Published:Updated:

விரட்டும் வீட்டு வாடகை... சொந்த வீடுதான் தீர்வா?

பிராக்டிகல் சொல்யூஷன்

விரட்டும் வீட்டு வாடகை... சொந்த வீடுதான் தீர்வா?

பிராக்டிகல் சொல்யூஷன்

Published:Updated:
விரட்டும் வீட்டு வாடகை... சொந்த வீடுதான் தீர்வா?
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள் விலையைவிட வேகமாக உயர்ந்து வருகிறது வீட்டு வாடகை. வெங்காயம் விலை ஏறினால் உடனே அரசாங்கம் தலையிட்டு, குறைக்க நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், வீட்டு வாடகை உயர்ந்தால், அரசாங்கம் எந்த வகையிலும் தலையீடு செய்வதே இல்லை. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைமையோடு ஒப்பிடும்போது, இப்போது இருக்கும் வீட்டு வாடகை பல மடங்கு அதிகம்.

வசதிகள் பெரிதாக உயரவில்லை என்றாலும் வாடகை மட்டும் வருடாவருடம் ஏறிவிடுகிறது. ஏகத்துக்கு ஏறிவரும் வாடகை உயர்வு தொடர்பாக சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம் என பல்வேறு நகரங்களைச் சேர்ந்தவர்களிடம் பேசி அலசி ஆராய்ந்தோம்.  

விரட்டும் வீட்டு வாடகை... சொந்த வீடுதான் தீர்வா?

உண்மை நிலவரம்!

விரட்டும் வீட்டு வாடகை... சொந்த வீடுதான் தீர்வா?

கடந்த ஐந்து வருடங்களில் கிட்டத்தட்ட 40 முதல் 80 சதவிகிதம் வரை வாடகை உயர்ந்திருக்கிறது. 2007-ல் 6.67 சதவிகிதமாக இருந்த ஆண்டு பணவீக்க விகிதம் 2010-ல் 13.33 ஆகவும், கடந்த ஆண்டு 9.41 ஆகவும் உயர்ந்திருக்கிறது. இந்த வருடம் 7.55-ஆக இருக்கிறது. இதனோடு ஒப்பிட்டால் அதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளின் பணவீக்க விகிதத்தோடு ஒப்பிட்டால், பணவீக்க விகித வித்தியாசம் சராசரியாக 46 சதவிகிதம் என்றால், வீட்டு வாடகை 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. இதில் கவனிக்க வேண்டியது, பணவீக்க விகிதத்துக்கும், வீட்டு வாடகை மற்றும் அத்தியாவசிய செலவு அதிகரிப்புக்கும் ஏற்ப தனிநபர் வருமானம் உயரவில்லை என்பதுதான்.

சென்னை போரூரில் இரண்டு படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் வாடகை 2007-ல் 4,000 ரூபாய். அதே வீட்டின் இன்றைய வாடகை 7,000. ஐந்து வருடங்களில் சுமார் 80 சதவிகித வாடகை உயர்வு. ஆனால்,  வருமான உயர்வு வெறும் 30 சதவிகிதம்தான். இதேபோல சென்னை நகரத்தின் மற்றொரு பகுதியான தரமணியில் பத்து வருடங்களுக்கு முன்பு வரை இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டின் வாடகை 2,500 - 3,000 ரூபாய் மட்டுமே. இன்று அதே வீட்டின் வாடகை 12,000 ரூபாய்.  

விரட்டும் வீட்டு வாடகை... சொந்த வீடுதான் தீர்வா?

திருச்சி நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது அண்ணா நகர். சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு உருவான குடியிருப்பு பகுதி இது. இங்கு ஒரு ஹால், ஒரு படுக்கை அறை, கிச்சன், ஒரு பாத்ரூம் அல்லது இரண்டு படுக்கை அறை கொண்ட வீடுகளுக்கு 2000-ல் இருந்த வாடகை 300 முதல் 800 வரை மட்டுமே. பின்னர் 2004-ல் 1,500-2,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.3,500-5,000 வரை உள்ளது.

சேலத்தில் நடுத்தர மக்கள் வசிக்கும் ஒரு பகுதியான பொன்னம்மாபேட்டையில் ஆண்டுக்கு ஒருமுறை 500 முதல் 1,000 வரை உயர்த்தப்படுகிறது என்கின்றனர். திருநெல்வேலியில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை 20-லிருந்து 30 சதவிகிதம் வரை வாடகை உயர்த்தப்படுவதாகச் சொல்கிறார்கள். கோவை நகரத்தின் ராமநாதபுரத்தில் இப்போது கொடுக்கும் வாடகையில் மூன்றில் ஒருபங்கு உயர்வு இருக்கிறது என்கிறார்கள்.

விரட்டும் வீட்டு வாடகை... சொந்த வீடுதான் தீர்வா?

ஏன் உயர்கிறது வாடகை?

விரட்டும் வீட்டு வாடகை... சொந்த வீடுதான் தீர்வா?

வாடகை இப்படி அதிரடியாக உயர என்ன காரணம்? முக்கியமான முதல் காரணம், ரியல் எஸ்டேட்களின் மதிப்பு அபாரமாக உயர்ந்திருப்பதுதான். கடந்த ஐந்தாண்டுகளில் நிலத்தின் மதிப்பு 50 சதவிகிதத்திற்கு மேல் உயர, சொந்த வீட்டுக்காரர்களும் குஷியாக வாடகையை ஏற்றிவிடுகிறார்கள். அப்படி உயர்த்தாவிட்டால் எங்களுக்குத்தான் நஷ்டம் என்கிறார்கள்.

அடுத்து முக்கியமான காரணம், குடியிருப்பிற்கான வீடுகளின் தேவை அதிக அளவில் உயர்ந்திருப்பது. கடந்த ஐந்தாண்டுகளில் சிறு நகரங்களிலிருந்து பெருநகரங் களுக்குக் குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். புதிதாக வேலை தேடி பலரும் நகர்ப்புறங்களில் குடிபெயர்வதால் வாடகை வீடுகளுக்கானத் தேவை மிக அதிகமாக உள்ளது. இதனாலே வீட்டு உரிமையாளர்கள் அடிக்கடி வாடகையை உயர்த்தி விடுகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டும் மாதச் சம்பளம் அபரிமிதமாக உயர்ந்திருப்பதும் ஒரு காரணம். உதாரணமாக, ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவர் களுக்கு ஓரளவு நல்ல சம்பளம் கிடைப்பதால், வீட்டு வாடகையை உயர்த்திவிடுகிறார்கள். ஐ.டி. துறை போல எல்லோருக்கும் அதிகச் சம்பளம் கிடைப்பதில்லை என்றாலும், அவர்களும் அதிக வாடகையைத் தரவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள்.

தவிர, பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் நல்ல பள்ளிக்கூடம், நல்ல தண்ணீர் வசதி, ரம்மியமான சூழல் என பல விஷயங்கள் வாடகையை உயர்த்த காரணங்களாக அமைந்துவிடுகின்றன.

எப்படி சமாளிக்கின்றனர்?  

சம்பளம் வரும் முன்னே; வாடகை உயர்வு வரும் பின்னே என்கிற கதையாகிவிட்டது வாடகை வீட்டுக்காரர்களின் நிலை. சம்பளம் கொஞ்சம் ஏறினாலும் அதை சொந்த வீட்டுக் காரர்களுக்குத் தரவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. எனவே, முடிந்தவரை தங்களது தேவைகளைக் குறைத்துக்கொண்டும், வருமானத்தை அதிகரிக்கும் வழிகளைத் தேடியும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

கோவை இருகூரைச் சேர்ந்த குடும்பத் தலைவி மகேஸ்வரியிடம் பேசினோம். ''நாங்கள் இதற்கு முன்பு வசித்த வீட்டிற்கு கொடுத்ததைவிட இப்போது 1,000 ரூபாய் அதிகம் தருகிறோம். இதனால் எங்களது மாத பட்ஜெட்டில் இது பெரிய செலவுதான். இதை சமாளிக்க எல்லாவகையிலும் பார்த்துப் பார்த்து செலவு செய்யவேண்டியிருக்கிறது'' என்கிறார்.

ஒரு சில இடங்களில் இந்த வாடகை உயர்வு நேர்மையா கவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. திருச்சி பீம நகரில் வசிக்கும் ஜேம்ஸ், ''நான் தற்போது குடியிருக்கும் வீடு நல்ல வசதியாக இருக்கிறது, வீட்டு உரிமையாளரும் நல்ல அமைதியான முறையில் நடந்துக் கிறாங்க, மற்ற இடங்களை ஒப்பிடும்போது என் வீட்டுக்கான வாடகை குறைவாகவே இருக்கிறது'' என்கிறார்.

விரட்டும் வீட்டு வாடகை... சொந்த வீடுதான் தீர்வா?

என்னதான் தீர்வு?

விரட்டும் வீட்டு வாடகை... சொந்த வீடுதான் தீர்வா?

விஷம்போல ஏறிவரும் வாடகைப் பிரச்னைக்குப் பல தீர்வுகள் உண்டு. நகர்ப்புறத்தோடு ஒப்பிடுகையில் புறநகரில் வாடகை கொஞ்சம் குறைவு என்பதால் அங்கு குடிபெயரலாம். ஆனால், அலுவலகம், பள்ளிக்கூடம், மருத்துவமனை, ஷாப்பிங் என ஒவ்வொன்றுக்கும் நகர்ப்புறத்தை நோக்கி தினம் தினம் ஓடிவர வேண்டும். இதனால் ஆகும் போக்குவரத்துச் செலவை கணக்கிட்டால் நகர்ப்புறத்திலேயே  வாடகைக்கு இருந்துவிடலாம். தவிர, ஒவ்வொருமுறையும் வாடகை ஏற்றப்படும்போதும் அதைவிட குறைவான வாடகை உள்ள வீட்டுக்கு மாறலாம். ஆனால், வாடகை குறைந்தால் வீட்டின் அளவும் குறையும். அதற்குத் தயாராக இருக்கவேண்டும்.

இதெல்லாம் தற்காலிகமான தீர்வுகள்தான். வாடகை பிரச்னைக்கு நிரந்தரமாகத் தீர்வு காணவேண்டுமெனில், நகர்ப்புறத்திற்குப் பக்கத்தில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டிப் போய்விடுவதுதான். வீடு கட்டிப் போக முடியாதவர்கள் ஃப்ளாட் வாங்கலாம் என்பது நிரந்தரமான, சரியாக முடிவாக இருக்க முடியும்.

சொந்த வீட்டிற்குத் திட்டமிடுங்கள்!

''வாடகை உயர்விலிருந்து தப்பிக்க சிறந்த தீர்வு, சொந்த வீட்டிற்குத் திட்டமிடுவதுதான். இப்போது வாடகைக்காக நீங்கள் செலவு செய்யும் பணத்துடன் இன்னும் கொஞ்சம் பணத்தை ஒதுக்கினாலே போதும், உங்களுக்கே உங்களுக்கென ஒரு சொந்த வீடும் உருவாகி, காலகாலத்திற்கு நிலைத்து நிற்கும் சொத்தாக மாறிவிடும்!'' என்கிறார் நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷ்.

''குறைந்த வாடகையில் அனைத்து வசதிகளும் கொண்ட வீடு என்றால் வாடகை வீடு சிறப்பானதே. ஆனால், நீண்டகாலநோக்கில் யோசித்தால் சொந்த வீடே மேல் என்று எண்ணும்படி இருக்கும். பொதுவாக, உங்கள்  வருமானத்தில் 30 சதவிகிதம் வரை வாடகைக்குச் செலவழிக்கலாம். இதோடு கொஞ்சம் தொகையைக் கூடுதலாகச் சேர்த்து மாதாமாதம் உங்களால் இ.எம்.ஐ.-ஆக கட்ட முடியும் எனில், வங்கிக் கடன் மூலம் எளிதாக வீடு வாங்கலாம்.

விரட்டும் வீட்டு வாடகை... சொந்த வீடுதான் தீர்வா?

வீட்டுக் கடன் எவ்வளவு?

இதற்கு முதலில் நீங்கள் செய்யவேண்டியது, வங்கியிலிருந்து உங்களுக்கு எவ்வளவு வீட்டுக் கடன் கிடைக்கும் என்பதைப் பாருங்கள். இந்தத் தொகைக்கு புறநகர்ப் பகுதிகளில் ஒரு வீட்டை வாங்கத் திட்டமிடுங்கள்.

உதாரணமாக, உங்களது வருமானத்தில் 30 சதவிகிதம், அதாவது 10,000 ரூபாய் வாடகை தருபவர் எனில் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை யிலும் கடன் பெறமுடியும். உங்களது சேமிப்பு மற்றும் இ.பி.எஃப். தொகைகள் 10  லட்சம் ரூபாய் என திட்டமிட்டால் 25 லட்சத்துக்கு ஒரு வீடு வாங்கலாம்.

இந்த 15 லட்ச ரூபாயை 20 வருட இ.எம்.ஐ.-ஆக கணக்கிட்டால் தற்போதுள்ள வட்டி விகிதத்தின்படி(10 %), ஒரு மாதத்திற்கு 14,476 ரூபாய் கட்டவேண்டும். இந்தத் தொகை முதலிரண்டு வருடங்களுக்கு உங்களுக்குக் கூடுதல் சுமையாக இருக்கலாம். ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் உங்களது சம்பளம் உயரும்போதும், போனஸ் மற்றும் ஊக்கத்தொகை கிடைக்கும்போதும் வீட்டுக் கடனை அடைத்து, உங்கள் சுமையைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம்.  

மேலும், வீட்டுக் கடனுக்கான வட்டி மற்றும் அசலுக்குக் கிடைக்கும் வரிச் சலுகைகளை கணக்கிட்டால் அதன் மூலம் மிச்சமாகும் பணத்தையும் இ.எம்.ஐ. செலுத்துவதற்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

குறைந்த வருவாய் பிரிவினர் என்றால் முதலில் ஒரு இடத்தை வாங்கிவிட்டு, அடுத்த சில ஆண்டுகளில் வீட்டுக் கடன் மூலம் வீடு கட்டத் திட்டமிடலாம். இப்படி வாங்கும் கடன் முதலிரண்டு வருடங்களில் வருமானத்தில் 40-50 சதவிகிதமும், அடுத்தடுத்த வருடங்களில் 30-35 சதவிகிதமாகவும், அதற்கு கீழும் குறைந்து விடும். அதேசமயத்தில், அடுத்த இருபது வருடங்களில் நாம் வாங்கியிருக்கும் சொத்து மதிப்பு பல மடங்காக உயர்ந்திருக்கும். இதன் அடிப்படையில் பார்த்தால், வருடத்திற்கு 10-15 சதவிகிதம் வரை சொத்து மதிப்பு உயர்ந்திருக்கும். எனவே, 35 வயதுக்காரர்கள் என்றால் இப்போது தாராளமாகச் சொந்த வீடு வாங்கும் முடிவை எடுக்கலாம்'' என்றார்.

வாடகை வீட்டில் வசிக்கக்கூடிய நடுத்தர வருவாய் பிரிவினர் சரியாகத் திட்டமிட்டால், வாழ்நாள் முழுக்க  வாடகை என்கிற நிரந்தரத் தொல்லையிலிருந்து தப்பித்துவிடலாம்.

- நீரை.மகேந்திரன்,
க.முகமது அபுதாஹீர், இரா.வசந்த், கா.கதிரேசன், த.பிரியங்கா,
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், இரா.வசந்த்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism