ஆசிரியர் பக்கம்
நடப்பு
Published:Updated:

நெஞ்சை அள்ளும் தஞ்சை!

பானுமதி அருணாசலம், படங்கள்: குணசீலன்.

ரியல் எஸ்டேட்

##~##

வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முன்னணியில் இருக்கிறது தஞ்சாவூர். கடந்த பத்து வருடங்களில் கிடுகிடுவென வளர்ச்சி கண்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா, பிரிஸ்ட், பெரியார் மணியம்மை, கிங்ஸ் போன்ற பல்கலைக்கழகங்களும், சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட கல்லூரி களும் இருப்பதால் தஞ்சாவூர் இப்போது ஒரு கல்வி நகரமாக உருவெடுத்துள்ளது. தவிர சுற்றுலா, மருத்துவம் போன்றவற்றில் தஞ்சாவூர் கண்டு வரும் வளர்ச்சிகளால் நகரம் தற்போது விரிவடைந்து வருகிறது. இதன்காரணமாக புறநகரப் பகுதிகள் பலவும் மளமளவென குடியிருப்புகளாக மாறி வருகின்றன. குறிப்பாக, நான்கு திசைகளிலும் பரந்துவிரியும் தஞ்சையின் புறநகரப் பகுதிகள் எவையெவை ஹாட் ஸ்பாட்டுகளாக இருக்கின்றன என்பதைப் பார்க்க ஒரு ரவுண்டு அடித்தோம்.  

தஞ்சையே சிறிய நகரம்தான். இதில் புறநகர்ப் பகுதி விறுவிறுவென வளர என்ன காரணம்?

கிராமத்தில் சொந்தமாக நிலம், வீடு இருந்தாலும், குழந்தைகளின் படிப்பு மற்றும் வேலை நிமித்தமாகவும்;  நகரத்தில் வீடு இருந்தால் நல்லது என நினைக்கும் நடுத்தர மக்கள் அதிகரித்து வருவதும் இந்த வளர்ச்சிக்கு அடிப்படை காரணம் என்கின்றனர் மக்கள். மேலும், நகரத்திற்குள் இடம் வாங்கவேண்டும் என்றால் சதுர அடி 2,500 முதல் 3,000 ரூபாய் வரை விலை இருப்பதால் புறநகரப் பகுதிகள் வளர்ந்து வருகிறது என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள்.

வல்லம் !

தஞ்சாவூர் - திருச்சி சாலையில் சாஸ்த்ரா, அடைக்கலமாதா, பெரியார் மணியம்மை, மருதுபாண்டியர் உள்ளிட்ட பல கல்லூரிகள் இருப்பதால் பரபரப்பான பகுதியாக இருக்கிறது. மேலும், மாதாகோட்டை, வஸ்தாசாவடி பகுதிகளில் தற்போது புதிதாக மனைகள் கிடைப்பதில்லை. வஸ்தாசாவடியில் இருந்து வல்லம் வரை குடியிருப்புகள் நெருக்கம் இல்லை என்றாலும், மாவட்ட ஆட்சியரகம் கட்டப்பட்டு வருவதால் இன்னும் சில ஆண்டுகளில் இந்த இடைப்பட்ட பகுதியில் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.

நெஞ்சை அள்ளும் தஞ்சை!

வல்லம் பகுதியைச் சுற்றியுள்ள பல இடங்களும் முதலீட்டு நோக்கில் ஏற்கெனவே கைமாறியுள்ள இடங்கள்தான் என்பதால் தற்போது மறுவிற்பனை என்கிற வகையில்தான் வாங்க முடியும். வல்லம் புறவழிச்சாலை பகுதிகளில் தற்போதைய விலையில் வாங்கினால் முதலீட்டு நோக்கில் கைகொடுக்கும். உடனடியாக வீடு கட்டத் திட்டமிடுபவர்கள் மருத்துவக் கல்லூரியிலிருந்து வல்லம் வழியில் பிள்ளையார்பட்டி கிராமம் வரை உள்ள ஏரியாக்களில் இடங்கள் பார்க்கலாம்.  

இதுதவிர, திருச்சி சாலையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், செங்கிப்பட்டி வரை மனைப் பிரிவுகள் அதிகரித்துள்ளன. இந்தப் பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகரித்துவருவதால் எதிர்காலத்தில் நல்ல மதிப்பு இருக்கும் என்று சொல்லலாம். ஆனால், நிலத்தடிநீர் பிரச்னை இருப்பதால் குடியிருப்பதற்கு ஏற்ற பகுதிகளாக இல்லை என்றே சொல்லவேண்டும்.  

குறிப்பாக, வல்லம் தாண்டி சாலை வழியில் 400-500 ரூபாய் விலையிலும், ஒரு கிலோ மீட்டர் உள்ளடங்கிய கிராமங்களில் சதுர அடி 100 ரூபாய் விலைக்குள்ளும் இடம் வாங்கிவிட முடியும். புதுக்கோட்டை சாலை கிங்ஸ் கல்லூரி, புதிதாக வந்துள்ள வித்யாபவன் பள்ளி என இந்தப் பகுதியும் வளர்ச்சி கண்டுவருகிறது. ஆனால், விமானப்படை மைதானம் தாண்டிதான் இடம் வாங்க முடியும் என்பதால் வஸ்தாசாவடியிலிருந்து இரண்டு மூன்று கிலோ மீட்டர் தாண்டிதான் இடம் கிடைக்கும். தவிர, நிலத்தடிநீர், அமைதியான சுற்றுச்சுழல் போன்றவை இந்தப் பகுதியில் இடங்களை வாங்க வைக்கும். தற்போது சதுர அடி 400 ரூபாய், 500 ரூபாய் என்கிற ரேஞ்சில் விலை நிலவுகிறது.

நெஞ்சை அள்ளும் தஞ்சை!

பள்ளி அக்ரஹாரம் !

கரந்தை வரையிலும் இருக்கும் நகர நெருக்கடியிலிருந்து விடுபட்டு இரண்டு, மூன்று கிலோ மீட்டர்

நெஞ்சை அள்ளும் தஞ்சை!

பயணித்தால் பள்ளி அக்ரஹாரம் வந்துவிடுகிறது. புறநகர வளர்ச்சி வளர்ந்துவரும் பகுதி மட்டுமல்ல, தஞ்சை ரியல் எஸ்டேட் தொழிலின் பீக் ஏரியா என்றால் இந்தப் பகுதிதான். குறிப்பாக, கும்பகோணம் மற்றும் அரியலூர் சாலை பிரிகின்ற ஏரியாவில் விலை சகட்டுமேனிக்கு இருக்கிறது. இதுதவிர, அரியலூர் வழியில் பைபாஸ் வரை குடியிருப்புகளும் ஏராளமான மனைப் பிரிவுகளும் வந்துவிட்டன. அம்மன்பேட்டை வரை புறநகர வளர்ச்சி இருந்தாலும், திருவையாறுவரை இடம் கிடைக்கிறது.

பள்ளி அக்ரஹாரத்திலிருந்து கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டை வரை மனைப் பிரிவுகள் இருந்தாலும் குடியிருப்பு வளர்ச்சிகள் அதிகமாக இல்லை. என்றாலும், உடனடியாக வீடு கட்டத் திட்டமிடுபவர்கள் அய்யம்பேட்டை ஏரியாவை முதலில் ஒரு ரவுண்டு சுற்றிப் பார்க்கலாம். இதுதவிர, பைபாஸ் சாலையை ஒட்டிய இடங்களில் மனைகள் தாராளமாகக் கிடைக்கிறது. நிலத்தடி நீர் சிக்கல் இல்லை என்றாலும், மழைக்காலங்களில் நீர்த் தேங்க வாய்ப்புகள் உள்ளது. இடத்தைப் பொறுத்து

நெஞ்சை அள்ளும் தஞ்சை!

இந்தப் பகுதிகளில் சதுர அடி 250 முதல் 700 வரை விலை போகிறது.

பட்டுக்கோட்டை சாலை !

கீழ வஸ்தாசாவடி வரை நகரம் நெருக்கம் அதிகரித்துவிட்டது என்பதால் தற்போது அதைத் தாண்டியும் நகரம் விரிவடைந்து வருகிறது. குறிப்பாக, பிரிஸ்ட் பல்கலைக்கழகம் சுற்றியுள்ள பகுதிகள் தற்போது வளர்ந்து வருகிறது. இங்கிருந்து பட்டுக்கோட்டை சாலை, மன்னார்குடி சாலை வழியிலும் ஒரு சில இடங்களில் மனைப் பிரிவுகள் உள்ளன. பொதுவாக இந்தப் பகுதிகளில் ரியஸ் எஸ்டேட் வளர்ச்சி அவ்வளவாக இல்லை. உடனடியாக இடம் வாங்கி வீடு கட்டத் திட்டமிடுபவர்கள் இந்தப் பகுதிகளைத் தேர்வு செய்யலாம்.  

இதுதவிர, தஞ்சையைச் சுற்றியுள்ள நாஞ்சிக்கோட்டை, ரெட்டிப்பாளையம், விளார் போன்ற பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் தொழில் ஜரூராக இருக்கிறது. மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகள் என்பதால் மனை விலை இடத்துக்கு ஏற்ப இருக்கும். மேலும், மினி பஸ் போக்குவரத்து இந்தப் பகுதிகளுக்கு உள்ளதால் மக்கள் விரும்பி வாங்கும் இடங்களாக உள்ளது. பொதுவாக, புறநகரப் பகுதிகளைப் பொறுத்தவரை கிராமப்பகுதிகள் என்பதால் எந்த ஒரு அடிப்படைத் தேவைக்கும் நகரத்திற்குத்தான் வரவேண்டும்.  சுற்றுச்சூழல், குடிநீர் போன்ற விஷயங்களில் தஞ்சை புறநகரப் பகுதிகளில் சிக்கல் இருக்காது.