Published:Updated:

மோடி அரசாங்கம்... ரியல் எஸ்டேட் வேகம் எடுக்குமா?

நீரை.மகேந்திரன் படங்கள்: எம்.உசேன், ரமேஷ் கந்தசாமி.

மோடி அரசாங்கம்... ரியல் எஸ்டேட் வேகம் எடுக்குமா?

நீரை.மகேந்திரன் படங்கள்: எம்.உசேன், ரமேஷ் கந்தசாமி.

Published:Updated:
மோடி அரசாங்கம்... ரியல் எஸ்டேட் வேகம் எடுக்குமா?

நரேந்திர மோடியின் தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்திருப்பதால், பல்வேறு துறைகளில் பல மாற்றங்கள் வரும் என்கிற நம்பிக்கை உருவாகி இருக்கிறது. தொழில் துறை மற்றும் உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி எப்படி இருக்கும், மோடி அரசாங்கம் இதற்கு என்ன செய்ய வேண்டும் என முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் கேட்டோம்.

''பங்குச் சந்தைபோல, ரியல் எஸ்டேட் துறையில் உடனடி எதிர்வினையை எதிர்பார்க்க முடியாது. புதிய அரசாங்கம் எடுக்கப்போகும் பல்வேறு முடிவுகளைப் பொறுத்தே இந்தத் துறையின் வளர்ச்சி இருக்கும். எனவே, ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மாற்றம் ஏதும் ஏற்பட வேண்டுமெனில், குறைந்தபட்சம் 6 - 9 மாதங்களாவது காத்திருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோடி தலைமையில் புதிய அரசாங்கம் வந்துவிட்டது என்றாலும், தற்போதைய பொருளாதார நிலை மந்தமாக இருப்பதால் புதிய அரசு பல்வேறு பாலிசி மாற்றங்களை கொண்டுவந்தாலும் அதன் பலன் ஆறு மாதங்களுக்குப் பிறகே தெரியவரும்'' என்கிறார், ஜோன்ஸ் லாங் லாசாலே பிராப்பர்ட்டி கன்சல்டன்ட் நிறுவனத்தின் சென்னை இயக்குநர் (மார்க்கெட்டிங்) ஜெர்ரி கிங்ஸ்லே.

மோடி அரசாங்கம்... ரியல் எஸ்டேட் வேகம் எடுக்குமா?

'பிரதமர் மோடியிடம் நாங்கள் எதிர்பார்ப்பது வேகம்'' என்கிறார், தமிழ்நாடு பில்டிங் அண்ட் புரமோட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பி.மணிசங்கர். ''அதிகமான திட்டங்கள் அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. புதிய அரசு அமைந்ததும் விரைவில் அனுமதி  கிடைக்கும் என்கிற நம்பிக்கைதான் இதற்குக் காரணம். வழிமுறைகளை எளிமைப்படுத்தி, முறைபடுத்த வேண்டும். இதற்கேற்ப விரைவாகச் செயல்பட வேண்டும். ஒரு திட்டம் முன்வைக்கப்படுகிறது எனில், அதன் மீது எவ்வளவு விரைவாக முடிவெடிக்க முடியுமோ, அவ்வளவு வேகத்தோடு செயல்பட வேண்டும்.

இதற்கு இந்தியா முழுமைக்கும் ஒரே விதமான வரி விதிப்பு, வீட்டுக் கடன் வரிச் சலுகை, நானோ கட்டுமான திட்டங்களை ஊக்கப்படுத்துவது, கட்டுமான பொருட்களுக்கு இந்தியா முழுக்க ஒரேவிதமான விலை நிர்ணய முறை, ஒரேவிதமான ரியல் எஸ்டேட் விதிமுறைகள் எனப் புதிய அரசாங்கத்திடம் நாங்கள் நிறைய விஷயங்களை எதிர்பார்க்கிறோம். இந்த விஷயங்கள் முக்கியமான மாற்றங்கள் வரும்பட்சத்தில், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் நல்ல வளர்ச்சி வரும். குறிப்பாக, ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு சொந்த வீடு என்பதற்கேற்ப தேசிய அளவிலான கொள்கை முடிவு கொண்டுவர வேண்டும்'' என்கிறார் இவர்.

மோடி அரசாங்கம்... ரியல் எஸ்டேட் வேகம் எடுக்குமா?

''மோடி அரசை முதலில் ஒரு வருடம் சுதந்திரமாகச் செயல்படவிட வேண்டும். தொழில் துறை வளர்ச்சி மற்றும் உள்கட்டுமான துறைக்கு முக்கியத்துவம் இருக்கும் என்கிறபோது ரியல் எஸ்டேட் துறையும் நல்ல வளர்ச்சியை அடையும். மோடி தனது முதல் உரையிலேயே, 'அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்’ என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, புதிய அரசாங்கத்துக்கு முதல் ஒரு வருடம் எந்த நெருக்கடியும் தரக் கூடாது. ஆனாலும், இந்த அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது'' என்றார், சோழா ஃபவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் எம்.கே.சுந்தரம்.

வீட்டுக் கடன் வட்டி விகிதம்!

கிரீன் ட்ரீ ஹோம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொன்.ரவிச்சந்திரனுடன் பேசினோம். ''முந்தைய அரசாங்கம், ரியல் எஸ்டேட் தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்காமலே இருந்தது. உதாரணமாக, ரியல் எஸ்டேட் ரெகுலேட்டர் நீண்ட காலமாக வராமல் இருக்கிறது. ஆனால், தற்போது அமைந்திருக்கும் புதிய அரசாவது இதை நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். அப்படி வரும்பட்சத்தில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் மேம்படும். மேலும், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைப்போம் என பாரதிய ஜனதா தேர்தல் வாக்குறுதி தந்தது. இதை இந்த அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இதற்குமுன் 1999-ல் பா.ஜ.க ஆட்சியில் வீட்டுக் கடன் வட்டி 7% அளவுக்கு குறைந்தது. வட்டி குறையும்போது வீடு விற்பனை நிச்சயம் அதிகரிக்கும்'' என்றார். ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்க்கும் விஷயங்களை முன்னணி பில்டர்கள் நம்மிடம் பட்டியலிட்டு காட்டினார்கள். அந்த எதிர்பார்ப்புகள் இனி:

வெளிநாட்டு முதலீடு!

தற்போதைய நிலையில், டெவலப்பர்கள் கையில் முதலீடு இல்லை. ஆனால், புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து வெளிநாட்டு முதலீகளை எளிதில் கொண்டு வந்துவிட முடியும். 2003-ல் ரியல் எஸ்டேட் துறையில் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்பட்டாலும், நிலையான அரசாங்கமாக இல்லை என்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் புதிதாக முதலீடு செய்ய யோசித்தனர். இப்போது அந்தப் பிரச்னை இல்லை.

ஒற்றைசாளர அனுமதி!

முந்தைய அரசாங்கத்தில் சாலைகள், பாலங்கள் என எல்லா கட்டுமான திட்டங்களும் மெதுவாகவே நடந்தன. உதாரணமாக, புனே லவாசா திட்டம் கட்டிமுடிக்கப்படும் வேளையில் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அதற்கான அனுமதியைத் தரவில்லை. இதுமாதிரியான குளறுபடிகள் இந்த அரசாங்கத்தில் நடக்காது என நினைக்கிறோம். ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு ஒற்றைசாளர முறை அனுமதி கொண்டுவந்தால் மட்டுமே இனி இந்தப் பிரச்னை இருக்காது.

மோடி அரசாங்கம்... ரியல் எஸ்டேட் வேகம் எடுக்குமா?

கட்டுமான செலவு!

சிமென்ட், மணல் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. இதற்காக தொழில் துறை அளவிலான பாலிசிகளை உருவாக்க வேண்டும். கட்டுமான செலவுகள் குறைந்தால் மட்டுமே வீடுகளின் விலை குறையும்.

ஒழுங்குமுறை ஆணையம்!

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பதை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் வீடு கட்டித்தரப்படவில்லை எனில், பில்டரை கேள்வி கேட்கும் வாய்ப்பு உருவாக வேண்டும்.

வரிச் சலுகை!

கடனில் வீடு வாங்குபவர்களுக்கான வரிச் சலுகை நிதி ஆண்டில் திரும்பச் செலுத்தும் அசலில் 1 லட்சம்,  வட்டியில் 1.5 லட்சம் அளிக்கப்படுகிறது. கடந்த பத்து வருடங்களாக இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், வீடுகளின் விலையோ பத்து மடங்கு அதிகரித்துள்ளது'' என்றார் எம்.கே.சுந்தரம்.

வரி விதிப்பு முறைகள்!

கட்டுமானத் துறையில் முதன்மையான பிரச்னை வரி விதிப்பு. இதன்காரணமாகவே வீடு வாங்குவதற்கு யோசிக்கிறார்கள். சேவை வரி, விற்பனை வரி, பதிவுக் கட்டணம், வழிகாட்டி மதிப்பு உயர்வு எனப் பெருஞ்சுமை வீடு வாங்குபவரை அழுத்துகிறது. அரசாங்கம் உடனடியாக இந்த வரி முறைகளை மாற்ற வேண்டும்.

''உதாரணமாக, 39 லட்சம் ரூபாய் கொண்ட ஒரு ஃப்ளாட்டுக்கு 1.50 லட்சம் சேவை வரி, 50 ஆயிரம் விற்பனை வரி, பதிவுக் கட்டணம் 1.50 லட்சம் என இதற்கே 3.5 லட்சம் வரை ஆகிவிடுகிறது.

மோடி அரசாங்கம்... ரியல் எஸ்டேட் வேகம் எடுக்குமா?

இதுதவிர, மின்சார வசதி, குடிநீர் வசதிக் கட்டணம் என எல்லாவற்றையும் கணக்கிட்டால், வீடு வாங்குபவர்

12 - 14 சதவிகித தொகையைக் கூடுதலாக கட்டவேண்டி இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். இந்தியா முழுக்க ஒரே வரிவிதிப்பு முறை கொண்டுவர வேண்டும். மாநிலத்துக்கு மாநிலம் உள்ள வித்தியாசத்தை நீக்க வேண்டும்'' என்கிறார் மணிசங்கர்.

விதிமுறைகள்!

ஓர் அரசு அதிகாரி நினைத்தால் ஒரு திட்டத்துக்கு ஒப்புதல் தரவோ அல்லது நிறுத்தி வைக்கவோ முடிகிறது. அதை மாற்றி ஒரேமாதிரியான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

நானோ வீடுகள்!

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான வீடுகளுக்கு முன்னுரிமை தரவேண்டும். இதற்கான திட்டம் தேசிய அளவில் கொண்டுவர வேண்டும். 400 சதுர அடி என்பதை 600 சதுர அடியாக மாற்றி, இதற்கு எல்லாச் சலுகைகளும் தரவேண்டும். இதற்கு அரசாங்கம் கட்டுமான பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட விலையில் தரவேண்டும். ஏனென்றால், இதற்கு வங்கிக் கடன் கிடைக்காது. குறைவான வட்டியில் ஹட்கோ வங்கி மூலம் கடன் தரலாம்.

வழிகாட்டி மதிப்பு!

'நிலத்தின் வழிகாட்டி மதிப்பை மாற்ற குறிப்பிட்ட காலஅளவு கொண்டுவர வேண்டும். மூன்று வருடத்துக்கு ஒருமுறைதான் விலை மாறும் என்கிற புதிய விதிமுறையைக் கொண்டுவர வேண்டும். ஒரு வருடத்தில், ஒன்றரை வருடத்தில் என மாற்றி மாற்றிக் கொண்டுவரக்கூடாது'' என்கிற கோரிக்கையையும் வைத்தார் மணிசங்கர்.

எல்லாத் துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவார் பிரதமர் மோடி. அதேபோல, ரியல் எஸ்டேட் துறையிலும் மாற்றங்களைக் கொண்டுவருவார் என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே இருக்கிறது. ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் விஷயங்களுக்கு மோடி தீர்க்கமான முடிவு காண்பார் என்று நம்புவோமாக!                

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism