Published:Updated:

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - திருவள்ளூர்

நேற்று தனிநகரம்; இன்று துணைநகரம்!

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - திருவள்ளூர்

நேற்று தனிநகரம்; இன்று துணைநகரம்!

Published:Updated:
'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - திருவள்ளூர்
##~##
105

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிகிரிக்குமேல் வெயில் வெளுத்து வாங்க, திருவள்ளூர் பகுதியில் சுடச்சுட ரியல் வலம் வந்தோம்...  ஒருகாலத்தில் சென்னையை ஒட்டிய ஒரு சாதாரண நகரமாக இருந்தது திருவள்ளூர். இன்றோ, சென்னையின் துணை நகரமாக மாறும் அளவுக்கு அனைத்து வாய்ப்புகளும் வசதிகளும் நிறைந்த நகரமாகி விட்டது. பல தொழில் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு இங்கு வந்து குவிவதால் ரியல் எஸ்டேட் நிலவரமும் ஹாட்டாகவே இருக்கிறது.

சென்னை நகரத்தின் முக்கிய பகுதிகளான திருவொற்றியூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம், வில்லிவாக்கம் போன்றவை திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிகள்தான். நான்கு நாடாளுமன்ற தொகுதிகள், பத்து சட்டமன்ற தொகுதிகள், 14  வட்டங்கள், 12 நகராட்சிகள், 13 பேரூராட்சிகள் என இந்த மாவட்டம் கொஞ்சம் பரந்துவிரிந்துதான் இருக்கிறது. அதிலும் கடந்த கால் நூற்றாண்டாக இந்த பகுதிகள் கிடுகிடுவென வளர்ச்சியடைந்ததால், 1996-ல் காஞ்சிபுரத்திலிருந்து பிரித்து திருவள்ளூரை தலைநகரமாகக் கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கினார்கள்.  

தொழிற்பேட்டைகளும், புண்ணிய திருத்தலங்களும்தான் இந்த நகரின் ஆதார சக்தி என்கிறார்கள் மக்கள். அது மட்டுமல்ல, சென்னையில் சொந்த வீடு வாங்க முடியாத நடுத்தர வர்க்கத்தினரின் சரியான சாய்ஸ் இந்த நகரம்தான் என்றும் சொல்கிறார்கள்.

''சொந்த வீடு ஏக்கம் கொண்டவர்களின் சொர்க்க பூமியாக இருக்கிறது இந்த நகரம். சென்னையில் பல வருடங்களாக வாடகை வீட்டில் குடியிருந்தவர்களும், இந்த நகரத்தைச் சுற்றி வளர்ந்துவரும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களும் திருவள்ளூரை பிஸியான நகரமாக்கி விட்டார்கள்'' என்கிறார் இவ்வூரைச் சேர்ந்த ஆசிரியை ஜெகதீஸ்வரி.

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - திருவள்ளூர்
'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - திருவள்ளூர்

''சென்னையிலிருந்து தாராளமான ரயில் வசதி, நல்ல கிராமப் பாங்கான சூழ்நிலை, ஐம்பது அறுபது அடி ஆழத்தி லேயே கிடைக்கும் சுவையான குடிநீர், சுற்றுவட்டாரங்களில் இருக்கும் முக்கியமான கோயில்கள், வாங்கக்கூடிய விலையில் கிடைக்கும் இடங்கள்... யோசிக்காமல் திருவள்ளூரில் இடம் வாங்க இப்படி பல பாஸிட்டிவ் அம்சங்கள் இருக்கின்றன. இதைவிட முக்கியமான விஷயம், 22 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் என்னும் தொழில் நகரம்'' என்கிறார் ஜெமி ஹவுசிங் நிறுவன மண்டல மேலாளர் ப.விநோத்குமார்.

ஸ்ரீபெரும்புதூர்- திருவள்ளூர் இடையே தொழில் நிறுவனங் களின் படையெடுப்பு தொடர்வ தால் இன்னும் சில ஆண்டுகளில் இந்நகரம் பெரிய மாறுதலை சந்திக்க வாய்ப்பிருக்கிறது. பேருந்து நிலையம், வீரராகவா கோவில், அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன் என எல்லா இடங்களிலும் மக்கள் வெள்ளம் திருவள்ளூரை மையமாக வைத்து குவிகிறது. வேலைவாய்ப்பை பொறுத்தவரை எந்த பிரச்னையும் கிடையாது. பல நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்குப் பேருந்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. இங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, திருத்தணி என எல்லா நகரங்களுக்கும் பேருந்து வசதி இருப்பதும் சாதகமான அம்சம். முக்கியமாக ஸ்ரீபெரும்புதூருக்கு பணிநிமித்தம் வரும் வெளிமாநில பணியாளர்கள் பெரும்பாலும் திருவள்ளூரில்தான் தங்குகிறார் களாம். காரணம், ரயில் வசதி.  சமீப காலமாக சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையும் கூடுதல் கவனம் பெற்று வருகிறது. இப்போதைய நகர நெரிசலுக்கு சீக்கிரமே ஒரு விடை கிடைக்கலாம். கலெக்டர் அலுவலம் தாண்டி ஊத்துக் கோட்டை சாலையில் புதிய பேருந்து நிலையம் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. திட்டம் அரசின் கையிருப்பில் உள்ளது.

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - திருவள்ளூர்

சென்னை வழியில் ரயில் பாதைகளை ஒட்டியும், ரெட்ஹில்ஸ் வழியில் ஈக்காடு வரையிலும், ஆவடி வழியில் காக்களூர், திருத்தணி வழியில் திருப்பாச்சூர் கிராமம், ஊத்துக்கோட்டை வழியிலும், ஸ்ரீபெரும்புதூர் வழியில் பல இடங் களிலும் ஒரே ரியல் எஸ்டேட் லே-அவுட் மயம்தான்.

டிரான்ஸ்போர்ட் காலனி, டீச்சர்ஸ் காலனி, காக்களூர்- திருத்தணி புறவழிசாலை சரளா நகர், மின்நகர் ஏரியா போன்று நகரை ஒட்டி இருக்கும் இடங்கள் உடனடியாக வீடு கட்டி குடிபோக உகந்த இடங்கள் என்றாலும், புறநகரில் உள்ள பல லே-அவுட்கள் முதலீட்டு நோக்கத்திலேயே கை மாறுவதாக சொல்கிறார்கள். ரயில்வே லைனை ஒட்டியுள்ள எல்லா இடங்களும் எதிர்காலத்தில் குடியிருப்புகளாக மாறும் சாத்திய முள்ளதால் அந்த இடங்களே அதிகமாக கைமாறுகின்றன. பத்து வருடங்களுக்கு முன் சதுர அடி நூறு ரூபாய் என்ற அளவில் கைமாறிய கோர்ட்க்குப் பின்பக்கம் உள்ள குமரன் நகர், ஜெய் நகர் ஏரியாக்கள் இன்று 1,000 ரூபாய்க்கு மேல் என்கிற மதிப்பில் இருக்கிறது.  இப்போது இடத்தை வாங்கி போட்டால் பிற்காலத்தில் குழந்தைகளின் திருமணம், உயர்கல்விக்கான தேவைகள் என்று வரும்போது மதிப்பும் உயர்ந்திருக்கும், விற்பனை செய்வதும் எளிது என்ற எண்ணத்திலும் பலர் இந்த பகுதி களில் முதலீடு செய்கின்றனர். முதலீட்டு நோக்கமெனில் ஸ்ரீபெரும்புதூர் வழி, திருத்தணி வழியில் இடம் வாங்குவது பெஸ்ட் என்கிறார்கள்.    

பொதுவாக திருவள்ளூர் லே-அவுட்கள் எல்லாமே சென்னையை மையமாக வைத்து இயங்கும் ரியல் எஸ்டேட்காரர்கள் கைகளில் உள்ளது. உள்ளூர்வாசிகள் மீடியேட்டர்களாக மட்டுமே  இருக்கிறார்கள். இடத்தை விற்பதில் கடும் தொழில் போட்டி நிலவுகிறது. அதனால் கூடுதல் கவனம் தேவை. ஒரு சில இடங்களில் அடுக்குமாடி வீடுகள் முளைத்து வருகின்றன. அதுவும் ஒன் பிளஸ் ஒன் என்கிற அளவில்தான். ச.அடி 1800 முதல் 2500-க்குள் அடங்கிவிடும். சில லே-அவுட்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனையாகாமல் இருப்பதையும் கவனிக்க வேண்டும்.  

'இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ’ யோசிப்பவர்களும், இருக்கும் கொஞ்ச பணத்தை இரட்டிப்பாக்க நினைப்பவர்களும் அல்லது அரைமணி நேரம், ஒரு மணி நேரம் போக்குவரத்தில் போனாலும் பரவாயில்லை நகரத்துக்குள் வாடகை கொடுத்து மாளாது என நினைப்பவர்களுக்கும் உகந்த இடமாக இருக்கும் திருவள்ளூர்.

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி! - திருவள்ளூர்

- நீரை.மகேந்திரன்
படங்கள்: சொ. பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism