புறநகர் ரவுண்ட்-அப்
ரியல் எஸ்டேட்
##~## |
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
புறநகர்களில் நடுத்தர மக்கள் மனை வாங்கி வீடு கட்டுவதற்கு ஏற்ற இடங்களை நாணயம் விகடன் வாசகர்களுக்கு தொடர்ந்து அடையாளம் காட்டி வருகிறோம். அந்த வகையில் சென்னையை அடுத்துள்ள ஓ.எம்.ஆர். பகுதியை கடந்த இதழில் சொன்னோம். இந்த வாரம் படப்பை மற்றும் ஒரகடம் பகுதியைப் பார்ப்போம்.
சென்னை புறநகர்:
சென்னையின் புறநகர் என்பதற்கு முற்றிலும் பொருத்தமான பகுதிகளாக இருக்கின்றன, படப்பை மற்றும் ஒரகடம். காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குள் இந்த பகுதிகள் வந்தாலும், பெரும்பாலும் சென்னையை சார்ந்தே உள்ளன. சென்னையில் தற்போது வாடகை வீட்டில் வசிக்கும் நடுத்தர மக்களில் பலர் இந்த பகுதியைத்தான் தேர்ந்தெடுத்து மனை வாங்கி வருகிறார்கள். உடனடியாக வீடு கட்டுவதற்கு தோதான மனைகள் இங்கு கிடைப்பதும் சிறப்பான விஷயம்.
''சென்னை நகரத்திலிருந்து தாராளமாக போக்குவரத்து வசதி இருப்பதால் வேலைக்குச் சென்று வருவதிலும் சிக்கல் இல்லை'' என்றார் நாம் சந்தித்த மாநகரப் போக்குவரத்துக்கழக ஊழியர் மு.ரஞ்சித்குமார்.

''புறநகர்தான் என்றாலும் ஒரு குடும்பத்தின் அனைத்துத் தேவைகளுக்கும் சென்னை வரவேண்டும் என்பதில்லை; எல்லா வசதிகளும் இங்கேயே கிடைக்கிறது. எட்டு வருடங்களுக்கு முன்பு இருந்த இந்த பகுதி வேறு; இன்று இருக்கும் நிலைமை வேறு. இப்படி வளரும் என்று அப்போது நினைத்தும் பார்க்கவில்லை'' என்று ஆச்சர்யம் காட்டினார் இங்கு வசித்துவரும் என்.நந்தகுமார்.
''சென்னையில் நெருக்கடி அதிகரிக்க அதிகரிக்க புறநகர்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அதேசமயம் இந்தப் பகுதிகள் வளர்வதற்கு இன்னொரு முக்கிய காரணம், ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டைகள். இது தவிர, தாம்பரம் வழியாக காஞ்சிபுரம் செல்லும் பிரதான சாலை வசதி என பிற காரணங்களும் படப்பை மற்றும் ஒரகடம் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்றன. படப்பையைச் சுற்றி நடுத்தர மக்களுக்குச் சாதகமான விலையில் மனைகள் விற்பனைக்குக் கிடைப்பது முக்கியமான காரணம்'' என்கிறார் அன்னை ரியல் எஸ்டேட் டி.பெலிக்ஸ்ராஜ்.
இது எந்த அளவுக்கு உண்மை என்பதை அறிய படப்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆத்தனஞ்சேரி, புஷ்பகிரி, சிறுமாத்தூர், ஒரத்தூர், ஆரம்பாக்கம், சாலமங்கலம், நரியம்பாக்கம், செரப்பனஞ்சேரி, ஒரகடம், வாரணவாசி, வல்லக்கோட்டை எனச் சுற்றி வந்தோம். நாம் பார்த்தது இதுதான்:
போக்குவரத்து வசதி!
இந்த பகுதியில் போக்குவரத்துக்கு பெரிய குறை எதுவுமில்லை. சென்னையின் பிராட்வே, தி.நகர் பேருந்து நிலையங்களிலிருந்தும், கோயம்பேடு மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்தும் அடிக்கடி பேருந்துகள் இருக்கின்றன. இதுதவிர, தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் அடிக்கடி இருக்கிறது. இங்கிருந்து தாம்பரம், பெருங்களத்தூர் புறநகர ரயில் நிலையங்களுக்கு அரை மணி நேரப் பயணம்தான். காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் செல்லவும் அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. ஆனால், படப்பையின் சுற்று வட்டார உட்பகுதிகளுக்குச் செல்ல சைக்கிள் அல்லது ஸ்கூட்டர் போன்ற இரண்டு சக்கர வாகனங்கள் இருந்தால்தான் உடனே வீடு போய் சேர முடியும்.

உட்கட்டமைப்பு வசதி!
புறநகராக வளர்ச்சி பெற்றுவிட்டாலும் உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். பிரதான சாலைப் போக்குவரத்து வசதி சிறப்பாக இருந்தாலும், உட்சாலை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.
இதுதவிர, கழிவுநீர் வெளியேற்றுவதற்கேற்ப நகரத் திட்டமிடல் இல்லை. பாதாளச் சாக்கடைத் திட்டமோ அல்லது கழிவுநீர் வெளியேற்ற ஏற்பாடுகளோ உடனடித் தேவையாக இல்லாவிட்டாலும் நாளடைவில் இதன் முக்கியத்துவம் உணரப்படும். ''பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நோய் பரப்புகிறது. கொசு மருந்துகூட அடிப்பது கிடையாது'' என்றார் பூந்தண்டலம் எம்.சக்திவேல்.
வாழ்க்கை வசதிகள்!
புறநகர்தான் என்றாலும் எந்த ஒரு அவசரத்திற்கும் நகரத்திற்கு ஓடிவரவேண்டும் என்கிற அவசியமில்லை; அடிப்படைத் தேவை சார்ந்த அனைத்து வசதிகளும் தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால், ஷாப்பிங் பிரியர்களுக்கு ஏற்ற பெரிய வணிக நிறுவனங்கள், சொகுசான வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவதற்கு பெரிய கடைகள் கிடையாது. இதுதவிர, உணவகங்கள் வசதியும் இல்லை. இந்த வசதிகளைத் தேடுபவர்கள் தாம்பரம் சார்ந்த பகுதிகளுக்குத்தான் வரவேண்டும். தரமான துணிக்கடைகள் இந்தப் பகுதியில் கிடையாது. இதற்கும் தாம்பரத்திற்கு அல்லது தி.நகருக்கு மக்கள் படையெடுக்கின்றனர். துணைப் பதிவாளர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம் போன்ற அரசு நிர்வாக வசதிகள் இந்த பகுதியிலேயே இருக்கிறது. தாசில்தார் அலுவலகம் என்றால் ஸ்ரீபெரும்புத்தூர், ஒன்றிய அலுவலகம் என்றால் குன்றத்தூர் செல்ல வேண்டும்.

விலை நிலவரம்!
பட்ஜெட்டுக்கு ஏற்ப மனை வாங்கிவிட முடியும் என்பது சாதகமான விஷயம். உடனடியாக வீடு கட்டப் போகிறோமா, இல்லை, முதலீட்டு நோக்கமா என்பதற்கு ஏற்ப திட்டமிட்டு இடங்களைத் தேர்ந்தெடுக்கலாம். மக்கள் நெருக்கமாக வசிக்கும் ஆத்தனஞ்சேரி பகுதிகளில் ஒரு சதுர அடி ரூ. 1,000 ரூபாய்க்கு மேல் இருக்கிறது. வேகமாக வளர்ந்துவரும் சிறுமாத்தூர், ஒரத்தூர், ஆரம்பாக்கம் போன்ற பகுதிகளில் சராசரியாக சதுர அடி ரூ 600 என்கிற வகையிலும் விலை நிலவரம் உள்ளது. சுற்று வட்டாரப் பகுதிகளான சாலமங்கலம், கூழாங்கல்சேரி பகுதிகளில் சதுர அடி
ரூ. 250 முதல் கிடைக்கிறது. செரப்பனஞ்சேரி, ஒரகடம் பகுதிகளில் வனத்துறை கட்டுப்பாடு பகுதிகள் இருந்தாலும், ஒரு சில இடங்களில் மனைகள் கிடைக்கின்றன. ஒரகடம் தாண்டி வாலாஜாபாத் வழியில் சேத்பட், வாரணவாசி ஏரியாக்களில் மனைகள் வாங்கலாம். ஒரகடம் கூட்ரோட்டிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியில் ஒரு சில இடங்களில் மனைகள் கிடைத்தாலும், தொழிற்பேட்டை பகுதிகளாக இருப்பதால் குடியிருப்பதற்குத் தேர்ந்தெடுப்பது நல்லதல்ல. இந்த பக்கம் வல்லக்கோட்டையில் இடங்கள் வாங்கலாம்.
பொதுவாக, மெயின் ஏரியாக்களில் புதிய மனைப் பிரிவுகள் கிடையாது. ஆனால், மறுவிற்பனை தாராளமாக நடக்கிறது. ஊருக்கு வெளியே அல்லது சில கிலோ மீட்டர் தாண்டித்தான் மனை விற்பனைக்குக் கிடைக்கின்றன.
ஏற்கெனவே போடப்பட்ட பஞ்சாயத்து அப்ரூவல் மனைகளும், டி.டி.சி.பி. அப்ரூவல் மனைப் பிரிவுகளும் கலந்து கிடைக்கின்றன. தவிர, வனப்பகுதி இடங்கள், ஏரி புறம்போக்கு இடங்களும், நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களும் சுற்றுவட்டாரத்தில் உள்ளதால் அதிகக் கவனத்துடன் மனைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
புரோக்கர்கள்!
இடம் வாங்கச் செல்பவர்கள் புரோக்கர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தெருவுக்கு பத்து புரோக்கர்களாவது இருக்கிறார்கள். ஏரியாவில் வெளியூர்காரர் ஒருவர் வந்து இறங்குகிறார் என்றால் அவரை வரவேற்பது புரோக்கராகவே இருக்கும்.

தவிர, இந்த பகுதியில் ரியல் எஸ்டேட் போட்டி நிறைந்த தொழிலாக இருப்பதால் இடம் வாங்குவதில் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். 'மிகக் குறைந்த விலை’ என்று சொன்னால், அதில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறது என்று அர்த்தம். எனவே, உஷாராக இருப்பது நல்லது.
மனைப் பிரிவுகள் தவிர, படப்பை மற்றும் ஒரகடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுக்குமாடி வீடுகளும், வில்லாக்கள் எனப்படும் தனி வீடுகள் கட்டி விற்பதும் தற்போது சூடுபிடித்து வருகிறது. அனைத்து வசதிகளும் கொண்ட தனி வீடுகள் சதுர அடி 3,500 ரூபாய் வரை படப்பையில் விலை சொல்கிறார்கள். ஒரகடம் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி வீடுகள் விலை சதுர அடி 3,100 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.
உள்கட்டமைப்பு வசதிகளில் இப்போதைக்கு சில குறைபாடுகள் இருந்தாலும் நடுத்தர மக்களின் குடியிருப்புத் தேவைகளை பூர்த்தி செய்வதில் சென்னை நகரத்திற்கு பக்க பலமாக இருக்கிறது படப்பை, ஒரகடம் பகுதிகள் என்றால் மிகையில்லை.