ரியல் எஸ்டேட்
##~## |
புறநகரில் உடனடியாக வீடு கட்டி குடியேறுவதற்கு ஏற்ற பகுதிகள் எவை என்று சொல்லும் இத்தொடரில், இந்த வாரம் நாம் சுற்றிவந்தப் பகுதி வடசென்னை மற்றும் அதைச் சார்ந்தப் பகுதிகள். இதனுடன் மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம் போன்ற பகுதிகளை எடுத்துக்கொண்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மாதவரம், ஆண்டார்குப்பம், விம்கோ நகரிலிருந்து பயணமானோம். சென்னை துறைமுகம், எண்ணூர் அனல் மின் நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் இந்தத் தொழில்கள் சார்ந்த துணைத் தொழில்கள், சரக்கு குடோன்கள், கனரக வாகனப் போக்குவரத்து என இந்தப் பகுதிகள் எப்போதும் நெருக்கடி மிகுந்தும், பரபரப்பாகவுமே இருக்கிறது. என்றாலும்கூட, ஒரு சில பகுதிகளில்தான் இடங்கள் வாங்குவதும் விற்பதும் நடக்கிறது. வெளி ஆட்கள் இந்தப் பகுதிகளில் இடம் வாங்குவது இல்லை என்றாலும் தேவைக்கேற்ப அந்தந்தப் பகுதி வாசிகளுக்கு கைமாறி வருகிறது.
ஆண்டார்குப்பம், மணலி புதுநகர், வெள்ளிவாயல்சாவடி வரை என மீஞ்சூர் வழியில் மக்கள் குடியிருப்பு நிறைந்த ஒரு சில பகுதிகளில் மனைகள் கிடைக்கின்றன. இந்தப் பகுதிகளின் சுற்று வட்டாரங்களிலும் பெரிய பெரிய லாஜிஸ்டிக் நிறுவனங்களின் குடோன்கள் அமைந்துள்ளதால் கனரக வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கிறது. புறநகர்ப் பகுதிகள் என்று பார்த்தால், இந்தப் பகுதிகள் மிக அருகாமையில் இருந்தாலும், வெளியிலிருந்து இந்தப் பகுதிகளில் இடம் வாங்கிப் போடுவதோ, புதிதாக வீடு கட்டுவதோ இல்லை என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.

மீஞ்சூர்!
ரயில் போக்குவரத்து சிறப்பாக இருப்பதால் மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை தற்போது நடுத்தர மக்கள் தேடி வாங்குகின்றனர். பொதுவாக, ரயில் நிலையங்களை ஒட்டியப் பகுதிகள் அதிக விலைக்கும், கொஞ்சம் உள்ளடங்கியப் பகுதிகள் குறைவான விலைக்கும் விற்பனையாகின்றன. வசதிக்கு ஏற்ப புதிய புதிய மனைப் பிரிவுகளும், பழைய மனைப் பிரிவுகளும் இந்தப் பகுதிகளில் விலை மற்றும் வசதிக்கு ஏற்ப கிடைக்கிறது.
இந்த வகையில் அத்திப்பட்டு புதுநகர், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம் போன்ற பகுதிகளில் மனைகள் தாராளமாகக் கிடைக்கிறது. ரயில் நிலையங்களை ஒட்டியப் பகுதிகள் தற்போது வேகமாக குடியிருப்புப் பகுதிகளாக வளர்ச்சி கண்டுவருகிறது. முதலீட்டு நோக்கில் வாங்கினாலும் சில ஆண்டுகளுக்குள் வளர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. மேலூர், சீமாவரம், மீஞ்சூர் பகுதிகளில் குடியிருப்பு ஒட்டி உடனடியாக வீடு கட்ட வசதியான இடங்களும் கிடைக்கிறது.
இது தவிர, நெய்தவயல், வாயனூர், காட்டூர் என மீஞ்சூர் ஒட்டிய கிராமப்புறப் பகுதிகளிலும் புதிய மனைப் பிரிவுகள் அதிகமாக உள்ளன. ரயில் நிலையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் தூரமாக இருந்தாலும் முதலீட்டு நோக்கில் இங்குள்ள மனைப் பிரிவுகளில் முதலீடு செய்வதும் நடக்கிறது. இதுதவிர, ரயில் போக்குவரத்து வசதிக்கு ஏற்ப அனுப்பம்பட்டு, பொன்னேரி, கவரப்பேட்டை என ரயில் பாதையின் இரண்டு பக்கமும் மனைப் பிரிவுகள் உள்ளன.

அடிப்படை வசதிகள்:
ரயில் போக்குவரத்தை மட்டும் நம்பி மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை தேர்ந்தெடுக்கலாம். சாலை மார்க்கமாக வசதியும் சிறப்பாக இருந்தாலும், கனரக வாகனப் போக்குவரத்து, போக்குவரத்து நெருக்கடி மற்றும் எப்போதுமே நிலவிவரும் தூசு, புகை போன்றவை சிக்கலாக இருக்கின்றன. அவசர உதவி மற்றும் அடிப்படை தேவைகளுக்கு மீஞ்சூர்தான்.
மருத்துவம் மற்றும் மேலதிக நுகர்வோர் தேவைகளுக்கு சுமார் 20 கி.மீ தூரத்திலிருக்கும் திருவொற்றியூர்தான் வரவேண்டும். இதுதவிர, ரயில் நிலையத்திலிருந்து நான்கைந்து கிலோ மீட்டர் உள்ளடங்கிய பகுதிகள் என்றால் இரண்டு சக்கர வாகனத்தையே நம்பியிருக்கவேண்டும்.
''பொதுவாக சென்னை புறநகர் என்கிறபோது சென்னையின் தென்பகுதிகள் வளர்ந்த அளவுக்கு சென்னையின் வடபகுதிகள் வளரவில்லை. இந்தப் பகுதிகளில் இடம் வாங்குபவர்கள்கூட இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்தானே தவிர, வெளியிடங்களிலிருந்து இங்கு வந்து முதலீடுகூட செய்வதில்லை என்பதுதான் உண்மை'' என்றார், மீஞ்சூரில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்துவரும் கே.எஸ்.ராமானுஜம்.

அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவு என்கிற வகையிலும், பட்டா நிலங்களைப் பிரித்து விற்பனை செய்வதுமான மனைப் பிரிவுகளிலும் இடங்கள் கிடைக்கிறது.
சோழவரம் !
ஜனப்பன்சத்திரம், காரனோடை, சோழவரம் பகுதிகளில் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் பகுதிகளில் மெயின் ஏரியாக்கள் தவிர உள்ளடங்கிய கிராமங்களிலும் புதிய மனைப் பிரிவுகளைப் பார்க்க முடிகிறது.
சோழவரம் ஒட்டியப் பகுதிகளில் தற்போது பெரிய பெரிய நிறுவனங்களின் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்கள் வளர்ந்து வருகிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் வளர வளர மனைகளின் விலையும் உயர வாய்ப்புள்ளது. இந்தப் பகுதிகளில் சாலை போக்குவரத்து மிகச் சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
செங்குன்றம் !
செங்குன்றத்தை ஒட்டியுள்ள இடங்களில் மனைகள் மறுவிற்பனை என்கிற வகையில் மட்டுமே கைமாறி வருகிறது. இது தவிர, சிறிய மற்றும் பெரிய அளவிலான அடுக்குமாடித் திட்டங்களும் வேகமாக வளர்ந்து வருகிறது.
நாரவாரிக்குப்பம், எடப்பாளையம் போன்ற பகுதிகளில் இடங்கள் தாராளமாகக் கிடைக்கிறது. போக்குவரத்து வசதி மற்றும் நகர வசதிகள் அனைத்தும் கிடைப்பதால் இந்தப் பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது.
சாலைப் போக்குவரத்து இந்தப் பகுதிகளின் சிறப்பு என்று சொல்லலாம். செங்குன்றம் வரை நகர விரிவாக்கம் மற்றும் நெருக்கமாக குடியிருப்புப் பகுதிகள் வந்துவிட்டதால் அடுத்தடுத்து சோழவரம், ஜனப்பன்சத்திரம் பகுதிகள் அடுத்தடுத்து வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது. நிலத்தடி நீர்வசதி சிறப்பாக உள்ளது. மருத்துவம் மற்றும் பிற வசதிகளுக்கு செங்குன்றம் மற்றும் சென்னை நகரப் பகுதிக்குள் வந்துவிட முடியும்.