Published:Updated:

வீட்டு மனை வாங்கும்போது சட்டப்படி கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

வீட்டு மனை
பிரீமியம் ஸ்டோரி
வீட்டு மனை

ரியல் எஸ்டேட்

வீட்டு மனை வாங்கும்போது சட்டப்படி கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

ரியல் எஸ்டேட்

Published:Updated:
வீட்டு மனை
பிரீமியம் ஸ்டோரி
வீட்டு மனை

சொந்தமாக வீடு கட்டி வாழ வேண்டும் என்ற ஆசை இல்லாத மனிதனே இல்லை. உங்களுக்கான சொந்த இடம் வாங்கும்போது நீங்கள் எவற்றை எல்லாம் கவனிக்க வேண்டும்? சட்ட ரீதியாக எவற்றை எல்லாம் கையாள வேண்டும் என்பது தொடர்பான தகவல்களை வழங்குகிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞரான கே.அழகுராமன்.

வீட்டு மனை வாங்கும்போது சட்டப்படி கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

1. நீங்கள் வாங்கப்போகும் இடத்தின் அளவாக புரோக்கர்கள் அல்லது விற்பனை யாளர்கள் சொல்லியிருக்கும் அளவு சரியாக இருக்கிறதா என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம். எனவே, நீங்கள் வாங்கப் போகும் இடத்துக்கு நேரில் சென்று, ஒரு சர்வேயர் உதவியுடன் நீங்களே ஒரு முறை அளந்து பாருங்கள்.

2. நீங்கள் வாங்கும் மனை எந்தப் பயன் பாட்டுக்கு அரசால் அனுமதிக்கப்பட்டு உள்ளது என்பதை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கும் திட்டம் வைத்திருக்கிறீர்கள் எனில், குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக விவசாய நிலங்களை வாங்கக் கூடாது.

3. நில உரிமையாளரிடமிருந்து நிலத்தின் லே அவுட்டை வாங்கிப் பார்க்க வேண்டும். இதன்மூலம் நீங்கள் வாங்கப்போகும் இடத்துக்கு நான்கு எல்லைகளில் உள்ள மற்ற நிலத்தின் உரிமையாளர்களிடமும் நீங்கள் விசாரித்துக்கொள்ளலாம்.

4. நீங்கள் வாங்கும் நிலம் சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அங்கீகாரம் பெற்றது எனில், பொது நலப் பயன்பாட்டுக்காக உள்ளூர் பஞ்சாயத்தின் பேரில் போதிய சாலைகள் அமைக்க அரசுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டு, அதுவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. விற்பனையாளர்கள் அல்லது புரோக்கர் கள் சொல்லும் விலையை உடனே தந்துவிடக் கூடாது. நீங்களே அந்த மனை இருக்கும் பதிவுத்துறையின் வழிகாட்டு மதிப்பைப் பதிவுத்துறையின் இணையதளத்தில் பார்த்து, சொத்தின் மதிப்பைத் தோராயமாகக் கணக் கிட்டுக்கொள்ள முடியும். மேலும், மனை இருக்கும் பகுதிக்குச் சென்று அந்தப் பகுதியில் நிலத்தின் சந்தை மதிப்பு என்ன, மனை என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதையும் விசாரிக்க வேண்டும்.

6. நீங்கள் வாங்கப்போகும் மனை யாருடைய பெயரிலிருந்து தற்போது யாரிடம் இருக்கிறது என்பதற்கான விவரங்களை மூலப் பத்திரங்கள் எனப்படும் சொத்தின் தாய் ஆவணங்களைக் கொண்டு சரிபார்க்க வேண்டும். மேலும், சொத்தின் ஆவணங்கள் உங்களுக்கு விற்பனை செய்பவரின் கிரயப்பத்திரம், அதன் மூல ஆவணங்கள் எனப்படும் தாய்ப்பத்திரங்கள், பட்டா, வரி வகையறாக்கள் ரசீது, சிட்டா, அடங்கல் போன்ற வருவாய்த்துறை ஆவணங்கள் அனைத்தும் அடங்கும். காலியிடம் எனில், அப்ரூவல் என்ற அங்கீகாரம் மிகவும் முக்கியம். கட்டப்பட்ட வீடு எனில், கட்டடத்துக்கான அனுமதி அளிக்கப்பட்ட வரைபடம், சொத்துவரி ரசீது, மின் கட்டண ரசீதுகள் போன்றவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

கே.அழகுராமன்
கே.அழகுராமன்

7. உங்கள் பகுதியில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் நீங்கள் வாங்கப்போகும் இடத்துக்கு வில்லங்கச் சான்றிதழ் பெற்று, அதன்பின் ஒரு வழக்கறிஞரிடம் லீகல் ஒப்பீனியன் வாங்குவது மிக அவசியம்.

வில்லங்கச் சான்றிதழில் சொத்து குறித்த கடன், அடமானம் போன்ற இதர குறிப்புகள் ஏதேனும் இருக்கும்பட்சத்தில், அவற்றைச் சரிசெய்த பின்னரே கிரயப் பத்திரம் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

8. உங்களுக்கு விற்பனை செய்பவர் அந்தச் சொத்தை உயில் மூலமாகவோ, செட்டில்மென்ட் மூலமாகவோ பெற்றிருக்கும் நிலையில், அவர் குடும்பத்தில் உள்ள இதர உறுப்பினர்கள் குறித்த விவரம் அறிந்து, அந்தச் சொத்தானது குறிப்பாக இந்த நபருக்கு முழு உரிமையுடன் வருவதற்கான காரணம், உயில் பதிவு செய்யப்பட்டதா, மெய்ப்பிக்கப் பட்டதா போன்ற விவரங்களையும் தெரிந்துகொண்டு கிரயம் மேற்கொள்ளலாம்.

9. இந்த மனையானது 18 வயதுக்கு உட்பட்ட மைனர் நபர் பெயரில் இருந்தாலோ, அந்த மைனர் நபர்களுக்கு பங்கு இருக்கிறது என்றாலோ, அந்த இடத்தை விற்பதற்கான காரணம், நீதிமன்ற அனுமதி போன்ற விவரங்களையும் பத்திரத்தில் எழுதி அதைப் பதிவு செய்ய வேண்டும். பெண் வாரிசுகளுக்கு உரிமை உள்ள இடம் எனில், அந்தப் பெண் வாரிசால் அந்த இடத்துக்கு எப்போது வேண்டுமானாலும் உரிமை கோர இயலும். எனவே, அவ்வாறான பொதுக் குடும்பச் சொத்தை வாங்கும்போது, அந்தப் பெண் வாரிசும் கையெழுத்திட்டு, அது செல்லுபடியாக பத்திரம் ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

10. சில நேரங்களில் இடத்துக்கான அட்வான்ஸ் தொகையை சில வாரங்களுக்கு முன்பே கொடுக்கச் சொல்வார்கள். அப்படி அட்வான்ஸ் தொகை கொடுக்கிறீர்கள் என்றாலும், அதையும் ஒரு பத்திரத்தில் எழுதி, கிரய ஒப்பந்தம் ஏற்படுத்தி அட்வான்ஸ் தொகை வாங்குபவரிடம் கையெழுத்து வாங்கிக்கொள்வது அவசியம்.

11. நீங்கள் வாங்கப்போகும் மனை அடமானத்திலோ, நீதிமன்ற வழக்குகளிலோ இல்லை என்பதை உறுதி செய்வது அவசியம். வேறு ஏதேனும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படாத சொத்து என உறுதி செய்துகொண்டு, அதைக் கிரையப் பத்திரத்தில் தெளிவாக விவரித்துப் பதிவு செய்து கொள்ளலாம்.

12. காலி மனை எனில், அதை விற்பனை செய்பவரால், அவரது பெயருக்கு நில வரியானது சரியாகச் செலுத்தப்பட்டு இருக்கிறதா என்பதையும் சோதிக்க வேண்டும்.

13. தற்போது நிலத்தின் உரிமை யாளராக இருப்பவர், நிலத்துக்கு அதிகாரம் உடையவராக வேறு யாரையேனும் அறிவித்திருந்தால், அதற்கான ஆவணங்களை சரி பார்த்து, அது இன்றும் செல்லத் தக்க நிலையில் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

14. வழக்கறிஞர்களிடம் லீகல் ஓப்பீனியன் வாங்கியிருந்தாலும் https://tnreginet.gov.in/portal/webHP?requestType=ApplicationRH&actionVal=homePage &screenId=114&UserLocaleID=en&_csrf=ed8ff27b-df22-42be-9814-eebf15adc295 என்ற இணையதளத்தில் நீங்களே ஒரு முறை வில்லங்கச் சான்றிதழை சரிபார்த்துக்கொள்ளவும்.

15. பத்திரப்பதிவு முடிந்த பின், பட்டா, வரி வகையறாக்களை உங்கள் பெயரில் ‘பெயர் மாற்றம்’ செய்து, அந்த இடத்தை முறையாக வேலியிட்டுப் பராமரிப்பது அவசியத்திலும் அவசியம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism