வீடு கட்ட அனுமதி கோரும்போது சிக்கல் கண்டிப்பாக வரும்.  

300 சதுர அடி அப்ரூவல் மனை: ஏமாற்றும் கில்லாடி நிறுவனங்கள்!

மேலும், சாலைகள் மற்றும் பூங்காவுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்புடைய பஞ்சாயத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தும், டி.டி.சி.பி. அங்கீகரிக்காத மனைப் பிரிவு என்றால் சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது.  

அதே நேரங்களில், இந்த பஞ்சாயத்து மனையில் வீடு கட்ட அனுமதி கிடைக்கவே கிடைக்காதா என்றால், இதற்கு தெளிவான பதில் இல்லை.

கட்டட அனுமதி என்பது தொடர்புடைய பஞ்சாயத்துத் தலைவரை பொறுத்த விஷயமாக இருக்கிறது. அதாவது, முந்தைய பஞ்சாயத்து தலைவர் லே-அவுட் போட ஆட்சேபனை தெரிவிக்கவில்லை எனவே, நான் கட்ட அனுமதி கொடுக்கிறேன் என்று அப்போதைய பஞ்சாயத்து தலைவர் சொல்லலாம். அல்லது முறையான டி.டி.சி.பி. லே-அவுட் அப்ரூவல் பெறப்படவில்லை. எனவே, கட்ட அனுமதி தரமுடியாது என்று சொல்லக் கூடும். இதற்கு அடுத்தக் கட்டம் சாலையின் அகலம் குறைவு மற்றும் மனை அளவு குறைவு போன்ற காரணங்களால் கட்ட அனுமதி மறுக்கப்படுவது அதிக எண்ணிக்கையில் இருக்கிறது.  

அரசு விதிமுறைகள், தெளிவாக இல்லாததால் மனை வாங்குபவர்கள்தான் மிகவும் உஷாராக இருக்க வேண்டி இருக்கிறது. எதிர்கால குடியிருப்பு அல்லது முதலீடு நோக்கம் எதுவாக இருந்தாலும் சாலையின் குறைந்தபட்ச அகலம் 23 அடி, மனை அளவு 1,200 சதுர அடி இருக்கும்படி பார்த்துக்கொண்டால் காற்றோட்டமாக வீடு கட்ட முடியும். அல்லது நல்ல விலைக்கு சுலபமாக விற்க முடியும்.

இனி பஞ்சாயத்து அப்ரூவல் மனைகளை வாங்கும் போது இந்த விஷயங்களை உஷாராக கவனியுங்கள்.

- சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு