Published:Updated:

சொத்து வாங்க முன்பணம்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

ரியல் எஸ்டேட்
பிரீமியம் ஸ்டோரி
ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

சொத்து வாங்க முன்பணம்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

ரியல் எஸ்டேட்

Published:Updated:
ரியல் எஸ்டேட்
பிரீமியம் ஸ்டோரி
ரியல் எஸ்டேட்

மனை மற்றும் வீடு வாங்கும் போது, நீங்கள் வாங்குவதை உறுதிப்படுத்துவதற்காக லே அவுட் டெவலப்பர் மற்றும் பில்டர் முன்பணம் (Advance Payment) கேட்பார். அப்படி முன்பணம் கொடுக்கும்போது எதிர்காலத்தில் சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.

சௌ.சிவகுமார் 
நிறுவனர் 
www.bestservicerealty.in
சௌ.சிவகுமார் நிறுவனர் www.bestservicerealty.in

சொத்தை விற்பவர் மற்றும் வாங்குபவர் இடையே சொத்து கைமாறுவது குறித்த இறுதி நிலை உருவானதும் அதை உறுதிப்படுத்த சொத்தை வாங்குபவர் கொடுக்கும் பணம்தான் முன்பணம் ஆகும். இப்படி அட்வான்ஸ் பேமென்ட் கொடுப்பது சட்டப்படியான விஷயம்தான்.இந்த முன்பணத் தொகை சொத்தின் மதிப்பில் சிறிய தொகையாக இருக்கும். இதை டோக்கன் பணம் (Token Money), அட்வான்ஸ் டெபாசிட் (Advance deposit) அல்லது எர்னஸ்ட் டெபாசிட் (Earnest deposit) எனச் சொல்வார்கள்.

எப்போது முன்பணம் கொடுக்க வேண்டும்?

சொத்தை வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே வாய்வழி ஒப்பந்தம் (Verbal Agreement) ஏற்படும் நிலையில் முன்பணம் கொடுக்க வேண்டிவரும். இந்த நிலையில் சொத்து தொடர்பான ஆவணங்கள் எதுவும் கைமாறி யிருக்காது. இந்திய மற்றும் தமிழக ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரையில் இதுகுறித்த நிலையான விதிமுறைகள் எதுவும் இல்லை.

சொத்து வாங்க முன்பணம்...
கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

எவ்வளவு முன் பணம் கொடுக்க வேண்டும்?

சொத்து வாங்குவதற்கு எவ்வளவு முன்பணம் கொடுக்க வேண்டும் என்பதில் 2016–ம் ஆண்டு ரெரா சட்டம் (ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் - Real Estate Regulatory Authorities - RERA),) வருவதற்கு முன்பு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. பலர் பாதி பணம்கூட பத்திரப் பதிவுக்கு முன்னால் வாங்கிய நிலை இருந்தது.

தற்போது ரெரா சட்டப்படி சொத்தின் மதிப்பில் 10 சதவிகிதத் தொகையை மட்டும்தான் சொத்து வாங்குபவர் முன்பணமாகக் கொடுக்க வேண்டும். ஆனால், இந்த 10 சதவிகிதம் என்பது கட்டாயமில்லை. இது பில்டர்கள் மற்றும் தனிநபர்களைப் பொறுத்து மாறுபடும். தனிப்பட்ட நபர்களிடமிருந்து மனை அல்லது வீடு வாங்கும்போது அவர்கள் இதைவிட குறைவாகவோ அதிகமாகவோ கேட்கக்கூடும்.

உதாரணத்துக்கு, பில்டர் ஒருவரிடமிருந்து ஒருவர் வீட்டுக் கடன் மூலம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றை வாங்கத் திட்டமிட்டிருக்கும் நிலையில் வீட்டின் மதிப்பில் சுமார் 20 சதவிகிதம், அதாவது ரூ.6 லட்சம் கையிலிருந்து போட வேண்டியிருக்கும். இந்த நிலையில் பில்டர் ரூ.1 லட்சம் அல்லது ரூ.5 லட்சம் வரைக்கூட டோக்கன் அட்வான்ஸ் கேட்கக்கூடும்.

கூடுமானவரைக்கும் பில்டர்கள் அதிக தொகையை முன்பணமாகப் பெறவே முயல்வார்கள். இந்தத் தொகை என்பது வாங்கப்போகும் சொத்துக்குக் கொடுக்க வேண்டிய பணத்தின் ஒரு பகுதியாகும். இங்கே ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கு ரூ.5 லட்சம் முன்பணம் கொடுக்கும்பட்சத்தில் மீதியுள்ள ரூ.25 லட்சத்தை பத்திரப் பதிவின்போதோ அதற்கு முன்போ கொடுக்க வேண்டும்.

வீட்டுக் கடன் மூலம் மனை, வீடு வாங்கும்போது வங்கி யானது பில்டர் அல்லது சொத்தை விற்பவரின் வங்கிக் கணக்கில்தான் பணத்தை வரவு வைக்கும். அல்லது அவர்கள் பெயரில்தான் காசோலை கொடுக்கும். அந்த வகையில் எவ்வளவு கடன் வாங்கப் போகி றீர்கள் என்பதைப் பொறுத்து முன்பணம் கொடுங்கள்.

மிக அதிக தொகை முன்பணம் கொடுத்தால், கடன் தொகையை பில்டருக்கு வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் கொடுத்த பிறகு, அவரிடமிருந்து கடன் தொகை போக மீதித் தொகையை நீங்கள் வாங்க வேண்டியிருக்கும்.

முன்பணம் திரும்பக் கிடைக்குமா?

சொத்து வாங்குபவர் தனது வாய்மொழி வாக்குறுதியிலிருந்து பின்வாங்கினால், முன்பணத்தை இழக்க நேரிடும். பில்டர் / விற்பனையாளர் முன்பணத்தைத் தர மறுப்பார்.

‘‘வேறு பலர் சொத்தை வாங்க கேட்டனர். நீங்கள் முன்பணம் கொடுத்து உறுதிப்படுத்தியதால், அவர்களுக்கு அந்தச் சொத்தை விற்க முடியவில்லை. மீண்டும் சொத்தை விற்க விளம்பரம் செய்ய வேண்டும்’’ எனப் பல காரணங்களைச் சொல்லி முன்பணத் தைத் தரமறுப்பார்கள். அதேநேரம், சொத்த விற்பவர், ஏதாவது காரணத்தால் சொத்தை பதிவுசெய்து கொடுக்கா விட்டால், சொத்தை வாங்க முன்பணம் கொடுத்தவருக்கு பணத்தைத் திருப்பித் தர வேண்டும்.

எப்போது முன்பணம் கொடுப்பது?

அட்வான்ஸ் பேமென்ட் பணத்தை எப்போது கொடுப்பது என்பது மிக முக்கியமாகும். சொத்தை வாங்குபவர் முன்பணத்தைத் திரும்பப் பெறுவதை உறுதிசெய்ய எந்த வழியும் இல்லை. எனவே, முன்பணம் கொடுத்த நிலையில் சொத்த வாங்க முடியாமல்போனால் முன்பணத்தை இழக்க நேரிடும். எனவே, வாங்குபவர் முன் பணத்தொகையை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க முயல வேண்டும்.

அடுத்து சொத்தை வாங்குவதற்கான பண ஏற்பாடு, சொத்தைப் பதிவு செய்வதற்குத் தேவையான ஆதார், பான் கார்டுகள் போன்றவற்றை எல்லாம் சரியாக ஏற்பாடு செய்த பிறகே, முன்பணம் கொடுக்க வேண்டும். வீட்டுக் கடன் மூலம் வீட்டை வாங்கும் பட்சத்தில், வீட்டுக் கடன் விண்ணப்பத்தை வங்கி ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்காத வரையில், முன் பணம் கொடுப்பது அதிக ரிஸ்க்காக இருக்கும்.

எப்படி முன்பணம் கொடுப்பது?

எந்தக் காரணம் கொண்டும் முன்பணத்தை ரொக்கமாகக் கொடுக்க வேண்டாம். வங்கி வழியாக காசோலை, கேட்பு காசோலை, ஆன்லைன் பரிவர்த்தனை, மொபைல் வழி பரிவர்த்தனை ஆகிய ஏதாவது ஒரு வழியில் மேற்கொள்வது நல்லது. இப்படி செய்யும்பட்சத்தில் ஏதாவது பிரச்னை வரும்போது முன்பணமே தரவில்லை என யாரும் சொல்ல முடியாது.

சொத்து வாங்க முன்பணம்...
கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை

 சொத்தை வாங்க முன்பணம் கொடுக்கும்போது பில்டர் அல்லது தனிநபர், ரசீது அல்லது காகிதத்தில் எழுதிக்கொடுத்தாலும் கட்டாயம் முத்திரைத் தாளில் எழுதி, இரு சாட்சிகளின் கையொப்பம் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்கும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

 வாங்குபவர் மற்றும் விற்பவருக்கு இடையிலான ஒப்பந்தம் பதிவு செய்யப்படவில்லை என்றால் அது வெறும் ஆவணம்தான். பதிவு செய்யப்படும் ஆவணம் என்கிறபோது சொத்தின் மதிப்பில் குறைந்தபட்சம் 10% முன் பணமாகக் கொடுத்திருக்க வேண்டும்.

 முன்பணம் வாங்கிக்கொண்டு தனிநபர்கள் சொத்தை விற்கவில்லை, முன்பணத்தையும் திரும்பத் தரவில்லை; அல்லது சொத்தின் விலை திடீரென அதிகரித்திருக்கும் நிலையில் அல்லது வேறு ஒருவர் அதிக தொகை கொடுக்கும் முன்வரும் நிலையில் பணத்தை திருப்பித் தருகிறேன் என்றால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சொத்தை உங்களுக்குப் பதிவு செய்ய வைக்கலாம்.

 ரெரா அமைப்பில் பதிவு செய்யப் பட்டிருக்கும் மனை, வீடு என்றால் அதனிடம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பார்கள்.

புது வீடாக இருந்தாலும் பழைய வீடாக இருந்தாலும் சொத்து வாங்கும் முன் அடிப்படையான பல விஷயங் களை அலசி ஆராய்ந்து தெளிவுபடுத்திக் கொள்கிறோம். அத்துடன் முன்பணம் கொடுப்பதற்கு முன்னும் மேற்கண்ட விஷயங்களை மனதில்கொள்வது சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism