Published:Updated:

புறநகர் ரவுண்டு அப்

பூந்தமல்லி... கிடுகிடு வளர்ச்சி! நீரை.மகேந்திரன், படங்கள்: பா.கார்த்திக்.

புறநகர் ரவுண்டு அப்

பூந்தமல்லி... கிடுகிடு வளர்ச்சி! நீரை.மகேந்திரன், படங்கள்: பா.கார்த்திக்.

Published:Updated:

ரியல் எஸ்டேட்

##~##

சென்னையின் நான்கு புறங்களிலும் ரவுண்டு அடித்து ரியல் எஸ்டேட் நிலவரங்களைத் தந்துவரும் இந்தத் தொடருக்காக இந்த வாரம் பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வந்தோம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையை ஒட்டி வேகமாக வளர்ந்துவரும் குடியிருப்புப் பகுதியாகவும், தொழில்துறைப் பகுதியாகவும் பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மதுரவாயல் வரை பரபரப்பாக இருந்தாலும், மதுரவாயல் தாண்டியவுடன் சட்டென புறநகர்ப் பகுதியாக அடையாளம் கண்டுவிட முடிகிறது. வானகரம், வேலப்பன்சாவடி பகுதிகளில் தற்போது அடுக்குமாடிக் குடியிருப்புகள் வளர்ந்து வருகிறது.

எந்நேரத்திலும் போக்குவரத்து வசதி என்பது இந்தப் பகுதிகளின் முக்கியமான பிளஸ் பாயின்ட். இதுதவிர, அரைமணி நேரத்திற்குள் கோயம்பேடுக்கு வந்துவிடலாம். தற்போது வேகமாக வளர்ந்துவரும் பறக்கும் ரயில் சேவைத் திட்டம் முடிந்தால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அது மிகப் பெரிய வரமாக இருக்கும்.

புறநகர் ரவுண்டு அப்

பூந்தமல்லி பகுதி தவிர, கோவூர், குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதி களையும் சேர்த்தே சுற்றி வந்தோம். சில ஆண்டுகள் வரை அச்சு அசலான கிராமமாக அடையாளம் மாறாமல் இருந்த இந்தப் பகுதிகளும் தற்போது அடுக்குமாடி வீடுகளாக வளர்ச்சி கண்டுள்ளது. சென்னை டு தாம்பரம் புற வழிச்சாலையை ஒட்டியுள்ள இந்தப் பகுதிகள் கிடுகிடுவென வளர்ச்சி கண்டு வருகிறது. நாம் கண்டறிந்த வகையில் மைய நகரத்திற்கு வெகு அருகாமையில் வீடோ, மனையோ சொந்தமாக வாங்க நினைப்பவர்கள் இந்தப் பகுதிகளைத் தேர்வு செய்யலாம்.

கோவூர்!

போரூரிலிருந்து குன்றத்தூர் வழியில் கெருகம்பாக்கம், பெரிய பணிச்சேரி, கோவூர் வரை அடுக்குமாடி வீடுகளும், மனைகளும் கிடைக்கின்றன. சுமார் பத்து வருடங்களுக்கு முன் ஒரு கிரவுண்ட் 10,000 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று அதே இடங்கள் இரண்டு, மூன்று நபர்கள் மாறி மறுவிற்பனையில் இடத்திற்கு ஏற்பவும், ஆட்களுக்கு ஏற்பவும் விலை சொல்கிறார்கள். (கெருகம்பாக்கத்தில் கால் கிரவுண்டே 6 லட்ச ரூபாய்க்கு மேல்!) அப்ரூவல் மனை மற்றும் பட்டா நிலங்கள் என இரண்டு வகையிலும் வாங்கலாம். கோவூர் தாண்டிச் சென்றால் தண்டலம், மூன்றாம் கட்டளை பகுதிகளில் விவசாய நிலம், தோப்புகளும் வாங்கலாம்.

புறநகர் ரவுண்டு அப்

குன்றத்தூர்!

குன்றத்தூர் பகுதிகளைத் தேடிவரும் மக்கள் கூட்டம் குறைவுதான். நெருக்கமான மக்கள் குடியிருப்புகள் இருந்தாலும் சுற்றுவட்டாரத்தில் கல்குவாரிகள் நிறைந்திருப்பதால் எங்கும் தூசி மயம். முதலீட்டு நோக்கில் மனைகள் வாங்கலாம். இந்தப் பகுதிகளை ஒட்டி சிக்கராயபுரம், சிவன்தாங்கல் போன்ற இடங்களில் முதலீட்டு நோக்கில் வாங்கிப் போட்டாலும் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை என்றே சொல்லவேண்டும். எனவே, இந்தப் பகுதிகளைத் தவிர்க்கலாம்.

மாங்காடு!

புறநகர் ரவுண்டு அப்

மாங்காடும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் தற்போது வேகமான வளர்ச்சியில் உள்ளது. நெருக்கமான மக்கள் குடியிருப்புப் பகுதிகள் அதிகரித்துள்ளன. தனி வீடுகள், அடுக்குமாடி வீடு திட்டங்கள் தற்போது வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. புதிய மனைப் பிரிவுகள் இல்லை என்றாலும் மறுவிற்பனை வகையில் இடங்கள் வாங்கமுடியும். போரூரிலிருந்தும் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாகவும் வழிகள் இருப்பதால் போக்குவரத்து சிக்கல் இல்லை. பஸ் தவிர, ஷேர் ஆட்டோக்களும் மக்களின் போக்குவரத்து தேவைகளை நிறைவு செய்கிறது.

பூந்தமல்லி!

சென்னையை ஒட்டி மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் சிறப்பு நிலை நகராட்சியில் இதுவும் ஒன்று. முக்கியமாக, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் கிடுகிடு வளர்ச்சி கண்டு வருகிறது. சவீதா மருத்துவமனை அமைந்துள்ள பை-பாஸிலிருந்து தொடங்கினால் பை-பாஸ் வழியிலும், குமணஞ்சாவடி வழியிலுமாக இரண்டு வழிகளும் அடுக்குமாடி வீடுகளின் ஆதிக்கம்தான். சிறிய, பெரிய கட்டுமான நிறுவனங்கள் என போட்டிப் போட்டுக்கொண்டு அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனை செய்துவருகின்றன.

சென்னையிலும், ஸ்ரீபெரும்புதூரிலும் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பூந்தமல்லி வசதியாக இருப்பதால் இந்தப் பகுதி களைத் தேர்வு செய்யலாம்.  

ஆனால், நெடுஞ்சாலையை ஒட்டி தனி மனைகள் வாங்குவது சிரமம், என்றாலும் அடுக்குமாடி வீடுகள் வாங்கிவிட முடியும். பொதுவாக, சாலையோரம் உள்ள பகுதிகளில் பெரிய, பெரிய நிறுவனங்களே வீடுகள் கட்டி விற்பனை செய்கின்றன. மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்கான தேவைகளுக்கு

புறநகர் ரவுண்டு அப்

இந்தப் பகுதிகளில் குறைவில்லை. அருகருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை களில்கூட உயர்தர மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளும் வசதிகள் உள்ளன. போக்குவரத்துச் சிக்கல்களும் கிடையாது.  

திருமழிசை!

பூந்தமல்லியைத் தாண்டினால் மக்கள் வசிப்பதற்கு உகந்தப் பகுதியாக திருமழிசை பகுதி இருக்கிறது. இந்தப் பகுதிகளை ஒட்டிய இடங்களில் முதலீட்டு நோக்கிலும் வாங்கிப் போடலாம். ஆனால், இந்தப் பகுதிகளை ஒட்டி செம்பரம்பாக்கம், குத்தாம்பாக்கம், நரசிங்கபுரம், வெள்ளவேடு பகுதிகளை உள்ளடக்கி ஏற்கெனவே சாட்டிலைட் டவுன்ஷிப் தொடங்க அரசு அறிவிப்பு உள்ளதால், இப்பகுதிகளில் இடங் களைப் பார்த்து வாங்குவது நல்லது.

இந்தப் பகுதிகளிலும் மனைப் பிரிவுகளும் இல்லை என்றே சொல்லலாம். திருமழிசை பேருந்து நிலையம் தாண்டி திருவள்ளூர் வழியில் புதுச்சத்திரம் வரை சில இடங்களில் புதிய மனைப் பிரிவுகள் உள்ளன. இந்தப் பகுதிகள் இப்போதுதான் மெள்ள வளர்ந்து வருகிறது. வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளில் வேகமெடுக்கலாம்.

கவனிக்க வேண்டியவை!

இந்தப் பகுதிகளின் ரியல் எஸ்டேட் துறை அபரிமிதமான வளர்ச்சியாக இருக்கிறது. பூந்தமல்லி வழியில் கனரக வாகனப் போக்குவரத்தும், போக்குவரத்து நெரிசலும் மக்களுக்கு நெருக்கடிகள் என்று சொல்லலாம். கோவூரை ஒட்டி பை-பாஸ் சாலை வழியிலும், குமணஞ்சாவடி பகுதிகளிலும் தினசரி குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்த விஷயத்தில் பெரிய கட்டுப்பாடுகள் இல்லையென்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகச் சொல்கின்றனர். எனவே, இதுபோன்ற இடங்களைத் தவிர்க்கவும்.

பொதுவாக கோவூர், மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி, திருமழிசை என நாம் சுற்றிவந்த பகுதி களின் பல ஏரியாக்களில் மழை நீர் தேங்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. சில இடங்களில் ஏரியை ஒட்டி குடியிருப்புப் பகுதிகள் இருந்ததையும் பார்க்க முடிந்தது. விவசாய நிலங்களே மனைப் பிரிவுகளாக உருமாற்றம் அடைந்துள்ளதால் வீடு கட்டுபவர்கள் அஸ்திவாரத்தை உயர்த்திக் கட்டுவது நல்லது. பொதுவாக, இந்தப் பகுதி மக்களுக்கு சாலை போக்குவரத்து சிறப்பாக இருந்தாலும் ரயில் வசதி இல்லாதது குறையாகவே இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism