பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வீட்டுக் கடன்: அதிக தொகை கடனாகப் பெற என்ன செய்ய வேண்டும்?

வீட்டுக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக் கடன்

கைகொடுக்கும் வீட்டுக் கடன்! - 12

வீட்டை கடனில் வாங்கும்போது வீட்டின் மதிப்பில் 100% தொகைக்கும் கடன் கிடைக்காது. பொதுவாக, சொத்து மதிப்பில் 80% தொகைதான் கடனாகக் கிடைக் கும் என ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், 
https://winworthwealth.com/
எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், https://winworthwealth.com/

அதிகபட்சம் எவ்வளவு கடன் கிடைக்கும்?

ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, ரூ.30 லட்சத்துக்கு உட்பட்ட வீட்டுக் கடனுக்கு 90% தொகை கடனாகக் கிடைக்கும். ரூ.30 லட்சம் முதல் 75 லட்சத்துக்கு உட்பட்ட கடனுக்கு 80% தொகையும், ரூ.75 லட்சத்துக்கு அதிகமான கடனுக்கு 75% தொகையும் வீட்டுக் கடனாகக் கொடுக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் தற்போதைய விதிமுறையாகும்.

மீதத் தொகையை கடன் வாங்குபவர் தனது பங்காகத் தர வேண்டும். அதாவது, கடன் தொகை அதிகரிக்க அதிகரிக்க, கடன் வாங்குபவர் தனது பங்காகத் தர வேண்டிய தொகையும் உயரும்.

இந்த முறையில் அனைவருக்கும் ஒரே போல் வீட்டுக் கடன் தர வேண்டும் என்பதற்காக சொத்து பத்திரப் பதிவு மற்றும் முத்திரைத் தாள் கட்டணம் போன்றவை வீட்டின் மதிப்பில் சேர்க்கப்படுவதில்லை. அதே நேரத்தில், கடன் மதிப்பு ரூ.10 லட்சத்துக்குள் இருந்தால், சொத்துப் பத்திரப் பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் வீட்டின் விலையுடன் சேர்க்க அனுமதி இருக்கிறது.

சொத்துப் பதிவு, முத்திரைத்தாள் கட்டணம், ஆவணங்கள் எல்லாம் சேர்ந்து சொத்தின் மதிப்பில் சுமார் 12% அளவுக்கு வந்துவிடும். எனவே, டவுண் பேமென்ட் உடன் சேர்த்து வீட்டுக் கடன் வாங்குபவர் இந்தத் தொகையையும் புரட்டி வைத்துக்கொள்வது அவசியமாகும்.

சொத்தின் மதிப்பில் இத்தனை சதவிகிதம்தான் கடன் கிடைக்கும் என்றாலும், கடனைத் திரும்பக் கட்டும் காலம், வீடு அமைந்திருக்கும் இடம், கடன் வாங்குபவரின் கிரெடிட் ஸ்கோர், கடனைத் திரும்பக் கட்டும் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில்தான் தொகை நிர்ணயம் செய்யப்படும்.

வீட்டுக் கடன்: அதிக தொகை கடனாகப் பெற என்ன செய்ய வேண்டும்?

வீட்டுக் கடன் அதிகமாக வாங்க...

நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல, அதிக கிரெடிட் ஸ்கோர் இருக்கும்பட்சத்தில், குறைவான வட்டியில் கடன் கிடைப்பதுடன், அதிக தொகையும் கடன் கிடைக்கும். எனவே, எப்போதும் வாங்கிய கடனை சரியான நேரத்தில் செலுத்தி வரவும். வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும்முன் உங்களின் கிரெடிட் ஸ்கோரைத் தெரிந்து கொள்வது கட்டாயம். ஏதாவது, ஒரு பிரச்னையால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கலாம். இதைச் சரிசெய்து விட்டு வீட்டுக் கடன் பெற விண்ணப்பிப்பது நல்லது.

இணைந்து வாங்குங்கள்...

அதிக தொகை கடன் பெற, வேலை பார்க்கும் கணவன் மனைவி இருவரும் இணைந்து பெறலாம். இது தவிர, அப்பா-பையன், அம்மா - பையன், அம்மா – மகள், இரண்டு சகோதரர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கும்போது கடன் தகுதி அதிகரித்து, அதிக தொகை கடனாகக் கிடைக்கும்.

இப்படி அனைவரின் சம்பளச் சான்றிதழையும் கொடுத்து, வீட்டுக் கடன் வாங்கும்போது கடனைக் கட்டும் கால அளவும் குறைவாக இருக்கும். இதனால், வட்டிக்குச் செல்லும் தொகை வெகுவாகக் குறையும். வீட்டின் பென்ஷன் வாங்கும் பெற்றோர், தாத்தா பாட்டி இருந்து அவர் களின் வயது 70-க்குள் இருந்தால் அவர்களின் பென்ஷன் தொகையையும் கடன் தொகையை அதிகரிக்க பயன்படுத்திக் கொள்ள முடியும்.

வீட்டுக் கடனை பெண்கள் வாங்கும்போது அல்லது வீட்டுக் கடன் வாங்கும்போது பெண்களையும் சேர்த்துக் கொண்டால், வீட்டுக் கடனுக்கான வட்டி யில் 0.05% சலுகை இருக்கிறது.

திரும்பக் கட்டும் காலம்...

கடனைத் திரும்பக் கட்டும் காலத்தை அதிகரிப்பதன் மூலம் மாதத் தவணை குறையும். இந்த நிலையில், வீட்டுக் கடனை அதிகரித்து தர வங்கிகள், வீட்டுவசதி நிறு வனங்கள் ஒப்புக்கொள்ளும். ஏற்கெனவே இருக்கும் அனைத்துக் கடன்களையும் அடைத்துவிட்டு, வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது கடனைத் திரும்பிக் கட்டும் தகுதி அதிகரிக்கும். அப்போது கூடுதல் தொகை கடனாக இருக்கும். சிலர், கார் கடன் அல்லது நுகர் வோர் பொருள்களுக்கான சில இ.எம்.ஐ-களைக் கட்டி வரும் நிலையில், வீட்டுக் கடனுக்கு விண்ணப்பம் செய்வார்கள். இந்த இ.எம்.ஐ-கள் வீட்டுக் கடனுக்கான தகுதியைக் குறைத்துவிடும்.

வருமான ஆதாரம் கொடுங்கள்...

முடிந்தளவு அனைத்து வருமான ஆதாரங்களையும் கொடுங்கள். மாதச் சம்பளம் வாங்குபவர் எனில், அவரின் சம்பளம், அவருக்குக் கிடைக் கும் போனஸ், வீட்டு வாடகை வருமானம் ஏதாவது வந்தால், முதலீட்டின் மூலம் வருமானம் வந்தால் அவற்றை யும் வருமான ஆதாரமாகக் கொடுங்கள்.

சுய தொழில் செய்பவர் களுக்கும் இது போன்ற வருமானங்களைக் குறிப் பிடுங்கள். இப்படிச் செய்யும் போது கடனைத் திரும்பக் கட்டும் தகுதி அதிகரித்து அதிக கடன் கிடைக்கும்.

வீட்டுக் கடன் அதிக அளவில் கிடைக்காமல் போவதற்கு கடன்தாரரின் வயதும் ஒரு காரணமாக இருக்கிறது. பொதுவாக, 25 - 30 வயதில் வீடு வாங்க நினைத்தால் மாதச் சம்பளத் தைப்போல 70 மடங்கு தொகை வீட்டுக் கடனாக கிடைக்கும். 45 வயதுக்குகீழ் எனில், சம்பளத்தைப் போல 50 - 60 மடங்கு வரை கிடைக் கும். 45 வயதுக்கும் அதிகம் மற்றும் சுயதொழில் செய்பவர் எனில், நம் ஆண்டு வருமானத் தைப் போல 40 - 50 மடங்கு கிடைக்கும்.

வீட்டுக் கடன்: அதிக தொகை கடனாகப் பெற என்ன செய்ய வேண்டும்?

டவுண் பேமென்ட்...

சில பில்டர்கள் / புரொ மோட்டர்கள், ‘வீட்டுக் கடனுக்கான டவுண் பேமென்டையும் நாங்களே தருகிறோம்’ என்பார்கள். அதாவது, 100% தொகையையும் கடனாக வாங்க யோசனை சொல்வார்கள். பில்டர், வாடிக்கையாளரை எப்படி யாவது வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தில் கடன் வாங்க வைத்துவிடுவார். ஒரு பக்கம், பில்டரின் கடனுக்குத் தவணை கட்ட வேண்டிவரும். இன்னொரு பக்கம், வங்கிக்கு தவணை கட்ட வேண்டியிருக்கும்.

இது போன்ற திட்டங்களில் வீட்டின் மதிப்பு மிகவும் அதிகமாக காட்டப்பட்டு, அதிக தொகை கடனாக வாங்கப்பட்டு டவுண் பேமேன்ட் ஈடுகட்டப்படுவதும் நடக்கிறது. இது மாதிரியான கவர்ச்சிகரமான திட்டத்தில் சிக்காமல், எப்போதும் டவுண் மேமேன்ட் தொகையை சேர்த்து வைத்துக்கொண்டுதான் வீட்டுக் கடன் வாங்குவது நல்லது.

விதிமுறை விலக்கு…

வீட்டின் மதிப்பு விலை அதிகமாக இருந்தால், சம்பளம் அதிகமாக அல்லது உயர்பதவி வகித்தால் நிதி நிறுவனங்கள் விதிமுறைகளைத் தளர்த்தி கடன் வழங்க முன்வருகின்றன. குடும்பச் செலவுக்கு 50% தொகை வேண்டும் என்பது பொதுவான கணக்கீடு. மாதச் சம்பளம் ரூ.50,000 எனில், குடும்பச் செலவுக்கு ரூ.25,000 என்பது சரியாக இருக்கும். இதுவே மாதச் சம்பளம் ரூ.2 லட்சம், குடும்பச் செலவுக்கு மாதம் ரூ.1 லட்சம் செலவிட வேண்டிய அவசியமில்லை. இந்த நிலையில், அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு சம்பளத்தில் 50% என்பதைத் தாண்டி 60%, 70% தொகைகூட வீட்டுக் கடன் வழங்கப்படும்.

மேலும், வீட்டில் மேற்கொள்ளும் அலங்கார வேலைகள், அலமாரி மர வேலைப்பாடுகள் போன்ற இதர வேலைகளுக்கான செலவுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப் பட்டு அந்தத் தொகைக்கும் கடன் பெறலாம். இதன் மூலம் அதிக தொகை கடனாகக் கிடைக்கும்.

ஆரம்ப ஆண்டுகளில் வீட்டுக் கடன் மாதத் தவணை குறைவாக இருப்பதுபோலவும், அடுத்து, சம்பளம் அதிகரிக்கும்போது இ.எம்.ஐ அதிகரிப்பது போலவும் கடன் வாங்கி னால் கடன் தொகையை அதிகரிக்க முடியும்.

வீட்டின் மதிப்பில் சுமார் 70% தொகையைக் கடனாக வாங்குவது பல வகையில் நல்லது. டவுண் பேமென்டை சேர்த்து வைத்திருந்தால் அது மிகச் சிறப்பாகும்.

(சொந்த வீட்டை வாங்குவோம்)

கூட்டுறவு வங்கிகளில் வீட்டுக் கடன் வரம்பு அதிகரிப்பு..!

இந்தியாவில் நகர்புற கூட்டுறவு வங்கிகளில் (urban cooperative banks) ரூ.100 கோடிக்கு கீழே நிகர சொத்து மதிப்பு கொண்டவைகளில் வீட்டுக் கடன் வரம்பு, ரூ.30 லட்சத்திலிருந்து 2 மடங்கு உயர்த்தி, ரூ.60 லட்சமாக ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.

இதுவே ரூ.100 கோடிக்கு முதல் 10,000 கோடி வரை நிகர சொத்து மதிப்பு கொண்டவைகளில் வரம்பு ரூ.70 லட்சத்திலிருந்து 1.40 கோடியாக அதிகரித்துள்ளது. இவற்றின் மூலம் வீட்டுக் கடன் தேவை முழுமையாக பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.