Published:Updated:

புறநகர் ரவுண்டு அப் அம்பத்தூர்- ஆவடி

நீரை.மகேந்திரன், படங்கள்: பா.கார்த்திக்.

புறநகர் ரவுண்டு அப் அம்பத்தூர்- ஆவடி

நீரை.மகேந்திரன், படங்கள்: பா.கார்த்திக்.

Published:Updated:
##~##

புறநகர் பகுதிகளில் மனை வாங்கி வீடு கட்டுவதற்கு உகந்த ஏரியாக்கள் எவை என கடந்த சில வாரங்களாக நாணயம் விகடனில் தொடர்ந்து எழுதி வருகிறோம். இந்த வாரம் சென்னையை அடுத்துள்ள அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் நிலவரம் இதோ:

அம்பத்தூர் எஸ்டேட் தொடங்கி அம்பத்தூர் ஓ.டி. (பழைய நகரம்), ஆவடி, கன்னம்பாளையம், கோவில்பதாகை, மேல்பாக்கம், பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயில், ஆவடி- பூந்தமல்லி சாலை என வளர்ந்துவரும் பகுதிகளைச் சுற்றி வந்தோம். புறநகர் விரிவாக்கப் பகுதிகளாக வேகமான வளர்ச்சி வேலைகள் நடந்துகொண்டிருந்தாலும், போதுமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது பெரிய குறையாகவே உள்ளது. சாலைப் போக்குவரத்து மிக மோசமான அளவில் உள்ளது. புழுதி பறக்கும் குறுகிய சாலைகள், கனரக வாகனப் போக்குவரத்து, ஆமை வேகத்தில் நடந்துவரும் பாதாளச் சாக்கடைத் திட்ட வேலைகள் என பல குறைபாடுகளும் இந்தப் பகுதியின் வேகமான வளர்ச்சிக்கு முக்கிய தடை களாக உள்ளன. ரயில் மார்க்கமாக இந்தப் பகுதிக்குச் சென்றடையும் வசதி பாசிட்டிவ்-ஆன விஷயமாக  இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்தப் பகுதிகளில் குடியேறுவது மற்றும் முதலீடு செய்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் இதே பகுதியில் தொழில் செய்பவர்கள் அல்லது பணியாற்றுபவர்கள்தான். வெளிப்பகுதி ஆட்கள் அதிகம் இந்தப் பக்கம் வருவதில்¬லை. தவிர, பூந்தமல்லியிலிருந்தும் மக்கள் ஆவடி பக்கம் குடியேறி வருகிறார்கள்'' என்றார் சி.கே. கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் சுரேஷ். நிலத்தடி நீர் சிக்கல் கிடையாது என்றாலும், அம்பத்தூரில் நீர் மாசுபாடு இருக்கிறது. இந்தப் பகுதியில் அப்ரூவல் ப்ளாட்கள் அதிகமில்லை. பட்டா நிலங்களை மனைப் பிரிவாக விற்பனை செய்வது அதிகம் நடக்கிறது.

புறநகர் ரவுண்டு அப் அம்பத்தூர்- ஆவடி

அம்பத்தூர்!

அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையத்தி லிருந்தே தொடங்கிவிடுகிறது அடுக்குமாடிக் குடியிருப்புகளின் ஆதிக்கம். சுற்றிலும் சிறிய பெரிய தொழிற்சாலைகள் இருந்தாலும் குடியிருப்பு மனைகள், தனிவீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் என மக்கள் தேவைக்கேற்ப வாங்குவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அத்திப்பட்டு, குப்பம், அயப்பக்கம் பகுதிகளில் மறுவிற்பனை மனைகள் கிடைக்கின்றன. தனி வீடு கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இருக்கின்றன. இதுதவிர, அடுக்குமாடி வீடுகளும் வசதிக்கு ஏற்ப கிடைக்கும். எம்.டி.ஹெச். சாலை வழியே இடதுபக்கமாக சில பகுதிகளில் மனைகள் கிடைக்கின்றன.

திருமுல்லைவாயில்!

புறநகர் ரவுண்டு அப் அம்பத்தூர்- ஆவடி

ஆவடிக்கு முன் உள்ள திருமுல்லைவாயில் மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் பகுதியாக இருக்கிறது.  தொழிற்சாலைகள் அதிகம் இல்லாத தால் மக்கள் இங்கு வசிப்பதை விரும்புகின்றனர். இங்கு  சூலாம்பேடு, அன்னனூர், ரெட்டியார் பாளையம் பகுதிகளில் மறுவிற்பனை மனைகள் தாராளமாகக் கிடைக்கின்றன.

ஆவடி!

ஆவடியை மையமாக வைத்து சுற்றினால் கோவில்பதாகை, கன்னிகாபுரம், பருத்திப்பட்டு, கன்னபாளையம், மேல்பாக்கம் பகுதிகளில் மனைகள் வாங்கிவிட முடியும். இந்தப் பகுதி களில் மறுவிற்பனை என்கிற வகையிலும், புது மனைப் பிரிவுகளும் கிடைக்கிறது. குறிப்பாக, கோவில்பதாகை, கன்னிகாபுரம் பகுதிகளில் மனைகள் முதலீடு நோக்கில் வாங்கலாம். இந்தப் பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகள் தவிர, பட்டா நிலங்களை மனைப் பிரிவுகளாகப் பிரித்து விற்பனை செய்வதும் ஜரூராக நடக்கிறது. இங்கு உடனடியாக வீடு கட்டிப் போகவும், முதலீடு நோக்கிலும் வாங்கலாம்.

புறநகர் ரவுண்டு அப் அம்பத்தூர்- ஆவடி

கன்னபாளையம், மேல்பாக்கம் பகுதிகளில் புது மனைப் பிரிவுகளைப் பார்க்க முடிகிறது. முதலீடு நோக்கில் இந்த இடங்களை வாங்கிப் போடலாம். தவிர, இந்தப் பகுதிகளில் ஒரு சில பழைய மனைப் பிரிவுகளில் அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனை செய்வதும் நடக்கிறது. பல பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்ட வேலைகள் முடிக்கப்படாமல் குண்டும்குழியுமாக உள்ளன. ஒரு சில ஆண்டுகளில் நிலவரம் சரியாகும் என நம்பலாம்.

ஆவடி - பூந்தமல்லி சாலை!

ஆவடியிலிருந்து பூந்தமல்லி செல்லும் வழியில் உள்ள பருத்திப்பட்டு, கோவர்த்தனகிரி, சீனிவாசன் நகர் போன்றவைதான் தற்போது ஹாட் ஸ்பாட்டாக உள்ளன. மனைகள் மறுவிற்பனை என்கிற வகையில் உள்ளது. பெரிய பெரிய கட்டுமான நிறுவனங்களின் அடுக்குமாடிக் குடியிருப்பு வேலைகள் வேகவேகமாக நடந்துவருகிறது. அம்பத்தூர், ஆவடி சார்ந்து பணியாற்றுபவர்கள் மட்டுமல்ல, பூந்தமல்லி பக்கமிருந்தும் மக்கள் இந்தப் பகுதிகளில் வீடு வாங்குவதாகச் சொல்கின்றனர்.

ஆவடியை ஒட்டியுள்ள கோவில்பதாகைத் தாண்டி வெள்ளனூர், வீராபுரம் பகுதிகளில் புது மனைப் பிரிவுகளில் முதலீட்டு நோக்கில் இடங்கள் வாங்கலாம். இது தவிர, ஆவடி நகர் பகுதிகளில் அனைத்து வசதிகளும்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களில் வீடுகள் வாங்கலாம்.

பட்டாபிராம் - திருநின்றவூர்!

ஆவடிக்கு அடுத்து வீடோ - மனையோ வாங்குவதற்கு ஏற்ற இடமாக பட்டாபிராம் முதல் திருநின்றவூர் வரை ரயில் மார்க்கத்துக்கு அருகில் உள்ள இடங்களைப் பார்க்கலாம். ஆனால், திருநின்றவூர் வரை இடங்கள் மறுவிற்பனை என்கிற வகையில்தான் உள்ளது. பட்டாபிராம் பகுதிகளில் இந்துக் கல்லூரி, நெமிலிச்சேரி, ஜெயா இன்ஜினீயரிங் கல்லூரி ஏரியாக்களில் அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளில் இடங்கள் கிடைக்கின்றன. உள்ளடங்கிய பல பகுதிகளுக்கு போக்குவரத்து வசதிகள் கிடையாது என்றாலும் ஷேர் ஆட்டோக்கள் கிடைக்கிறது.  திருநின்றவூர் - பெரியபாளையம் சாலை, பலவேடு பகுதிகளில் புதிய மனைப் பிரிவுகளில் முதலீட்டு நோக்கில் வாங்கலாம்.

எச்சரிக்கை பகுதிகள்:

புறநகர் ரவுண்டு அப் அம்பத்தூர்- ஆவடி

பொதுவாக அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் வரை எந்த இடமாக இருந்தாலும் வீடு கட்ட திட்டமிடுபவர்கள் அஸ்திவாரத்தை உயர்த்திக் கட்டுவது புத்திசாலித்தனம். மழைக் காலங்களில் நீர் தேங்குவது ஒரு காரணம் என்றால், சுற்றுவட்டாரங்களில் உள்ள ஏரிகளில் நீர்தேக்கம் அதிகரித்தால் வெள்ளநீர் தேங்குவதற்கும் வாய்ப்புள்ளது. நீர்த்தேக்கங்களுக்கு அருகில் இடம் வாங்கும்போது கவனம் தேவை.

அடிப்படை வசதிகள்!

மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தேவைக்கேற்ப கிடைக்கிறது. மருத்துவம், கல்வி, போக்குவரத்து மற்றும் பிற அடிப்படை வசதிகளுக்கு எந்தக் குறைவுமில்லை. பொதுவாக அம்பத்தூர், ஆவடி சார்ந்து வாடகை வீட்டில் வசிக்கும் நடுத்தர மக்களே இந்தப் புறநகர் பகுதிகளில் அதிகமாக, சொந்தமாக மனையோ, வீடோ வாங்குவது நடக்கிறது. அந்த வகையில் சென்னை நகரத்திலிருந்து இடம்பெயர்பவர்களை இந்தப் பகுதிகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism