நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வீட்டுக் கடன் விண்ணப்பம் தள்ளுபடி... என்ன காரணமாக இருக்க முடியும்?

வீட்டுக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக் கடன்

கைகொடுக்கும் வீட்டுக் கடன்! - 17

வீட்டுக் கடனுக்கு விண்ணப்பம் செய்த ஒருவரின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுகிறது எனில், அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.அவற்றில் முக்கியமான காரணங்களை இங்கே பார்ப்போம்.

எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், 
https://winworthwealth.com/
எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், https://winworthwealth.com/

அடிப்படைத் தகுதிகள்...

வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும்முன், வீட்டுக் கடன் வழங்கும் வங்கி, வீட்டு வசதி நிறுவனம், நிதி நிறுவனத்தின் நிபந்தனை களைப் பூர்த்தி செய்யவில்லை எனில், அவர் செய்யும் விண்ணப்பம் தள்ளுபடியாக நிறையவே வாய்ப்புண்டு. உதாரணமாக, ஒருவர் வீட்டுக் கடன் பெற, பணி நிரந்தரம் செய்யப்பட்டு மூன்று ஆண்டு கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என ஒரு நிறுவனத்தின் விதிமுறை இருந்தால், அதை மீறி வீட்டுக் கடன் கிடைக்காது.

சில நிறுவனங்கள் வீட்டுக் கடன் வழங்குவதற்கு ஒரு குறிப்பிட்டத் தொகையை சம்பளமாகப் பெற வேண்டும் என விதிமுறையை நிர்ணயித் துள்ளன. ஒருவர் வாங்கும் சம்பளம் பொதுவாக, நகரங்களில் மாதச் சம்பளம் குறைந்தது ரூ.25,000, கிராமப் புறங்களில் குறைந்தது ரூ20,000-ஆக இருக்க வேண்டும். இதற்குக் குறைவான சம்பளம் வாங்கு பவர்களின் விண்ணப்பம் தள்ளுபடி ஆகும்.

தவறான தகவல்கள்...

வங்கி, வீட்டுவசதி நிறுவனம், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்யத் தொடங் கியதும் கடனுக்கு விண்ணப் பித்தவரின் வசிப்பிட விவரங்கள், வேலை பார்க்கும் அலுவலகம் தொடர்பான விவரங்களை நேரில் சென்று விசாரித்து சரிபார்க்கும்.

அதிகாரி அல்லது பிரதிநிதி வந்து விசாரிக்கும்போது, கடனுக்கு விண்ணப்பித்தவர் சரியான விவரங்களைச் சொல்வது மிக முக்கியம். ஆவணங்களில் இருக்கும் விவரங்களும் அவர் சொல்லும் விவரங்களும், குடும்பத்தினர் மற்றும் அலுவலகத்தினர் சொல்லும் அனைத்து விவரங்களும் ஆவணங்களில் இருக்கும் விவரங்களுடன் பொருந்திப் போக வேண்டும். இதில் ஏதாவது வேறுபாடு காணப் பட்டால் அப்போதே வீட்டுக் கடன் விண்ணப்பம் நிராகரிக் கப்பட அதிக வாய்ப் பிருக்கிறது.

இதேபோல் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த வரின் சம்பள விவரம், வங்கிக் கணக்கு அறிக்கை போன்ற வற்றில் வேறுபாடு இருந் தாலும் விண்ணப்பம் நிராகரிக்க வாய்ப்பு இருக் கிறது.

தவறான தகவல்கள் கொடுத்து விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு பதில் அதிகாரிகளிடம் உண்மையைச் சொன்னால் அவர்கள் அதற்குத் தீர்வு சொல்ல வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, ஒருவருக்கு சம்பளம் குறைவாக உள்ளது. இதனால், கடன் தொகை குறைவாகக் கிடைக்கும் எனில், வேலை பார்க்கும் அவரின் தந்தையை இணை விண்ணப்பதாரர் அல்லது இணை கடன்தாரராகச் சேர்ப்பதன்மூலம் கடன் தொகையை அதிகரிக்க முடியும். இது போன்ற தீர்வை அதிகாரிகள் அளிக்க வாய்ப்பிருக்கிறது.

வீட்டுக் கடன் விண்ணப்பம் தள்ளுபடி... என்ன காரணமாக 
இருக்க முடியும்?

குறைவான கிரெடிட் ஸ்கோர்...

கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில்தான் வங்கிகள் மற்றும் வீட்டுவசதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கின்றன. கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால், சுலபமாக வீட்டுக் கடன் கிடைக்கும். 700-க்குக்கீழ் இருந்தால், கடன் விண்ணப்பம் தள்ளுபடியாக வாய்ப்பிருக்கிறது.

ஒருவர் கிரெடிட் ஸ்கோரை அதிகமாக வைத்துக் கொள்ள கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன் தவணைகளையும் சரியான நேரத்தில் செலுத்தி வருவது அவசியமாகும்.வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் உங்களின் கிரெடிட் அறிக்கையை ஒரு முறை சரிபார்த்துக் கொள்வது நல்லது.

வேறு கடன்கள்...

வீட்டுக் கடன் வாங்க விண்ணப்பிக்கும்முன் வேறு கடன்கள் (தனிநபர் கடன் நகை, அடமானக் கடன், நுகர்வோர் போன்றவை) இருந்தால், அவற்றை அடைத்துவிடவும். இல்லை எனில், ஏற்கெனவே இருக்கும் கடன்களுக்கு அதிக மாதத் தவணை கட்டி வரும்பட்சத்தில் கடனைத் திரும்பக் கட்டும் தகுதி இல்லை என்று கடன் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்ய வாய்ப்பிருக்கிறது.

அடிக்கடி பணிமாற்றம்...

ஒருவர் அடிக்கடி வேலை மாறியிருந்தாலும் அவரின் வீட்டுக் கடன் விண்ணப்பம் தள்ளுபடி செய்ய வாய்ப்பிருக்கிறது. இப்படி அடிக்கடி வேலை மாறுபவரால் தொடர்ச்சியாக வீட்டுக் கடன் தவணையைக் கட்ட முடியாது என வங்கி அதிகாரிகள் நினைப்பதே இதற்குக் காரணமாகும். அதனால்தான், வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது பணியாற்ற வேண்டும் என்கிற நிபந்தனையை முன்வைக்கின்றன.

மேலும், வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்திருப்பவர் வேலை பார்க்கும் நிறுவனம் சிறப்பான நிறுவனம் இல்லை என்றாலும் விண்ணப்பம் நிராகரிக்கக்கூடும். மேலும், வேலைக்குச் சேர்ந்து சிறிது காலம்தான் ஆகியிருக்கிறது என்றாலும் விண்ணப்பம் தள்ளுபடி ஆகலாம். இதே போல, சுயதொழில் செய்பவர்கள் தொழில் தொடங்கி சிறிது காலம்தான் ஆகியிருக்கிறது என்றாலும் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படலாம்.

அதிக வயது...

வீட்டுக் கடன் வாங்குபவரின் வயது பணி ஓய்வுக்கு நெருக்கமாக இருப்பது மற்றும் அவருக்கு பணி ஓய்வுக்குப் பிறகு பென்ஷன் எதுவும் கிடைக்காது என்கிற நிலையில், அது போன்றவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.

கேரன்டரின் நிலை...

வீட்டுக் கடனுக்கு ஜாமீன் போடும் கேரன்டர், ஏதாவது கடன் வாங்கிவிட்டு சரியாகக் கட்டாமல் இருந்து அவர் தவறு இழைத்தவர் (Defaulter) பட்டியலில் இருந்தால் வீட்டுக் கடன் விண்ணப்பம் தள்ளுபடியாக வாய்ப்பு இருக்கிறது. எனவே, கேரன்டரைத் தேர்வு செய்யும்போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

முந்தைய கடன் விண்ணப்பம் தள்ளுபடி..

ஒருவர் ஏற்கெனவே ஒரு வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பம் செய்து தள்ளுபடி ஆகியிருக்கும் நிலையில், மீண்டும் அவர் வேறு வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தால் அதுவும் தள்ளுபடியாகவே அதிக வாய்ப்பிருக்கிறது. இப்படி மீண்டும் மீண்டும் விண்ணப் பித்து அது தள்ளுபடி செய்யப்படுவதற்கு பதில், அவரிடம் என்ன தவறு என்பதை சரிசெய்துகொண்டு, அதன் பிறகு வீட்டுக் கடனுக்கு விண்ணப்பம் செய்வதுதான் சரியாக இருக்கும்.

வருமான வரி கணக்குத் தாக்கல்...

ஒவ்வோர் ஆண்டும் சரியான தேதியில் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்திருப்பது அவசியம். நிறுவனம் படிவம் 16 கொடுத்தாலும் கொடுக்கவில்லை என்றாலும் ஒருவர் வரி கணக்குத் தாக்கல் செய்திருப்பது அவசியம். கடந்த இரு ஆண்டுகளுக்கு வரி கணக்குத் தாக்கல் செய்ய வில்லை எனில், வீட்டுக் கடன் விண்ணப்பம் தள்ளு படியாகவே வாய்ப்பிருக்கிறது.

சொத்தின் தன்மை...

வாங்கப்போகிற சொத்தைக் கட்டிய பில்டர் மோசடி எதிலும் சிக்காதவராக இருக்க வேண்டும். பில்டர் நம்பகமான வராக இருக்க வேண்டும். மேலும், அந்தச் சொத்து நல்ல மறுவிற்பனை மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும். விரைந்து விற்று பணமாக்கக்கூடியதாக இருக்க வேண்டும், சொத்தில் வில்லங்கம் எதுவும் இருக்கக் கூடாது. சில குறிப்பிட்ட பகுதிகளில் லே அவுட் மற்றும் பில்டிங் அப்ரூவல் பிரச்னை இருக்கும். அது போன்ற இடங்களில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள்/ அடுக்குமாடிக் குடிருப்புகளுக்கு வீட்டுக்கடன் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும். இந்தத் தகுதிகள் இல்லை எனில், வீட்டுக் கடன் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படலாம்.

மிகவும் பழைய மற்றும் சரியான பராமரிப்பு இல்லாத வீடாக இருந் தால், வீட்டுக்கடன் விண்ணப்பம் தள்ளுபடி ஆகும். மேலும், வீடு அமைந்திருக்கும் லே அவுட்டில் பிரச்னை இருந்தாலும் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படலாம்.

மேலும், மனை முறையான லே அவுட் அப்ரூவல் பெறப்பட்ட தாகவும், வீட்டுக் கட்டுமானம் முறையான கட்டட அனுமதி பெறப்பட்டதாகவும் இருப்பது மிக அவசியம். சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அனுமதி இருந்தால்தான் வீட்டுக் கடன் கிடைக்கும்.

பஞ்சாயத்து அப்ரூவல் மனைகள் மற்றும் அதில் கட்டப்படும் வீடு களுக்கு கடன் கிடைக்காது. அது போன்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

கையெழுத்து வேறுபாடு...

வீட்டுக் கடன் விண்ணப்பத்தில் போடப்பட்டிருக்கும் கையெழுத் தும் சொத்து ஆவணங்கள், வங்கி உள்ளிட்ட இதர ஆவணங்களில் இருக்கும் கையெழுத்துக்கும் அதிக வேறுபாடு காணப்பட்டாலும் விண்ணப்பம் தள்ளுபடியாகக் கூடும்.

லேண்ட் லைன் தொலைபேசி...

பொதுவாக, வீட்டுக் கடன் வழங்கும் வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் விண்ணப்பத்தில் உங்கள் அலுவலகத்தின் லேண்ட் லைன் தொலைபேசி எண்ணை நிரப்பச் சொல்லும். இந்த எண்ணில் உங்களை அழைத்து நீங்கள் அந்த நிறுவனத்தில்தான் வேலை பார்க்கிறீர்களா என்பதை ஆய்வு செய்யும்.

அந்த எண்ணை எடுப்பவர் அப்படி ஒருவர் வேலை பார்க்க வில்லை என்று சொன்னாலோ, நீங்கள் அந்த எண்ணிலிருந்து பேச வில்லை என்றாலோ சந்தேகத்தின் அடிப்படையில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால், கூடுமான வரையில் உங்களுக்கு மிக அருகில் அல்லது உங்கள் அறையில் இருக்கும் லேண்ட் லைன் எண்ணை மட்டுமே கொடுங்கள். இல்லை எனில், செல்போன் நம்பரை மட்டும் தருவது நல்லது. மேலும், தொலைபேசி பில்லுக்கான பணத்தை சரியாகக் கட்டவில்லை என்றாலும் விண்ணப்பம் தள்ளுபடி ஆகலாம்.

சொத்து உரிமை...

சொத்தில் மைனர்களுக்கு உரிமை இருக்கிறபட்சத்தில் அதை உரிமையாளர் குறிப்பிடாமல் உங்களுக்கு விற்கும்பட்சத்தில் உங்களின் வீட்டுக் கடன் விண்ணப்பம் தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளது. மேலும், பூர்வீக சொத்தைப் பாகப் பிரிவினை செய்யப்படாத நிலையில் குடும்பத்தில் ஒருவர் மட்டும் விற்கும் நிலை காணப்பட்டால் விண்ணப்பம் தள்ளுபடியாக வாய்ப்பிருக்கிறது.

இதர காரணங்கள்...

* முந்தைய கடன்களை அடைத்தற்கான என்.ஓ.சி (No Objection Certificate - NOC) சான்றிதழ் விண்ணப்பத்துடன் இணைக்கப்படவில்லை எனில், நிராகரிக்கப்படலாம்.

* போதிய அளவுக்கு கேரன்டர் இல்லை எனில், உங்களிடம் உள்ள ஃபிக்ஸட் டெபாசிட் பத்திரங்கள், எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி ஆகியவற்றைக் கொடுத்தால் கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

* சொத்தின் மதிப்பு பில்டர் அல்லது வீடு வாங்குபவரால் மிகவும் அதிகரித்து காட்டப்பட்டிருந்தால், அந்தக் கடனுக்கான விண்ணப்பம் தள்ளுபடியாக வாய்ப்பு இருக்கிறது.

* ஒருவர் இதுவரைக்கும் கடன் எதுவும் வாங்கவில்லை எனில், அவருக்கு கடன் வரலாறு இருக்காது. இது போன்றவர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட கூடும்.

பொதுவாக, வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் வாங்குபவர் அதைச் சரியாகத் திரும்பச் செலுத்தக் கூடியவரா எனப் பார்க்கும். இதில் சின்னதாக இரு சந்தேகம், மனுவை தள்ளுபடி செய்ய வாய்ப்புண்டு. எனவே, வீட்டுக் கடன் விண்ணப்பம் செய்யும்போது மிகக் கவனத்துடன் செயல்படுங்கள்!

(சொந்த வீட்டை வாங்குவோம்)

எந்த வேலையில் இருப்பவர்களுக்கு வீட்டுக் கடன் கிடைப்பது கஷ்டம்..?

காவல் துறை, நீதித் துறை, பத்திரிகை துறை போன்றவற்றில் வேலை பார்க்கும் காவலர்கள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், நிருபர்கள் ஆகியோருக்கு அவ்வளவு சுலபமாக வீட்டுக் கடன் கிடைக்காது. ‘இவர்கள் கடனை சரியாகக் கட்ட மாட்டார்கள். அதிகம் சட்டம் பேசுவார்கள்’ என வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் நினைப்பது முக்கியமான காரணமாகும். பல சமயங்களில் இது போன்றவர்களுக்கு வீட்டுக் கடன் வழங்குவதாக இருந்தால், கூடுதல் ஜாமீன் மற்றும் கேரன்டர்கள் கேட்கப்படுவது உண்டு. ஆனால், அண்மைக் காலத்தில் இந்த நிலை சற்று மாறியிருக்கிறது என்றே சொல்லலாம்.