Published:Updated:

‘REIT’ இன்வெஸ்ட்மென்ட்... சிறிய முதலீட்டில் பெரிய லாபம் தரும் ரியல் எஸ்டேட் திட்டம்!

‘REIT’ இன்வெஸ்ட்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
‘REIT’ இன்வெஸ்ட்மென்ட்

கவர் ஸ்டோரி

‘REIT’ இன்வெஸ்ட்மென்ட்... சிறிய முதலீட்டில் பெரிய லாபம் தரும் ரியல் எஸ்டேட் திட்டம்!

கவர் ஸ்டோரி

Published:Updated:
‘REIT’ இன்வெஸ்ட்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
‘REIT’ இன்வெஸ்ட்மென்ட்

வி.மாதவன்

நம் நாட்டில் ரியல் எஸ்டேட் என்பது அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு முதலீடாகவே இருந்துவந்துள்ளது. மண், பொன் என்பதில் முதலிடத்தில் இருப்பது ரியல் எஸ்டேட்தான். இதற்குக் காரணம், மூலதனத்தைப் பன்மடங்கு பெருக்கக்கூடிய ஒரு முதலீடாக இதைப் பலரும் பார்க்கின்றனர். அதைத் தாண்டி வாடகை மூலம் தொடர் வருமானம் கொடுக்கும் வாய்ப்பும் இருப்பதால், ஓய்வுக்காலத்துக்கு நிரந்தர வருமானம் வரும் வகையில் இதில் முதலீடு செய்வோரும் உண்டு.

ஆனால், ரியல் எஸ்டேட் என்பது 30, 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையில் இல்லை. அன்றைக்கு சில ஆயிரம் கொடுத்து வாங்கிய இடங்கள் இன்றைக்கு லட்சங்களில் ஏன், கோடிகள் தந்துதான் வாங்க வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு ரியல் எஸ்டேட்களின் விலை மிகப் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது.

இந்த விலையேற்றம் என்பது ஒரு முக்கியமான பிரச்னை எனில், மனையோ/வீடோ வாங்கிய பின் அதைப் பராமரிக்க ஆகும் செலவு, வில்லங்கம் தொடர்பான பிரச்னைகள் பாது காப்பு என பல விஷயங்களையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. முக்கியமான இன்னொரு விஷயம், வாங்கிய வீடு அல்லது மனையை விற்க நினைத்தால் உடனே விற்க முடியாது.

இதனால், ஓரளவுக்குப் பணம் வைத்திருப் பவர்கள்கூட ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யத் தயங்கும் நிலை உருவாகிவிட்டது.

ஆனால், இத்தனை பிரச்னைகளுக்கும் ஒரு எளிய தீர்வாகவும், நினைத்த மாத்திரத்தில் பணமாக்கக்கூடிய வகையிலும், பராமரிப்பு பற்றிய கவலையே இல்லாமலும், வாடகை வருமானத்தைவிட கொஞ்சம் அதிக வருமானம் தரக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்ட முதலீட்டுத் திட்டம்தான் சமீப காலமாக வேகமாக பிரபலமாகி வரும் ரெய்ட் (REIT). அதாவது, Real Estate Investment Trust என்பதன் சுருக்கம்தான் REIT. பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டுத் திட்டம் இது. சமீப காலமாக ரியல் எஸ்டேட் பிரியர்கள் மட்டுமல்லாமல், சாதாரண முதலீட்டாளர் களும் இந்த முதலீட்டுத் திட்டத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.

‘REIT’ இன்வெஸ்ட்மென்ட்... சிறிய  முதலீட்டில்  பெரிய  லாபம்  தரும்
ரியல்  எஸ்டேட்  திட்டம்!

ரெய்ட் எப்படி இயங்குகிறது?

ரெய்ட் என்பது பலரிடமும் நிதி திரட்டப்பட்டு அந்த நிதியைக் கொண்டு தொடர் வருவாய் ஈட்டக்கூடிய ரியல் எஸ்டேட் திட்டங்களில் முதலீடு செய்கிறது. அந்த ரியல் எஸ்டேட் திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை முதலீட்டாளர்களுக்குப் பிரித்துத் தருகிறது.

ஒரு சின்ன உதாரணம் மூலம் இதைப் புரிந்துகொள்வோம். ரூ.100 கோடி செலவில் ஒரு வணிக வளாகம் கட்ட முடிவு செய்கிறார்கள். இந்த ரூ.100 கோடியை ஒருவர் மட்டுமே முதலீடு செய்யாமல், 10,000 பேரிடம் ரூ.1 லட்சம் வீதம் வசூலித்து அந்த வணிக வளாகத்தைக் கட்டுகிறார்கள். இந்த வணிக வளாகத்தின் மூலம் கிடைக்கும் வருமானமானது அதைக் கட்டுவதற்காக பணம் தந்த 10,000 பேருக்கும் சரிசமமாகப் பிரித்துத் தருவதுதான் ரெய்ட் திட்டத்தின் அடிப்படை. மியூச்சுவல் ஃபண்டுகள் பொதுமக்களிடம் பணம் திரட்டி, பங்குகளில் முதலீடு செய்து, அதன் பயனை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிற மாதிரிதான், ரெய்ட் திட்டமும் செயல்படுகிறது.

ரெய்ட் திட்டத்தில் ஒரு சிறப்பம்சம் என்னவெனில், இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட முதலீடானது பல யூனிட்டுகளாகப் பிரிக்கப்பட்டு, பங்குச் சந்தை யில் வர்த்தகமாகின்றன. பங்குச் சந்தையில் பங்குகள் வர்த்தகம் ஆவதுபோல, இந்த யூனிட்டுகளின் விலை உயரும் அல்லது இறங்கும். நமக்குத் தேவை எனில், இந்த யூனிட்டு களை தொடர்ந்து வைத்திருக் கலாம். நமக்குப் பணம் தேவை எனில், இந்த யூனிட்டு களை எளிதில் விற்றுவிட்டு, முதலீட்டைப் பணமாக்கிக் கொள்ளலாம்.

காகித ரியல் எஸ்டேட்...

முன்பு தங்கத்தை நகை களாக மட்டுமே நாம் வாங்கி னோம். இன்றைக்கு தங்கத்தை நகைகளாக வாங்காமல், அதைப் பத்திரங்களாக வாங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். ‘காகிதத் தங்கம்’ (paper gold) என்று அழைக்கப் படும் கோல்டு இ.டி.எஃப் மற்றும் சாவரின் கோல்டு பாண்ட் திட்டத்தில் நீண்ட காலத்தில் முதலீடு செய்வதன் மூலம் தங்கத்தின் விலை யேற்றத்தையும் நம்மால் அனுபவிக்க முடியும். அதே சமயம், செய்கூலி, சேதாரம் பிரச்னைகளைத் தவிர்த்து, பாதுகாப்பு குறித்த கவலையும் இல்லாமல் இருக்கலாம். தங்கத்தைக் ‘காகிதத் தங்கமாக’ வாங்குவது போல, ரியல் எஸ்டேட்டை நேரடியாக வாங்காமல், ‘காகித ரியல் எஸ்டேட்’டாக வாங்குவது குறைந்த அளவிலும் முதலீடு செய்யும் வசதிதான் ரெய்ட் திட்டம். இந்தக் ‘காகித ரியல் எஸ்டேட்’டில் முதலீடு செய்த பின், பராமரிப்பு, பாதுகாப்பு போன்றவற்றை பற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

‘REIT’ இன்வெஸ்ட்மென்ட்... சிறிய  முதலீட்டில்  பெரிய  லாபம்  தரும்
ரியல்  எஸ்டேட்  திட்டம்!

ரெய்ட் திட்டத்தால் கிடைக்கும் நன்மைகள்...

உங்களுடைய முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவில் பங்குகள், தங்கம், பாண்டுகள் இருப்பதுபோல, ரெய்ட் முதலீடும் நிச்சயம் இருக்கலாம்.

ஏனெனில், ரெய்ட் திட்டத் தில் முதலீடு செய்வதில் பல நல்ல பலன்கள் நமக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. சாதாரணமாக, சிறு முதலீட்டாளர்களால் முதலீடு செய்ய முடியாத அதே சமயத்தில், அதிக வருமானம் தரக்கூடிய வர்த்தக வளாகங்களிலும் / மால்களிலும் / சொகுசு விடுதி களிலும் இந்த ரெயிட் திட்டங்கள் மூலம் நம்மால் முதலீடு செய்ய முடிவதுடன், குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய ஒரு திட்ட மாகவும் இது அமைந்துள்ளது. வீடு / மனை வாங்குகிற மாதிரி, லட்சக்கணக்கில் முதலீடு செய்யத் தேவை யில்லை என்பது இதன் சிறப்பு. மேலும், தொடர்ச்சியான வருவாய் தரும் முதலீடாகவும் இது அமையும்.

மூன்று அடுக்கில் செயல்படும் ரெய்ட் திட்டம்...

இந்தியாவில் தற்போது மூன்று ரெய்ட் பங்குகள் பங்குச் சந்தையில் வர்த்தகமாகின்றன. Embassy REIT, Mindspace REIT, Brookfield REIT என்பவைதான் அந்த மூன்று ரெய்ட் பங்குகள்.

செபியின் ஆணைப்படி, இந்தியாவில் ரெய்ட்டுகள் மூன்று அடுக்குக்கூறுகளாக இயங்குகின்றன. முதலில் ஆதரவாளர் (sponsor) ஒருவர் நிதி திரட்டி ரெயிட்டை உருவாக்குவார். அடுத்து, மேனேஜர் அந்த ரெய்ட்டின் வருவாய் ஈட்டக்கூடிய சொத்துகளை வாங்கி உறுதி செய்வார். மூன்றாவதாக, மேலே சொன்ன இந்த இருவரையும் கண்காணிப்பவராக டிரஸ்ட்டி என ஒருவர் இருப்பார்.

உதாரணமாக, இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட எம்பஸி ரெய்ட் திட்டத் துக்கு பிளாக் ஸ்டோன் குழுமமும், எம்பஸி குழுமமும் ஆதர வாளர்களாக இருக் கின்றன. எம்பஸி ஆபீஸ் பார்க்ஸ் மேனேஜ் மென்ட் மேனேஜராகச் செயல்படுகிறது. இறுதி யாக, ஆக்ஸிஸ் டிரஸ்ட்டி நிறுவனம் டிரஸ்ட்டி யாகச் செயல்படுகிறது.

ரெய்ட் ஈட்டக்கூடிய வருவாய்க்கு இதன் மேனேஜர்கள் பொறுப் பாகிறார்கள். ரெய்ட் டின் வருவாயை நிர்வகிப்பதற்காக இவர்கள் இரண்டு விதமான கட்டணம் வசூலிக்கிறார்கள். அவை, ஃபண்ட் மேலாண்மைக் கட்டணம் மற்றும் சொத்துப் பராமரிப்புக் கட்டணம். உதாரணமாக, Mindspace REIT ஃபண்ட் மேலாண்மைக் கட்டணமாக 0.5 சதவிகிதமும், சொத்துப் பராமரிப்புக் கட்டணமாக 3.5 சத விகிதமும் வசூலிக்கிறது. ரெய்ட் பங்குகள் அது நிர்வகிக்கும் சொத்து மதிப்பு உயர்வதன் அடிப்படையிலும், தொடர்ச்சியாக வழங்கக்கூடிய வருவாயின் அடிப்படையிலும் அதன் பங்குகளின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படும். ரெய்ட் அதன் சொத்து மதிப்பை ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறை வெளியிடும்.

‘REIT’ இன்வெஸ்ட்மென்ட்... சிறிய  முதலீட்டில்  பெரிய  லாபம்  தரும்
ரியல்  எஸ்டேட்  திட்டம்!

ரெய்ட் எப்படி வருவாய் வழங்குகிறது?

பொதுவாக, நான்கு வழிகளில் ரெய்ட் திட்டமானது வருமானம் வழங்குகிறது. அவை நிர்வகிக்கும் வர்த்தகச் சொத்து களின் மூலம் வரும் வாடகை வருவாயைப் பகிர்ந்தளிக்கும்; அதன் துணை நிறுவனங்களுக்கு வழங்கிய நிதி மூலம் கிடைக்கப் பெறும் வட்டி வருமானத்தை வழங்குவதன் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தைப் பகிர்ந்தளிக்கும். துணை நிறுவனங் கள் வழங்கும் டிவிடெண்ட் மூலமாகக் கிடைக்கும் வருமானத் தைப் பகிர்ந்தளிக்கும். இறுதியாக, ரெய்ட் நிர்வகிக்கும் சொத்துகளை விற்று வரும் லாபத்தைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் என நான்கு வழிகளில் ரெய்ட் வருமானம் அளிக்கும்.

மற்ற நிறுவனங்களைப் போலவோ, மியூச்சுவல் ஃபண்ட் போலவோ, ரெய்ட் நிறுவனங்கள் பணத்தைக் கையிருப்பாக வைத்திருக்க முடியாது. செபியின் விதிப்படி, இவை ஈட்டும் வருவாயில் குறைந்தபட்சம் 90% பணத்தை முதலீட்டாளர்களுக்கு ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால், ரெய்ட் திட்டங்கள் தற்போது மூன்று மாதத்துக்கு ஒருமுறை தனது வருவாயை முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளித்து வருகின்றன. (ரெய்ட் திட்டங்கள் கடந்த காலத்தில் அளித்த வருமானம் பற்றித் தெரிந்துகொள்ள அட்டவணையைப் பார்க்க)

‘REIT’ இன்வெஸ்ட்மென்ட்... சிறிய  முதலீட்டில்  பெரிய  லாபம்  தரும்
ரியல்  எஸ்டேட்  திட்டம்!
‘REIT’ இன்வெஸ்ட்மென்ட்... சிறிய  முதலீட்டில்  பெரிய  லாபம்  தரும்
ரியல்  எஸ்டேட்  திட்டம்!

வாடகை வருமானம் Vs ரெய்ட் திட்டம் மூலமான வருமானம்...

சாதாரணமாக வாடகை ஈட்டக்கூடிய ஒரு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய வேண்டுமெனில், இன்றைய சூழலில் அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் குறைந்தது ரூ.40 லட்ச மாவது தேவைப்படும். இந்தச் சொத்து வாடகையாக சுமார் ரூ.10,000 - 12,000 வரை மாதம் ஈட்டித் தரலாம். இது உங்கள் மூலதனத்தில் 3 – 3.5% ஆகும். இந்த வாடகை வருவாய்க்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். தவிர, பராமரிப்புச் செலவு எனக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், உங்கள் மூலதனத்தின் வருமானம் சுமார் 2.5% அளவில்தான் இருக்கும். ஆனால், ரெய்ட் மூலம் கிடைக்கும் வருவாய் 6.75% முதல் 8% வரை இருக்கிறது.

வருவாயைத் தீர்மானிப்பவை...

ரெய்ட் திட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வர்த்தக சொத்தும், எதிர் காலத்தில் இணையக்கூடிய சொத்துகளும் அவற்றின் வருமானத்தைத் தீர்மானிக்கின்றன. இந்தச் சொத்துகள் பொதுவாக வர்த்தக நிறுவனங்கள் வாடகைக்கு இருக்கும் வளாகங்களாகவும், மால் களாகவும், சொகுசு விடுதி களாகவும் இருக்கும். இந்த வகையான ரியல் எஸ்டேட் டின் மூலமாகக் கிடைக்கும் வருவாய் பொதுவாக, 8 - 10% இருக்கும். ரெய்ட்டின் மேலாண்மை செலவுகள் போக மீதமுள்ள தொகை முதலீட்டாளர்களுக்கு பகிர்ந் தளிக்கப்படும்.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ரெய்ட்டுக்கு வாடிக்கை யாளர்களாக இருப்பது இவற்றின் தொடர் வரு மானத்தை உறுதி செய்யும். மேலும், இது போன்று தரமான வாடிக்கை யாளர்கள் இருப்பதால், வருமானத்தை சீராக அதிகரிக்கவும் முடியும். மொத்தத்தில் மேலே சொன்ன தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, ரெய்ட்டில் செய்யும் முதலீடு நிச்சயமாக ஒரு தொடர் வருமானத்தைத் தருபவையாக இருக்கும். நீண்ட கால நோக்கில் உங்கள் மூலதனமும் பெருக வாய்ப்புள்ளது.

வர்த்தக வாடகை வருமானம் தரும் வளாகங் களுக்கு இந்தியாவில் அதிக தேவை இருப்பதால், ரெய்ட் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானமாகவும் இருக்கும் எனலாம். அதே சமயம், வணிக வளாகங் களுக்கான தேவை குறையும் போது, ரெய்ட் திட்டங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் குறையலாம் அல்லது எந்த வருமானமும் கிடைக்காமல் போகலாம் என்பதை மறக்கக் கூடாது.

குறைந்தபட்ச முதலீடு வரம்பு குறைப்பு

2019-ல் முதன்முதலில் ரெயிட் திட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதன் முதலீட்டுத் தொகை சிறு முதலீட்டாளர் களுக்கு எட்டாத வகையில் இருந்தது. குறைந்தபட்சமாக, 200 யூனிட்டுகளாக வாங்கும் நிலை இருந்ததால், சிறு முதலீட்டாளர்கள் பெரு மளவில் பங்கு கொள்ளாமல் இருந்தனர். ஆனால், கடந்த 2021 ஆகஸ்டில் இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு குறைந்தபட்சமாக ஒரு யூனிட்கூட வாங்கலாம் என்ற அறிவிப்பு வந்தவுடன் இந்த வகை முதலீட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரி விதிப்பு எப்படி?

ரெய்ட் திட்டத்தில் பல சாதகங்கள் இருந்தாலும், இதன்மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு விதிக்கப் படும் வரியைப் புரிந்து கொள்வது சற்றே கடினம். இந்தியாவில் ரெய்ட் திட்டங்கள் ‘Hybrid pass-through’ என்ற தகுதியின் அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது. அதாவது, ரெய்ட் திட்டம் மூலம் கிடைக்கும் பல வகையான வருமானங் களில் சில வகை வருமானங்களுக்கு வரிகளை ரெய்ட் திட்டத்தை நடத்தும் நிறுவனமே செலுத்திவிடும். மற்றவற்றுக்கு முதலீட்டாளர்கள் செலுத்த வேண்டும்.

உதாரணமாக, ரெய்ட்டின் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் ஒரு சொத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் லாபத் துக்கு ரெயிட் திட்டத்தை நடத்தும் நிறுவனம் முதலீட்டாளர் களுக்குப் பணத்தைத் திருப்பித் தரும் முன்னரே வரி செலுத்த வேண்டும். அதேபோல, தனது துணை நிறுவனங்களின் பங்குகளை விற்று வரும் லாபத்துக்கு ரெய்ட் நிறுவனமே வரி செலுத்த வேண்டும். ஆனால், ரெய்ட் திட்டத்தை நடத்தும் நிறுவனம் வழங்கும் டிவிடெண்ட் மற்றும் வட்டி வருமானத்துக்கு முதலீட்டாளர்கள்தான் வரி செலுத்த வேண்டும்.

மூலதன ஆதாய வரி

முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, ரெய்ட் திட்டமும் பங்குகளைப்போல, பங்குச் சந்தையில் வர்த்தகமாவதால், ரெய்ட் திட்டத்தில் முதலீடு செய்து, மூன்று வருடங்களுக்குப் பிறகு, விற்று லாபம் சம்பாதித்தால் அது நீண்ட கால மூலதன ஆதாயம் எனக் கணக்கிட்டு, அந்த லாபம் வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அந்தத் தொகைக்கு 10% வரி செலுத்த வேண்டியிருக்கும். இதுவே மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே விற்று லாபம் சம்பாதிக்க நேர்ந்தால், அது குறுகிய கால மூலதன ஆதாயம் எனக் கணக்கில் கொண்டு லாபத் தொகையில் 15% வரி செலுத்த வேண்டியிருக்கும்.

ரெய்ட் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி எப்படி?

ரெய்ட் திட்டத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு நான்கு வகைகளில் வருமானம் கிடைக்கிறது. அந்த நான்கு வழிகளில் வரும் வருமானங்களையும் இணைத்து ஒட்டுமொத்த மாகவும் முதலீட்டாளர்களுக்கு வழங்க முடியும். ஆனால், வருவாய் துறை எந்த அடிப்படையில் ஈட்டப்பட்ட பணம் எனத் தெரிந்துகொள்ள விரும்புவதால், எந்தெந்த வருமானத்துக்கு எப்படி வரிப் பிடித்தம் செய்யப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

வாடகை / வட்டி மற்றும் டிவிடெண்ட் வருமானம்

ரெய்ட் திட்டத்தை நடத்தும் நிறுவனமானது, தனது துணை நிறுவனங்களுக்குக் கொடுத்த கடனுக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்தையும், வர்த்தகச் சொத்துகளின் மூலம் வரும் வாடகை வருவாயையும் பகிர்ந்தளிக்கும்போது அது முதலீட்டாளர்களின் வருமானத்துடன் இணைத்து அவர்களின் வருமான வரம்புக்கேற்ப வரி செலுத்த வேண்டும்.

ரெய்ட்டின் துணை நிறுவனங்கள் தங்களது வணிக வளாகங்களிலிருந்து வரும் வருவாயை ரெய்ட்டுக்கு டிவிடெண்டாக வழங்கும். இது போன்று பெறப்படும் டிவிடெண்டுகள் முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் போது, அவை இரு வழிகளில் வரி விதிப்புக்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

டிவிடெண்ட் அளிக்கும் துணை நிறுவனங்கள் இந்திய அரசு கார்ப்பரேட் வரி மீது வழங்கும் சலுகைகளை ஏற்க வில்லை எனில், அவை அளிக்கும் டிவிடெண்டுக்கு வரி கிடையாது. அதே சமயத்தில், கார்ப்பரேட் வரிச் சலுகையைத் தேர்வு செய்திருந்தால், முதலீட்டாளர் கள் பெறும் டிவிடெண்ட் தொகை அவர்களின் வருமானத் துடன் இணைத்து வரி செலுத்த வேண்டியிருக்கும்.

உதாரணமாக, எம்பஸி மற்றும் மைண்ட்ஸ் பேஸ் ரெய்ட்டுகள் கார்ப்பரேட் வரிச் சலுகையைத் தேர்வு செய்யாததால், அவை அளிக்கும் டிவிடெண்டுக்கு முதலீட் டாளர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால், புரூக்ஃபீல்டு ரெய்ட் இச்சலுகை யைத் தேர்வு செய்திருப்பதால், அவை அளிக்கும் டிவிடெண்டுக்கு வரி உண்டு. வரிப் பிடித்தம் பல வகைகளில் இருந்தாலும், வரிக்குப் பிந்தைய ரெய்ட் வருமானம் நிச்சயம் இன்றைய நிலையில் பணவீக்கத்தைத் தாண்டியும், ரியல் எஸ்டேட் வாடகை வருமானத்தைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும்.

ஒட்டுமொத்தத்தில், உங்கள் போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதி ரெய்ட் திட்டத்தில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். வசிக்கும் வீட்டைத் தவிர, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து சீரான வருமானம் ஈட்ட நினைக்கும் அனைவரும் நிச்சயம் ரெய்ட்டில் முதலீடு செய்யலாம்.