Published:Updated:

வண்டலூர் புதிய பேருந்து நிலையம்...

ரியல் எஸ்டேட் என்ன ஆகும்? நீரை.மகேந்திரன். படங்கள்: ப.சரவணகுமார்.

வண்டலூர் புதிய பேருந்து நிலையம்...

ரியல் எஸ்டேட் என்ன ஆகும்? நீரை.மகேந்திரன். படங்கள்: ப.சரவணகுமார்.

Published:Updated:
##~##

தமிழ்நாட்டின் பெருவாரியான மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு நுழைவு வாயிலாக இருப்பது வண்டலூர்தான். அந்த வகையில் சென்னையின் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்க, வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசாங்கம் முடிவு செய்தது சரியான முடிவே. ஆனால், அறிவிப்பு வந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், திட்டம் தொடங்குவதற்கான அறிகுறி ஏதும் தெரிகிறதா என்பதை அறிய அந்த ஏரியாவில் ஒரு ரவுண்டு அடித்தோம்.  

376 கோடி ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 65 ஏக்கர் நிலப்பரப்பில் வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க திட்ட மிட்டுள்ளது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ). ஜி.எஸ்.டி. சாலையிலிருந்து வாலாஜாபாத் செல்லும் வழியில் இதற்கான இடத்தைத் தேர்வு செய்திருக்கிறார்கள் அரசு அதிகாரிகள். ஆனால், இந்த இடம் பக்கா விவசாய நிலம் என்பதால் விவசாயிகள் எதிர்ப்பு காட்டத் தொடங்கி இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவசாயிகளின் எதிர்ப்புக்கு இன்னொரு முக்கிய காரணம், அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ள நிலத்தின் மதிப்பு. தற்போதைய சந்தை நிலவரப்படி, அந்த ஏரியாவில் ஓர் ஏக்கர் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் மேல் விலை போகிறதாம். ஆனால், அரசு தரப்பில் இழப்பீடு ஓர் ஏக்கருக்கு 1.75 கோடி ரூபாய் என்கிற அளவில் இருக்கிறதாம். பாதி விலைக்கு நிலத்தை விற்க நாங்கள் என்ன பைத்தியமா என்று ஆவேசமாக கேட்கிறார்கள் நிலத்துக்கு சொந்தக்காரர்களான விவசாயிகள்.

இந்நிலையில் இத்திட்டம் ஜரூராகத் தொடங்கப்படுமா, இல்லை அறிவிப்போடு நின்றுவிடுமா என்கிற சந்தேகம் ஒரு சிலருக்கு வந்திருக்கிறது. காரணம், கடந்த காலத்தில் வந்த மாதவரம் புறநகர பேருந்து நிலையம், வேளச்சேரி புறநகர பேருந்து நிலையம் போன்ற அறிவிப்புகள் இன்றும் அறிவிப்புகள் என்கிற நிலையிலேயே உள்ளன. இதில், வேளச்சேரி பேருந்து நிலையத் திட்டம் கூடிய விரைவில் கைவிடப்படலாம் என்கிற பேச்சும் இருக்கிறது.

வண்டலூர் புதிய பேருந்து நிலையம்...

திட்டம் வருமா, எப்போது வரும் என பல கேள்விகள் பலர் மனதில் இருந்தாலும் அரசின் இந்த அறிவிப்பால், இந்த பகுதியில் ரியல் எஸ்டேட் விற்பனை ஏகத்துக்கு சூடு பிடித்துவிட்டது. இத்திட்டம் பற்றிய அறிவிப்பு வந்தவுடன் நிலத்தின் விலையும் உயரத் தொடங்கிட்டது.

''இத்திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையைப் பொறுத்து விலை நிலவரத்தில் இன்னும் பெரிய மாறுதல் இருக்கும். ஏற்கெனவே கட்டப்பட்டு வரும் அடுக்குமாடித் திட்டங்களின் விலை இதுவரை உயர்த்தப்படவில்லை. ஆனால், நிலத்தின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது'' என்றார் இந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் அன்னை ரியல் எஸ்டேட் டி.பெலிக்ஸ்ராஜ்.

பில்டர்கள் தரப்பில் சிலரோடு பேசினோம். ''தற்போது ஒப்புக்கொண்ட, விற்பனை செய்துள்ள புராஜக்ட்களின் விலையில் மாற்றமில்லை என்றாலும், புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்போது சதுர அடி 500 - 1,000 ரூபாய் வரை உயரலாம். நிலத்தை அதிக விலை தந்து வாங்கவேண்டியதாலேதான் இந்த விலை யேற்றம்'' என்று விளக்கம் அளித்தனர்.

இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசுத் தரப்பில் என்ன ஆக்ஷன் எடுத்திருக்கிறார்கள் என்பதை அறிய சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகளுடன் பேசினோம்.  

''அரசின் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி மாவட்ட ஆட்சியர் மூலமாக பேருந்து நிலையம் அமைய உத்தேசிக்கப்பட்டுள்ள இடமும் தேர்வாகியுள்ளது. இதன் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளோம். திட்டத்தை செயல்படுத்துவது, நிதி ஒதுக்கீடு, இடம் கையகப்படுத்துவது என திட்டம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எல்லாமே அரசின் ஒப்புதல் கிடைத்தபிறகுதான். மேலும், இது ஓர் அவசரத் திட்டமாக கொண்டுவரப்படும் என்றெல்லாம் சொல்லப்படவில்லை. எனவே, வழக்கமான ஓர் அரசுத் திட்டம் போலவே இதற்கான நடவடிக்கைகளும் இருக்கும்'' என்று பட்டும்படாமலும் பேசினார்கள்.  

அரசுத் திட்டம் என்பதால் ஆர அமரத்தான் நடக்கும். எனவே, இந்தப் பகுதியில் இடம் வாங்குகிறவர்கள் அவசரப்பட்டு, அதிக விலை தரவேண்டுமா என்று யோசிப்பது நல்லது.