பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வயதானவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் வீட்டுக் கடன் வாங்க முடியுமா?

வீட்டுக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக் கடன்

கைகொடுக்கும் வீட்டுக் கடன்! -18

சொந்த வீடு என்பது அனைவரின் வாழ் நாள் கனவாக இருக்கிறது. இது சிலருக்கு இளம் வயதிலேயே (25 முதல் 40 வயது) வாய்த்துவிடுகிறது. பலருக்கு நடுத்தர வயதில் (41 முதல் 50 வயது) சொந்த வீடு கிடைத்து விடுகிறது. இன்னும் சிலருக்கு வயதான மற்றும் பணி ஓய்வுக்காலத்தில்தான் (51 வயதுக்கு மேல்) சொந்த வீட்டில் வசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது.

எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், 
https://winworthwealth.com/
எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், https://winworthwealth.com/

எந்த வயதிலும் வீட்டுக் கடன்...

நம்மில் பெரும்பாலானோர் 50 வயதுக்கு மேல் வீட்டுக் கடன் கிடைக்காது என நினைத்துக்கொண்டிருக்கிறோம். இது மிகவும் தவறான எண்ணமாகும். கடனைத் திரும்பக் கட்டும் திறன் இருந்தால் எந்த வயதிலும் வீட்டுக் கடன் வழங்க வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் தயாராக இருக்கின்றன.

பலர் அரசு வேலைகளில் இருந்திருப்பார்கள். அவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வேறு ஊருக்கு வேலை மாறும் என்பதால் சொந்த வீடு வாங்காமல் இருந்திருப்பார்கள். இதே போல் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணி புரிந்தவர்கள் நகரத்துக்குள் வாடகை வீட்டில் வசிந்து வந்திருப் பார்கள். அவர்கள் பணி ஓய்வின்போது சொந்த வீடு வாங்கத் திட்டமிடுகிறார்கள்; வீட்டுக் கடன் வாங்கும் சூழ்நிலை காணப்படுகிறது.

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 50 ப்ளஸ் (50 Plus) என்கிற பெயரில் வீட்டுக் கடனை வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு கட்ட, வீடு வாங்க கடன் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு பணி ஓய்வுக்குப் பிறகு பென்ஷன் கிடைக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும். மாதச் சம்பளக்காரர்களுக்கு, குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படுகிறது.

50 ப்ளஸ் வீட்டுக் கடனை அதிகபட்சம் 20 ஆண்டுகளுக்கு திரும்பக் கட்டுவது போல் வாங்கலாம். அதாவது 70 வயது வரைக்கும் இந்தக் கடனைத் திரும்பக் கட்டலாம். வீடு கட்டுவதாக இருந்தால் செலவில் 85% வரைக்கும் கடன் கிடைக்கும். வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதாக இருந்தால் அதன் மதிப்பில் 80 சதவிகித தொகை கடனாகக் கிடைக்கும்.

வயதானவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் வீட்டுக் கடன் வாங்க முடியுமா?

எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ்..!

ஓய்வூதியர்களுக்கு எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம், வீட்டுக் கடன் வழங்குகிறது. இந்தக் கடன் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. கடனை 15 ஆண்டுகள் வரை அதிகபட்சம் 70 வயது வரை கட்ட அனுமதிக்கப்படுகிறது. வீடு கட்டவும் வாங்கவும் கடன் கொடுக்கப்படுகிறது.

எஸ்.பி.ஐ, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, பி.என்.பி ஹவுஸிங் ஃபைனான்ஸ், எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை மூத்த குடிமக்களுக்கு வீட்டுக் கடன் வழங்குகின்றன. எந்த வங்கியில் பென்ஷன் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவது எளிதாகும்.

எஸ்.பி.ஐ-யில் அதிகபட்சம் 70 வயது வரைக்கும் வீட்டுக் கடன் வாங்கலாம். கடனை 75 வயது வரை அடைக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த வங்கியில் கடன் தொகை, திரும்பச் செலுத்தும் தகுதி, கடன் வாங்குபவர் கடன் வரலாறு அடிப்படையில் வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறது. பேங்க் ஆஃப் இந்தியாவிலும் கிட்டத்தட்ட இதே விதிமுறைகள் தான் பின்பற்றப்படுகின்றன.

பேங்க் ஆஃப் பரோடாவில் அதிகபட்சம் 70 வயது வரைக்கும் வீட்டுக் கடன் வாங்கலாம். கடனை 78 வயது வரை அடைக்க அனுமதிக்கப்படுகிறது. பி.என்.பி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் மூத்த குடி மக்களுக்கு அதிகபட்சம் 70 வயது வரைக்கும் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. கடனை 75 வயது வரை அடைக்கலாம்.

மூத்த குடிமக்களுக்கு வீட்டுக் கடன் கொடுக்க இரண்டு முக்கிய காரணங்கள்...

பலர் 60 வயது வரைக்கும், அதாவது பணி ஓய்வு வரைக்கும் சொந்த வீடு வாங்காமல் இருப்பார்கள். இது போன்றவர் களுக்கு வீடு வாங்க, வீடு கட்ட கடன் கொடுப்பது மிகவும் ரிஸ்க் என்றாலும், பல வங்கிகள் இவர்களுக்கு வீட்டுக் கடன் வழங்குகின்றன. இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை குறிப்பிடலாம்.

ஒன்று, மனை மற்றும் வீட்டை அடமானம் வைத்து இந்தக் கடன் வாங்கப்படுவது, இரண்டாவது வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் வருமானம் வந்துகொண்டிருப்பது. மூத்த குடிமக்களுக்கு என சிறப்பு வீட்டுக் கடன் திட்டங்கள் இருக்கின்றன.

வங்கிச்சாரா நிதி நிறுவனங் கள் (NBFC) கடனைத் திரும்பக் கட்டும் தகுதி இருக்கும் பட்சத் தில் மூத்த குடிமக்களுக்கு 70, 75 வயது வரைக்கும்கூட வீட்டுக் கடன் வழங்குகின்றன.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

மூத்த குடிமக்களுக்கான வீட்டுக் கடனில் ரிஸ்க் அதிகம் இருப்பதால் வழக்கமான வீட்டுக் கடனுக்கான வட்டியை விட சிறிது அதிக வட்டி இருக்கும். மேலும், வீடு வாங்குபவர் கையி லிருந்து செலுத்தும் தொகை வழக்கமான கடனைவிட அதிக மாக இருக்கும். பொதுவாக, வீட்டுக் கடன் வாங்குபவர் கையிலிருந்து செலுத்தும் தொகை, வீட்டின் மதிப்பில் 20 சதவிகிதம் என்றால் மூத்த குடிமக்கள் கையிலிருந்து செலுத்தும் பணம் 30 - 35 சதவிகிதமாக இருக்கும்.

இளைஞர்களுக்கு வீட்டுக் கடன் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரைக் கும் கட்ட அனுமதிக்கப்படும். மூத்த குடிமக்கள் வீட்டுக் கடனை 15 - 20 ஆண்டுக்குள் அடைத்து விட வேண்டும்.

வழக்கமாக வீட்டுக் கடன் வாங்குபவருக்கு மாதம் ரூ.20,000 - ரூ.25,000 சம்பளம் இருக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு இதே அளவு பென்ஷன் கிடைத்தாலும் வீட்டுக் கடன் கிடைக்கும்.

பொதுவாக, கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால்தான் வீட்டுக் கடன் கிடைக்கும். இது மூத்த குடிமக்களுக்கும் பொருந்தும். கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் 800, 850 என்பதுபோல் இருந்தால் வட்டி குறைவாக இருக்கும்.

கூடுதல் கவனம் தேவை...

பணி ஓய்வுக்காலத்தில் பலருக் கும் பென்ஷன் என்பது பெரிய தொகையாக இருக்காது. அது போன்றவர்கள் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கும்போது கடனைத் திரும்பிக் கட்டுவதில் சிக்கலை உருவாக்கக்கூடும்.

தற்போது கிரெடிட் ஸ்கோர் மிக அதிகமாக இருந்தால் வீட்டுக் கடன் 7.90 சதவிகித வட்டிக்கு வழங்கப்படுகிறது. ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் வாங்கி, அதை 30 ஆண்டுகளில் திரும்பக் கட்டுவது என்றால் மாதத் தவணை ரூ.36,340 ஆகும். இதுவே இந்தக் கடனை 15 ஆண்டுகளில் திரும்பக் கட்டினால் மாதத் தவணை ரூ.47,500 ஆகும்.

வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கும் மூத்த குடிமக்கள் கையிலிருந்து போடும் தொகை சுமார் 40 - 50 சதவிகித அளவுக்கு அதிகமாக இருந்தால் நல்லது. அப்போது கடன் தொகை குறைவாக இருக்கும்; மாதம் கட்ட வேண்டிய தவணைத் தொகையும் குறைவாக இருக்கும். இது தவிர, இணை விண்ணப்பதாராக (co-applicant) வேலை பார்க்கும் துணைவர், மகன், மகளை சேர்த்துக்கொள்ளலாம். இப்படிச் செய்யும்போது கடனுக்கான தகுதி அதிகரிக்கும்.

மூத்த குடிமக்களுக்கும் திரும்பக் கட்டும் வீட்டுக் கடன் அசலில் 80சி பிரிவின் கீழ் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை இருக்கிறது. மேலும் வட்டியில் நிதி ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரிச் சலுகை இருக்கிறது.

எண்டோவ்மென்ட் ஆயுள் காப்பீடு பாலிசி, வேறு சொத்தின் ஆவணங்களைக் கொடுக்கும்போது கடனுக் கான தகுதி அதிகரித்து கடன் விரைவாகவும் உறுதியாகவும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

சிக்கல்கள்...

மூத்த குடிமக்கள் 65 - 70 வயதுக்குள் கடனை அடைத்து விட வேண்டும் என்று வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங் களும் எதிர்பார்க்கின்றன. இதனால், மாதத் தவணை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் நிலை காணப்படு கிறது. எனவே, இதற்கு ஏற்ப திட்டமிட்டு, பட்ஜெட் மற்றும் திரும்பக் கட்டும் தொகைக்கு ஏற்ப வீட்டின் அளவை தேர்வு செய்வது நல்லதாகும்.

பொதுவாக, வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ மாதச் சம்பளத்தில் சுமார் 40 சதவிகிதத்துக்கு மேல் செல்லக் கூடாது என்பார்கள். பென்ஷனில் இதைவிட குறைவாக இ.எம்.ஐ இருப்பதுபோல் பார்த்துக்கொள்வது நல்லதாகும்.

மேலும், 50, 55 வயதில் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் 58 அல்லது 60 வயதில் பணி ஓய்வுபெறும் நிலையில் வீட்டுக் கடனில் பாக்கி இருக்கும் தொகையில் 40 சதவிகித தொகை செலுத்தச் சொல்வார்கள். மீதித் தொகையை சுமார் 15 ஆண்டுகள் அதாவது 75 வயது வரை செலுத்த அனுமதிப்பார்கள். எனவே, வயதான பிறகு வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்க வேண்டும் எனத் திட்டமிடுபவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் கணக்கிட்டு வீட்டுக் கடன் வாங்குவது நல்லது.

(சொந்த வீட்டை வாங்குவோம்)

தேவையான ஆவணங்கள்..!

அடையாளத்துக்கு ஆதார், பான், பாஸ்போர்ட், வாக்களாளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்று தேவைப்படும்.

அடுத்து முகவரி ஆதாரத்துக்கு ஆதார், பாஸ்போர்ட், வாக்களாளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்று தேவைப்படும். பொதுவாக, ஆதார், பான், குடும்ப அட்டை ஆகிய ஆவணங்கள் அவசியம் தேவைப்படும்.

வருமான ஆதாரமாக வரிக் கணக்கு தாக்கல் செய்த விவரம் அல்லது படிவம் 16 அல்லது கடந்த மூன்று மாத வங்கிக் கணக்கு அறிக்கை ஆகியவை தேவைப்படும். பென்ஷன் வாங்குபவர் எனில் கடந்த 6 மாத வங்கிக் கணக்கு விவரம் கொடுக்க வேண்டி வரும்.