Published:Updated:

கவர்ந்திழுக்கும் விவசாய முதலீடுகளை நம்பலாமா? மக்களே உஷார்..!

விவசாய முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
விவசாய முதலீடு

உஷார்

கவர்ந்திழுக்கும் விவசாய முதலீடுகளை நம்பலாமா? மக்களே உஷார்..!

உஷார்

Published:Updated:
விவசாய முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
விவசாய முதலீடு

பங்குச் சந்தை, கிரிப்டோ காயின்கள் மட்டுமல்ல, விவசாயத்தின் பெயரிலும் மோசடித் திட்டங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட ஒரு தொகையை நீங்கள் முதலீடு செய்தால், அந்தத் தொகையைக் கொண்டு உங்களுக்கென ஒரு நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்து, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை உங்களுக்குத் தருவோம் என்று சில நிறுவனங்கள் கவர்ச்சி கரமாக விளம்பரம் செய்து வருகின்றன.

இந்தத் திட்டம் பற்றி கேள்விப்படுகிறவர் களில் பலர், ‘‘ஆஹா, அருமையா இருக்கே...’’ என்று சொல்லி, சிலபல லட்சங்களை கட்டிவிடு கிறார்கள். பிற்பாடு இதில் உள்ள சிக்கல்களைத் தெரிந்தபின், கட்டிய பணம் திரும்பக் கிடைக்காமல் நஷ்டப்படுகிறார்கள். விவசாயம் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களை எப்படி அணுக வேண்டும், இந்தத் திட்டங்களில் சேரும் முன் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் எனத் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தூரன் நம்பியிடம் கேட்டோம்.

கவர்ந்திழுக்கும் விவசாய முதலீடுகளை நம்பலாமா? மக்களே உஷார்..!

விவசாய வருமானத்தை உறுதியாகச் சொல்ல முடியாது...

“விவசாயத்தைப் பொறுத்தவரை, எவ்வளவு விளைச்சலைப் பெற முடியும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அது சூழலைப் பொறுத்து மாறும். அப்படியிருக்கையில் மாதத்துக்கு இவ்வளவு ரூபாய் தருவோம் என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? விவசாயத்தைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாமல் பேசும் இது மாதிரியான நபர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். நீங்கள் கட்டும் பணத்துக்கு நிலத்தை வாங்கி, அதை உங்கள் பெயரில் பதிவு செய்கிறார்களா என்று பார்ப்பது அவசியம். பணத்தை உங்களிடம் இருந்து வாங்கிக்கொண்டு, நிலத்தை இன்னொருவர் பெயரில் பதிவு செய்தால், பிற்பாடு நீங்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தூரன் நம்பி
தூரன் நம்பி

ஈமு கோழி மோசடி போல ஏமாற வேண்டாம்...

விவசாயத்தைப் பொறுத்தவரை, களத்தில் இறங்கி வேலை செய் கிறவர்களால்தான் நல்ல விளைச்சலைப் பெற்று வருவாய் ஈட்ட முடியும். எங்கோ நம் பெயரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு அதன் லாபம் கைக்கு வந்துசேரும் என்று நம்பி முதலீட்டை மட்டும் போட்டுவிட்டுக் காத்திருந்தால், நாம் பணத்தை இழக்க வேண்டிவரும். நம் பணத்தில் வாங்கப்படும் நிலம், நம் பெயரில் இருந்தால்கூட அது நமக்கு சொத்தாக இருக்கும். நாளுக்கு நாள் அதன் மதிப்பு உயரும். உங்கள் முதலீட்டைக்கொண்டு விவசாயம் புரிந்து பணமாகவோ, விளை பொருளாகவோ கொடுக்கிறோம் என்று சொன்னால் அதைத் தயவுசெய்து நம்ப வேண்டாம். அந்த இடத்தில் உங்களுக்கான பங்கு என்ன என்பதற்கான உத்தரவாதம் வேண்டும்.

விவசாயம் தொடர்பான அறிவு வேண்டும்...

தவிர, விவசாயம் குறித்த அனுபவ அறிவு உங்களுக்கும் இருக்க வேண்டும். நிலத்துக்கும் பருவத்துக்கும் ஏற்றவாறு லாபம் தரக்கூடிய பயிர்களை விளைவிக்கிறார்களா என்பதை உங்களுக்கு பார்க்கத் தெரிய வேண்டும். இதை எல்லாம் நீங்கள் செய்யவில்லை எனில், இது மாதிரியான திட்டம் இன்னொரு ஈமு கோழி மோசடித் திட்டமாகவே இருக்கும். இந்தத் திட்டத்தை நடத்துகிறவர்கள் யார், அவர்களுக்கு விவசாயம் சார்ந்து அறிவும், அனுபவமும் எந்த அளவுக்கு இருக்கிறது, அவர்களால் இதை வெற்றிகரமாக நடத்திக் காட்ட முடியுமா என்பதையெல்லாம் கண்டுணர்கிற தெளிவு இருந்தால் இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

நேர்மையாகச் செய்கிறவர்கள் போலியான வாக்குறுதிகளை எப்போதும் அளிக்க மாட்டர்கள். எல்லாவற்றையும் வணிக நோக்கோடு பார்க்கிறவர்கள் நம்மைக் கவர்வதற்காகப் பல்வேறு வாக்குறுதிகளைத் தருவார்கள். தேக்கு மரத் திட்டத்தில் முதலீடு செய்தால், நம் பெயரில் 50 மரங்களை வளர்த்து அதன் லாபத்தைத் தருவோம் என்று சொல்லி ஏமாற்றிய மோசடியைப் பலரும் மறந்திருக்க மாட்டார்கள். எனவே, விவசாயம் தொடர்பான முதலீட்டுத் திட்டம் எனில், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்” என்றார் அவர்.

நேரடிக் கண்காணிப்பு அவசியம்...

‘‘நாம் நேரடியாகச் சென்று கண்காணிப்பது போல் இருந்தால் மட்டுமே, இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இல்லை எனில், நிச்சயம் ஏமாற்றப்படுவோம்” என்றார் பெருந்தச்சன் கீர்த்தி வர்மன். “1999-ம் ஆண்டு சென்னையில் பி.கே எஸ்டேட் என்கிற நிறுவனம் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்களிடம் தின வசூல், மாத வசூல் அடிப்படையில் தொகை வசூலித்து, திருச்சி அருகே சனமங்கலம் என்கிற கிராமத்தில் அவர்கள் பெயரில் இடம் வாங்கி அதில் விவசாயம் புரிந்து தினசரி காய்கறி மற்றும் அரிசி கொடுப்பதாகக் கூறியது.

பெருந்தச்சன் கீர்த்தி வர்மன்
பெருந்தச்சன் கீர்த்தி வர்மன்

10,000 சதுர அடி ஒரு யூனிட் என மொத்தம் 600 ஏக்கருக்கு 2,400 யூனிட் போட்டு விற்றார்கள். பணம் கட்டியவர் களுக்கு நிலத்தைப் பதிவு செய்து தந்தார்கள். ஆனால், இரண்டே ஆண்டுகளில் அந்த நிறுவனம் மூடப்பட்டு அதன் நிறுவனர் தலைமறைவானார்.

இதன்பிறகு அந்த 600 ஏக்கர் நிலத்தை எந்த விவசாயிகளிடம் இருந்து வாங்கினார்களோ, அந்த விவசாயிகளே அதில் மானாவாரி விவசாயம் புரிய ஆரம்பித்துவிட்டனர். என் நண்பர் ஒருவர் வாங்கிய நிலத்தை, என்னிடம் தந்துவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். இன்றைக்கு நிலத்துக்கான ஆவணங்கள் என்னிடம் இருந்தாலும் அந்த இடத்தை என்னால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.

விவசாயத்துக்கே தொடர்பு இல்லாத நிலம் அது. அளவீட் டுக்காக வைக்கப்பட்டிருந்த கல்லைப் பிடுங்கிப் போட்டு விட்டு விவசாயம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். என்னுடைய இடத்தைக் கண்டுபிடிக்க சார்பதிவாளர் அலுவலகத்தில் பணம் கட்டி யும் இன்னும் எந்த நடவடிக் கையும் இல்லை. அந்த இடத் துக்காக இன்றைக்கு வரைக்கும் போராடிக் கொண்டிருக்கிறேன். ஆகவே, விவசாய முதலீடு களைப் பொறுத்தவரை, நாம் கண்காணிக்கும் விதத்தில் இருக்க வேண்டும். வாரம் ஒரு முறையாவது சென்று மேற் பார்வை பார்க்கும் தொலைவில் இருக்க வேண்டும். இல்லை எனில், பணத்தைக் கட்டிவிட்டு நாம் அலைய வேண்டியிருக்கும்’’ என்றார் அவர்.

ஆக மொத்தத்தில், உஷாராக கவனிக்க வேண்டிய முதலீடுதான் இது!