Published:Updated:

ரியல் எஸ்டேட் - வேகமெடுக்கும் வேலூர் !

ரியல் எஸ்டேட் - வேகமெடுக்கும் வேலூர் !

பிரீமியம் ஸ்டோரி
##~##

பத்து வருடங்களுக்கு முன் இருந்த வேலூருக்கும், தற்போது உள்ள வேலூருக்கும் அதிகமாகவே வித்தியாசம் இருக்கின்றது. முன்பு சீண்டுவாரற்றுக் கிடந்த வேலூரில் இன்று ரியல் எஸ்டேட் எக்ஸ்பிரஸ் வேகமெடுத்திருக்கிறது. விடுதலைக்கு வித்திட்ட வேலூர் கோட்டை, மருத்துவத்துக்கு உலகப் புகழ்பெற்ற சி.எம்.சி. மருத்துவமனை, சுற்றுலாத்தலமாகவும், ஆன்மிகத்தலமாகவும் விளங்கும் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலும் இருக்கின்றன. நகரப் பகுதியில் இடம் வாங்க முடியாது என்கிற நிலையில் புறநகர்ப் பகுதிகளில் மனை வாங்க நினைக்கும் மக்களின் எண்ணம் எப்படி இருக்கின்றது என்றும், தற்போது புறநகர்ப் பகுதிகளில் வசதிகள் இருக்கின்றதா எனவும் அறிந்துகொள்ள வேலூர் நகரின் வெளியே ஒரு ரவுண்ட் அடித்தோம்.

வேலூர் பகுதியைப் பொறுத்தவரை, சென்னை பை-பாஸ் சாலை, பெங்களூரு பை-பாஸ் சாலை, காட்பாடி, அரியூர் மற்றும் அடுக்கம்பாறை பகுதிகள் இன்றைக்குப் பலராலும் விரும்பி வாங்கப்படும் பகுதிகளாக இருக்கின்றன.

சென்னை பை-பாஸ் சாலை!

சத்துவாச்சாரியில் இருந்து துவங்கி ரத்தினகிரி வரை புறநகர்ப் பகுதி நீள்கின்றது. தண்ணீர் வசதி முதல் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு இந்தப் பகுதிதான் முக்கியத்துவம் வகிக்கின்றது. கார் மற்றும் கனரக வாகனங்களின் ஷோரூம்கள் அதிகம் கொண்ட பகுதி இது. தவிர, போக்குவரத்துக்குப் பஞ்சமில்லாத இடங்கள். வேலூர் நகருக்குள் வருவதென்றால், ஷேர் ஆட்டோ தொடங்கி அரசு மற்றும் தனியார் போக்குவரத்து எப்போதும் உள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் இங்கு நிலங்கள் அதிகம் விற்பனை ஆகிக்கொண்டு இருப்பது கூடுதல் ப்ளஸ்.

ரியல் எஸ்டேட் - வேகமெடுக்கும் வேலூர் !

பெங்களூரு பை-பாஸ் சாலை!

அதிகம் வீட்டுமனைகள் விற்பனை ஆகாதப் பகுதி. காரணம், தண்ணீர் பிரச்னை. பை-பாஸ் சாலையாக இருந்தாலும் கொணவட்டம் துவங்கி பொய்கை, பள்ளிகொண்டா வரை குறிப்பிடத் தகுந்த தொழிற்சாலைகளோ, கல்வி நிலையங்களோ இந்தப் பகுதிகளில் அதிகம் கிடையாது. இதன்காரணமாக தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும்கூட சரியான வளர்ச்சி இல்லை.

அரியூர்!

ரியல் எஸ்டேட் - வேகமெடுக்கும் வேலூர் !

வேலூர் நகரில் இருந்து சுமார் ஆறு கி.மீ தொலைவில் உள்ளது அரியூர். கல்வி நிலையங்கள்கொண்ட பகுதி. இப்போது இந்த இடங்களில் வீட்டுமனைகள் தொடர்ந்து விற்பனை ஆகிக்கொண்டு இருக்கின்றது. கிராமச் சூழலைக்கொண்ட பகுதியாகும். சாலைவசதி கொஞ்சம் சுமார்தான். தண்ணீர் வசதிகளும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றது.

அடுக்கம்பாறை!

அரசு தலைமை மருத்துவமனை உள்ள பகுதி. விவசாய பூமியைக் கொண்டது. போக்குவரத்து சிக்கல் இல்லாத இடம். தொழில் வளர்ச்சி மட்டும் இங்கு கிடையாது. கல்வி நிலையங்கள் என்றால் வேலூர் நகருக்குத்தான் வரவேண்டும். அடுக்கம்பாறையைத் தாண்டிச் சென்றால் தண்ணீர் வசதி அதிகமாகவே

ரியல் எஸ்டேட் - வேகமெடுக்கும் வேலூர் !

இருக்கும்.

காட்பாடி!

போக்குவரத்து பிரச்னை கிடையாது. காரணம், காட்பாடி ஜங்ஷன் இங்கு உள்ளது. காட்பாடியில் இருந்து சித்தூர் சாலை ஒரு பகுதியாகவும், திருவலம், வள்ளிமலை சாலை வேறு பகுதியாகவும் இருக்கின்றது. ஒருபுறம் நகரத்துக்கு ஈடாக இந்தப் பகுதி வளர்ந்து வந்தாலும், மறுபுறம் விவசாயமும் இந்தப் பகுதியில் இருக்கின்றது. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் காட்பாடி அடுத்த சேர்காட்டில் அமைந்துள்ளது. காட்பாடியில் இருந்து சுமார் 8 கி.மீட்டரில் ஆந்திர எல்லை இருக்கின்றது. காட்பாடியில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையும் விவசாய பூமிதான். இயற்கைச் சூழ்ந்த சூழ்நிலையில் வசிக்க விரும்புகிறவர்கள் இந்தப் பகுதியில் ஒரு சுற்று சுற்றலாம்.  

நெகட்டிவ், பாசிட்டிவ்கள்!

முதலீடு நோக்கத்தில் மனைகள் வாங்க விரும்புபவர்கள் பெங்களூரு சாலையில் வாங்கத் தேவையில்லை. ஏனெனில், அங்குள்ள சில இடங்கள் பட்டா இல்லாதவை. அடுக்கம்பாறையில் இருந்து பென்னாத்தூர் செல்லும் சாலையில் முறையான போக்குவரத்து வசதி கிடையாது. ஆனால், தண்ணீர் வசதி உள்ள ஏரியா. இருப்பினும் ஏரிகள் அதிகம் உள்ள பகுதிகளை ஒட்டி வீட்டுமனைகள் வருவதால் பார்த்து வாங்குவது நல்லது.

இப்போது உள்ள நிலையில் சத்துவாச்சாரி முதல் ரத்தினகிரி வரை ஒட்டிய இடங்கள் நல்ல விலைக்குப் போய்க்கொண்டு இருக்கின்றது. முதலீட்டுக்கும், வீட்டுமனைக்கும் ஆசைப்படாமல் விவசாயம் செய்ய நினைப்பவர்கள் காட்பாடி டு வள்ளிமலைப் பகுதிகளில் விவசாய நிலங்களை வாங்கலாம். அணைக்கட்டு பகுதிகளில் தண்ணீர் பிரச்னை உள்ளது. எனவே, அங்கு வாங்கும்போது பார்த்து வாங்குவது அவசியம். கல்வி நிலையங்களை ஒட்டி வாங்க நினைப்பவர்கள் திருவலம் செல்லும் சாலையில் உள்ள வீட்டு மனைகளை வாங்கலாம்.  

- ஏ.சசிகுமார்,
படங்கள்: ச.வெங்கடேசன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு