Published:Updated:

ஏல விற்பனையில் சொந்த வீடு வாங்கலாமா..? கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

H O M E A U C T I O N

பிரீமியம் ஸ்டோரி

கோவிட் பெருந்தொற்று மாயாவி போல பலப்பல உருவங்கள் எடுத்து உலகை மிரட்டி வந்தாலும், இயல்பு வாழ்க்கை திரும்பும் என்ற நம்பிக்கையும் துளிர்த்து வருகிறது. கோவிட் காலத்தில் வேலை இழந்து தவிப்பவர்கள் ஒரு புறம் எனில், வீட்டைவிட்டு வெளியே வராததால் சேமிப்பை அதிகப் படுத்த முடிந்தவர்கள் மறுபுறம். இவர்களில் பலரும் ரியல் எஸ்டேட் முதலீடுகளைக் கவனிக்க ஆரம்பித்துள்ளனர்.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

வீடு என்பது அடிப்படைத் தேவை; கூடவே காலப் போக்கில் விலை ஏறக்கூடிய சொத்து என்பதால், அனைவரின் கனவும் சொந்த வீடாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. அரசும் ‘அனைவருக்கும் வீடு’ என்ற திட்டத்தை ஊக்குவிக்க வீட்டுக் கடன் வட்டியைக் குறைத்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் வீடு வாங்க எண்ணுவோர், வங்கிகள் ஏலம் விடும் சொத்துகளையும் கவனிக்கலாம்.

இந்த வருடம் வங்கிகள் மீண்டும் தங்கள் வாராக் கடன்களைக் குறைக்க சொத்துகளை ஏலம்விட ஆரம்பித்துள்ளன. 2021 மார்ச்சில் எஸ்.பி.ஐ வங்கி, வீடுகள், ஃபிளாட்டுகள், நிலம், கமர்ஷியல் சொத்து என்று ஆயிரக் கணக்கான சொத்துகளை ஏலத்தில் விற்பனை செய்துள்ளது. சொத்துகள் ஏன் ஏலத்துக்கு வருகின்றன?

ஏல விற்பனையில் சொந்த வீடு 
வாங்கலாமா..? கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

வீட்டுக் கடன் வாங்கியவர் மூன்று மாதங்கள் வரை இ.எம்.ஐ கட்டவில்லை எனில், வங்கி அவருக்கு நோட்டீஸ் அனுப்பும். அடுத்த 60 நாள்களுக்குள் அவர் கடனைக் கட்ட ஆரம்பித்துவிட்டால், வங்கி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காது. அவர் கடனைக் கட்டாதபட்சத்தில் அடுத்த 30 நாள்கள் கழித்து வங்கி அந்த வீட்டைக் கையகப்படுத்தி, ஏலத்தில் விற்க ஏற்பாடு செய்யலாம். ஏலத்தில் கிடைக்கும் பணத்தில் வங்கிக் கடனுக்கானதை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள பணத்தைக் கடன்தாரருக்குத் தரும்.

ஏலம் நடக்கும் செய்தி இந்தி மற்றும் ஆங்கில நாளிதழ்களிலும், வங்கியின் கிளைகளிலும் விளம்பரம் செய்யப்படும். இப்போது வங்கியின் வெப்சைட் தவிர, அஸெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி, மேஜிக் ப்ரிக்ஸ், ஃபோர்க்ளோஷர் இண்டியா.காம், இண்டியாபேங்க்ஆக்ஷன்.காம் போன்ற வலைதளங்களிலும் இவற்றைப் பார்க்க முடிகிறது. ஏலம் வரும் சொத்து விவரங்கள், குறைந்தபட்ச விலை, டெபாசிட் தொகை, மனுவை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி சொத்தைப் பார்வையிடுவதற்கான நாள், ஏலம் நடக்கும் தேதி, நேரம் ஆகிய விவரங்களும் அங்கே காணக் கிடைக் கின்றன.

மனுவுடன், கே.ஒய்.சி ஆவணங்கள் மற்றும் குறைந்தபட்ச விலையில் 10% அளவுக்கு டிராஃப்ட் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இ - ஆக் ஷன் மூலம் நடைபெறும் ஏலத்தில், வீடு உங்களுக்குக் கிடைக்கும்பட்சத்தில் 24 மணி நேரத்துக்குள் நீங்கள் குறிப்பிட்ட விலையில் 25% அளவு வங்கியில் கட்ட வேண்டும். வங்கிகளைப் பொறுத்து, 15 முதல் 20 நாள்களுக்குள்ளாக மீதமுள்ள 75 சதவிகிதத்தைக் கட்டி, சர்ட்டிஃபிகேட் பெறலாம். பத்திரப்பதிவு நடைபெறும் நாளில் வங்கி அதிகாரி வந்து பதிவை முடிக்க உதவுவார்.

வங்கிகள் ஏல விற்பனையை அதிவேகமாக நடத்தக் காரணங்கள் என்ன?

1. ஏலச் சொத்துகள் சந்தை விலையை விட 20% - 40% வரை குறைவான விலையில் கிடைக்கின்றன. தனியார் துறை வங்கிகளைவிட பொதுத்துறை வங்கிகளின் ஏலச் சொத்துகளின் விலை குறைவு.

2. வங்கிகள் ஏலம் விடும் சொத்து என்பதால், சட்ட பூர்வமான சிக்கல்கள் இருக்க வாய்ப்பில்லை. என்றாலும், சிக்கல் ஏதும் இல்லையா என்பதை நாமும் பார்க்க வேண்டும்.

3. அதே வங்கியில் அல்லது மற்ற வங்கிகளில் ‘ப்ரீ சாங்க் ஷன்’ பெறுவது எளிது.

4. கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருப்பதால், உடனே குடியேற இயலும். விலையேற்றம், கட்டி முடிப்பதில் சுணக்கம் போன்ற தொந்தரவுகள் கிடையாது.

5. குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் முன்பு கட்டப்பட்ட சொத்துகளாக இருக்கும் என்பதால், அநேகமாக நல்ல லொகேஷன்களில் அமைந் திருக்கும்.

6. நம் பட்ஜெட்டிலேயே சற்று பெரிய வீடுகள் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.

ஆனால், இதுபோன்ற ஏலங்களில் இறங்க விரும்பு பவர்கள் செய்ய வேண்டிய விஷயங்களும் உண்டு.

1. வங்கிகள் அனுமதிக்கும் நாள்களில் அனுபவம் வாய்ந்த இன்ஜினீயர்களுடன் சென்று சொத்தை முழுமையாகப் பார்வையிட வேண்டும். அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களிடம் பேசி, ஏரியாவின் சாதகப் பாதகங் களையும், விலை நிலவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

2. வீட்டை வங்கி கையகப்படுத்தி இருந்தாலும், அந்த வீட்டில் குடியிருப்பவர் காலி செய்யாமல் இருக்கலாம். அவரை அப்புறப் படுத்துவது சிக்கலான விஷயம் என்பதால், சொத்து காலியான நிலையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

3. வக்கீல் அல்லது ஆடிட்டர் உதவியுடன் சொத்து தொடர் பான ஆவணங்களை ஒன்று விடாமல் சரிபார்க்க வேண்டும்.

4. சொத்தின் விலையுடன் அதன் பத்திரப்பதிவுக் கட்டணம், ரிப்பேர் செலவுகள் போன்றவற்றையும் கணித்து, போதுமான அளவு பணம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். வங்கிக்குப் பணம் கட்டுவதில் சுணக்கம் நேர்ந்தால், ஏற்கெனவே கட்டி இருக்கும் பணத்தை முழுவதுமாக இழக்க நேரிடும் என்பதை மறக்கக் கூடாது.

5. நீங்கள் சமர்ப்பிக்கும் மனு மற்றும் கே.ஒய்.சி ஆவணங்களில் தவறு ஏதுமில்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

6. இ-ஆக் ஷன் சற்றுப் புதுமையானது என்பதால், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரியை முன்கூட்டியே சந்தித்து விவரங்கள் அறிந்துகொள்ளலாம். முன் அனுபவம் உள்ளவர்களின் உதவியை நாடலாம். ஏஜன்ட்டுகளைத் தவிர்ப்பது நல்லது.

7. சொத்தின் உரிமையாளரைப் பத்திரப்பதிவு சமயத்தில் சாட்சிக் கையெழுத்து போடும்படி அழைக்க முடிந்தால், பின்னாளில் சிக்கல் வராமல் தவிர்க்க இயலும்.

8. ஏலம் முடிந்தபின் ஏற்படும் சிக்கல் களுக்கு வங்கி பொறுப்பேற்காது.

இத்தகைய ஏல விற்பனைகள் வங்கி களுக்கும் வாங்குவோருக்கும் லாபகரமாக அமைகின்றன. ஒருமுறை ஏலத்தில் பங்கேற்று சொத்து வாங்கியவர்கள் மீண்டும் மீண்டும் ஏல விற்பனையைத் தேடுவதாகச் சொல்கிறார்கள் இந்தத் துறை சார்ந்தவர்கள். வீடு வாங்க விரும்புவோர் ஏல விற்பனைகளையும் கருத்தில் கொள்வது நலம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு