பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

பள்ளத்தில் வீடுகள்... வெள்ளத்தில் வாழ்க்கை... வீட்டுமனை வாங்குபவர்களுக்கு மழைக்கால உஷார் டிப்ஸ்!

வீட்டுமனை...
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுமனை...

கவர் ஸ்டோரி

சொந்தமாக வீடு, மனை வாங்குவது பெரும்பாலானோரின் கனவு. நம் வாழ்நாளில் நடக்கும் முக்கியமான முதலீடு களில் ஒன்றும்கூட. வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேமித்தோ, கடன் வாங்கியோ வீடு, மனை போன்ற சொத்துகளை வாங்குகிறோம். ஆனால், நமக்கும் நம்முடைய சந்ததிகளுக்கும் பயன்படும் விதமாக வாங்கும் சொத்துகள் சில நேரங்களில் நம்மைப் பெரும் துயரத்துக்கு ஆளாக்கிவிடுகின்றன.

காரணம், மழை வெள்ளம் தேங்கக்கூடிய, பள்ளமான இடங்களிலும், ஏரி, ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளையொட்டிய இடங் களிலும் வீடு, மனைகள் வாங்கிவிடுவதுதான். ஏனெனில், 2005, 2015 ஆண்டுகளில் பெய்த கனமழையில் உருவான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடு களைச் சரிசெய்ய லட்சக் கணக்கில் செலவு செய்தவர்கள் பலர்.

பள்ளத்தில் வீடுகள்... வெள்ளத்தில் வாழ்க்கை... வீட்டுமனை வாங்குபவர்களுக்கு மழைக்கால உஷார் டிப்ஸ்!

‘‘கொஞ்சமாக மழை பெய்தால்கூட வீட்டைச் சுற்றி குளமாகிவிடுகிறது’’ என்கிற புலம்பல் சென்னை போன்ற மாநகரங்களில் மட்டுமல்ல, பெரும்பாலான நகரங்களில், கிராமங்களில்கூட கேட்க ஆரம்பித்துவிட்டன.இதுபோன்ற பிரச்னைகள் இல்லாத வகையில், வீடு, மனைகளை வாங்குவது எப்படி, ஏற்கெனவே வாங்கிய வீடு, மனைகளில் மழை, வெள்ளம் தேங்கும் இடங்களாக இருந்தால் அந்த வீட்டையும், வீட்டிலுள்ள பொருள் களையும் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து கோவையில் உள்ள கட்டடவியல் நிபுணர் ஜி.கணேஷுடன் பேசியபோது நமக்கு விரிவான விளக்கத்தைத் தந்தார்.

இடம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்!

“வீடு கட்டுவதற்கான மனையோ, கட்டிய வீட்டையோ வாங்கும்முன் எந்த இடத்தில் வாங்கப்போகிறீர்களோ, அந்த இடத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். தண்ணீர் வசதியும் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமலும் இருக்க வேண்டும். எனவே நிலத்தடி நீர் எப்படி இருக்கிறது, கழிவு நீர், ரசாயனம் கலந்திருக்கிறதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.

மனை, வீடு விற்பவர்கள் தாழ்வான பகுதிகளில் லே அவுட் பிரித்து விற்றுவிடுகிறார்கள். குளம் போன்ற நீர்நிலைகள் இருந்த இடங்களில் பில்டிங் கட்டட கழிவுகளைப் போட்டு நிரப்பி அதன்மேலே லேஅவுட் போட்டு விற்றுவிடுகிறார்கள். இது போன்ற இடங்களில் மனை, வீடு வாங்குவதில் சில பிரச்னைகள் இருக்கின்றன. மழை நீர் தேங்கவும், நிலத்தடி நீர் கட்டடத்தைப் பாதிக்கவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, இடம் வாங்கும்முன் எப்படி இடத்தின் ஆவணங்களைச் சரிபார்க்கிறோமோ, அதே போல அந்த இடத்தைப் பற்றியும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் வாங்க நினைக்கும் இடத்தை மழைக்காலத்தில் போய்ப் பார்ப்பது நல்லது. காரணம், மழைக்காலத்தில் தான் அந்த இடம் எப்படி இருக்கிறது என்பது நமக்கு சரியாகத் தெரியும்.

தவிர, கோடைக்காலத்தில் தண்ணீர் வறட்சி இருக்குமா என்பதையும் அங்கு 10 - 15 ஆண்டுகளாக வசிக்கும் அக்கம்பக்கத்தாரிடம் தீர விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், வெள்ள அபாயம் உள்ள இடங்கள், தண்ணீர் பல நாள்களாகத் தேங்கும் இடங்கள், பள்ள மான இடங்கள் போன்றவை பற்றி செய்திகளில் வந்திருக் கும். நீங்கள் வீடு, மனை வாங்கப் போகும் இடம் அப்படியான இடமா என்பதையும் 2005, 2015 மழை வெள்ளத்தின்போது வந்த செய்திகளை ஆராய்ந்து பார்த்துத் தெரிந்துகொள்வது அவசியம்.

மேலும், கூகுள் மேப்பில் ஒரு வசதி இருக்கிறது. அந்த இடம் முந்தைய ஆண்டுகளில் என்னவாக இருந்தது, குளம் போன்ற நீர்நிலைகளாக இருந்ததா என்பதை எல்லாம் பார்க்க முடியும்.

தாழ்வான பகுதிகளில் வீடு வாங்கவே கூடாதா?

சரி, தாழ்வான பகுதிகளில் வீடு வாங்கவோ, கட்டவோ கூடாதா என்று நீங்கள் கேட்கலாம். இன்றைய சூழலில் பட்ஜெட்படி பார்க்கும் போது, தாழ்வான பகுதிகளில் வீடு என்பது சிலருக்குத் தவிர்க்க முடியாததாக இருக்கலாம்.அப்படி தாழ் வான பகுதிகளில் வீடு கட்டவோ, வாங்கவோ விரும்புபவர்கள் சில விஷயங்களைக் கவனமாகப் பின்பற்றினால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் வீட்டைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

முதலில், தாழ்வான பகுதிகள் என்றால்கூட அந்தப் பகுதியில் சாலைகள், கழிவுநீர் வடிகால், மழை நீர் வடிகால் போன்றவை திட்டமிட்டு கட்டப்பட்டு இருக்கும்பட்சத்தில் தண்ணீர் பெருமளவில் தேங்காது. அதுபோன்ற இடங்கள் எனில் வீடு, மனை தாராளமாக வாங்கலாம். ஆனால், புதிய லே அவுட் என்றாலோ பெரிதாக வளர்ச்சி அடையாத பகுதி என்றாலோ, கவனமாக இருக்க வேண்டும்.

ஏற்கெனவெ கட்டிய வீடு எனில், பிரதான சாலை மேற்பரப்பிலிருந்து எவ்வளவு உயரத்தில் அடித்தளம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். பிரதான சாலை மேற்பரப்பைவிட ஆழத்தில் இருந்தால் அங்கு தண்ணீர் தேங்க வாய்ப்பு அதிகம்.

ஜி.கணேஷ்
ஜி.கணேஷ்

உயர்த்திக் கட்டுவது அவசியம்...

மேலும், தாழ்வான பகுதிகளில் மனை வாங்கி வீடு கட்டுகிறீர்கள் எனில், இன்ஜினீயர்களிடம் ஆலோசித்து பிரதான சாலை மேற்பரப்பிலிருந்து அரசு விதிமுறைகளின்படி கொஞ்சம் உயர்த்தி அடித்தளம் அமைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், வீட்டின் கழிவு நீர், மழை நீர் இவற்றை எல்லாம் பிரதான சாலையில் கொண்டுவந்து இணைக்க வேண்டியிருக்கிறது. மேலும், வீடு கட்டும் இடம் களிமண்ணோ, மணற்பாங்கான இடமாகவோ இருந்தால் அடித்தளம் அமைக்க நிறைய செலவாகும். இது வீட்டின் பட்ஜெட் டைக் கணிசமாக அதிகரிக்கும்.

நீங்கள் வாங்கிய இடம் சாலையைவிட கீழே பள்ளமாக இருக்கிற தெனில், வீட்டை சாலையின் மட்டத்தை விட உயர்த்த வேண்டிய அவசியம் உண்டாகும். மேலும், வீடு, மனை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள அணுகு சாலை எத்தனை அடி அகலம் என்று பார்க்க வேண்டும். குறைந்தது 23 அடி இருக்க வேண்டும். 40 அடிக்குமேல் இருப் பது மிகவும் நல்லது.

தண்ணீரிலிருந்து வீடுகளை எப்படிப் பாதுகாப்பது?

ஒரு கட்டடம் எப்போதுமே தண்ணீரால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே மழை நீர் தேங்கி நிற்கிற இடத்தில் நீங்கள் வீடு வாங்கியிருந்தால், அல்லது கட்டிய வீடு தண்ணீர் தேங்கும் நிலையில் இருந்தால் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற மோட்டர் பம்ப்பை பயன்படுத்துவது தவிர, வேறு வழியில்லை. இந்த வேலையை உடனடியாக மேற்கொள்வது வீட்டுக்கும் உங்களுக்கும் நல்லது. எனவே, மழைத் தண்ணீர் நிற்கிற இடத்தில் வீடு இருந்தால், கைவசம் சுவேஜ் பம்ப் மோட்டர் வைத்துக்கொள்வது பயன் தரும்.

தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களில் வீடு கட்டுபவர்கள் பிரதான சாலையின் மேற்பரப்பு அடிப்படையில்தான் பேஸ்மென்ட் எடுக்க வேண்டும். இப்போதெல்லாம் மழை வெள்ளத்துக்கு பயந்து பல அடிகள் உயரம் எழுப்பி பேஸ்மென்ட் அமைக்கிறார்கள். இதனால் வாகனங்கள் ஏறு வதற்கான ரேம்ப் கட்டமைப்பு சாலைகளில் கட்டுகிறார்கள். இது தவறு. தாழ்வான பகுதி களில் வீடு கட்டுபவர்கள் பிரதான சாலையின் மட்டத் திலிருந்து 1.5 அடி உயரத்தில் பேஸ்மென்ட் அமைக்கலாம்.

அரசுக்கு ஒரு வேண்டுகோள் என்னவெனில் எல்லா பகுதி களிலும் பேஸ்மென்ட் அமைப் பதற்கு வழிகாட்டும் வகையில் டிரைனேஜ் லெவலை நிர்ணயிக்க வேண்டும். பொதுப் பணித்துறையில் ஒவ்வொரு சாலைக்கும் ரெஜிஸ்டர் ஃபாலோ செய்யப்படும். அந்த ரெஜிஸ்டர் விவரங்கள்படி சாலை கட்டமைப்பைத் திட்ட மிட வேண்டும்.

பள்ளத்தில் வீடுகள்... வெள்ளத்தில் வாழ்க்கை... வீட்டுமனை வாங்குபவர்களுக்கு மழைக்கால உஷார் டிப்ஸ்!

ஜாக்கி டெக்னிக் எல்லா வீடுகளுக்கும் பொருந்துமா?

மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் உள்ள வீடுகளை ‘ஜாக்கி டெக் னிக்’ மூலம் உயர்த்தலாமா என்ற கேள்வி பலருக்கு எழுவது உண்டு. ஆனால், இந்த டெக்னிக் எல்லா வீடுகளுக்கும் பொருந் தாது. பில்லர் போட்டு கட்டாத லோட் பியரிங் வீடுகளுக்குத் தான் ‘ஜாக்கி’ மூலம் உயர்த்த முடியும்.

ஆனால் ஃப்ரேம்டு ஸ்ட்ரக் சர் வீடுகளை இவ்வாறு ஜாக்கிகள் மூலம் உயர்த்த முடியாது. ஒரே வழி தண்ணீர் நிற்கிற தரைதளத்தைத் தியாகம் செய்வதுதான். தரை தளத்தை முழுமையாக பார்க்கிங் போன்றவற்றுக்காக விட்டு விட்டு மேல் தளத்துக்கு குடிபோய்விட வேண்டியது தான். தண்ணீர் தேங்கும் இடத்தில் புதிதாக வீடு கட்டு பவர்கள் ஆரம்பத்திலேயே கூடுதலாக ஒரு தளம் அமைக் கும் திட்டத்துடன் அடித் தளத்தை அமைக்க வேண்டும். ஒருவேளை, தண்ணீர் அடிக்கடி தேங்கும் பட்சத்தில் தரைதளத்தைத் தியாகம் செய்துவிட்டு மேலே கூடுத லாக ஒரு தளத்தை பிற்பாடு கட்டிக்கொள்ளலாம்.

கார்களைப் பாதுகாப்பது எப்படி?

பெரும்பாலான வீடுகளில் அண்டர்கிரவுண்ட் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் இங்கு தண்ணீர் தேங்க அதிக வாய்ப்புள்ளது. அதுபோன்ற இடங்களில் சிசர் லிஃப்ட் மூலம் காரை சீலிங் வரை உயர்த்திக் கொள்ளலாம். சீலிங் உயரம் 10 அடி வரை இருக்கும். காரின் உயரம் 5 அடி இருக்க லாம். எனவே, சிசர் லிஃப்ட் மூலம் காரைத் தற்காலிகமாக உயர்த்தி வைக்கலாம். வீட்டில் பார்க்கிங் வசதி இல்லாமல் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை மழைக் காலங் களில் தண்ணீர் தேங்காத இடமாகப் பார்த்து நிறுத்தி விடுவது நல்லது.

பள்ளத்தில் வீடுகள்... வெள்ளத்தில் வாழ்க்கை... வீட்டுமனை வாங்குபவர்களுக்கு மழைக்கால உஷார் டிப்ஸ்!

சுவர்களில் தண்ணீர் ஊறுவதைத் (ஓதம்) தடுப்பது எப்படி?

கட்டி முடிக்கப்பட்ட வீட்டில் தண்ணீர் தேங்கவோ, தண்ணீர்க் கசிவோ பில்டிங் கில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குக் கட்டுமானம் அமைக்கும் போதே இன்ஜினீயரின் ஆலோசனையின்படி, தேவையான இடங்களில் எல்லாம் டேம்ப்னஸ் ப்ரூஃப் கோர்ஸ் (DPC) செய்துவிடுவது நல்லது. இதற்கு ரிச் வாட்டர் ப்ரூஃப் மிக்ஸை கான்கிரீட்டுடன் கலந்து பூச வேண்டும். சுவர்களில் மட்டுமல்லாமல், டைல்ஸ் ஒட்டும்போதும் வெறுமனே கான்கிரீட் மேல் டைல்ஸை ஒட்டாமல் அதற்கென உள்ள பேஸ்ட் வைத்து ஒட்ட வேண்டும். போதுமான இடைவெளி விட்டு வாட்டர் ப்ரூஃப் காம்பவுண்ட் கலந்து ஒட்ட வேண்டும்.

கான்கிரீட்டுடன் வாட்டர் ப்ரூஃப் கெமிக்கல் கலந்து பூசினால் தண்ணீர் சுவற்றுக்குள் போகாமல் தடுக்கப்படும். ஒரு மூட்டை கான்கிரீட்டுக்கு எவ்வளவு சேர்க்க வேண்டும் என்கிற வரைமுறை இருக்கும். வீடு கட்டும்போதே அதுபற்றி இன்ஜினீய ரிடம் ஆலோசித்து முடிவெடுப்பது அவசியம்.

அதே போல, அடித்தளம் அமைக்கும்போது மண் நிரப்பும்முன் பூச்சு வேலையின்போதும் வாட்டர் ப்ரூஃப் கெமிக்கல் கலந்து பூச வேண்டும். பேஸ்மென்ட் கட்டி முடித்த பிறகு, பேஸ்மென்ட் லெவலுக்கு மேல் 4 - 6 இன்ச் தடிமனுக்கு டை பீம் போடலாம். அதில் கன்ஸ்ட்ரக்‌ஷன் கெமிக்கல் பயன்படுத்தும்போது ஃப்ளோரிங்குடன் ஓதம் தடுக்கப்பட்டு, சுவருக்கு வராது. நிலத்தடி நீர் சுவரைப் பாதிக்காமல் இருக்க இவற்றை அவசியம் செய்தாக வேண்டும்.

வீட்டுக்குள் பாத்ரூம் கட்டும்போதும் கவனமாக இருக்க வேண்டும். மேல் தளங்களில் பாத்ரூம் வைக்கும்போது அதில் இருந்து கழிவுநீர் வெளியே கொண்டுவருவோம். அதில் சிறிதாக லீக்கேஜ் இருந்தால்கூட அதனால் சுவர் பாதிக்கும். பாத்ரூம் ப்ளம்பிங் லைனைக் கொண்டு செல்லும்போது ரூஃப் ஸ்லாப் கொஞ்சம் இறக்கிப் போட வேண்டும். ரூமிலிருந்து பாத்ரூம் போகும்போது சமதளத்தில் போகும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பாத்ரூம் கான்கிரீட்டிலும் வாட்டர் ப்ரூஃப் காம்பவுண்ட் சேர்த்து பயன்படுத்து வது நல்லது” என்றார்.

வீட்டுமனை வாங்கும்போதும், வீடு கட்டும்போதும் மழைக்காலத்தை மனதில் கொண்டு திட்டமிட்டால், உங்கள் கனவு வீட்டில் நிம்மதியாக வாழலாம்.

எஸ்.ஶ்ரீதரன்
எஸ்.ஶ்ரீதரன்

வீட்டுக் காப்பீடு... ஏன், எதற்கு, எப்படி?

எஸ்.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://www.wealthladder.co.in/

“மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின்போது வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வீடு மற்றும் வீட்டிலுள்ள பொருள்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம். அப்படி பாதிப்புக்கு உள்ளாவதால், நாம் கணிசமான நிதி பாதிப்புக்கு உள்ளாக வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழலில், வீட்டுக் காப்பீடு இருந்தால் எளிதில் சமாளித்துவிடலாம்.

பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் இந்த வீட்டுக் காப்பீடு பாலிசியை வழங்குகின்றன. மழை வெள்ளம், புயல், தீ விபத்து போன்றவற்றில் வீட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்த பாலிசி கவரேஜ் தருகிறது. வீட்டின் கட்டமைப்புகள், உள்ளடக்கங்களில் உண்டாகும் சேதாரங்களுக்கு இந்தக் காப்பீடு கவரேஜ் உறுதி வழங்குகிறது.

வீட்டுக்குச் சொந்தக்காரர் இந்தப் பாலிசியை எடுக்க வேண்டும். இதற்கான பிரீமியம் மிகக் குறைவுதான். ரூ.5,000 - ரூ.10,000 வரை இருக்கும். இதுபோக வீட்டிலுள்ள பொருள்களுக்குத் தனியாகக் காப்பீடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தக் காப்பீடு ஃபர்னிச்சர், ஹோம் அப்லயன்சஸ் உள்ளிட்டவற்றுக்கான கவரேஜை வழங்கும். வாடகைக்குக் குடியிருப்பவர்கள் வீட்டுக் காப்பீட்டை எடுக்க வேண்டியதில்லை. மாறாக, வீட்டுப் பொருள்களுக்கான காப்பீட்டை எடுத்துக்கொள்ளலாம்.

இயற்கை பேரிடர்களில் ஏற்படும் விபத்துகளால் மனிதர்களுக்கு உண்டாகும் பாதிப்புகளுக்கு இந்தக் காப்பீடுகள் கவரேஜ் வழங்குவதில்லை. அதற்குத் தனியாக தனிநபர் விபத்துக் காப்பீடோ அல்லது டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸோ எடுத்துக்கொண்டால் கவரேஜ் கிடைக்கும்.

வீட்டு உபயோகப் பொருள்களுக்குக் காப்பீடு எடுக்கும்போது அவற்றை சரியாக மதிப்பிட்டு கவரேஜ் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பொருள்களின் இன்வாய்ஸ் இருப்பது மிகவும் நல்லது. கவரேஜுக்கேற்ப பிரீமியம் இருக்கும். இன்வாய்ஸ் இல்லாதபட்சத்தில் காப்பீடு நிறுவனம் தோராயமாக மதிப்பிட்டு கவரேஜைத் தீர்மானிக்கும். பாதிப்பு ஏற்பட்டவுடன் அவற்றைப் புகைப்படம், வீடியோ எடுத்து வைத்துக்கொள்வது அவசியம். பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக காப்பீடு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.”