Published:Updated:

ரூ.30 லட்சம்; ரூ.50 லட்சம்; ரூ.80 லட்சம்... உங்கள் பட்ஜெட்டில் சொந்த வீடு-கொரோனா கால ஸ்பெஷல் பிளான்!

சொந்த வீடு
பிரீமியம் ஸ்டோரி
சொந்த வீடு

கவர் ஸ்டோரி

ரூ.30 லட்சம்; ரூ.50 லட்சம்; ரூ.80 லட்சம்... உங்கள் பட்ஜெட்டில் சொந்த வீடு-கொரோனா கால ஸ்பெஷல் பிளான்!

கவர் ஸ்டோரி

Published:Updated:
சொந்த வீடு
பிரீமியம் ஸ்டோரி
சொந்த வீடு

சொந்த வீடு என்கிற ஆசை நம் எல்லோருக்குள்ளும் உருவாகி இருப்பதற்கு கொரோனாவும் ஒரு முக்கியமான காரணம். ஏனெனில், கொரோனா வைரஸ் நம்முள் ஓர் இனம் புரியாத அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல ஆண்டுகளாக வாடகை வீடுகளில் வசித்தவர்கள் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் சொந்த வீடு வாங்க அல்லது கட்டத் தயாராகிவிட்டார்கள்.

கடந்த 2020, மார்ச் மாதத்துக்குப் பிறகு, வீட்டுக் கடன் வட்டி விகிதம் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதால், வாடகை வீட்டில் இருந்தவர்களும், வீட்டுக் கடன் மூலம் சொந்த வீட்டுக் கனவை நிஜமாக்கி, புது வாழ்க்கையைத் தொடங்கத் திட்டமிட்டு வருகிறார்கள்.

ஒரு குடும்பத்தின் லைஃப் ஸ்டைல் மாற்றம், அவர்களுடைய சொந்த வீடு வாங்குவது மற்றும் கட்டுவதிலிருந்தே தொடங்குவதால், மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப, புதுப்புது தொழில்நுட்பங்களின் வருகைக்கேற்ப, சொந்த வீடு கட்டும்போது அல்லது கட்டிய வீட்டை வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் எனக் கட்டுமானத் துறைச் சார்ந்த நிபுணர்கள் சிலரிடம் கேட்டோம். அவர்கள் விரிவான வழிகாட்டு தலைத் தந்தார்கள்.

முதலில், தமிழகம் மற்றும் புதுச்சேரி அனைத்துக் கட்டடக்கலை பொறியாளர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் மற்றும் இன்ஜினீயரான எம்.சரவணன் சொந்த வீடு கட்டுபவர்கள் என்னென்ன விஷயங்களைக் கவனித்துக் கட்ட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

“இன்றைய நிலையில், வீடு கட்டும்போது அல்லது வீடு வாங்கும்போது, அந்த வீடு அனைத்து அம்சங்களிலும் அப்டேட்டாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். குறிப்பாக, கட்டுமானம் சார்ந்த தொழில்நுட்ப விஷயங்களில் வீடு கட்டுபவர்கள் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.

ஊரடங்கின்போது, நாம் எல்லோருமே வீட்டுக்குள் முடங்கியிருந்தோம். வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலைகள் நடந்தன. வீட்டில் இருந்தபடியே பிள்ளைகள் கல்வி பயின்றனர். வசிப்பதற்கு மட்டும் என்றிருந்த வீடு வேலை செய்ய, படிக்க என மாறியதால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் வீடு கட்ட / வாங்க நினைக்கிறார்கள்.

கொரோனா மாதிரியான பேரிடர், இனிவரும் காலங்களில் வருமா, வராதா என்பதை யாராலும் கணிக்க முடியாது. வந்தால், அப்போது வீட்டை அதற்கு ஏற்றபடி மாற்றிக் கட்டிக்கொள்ளலாம் எனில், அது சாத்தியப்படாது.

மேலும், அந்த நேரத்தில் அது கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும். அதனால், இன்று புதிதாக வீடு கட்டுபவர்கள் அனைத்து வசதிகளுடன்கூடிய ஒரு வீட்டைக் கட்டுவதே மிகச் சரியான முடிவாக இருக்கும்’’ என்றவர், ஒருவரது பட்ஜெட்டுக்கு (நிலத்தின் மதிப்பை சேர்க்காமல்) வீடு கட்டும்போது கவனித்துச் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி எடுத்துச் சொன்னார்.

ரூ.30 லட்சம்; ரூ.50 லட்சம்; ரூ.80 லட்சம்... உங்கள் பட்ஜெட்டில் சொந்த வீடு-கொரோனா கால ஸ்பெஷல் பிளான்!

ரூ.30 லட்சம் பட்ஜெட்டில்...

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களில் (Middle class) பெரும்பாலானவர்கள் வீட்டுக் கட்டுமானத்துக்காக ஒதுக்கக்கூடிய பட்ஜெட் ரூ.30 லட்சம். இந்த பட்ஜெட்டில் வீடு கட்டும்போது, தற்போதிருக்கும் கட்டுமானப் பொருள்களின் விலை, வேலையாள்களின் கூலி மற்றும் இதர செலவுகள் என எல்லாம் சேர்த்து, சுமார் 1,200 சதுர அடிக்கு இரண்டு படுக்கை அறை கொண்ட ஓர் அழகான வீட்டைக் கட்டி முடிக்கலாம்.

ஆழ்துளைக் கிணறு, இன்ஜினீயருக்கான கட்டணம் என எல்லாம் சேர்த்து குறைந்தபட்சம் ரூ.4 லட்சத்தைத் தனியாக எடுத்து வைத்துவிட்டால், இதர செலவுகளுக்கு ரூ.26 லட்சம் போதுமானதாக இருக்கும். ஆனால், இந்த பட்ஜெட்டுக்குள் கூடுதலாக அலுவலக அறைகளோ குழந்தைகளுக்கான தனிப் படிப்பு அறையோ கட்ட முடியாது.

இதே பட்ஜெட்டில் ஒரு படுக்கை அறையை உருவாக்கி, மீதிப் படுக்கை அறைக்கு இருக்கும் இடத்தை இரண்டாகப் பிரித்து தற்காலிக அலுவலக அறை மற்றும் குழந்தைகள் படிப்பதற்கான அறையை ரெடிமேடாக உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கான செலவு குறைவுதான். இந்தக் கூடுதல் அறையின் தேவை எதிர்காலத்தில் இல்லாமல் போகும்பட்சத்தில், அதை மாற்றி அமைத்து நிரந்தரப் படுக்கை அறையாகக்கூட கட்டிக்கொள்ளலாம்.

ஆனால், கட்டடத்துக்கான பிளானிங் லே-அவுட் போடும் போது, அதற்கு ஏற்றாற்போல வரவேற்பு அறையுடன்கூடிய ‘எல்’ வடிவ உள்கூடு அமைப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போதுதான் கூடுதல் ரெடிமேட் அறைகளைப் பிரித்து கட்ட வசதியாக இருக்கும். அல்லது வரவேற்பு அறையின் ஒரு மூலையில், அலுவலகப் பணிகளுக்குத் தேவையான அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், இந்த பட்ஜெட்டைத் தேர்வு செய்பவர்கள், கூடுமான வரை கீழ்தளத்தில் மட்டுமே 1,200 சதுர அடிக்கு வீட்டைக் கட்டாமல், கீழ் தளத்தில் பாத்ரூமுடன்கூடிய ஒரு வரவேற்பு அறை, ஒரு படுக்கை அறை மற்றும் ஓர் அலுவலக அறை வைத்துக்கொண்டு, முதல் தளத்தில் கிச்சன், பாத்ரூமுடன் கூடிய மற்றொரு படுக்கை அறை மற்றும் குழந்தைகளுக்கான சிறிய அறை எனக் கட்டினால் செலவை ஓரளவுக்கு பட்ஜெட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யலாம். ஏனெனில், ஒரு வீடு கட்டும்போது, அதன் அடித்தளத்துக்கான செலவுகள் மிக அதிகம். அதே சமயம், இந்த பட்ஜெட்தான் என முடிவு செய்த பிறகு, கட்டுமானப் பொருள்கள், வயரிங் மற்றும் பிளம்பிங் விஷயங்களில் வீண் விரையம் ஆகாதபடி திட்டமிட வேண்டியது அவசியம். அப்போது தான் மிச்சம் பிடிக்கும் தொகை, மேல்தளத்தில் வேலைகளுக்கு உதவி செய்யும்.

எம்.சரவணன்
எம்.சரவணன்

இந்த பட்ஜெட்டில் ஓரளவுக்குத் தான் இன்டீரியர் டிசைன் மற்றும் கிச்சன் அமைப்புகளை உருவாக்க முடியும். சற்று ஆடம்பரமான இன்டீரியர் மற்றும் மாடுலர் கிச்சன் தேவைப்படுபவர்கள், அதற்குத் தனியாகப் பணத்தை ஒதுக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். அல்லது அதற்கான வசதிவாய்ப்பு களைக் கட்டடம் கட்டும்போதே உருவாக்கிக்கொண்டு, எதிர் காலத்தில் பணம் இருக்கும்போது அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம்.

ரூ.50 லட்சம் பட்ஜெட்டில்...

இந்த பட்ஜெட் மேல் நடுத்தர வர்க்கத்தைச் (Upper middle class) சேர்ந்தவர்களுக்கானது. ரூ.30 லட்சம் பட்ஜெட்டில் சொன்னதை விடவும், கூடுதல் சிறப்பம்சங் களுடன் இந்த பட்ஜெட் வீட்டைக் கட்டலாம்.

1,200 சதுர அடியில், போர்டிகோ மற்றும் சிறிய கார்டனுக்கு இடம்விட்டு, இரண்டு அடுக்குமாடி கொண்ட கட்டடமாகக் கட்டலாமா அல்லது கீழ்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட வீடாகக் கட்டலாமா என்பதை எல்லாம் முன்பே திட்டமிடுவது அவசியம். அல்லது 1,800 சதுர அடி கொண்ட மனையாக இருந்தால், 600 சதுர அடியை கார் பார்க்கிங் மற்றும் கார்டன் ஏரியாவுக்காக ஒதுக்கிவிட்டு, மீதமிருக்கும் இடத்தில் கீழ்தளம் மற்றும் முதல் தளத்தை அமைக்கலாம்.

கொரோனாவுக்குப் பிறகு கார்டன் ஏரியாவுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. வீட்டுக்கு முன்பகுதியிலோ, பின்பகுதியிலோ கார்டன் அமைத்து, காலை எழுந்ததும் அங்கு நேரத்தை செலவிட மக்கள் இப்போது பெரிதும் விரும்புகிறார்கள். இதன் காரணமாக, இன்று வீட்டுக்கு லே-அவுட் போடும்போதே பால்கனி மற்றும் கார்டன் ஏரியா அமைப்பதற்கான தேவையை தெரிவித்து விடுகிறார்கள். இந்த இரு விஷயங்களைக் கூடுதலாக ரூ.50 லட்சம் பட்ஜெட்டில் ஒருவரால் செய்துகொள்ள முடியும்.

இந்த பட்ஜெட்டில் மாடுலர் கிச்சன், பிரமாண்டமான இன்டீரியர் வேலைகள் என வீட்டின் அழகை மேலும் அழகாக்க முடியும். இந்த வேலைகளை எதிர்காலத்தில் கூட செய்துகொள்ள முடியும் என்பதால், வீடு கட்டும் போது அந்தச் செலவுகளை மிச்சம் பிடித்து, ‘ஸ்மார்ட் ஹவுஸ்’ கான்சப்ட்டுகளுக்குத் தேவையாக ஒரு சில விஷயங்களையும் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்பதை மனதில் கொள்வது அவசியம்.

கொரோனாவுக்குப் பிறகு, வீட்டில் பல்வேறு இடங்களில் பல வகையான எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களைப் பொருத்தத் தொடங்கியுள்ளனர். இதற்கே நிறைய செலவு செய்ய வேண்டியிருப்பதால், ரூ.50 லட்சம் என்கிற பட்ஜெட்டைத் தாண்டிச் செல்லும் என்பதை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது!

ரூ.30 லட்சம்; ரூ.50 லட்சம்; ரூ.80 லட்சம்... உங்கள் பட்ஜெட்டில் சொந்த வீடு-கொரோனா கால ஸ்பெஷல் பிளான்!

ரூ.80 லட்சம் பட்ஜெட்டில்...

மூன்று படுக்கை அறை, வீடு முழுவதும் ஆட்டோமேட்டிக் சிஸ்டம், பெரிய கார்டன், விசாலமான வரவேற்பு அறை, அலுவலக அறை, குழந்தைகளுக்கான ப்ளே ரூம் என மிகப் பெரிய அளவில் யோசிப்பவர்களுக்கு ரூ.80 லட்சம் பட்ஜெட் உதவும். இந்த பட்ஜெட்டில் 2,000 முதல் 2,500 சதுர அடி கொண்ட மனையில் ‘ஸ்மார்ட் ஹவுஸை’க் கட்டி முடிக்கலாம்.

எதிர்காலத்தில் நம் வாழ்க்கை முழுவதும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தால் நிறைந்திருக்கும் என்பதால், வீட்டின் கதவுகளில் இருந்து லைட், ஃபேன், ஏசி, வாட்டர் ஹீட்டர் எனப் பெரும்பாலான எலெக்ட்ரானிக் உபகரணங்களை ஆட்டோமேட்டிக் பயன்பாட்டில் மக்கள் எதிர்பார்க் கிறார்கள். இதற்கு இந்த பட்ஜெட் போதுமானது. அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் வரையில் ஸ்மார்ட் ஹவுஸ்களுக்காகச் செலவு செய்யலாம்.

ஸ்மார்ட் ஹவுஸ் கான்சப்ட்டைத் தேர்வு செய்பவர்கள், ஒயரிங் வேலைகளை மேற்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தத் தொழில்நுட்பங்கள் ஸ்டார் ஹோட்டல்களில் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டாலும், தனிநபர் வீடுகளுக்கு சமீபகாலமாகத்தான் வழக்கத்துக்கு வர ஆரம்பித்திருக்கின்றன. அதனால் மற்ற விஷயங்களைவிடவும், இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

டிஸ்ப்ளே ஸ்கிரீனுடன்கூடிய ஸ்மார்ட் காலிங் பெல் சிஸ்டம், வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் வீட்டில் உள்ள மின் விளக்குகள் ஆட்டோமேட்டிக்காக ‘ஆன்’-ஆவது, ஃபேன், ஏசி என வீட்டு உபயோகப் பொருள்களை இன்டர் கனெக்டிவிட்டி ஆப்ஷன் மூலமாக இருந்த இடத்தில் இருந்தபடியே ஆன், ஆஃப் செய்வது என புது வித அனுபவங்களைத் தரக்கூடிய வகையில் ஸ்மார்ட் ஹவுஸ்கள் இருக்கும். மிக முக்கியமான இதற்கு வை-ஃபை இன்டர்நெட் கனெக்டிவிட்டி இருப்பது அவசியம்” என்றார்.

ஆர்.குமார்
ஆர்.குமார்

ஸ்மார்ட் ஹவுஸ்களின் தேவை..!

எதிர்காலத்தில் ஸ்மார்ட் ஹவுஸ்களின் தேவை குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் நவீன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.குமாரிடம் பேசினோம்.

‘‘கொரோனாவுக்குப் பிறகு ஸ்மார்ட் ஹவுஸ்கள்தான் இனி நம் எதிர்காலமாக இருக்கப் போகின்றன. வெளிநாடுகளில் இருப்பது போலவே, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மாதிரியான மெட்ரோ நகரங்களில் ஸ்மார்ட் ஹவுஸ் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வீட்டின் முகப்பு கேட்டில் ஆரம்பித்து, வாசல் கதவு, காலிங் பெல், எலெக்ட்ரிக் பொருள்கள் என அனைத்தையும் இன்டர் கனெக்டிவிட்டி மூலம் ஆட்டோமேடிக் ஆக்குவதான் ‘ஸ்மார்ட் ஹவுஸ்’ கான்சப்ட்டின் தனிச்சிறப்பு.

உதாரணத்துக்கு, நீங்கள் வெளியூர்களுக்குச் சென்றிருக் கும் சமயம், உங்கள் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருந்தால், அவர்களை வீட்டுக்குள் அனுப்ப வேண்டிய அவசியம் இருந்தால், நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்களோ, அங்கிருந்து கொண்டே வீட்டின் கதவை ஸ்மார்ட்போன் உதவியுடன் உங்களால் திறந்து விட முடியும். வீட்டுக் கட்டுமானத்தில் அந்த அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்திருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலை ஓரளவு முடிவுக்கு வந்துள்ள நிலையிலும், ஐ.டி ஊழியர்கள் முதல் அனைத்து துறையினரும் வீட்டில் அமர்ந்து வேலை பார்க்கும் சூழல் உருவாகி இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டிருந் தாலும், எதிர்காலம் ஸ்மார்ட் வகுப்புகளை நோக்கியே நகரத் தொடங்கியிருக்கிறது.

பணியாளர்கள் அலுவலகத் துக்கு வரத் தேவை இல்லாத, ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ கலாசாரம் எதிர்காலத்தில் வழக்கமானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதனால், தற்போது வீடு கட்டு பவர்கள் அதற்கான வசதி வாய்ப்பு களை இப்போதே ஏற்படுத்திக் கொள்வது அவசியம்” என்றார் தெளிவாக.

செலவுகளை மிச்சப்படுத்தும் கிரீன் ஹவுஸ்கள்...

வீடு கட்டும்போது கிரீன் ஹவுஸ் கான்சப்ட் விஷயங்களில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து, காவியா ஹோம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஜகதீஸ் ஜெயராமனிடம் கேட்டோம்.

ஜகதீஸ் ஜெயராமன்
ஜகதீஸ் ஜெயராமன்

“கொரோனா பேரிடர் பிரச்னைகள் ஒரு பக்கம் இருக்க, புவி வெப்பமயமாதல் என்கிற விஷயம் இன்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. கால நிலை மாற்றம், அதனால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள், புயல், வெள்ளம் என நாம் அனைவரும் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். இந்த இயற்கை மாற்றங்களால் நாமும், நம் வீடும் பாதிப்படையாமல் இருக்க, ‘கிரீன் ஹவுஸ்’ கான்சப்ட்டில் வீட்டைக் கட்டுவது முக்கியம்.

கிரீன் ஹவுஸ் கான்சாப்ட் என்றதும், அதற்கென தனியாக பட்ஜெட் ஒதுக்க வேண்டும்; செலவுகள் அதிகமாகும் என்கிற எண்ணத்தில் பெரும்பாலானவர்கள் தவிர்த்துவிடுகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. ஒரு சில கட்டுமானப் பொருள்கள் ஸ்பெஷலாக வாங்க வேண்டுமே தவிர, மொத்தச் செலவுகளையும் கிரீன் ஹவுஸ் கான்சப்ட் அதிகப்படுத்திவிடாது.

பெரும்பாலும், வீடு கட்டுவதற்காகப் போடப்படும் பட்ஜெட்டிலேயே அனைத்துச் செலவுகளையும் அடக் கலாம். ஆனால், வீட்டுக்கான உள்கட்டமைப்பைத் திட்டமிடும்போதும், வீட்டைக் கட்டும் கட்டுமான பொருள்களைத் தேர்வு செய்யும்போதும் கிரீன் கான்சப்ட் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.

சூரிய ஒளி வீட்டுக்குள் அதிகம் வரும்படி வீட்டைக் கட்டும்போது மின்சாரச் செலவுகள் மிச்சமாவதுடன். அந்த வீட்டில் வசிக்கும் சூழலே வித்தியாசமாக இருக்கும். அதேபோல, காற்றோட்டம் அதிகம் இருப்பதுபோல பெரிய ஜன்னல்களை அமைக்கும் போது, ஏசி பயன்பாடு குறைந்து மின்சாரச் செலவுகள் மிச்ச மாகும். முடிந்தால், சோலார் பேனல்களை வீட்டின் மாடியில் அமைத்து, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்தலாம். இதனாலும் மின்சாரச் செலவு பெருமளவு குறையும்.

செங்கல்லுக்கு மாற்றாக வீட்டுக்குக் குளுமை சேர்க்கும் கற்கள் சந்தையில் கிடைக்கின்றன. இதைப் பயன்படுத்துவதன் மூலம், பூச்சுக்கான சிமென்ட் மற்றும் மணலுக்காக அளவு குறைய வாய்ப்பிருக்கிறது.

அதேபோல, வீட்டின் மாடி யில் ஒட்டக்கூடிய டைல்ஸ் களிலும் வெப்பம் வீட்டுக்குள் வராதபடி கூடுதல் தொழில் நுட்பங்களுடன்கூடிய டைல்ஸ் கள் பலவும் சந்தைக்கு வந்திருக் கின்றன. அதைத் தேர்வு செய் வதன் மூலம் வீட்டை எப்போதும் குளுமையாக வைத்திருக்கலாம்’’ என்றார் அவர்.

ஆக, கொரோனா சூழலுக்குப் பிறகு, சொந்தமாக வீடு கட்டத் திட்டமிடுகிறவர்கள் மேலே சொல்லப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொண்டு செயல் படுவது மிகவும் நல்லது!

ரூ.15 லட்சத்திலும் வீடு கட்டலாம்!

“இன்றைய நிலையில், சென்னையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்று, அவர்களின் கமர்ஷியல் கட்டடங்களுக்கான கட்டுமானத்தை, ரெடிமேடு கான்கிரீட் சுவர்களைக் கொண்டு கட்டுகிறார்கள். இவர்களின் அனைத்துக் கட்டடங்களும் ஒரே மாதிரியான லே-அவுட் பிளானிங்கில் இருக்கும் என்பதால், அதற்கென தனியாக மோல்டிங் செய்து, கான்கிரீட் சுவர்களை உருவாக்குகிறார்கள். கான்கிரீட் சுவர்களை உருவாக்கும்போதே, எலெக்ட்ரிக் ஒயரிங் பாயின்ட்டுகள் மற்றும் பிளம்பிங் பாயின்ட்களை உருவாக்கிவிடுவார்கள்.

கட்டடங்களுக்கான அடித்தளத்தைப் போட்டுவிட்டு, திட்டமிட்டபடி குறுகிய காலத்துக்குள் கான்கிரீட் சுவர்களைப் பொருத்தி, முழு வேலையும் முடிக்கப்படும். இதனால் செலவு எனப் பெருமளவு மிச்சமாகும். இந்த கான்சப்ட்டைத் தனிநபர் வீடுகளுக்கும் பயன்படுத்த முடியும். ஆனால், ஒவ்வொரு வீட்டையும் ஒவ்வொரு மாதிரி கட்ட முடியாது. அதற்காக மோல்டிங்கைத் தனித்தனியாகச் செய்யும்போது கூடுதல் தொகை செலவாகும். ஒரே மோல்டிங், 1,000 வீடுகள் எனில், ரூ.15 லட்சத்திலும் இரண்டு படுக்கை அறை கொண்ட முழு வீட்டையும் கட்டலாம். கான்கிரீட் சுவர் கான்சப்டில், இன்ஜினீயர் ஒருவர் திட்டமிட்டு கட்டும் பட்ஜெட் வீடுகளை, மக்கள் வாங்கத் தயாராக இருந்தால் இந்த முறை சாத்தியமாகும்.

கான்கிரீட் சுவர்கள் பல நாள்கள் கியூரிங் செய்யப்படுவதால், செங்கல் சுவர்களைவிட, உறுதியாகவும் நீடித்து உழைக்கும் தன்மையும் கொண்டது. கான்கிரீட் சுவர்கள் என்பதால், வீட்டுக்குள் வெப்பம் அதிகமாக இருக்குமோ என்கிற சந்தேகம் தேவையில்லை. ஏனெனில் கான்கிரீட் சுவர்களின் தடிமன் வழக்கமான செங்கல் சுவர்களின் தடிமனைவிட மிக மிகக் குறைவு. இந்த கான்கிரீட் சுவர் கான்சப்ட்டுக்கு அரசுத் தரப்பில் இருந்து ஒத்துழைப்புக் கிடைத்தால், சிறிய பட்ஜெட்டில்கூட சொந்த வீட்டுக் கனவை மக்கள் நிஜமாக்கிக்கொள்ள முடியும்” என்றார் இன்ஜினீயர் எம்.சரவணன்.

மழைநீர் சேமிப்புத் தொட்டிக்கு ரூ.30,000!

“இந்த பூமியில் நாம் எத்தனையோ விஷயங்களை எடுத்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தப் பூமிக்காக ஏதாவது திருப்பிச் செய்கிறோமா என்கிற கேள்வியைக் கேட்டால், இல்லை என்பது தான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும். ரூ.30 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.80 லட்சம் அல்லது அதற்கும் மேல் பணத்தைச் செலவு செய்து வீடு கட்டுபவர்கள் யாராக இருந்தாலும், கூடுதலாக அல்லது பட்ஜெட்டுக்குள் 30,000 ரூபாயை ஒதுக்கி மழை நீர் சேமிப்புத் தொட்டியை உருவாக்க வேண்டும். வழக்கமாக, 5 முதல் 10 அடி ஆழத்தில் குழியைத் தோண்டி, அதற்குள் மழைநீர் போவதற்கான ஏற்பாடுகளை செய்வது வழக்கம். ஆனால், இந்தக் கட்டமைப்பால் மழைநீர் பூமிக்கு அடியில் போகாது. இதற்கு மாற்றாக, ஆழ்துளைக் கிணற்றுக்காகக் குழி தோண்டும்போது, ஒரு மீட்டர் இடைவெளியில் மணல் திட்டு வரை (20-30 அடி ஆழம் வரை) குழி தோண்டி மற்றொரு பிளாஸ்டிக் குழாயை இறக்கி, அதற்கு மேல் பகுதியில் வடிகட்டும் சல்லடையுடன் ஒரு சிறிய தொட்டி கட்டி, அதன் வழியாக மழைநீரை இறக்கினால், வீடு கட்டியிருக்கும் இடத்தின் நிலத்தடி நீரின் மட்டம் நிச்சயம் உயரும். இதனால் வெயில் காலங்களில் நீர் பிரச்னையைத் தவிர்க்க முடியும்” என்றார் இன்ஜினீயர் எம்.சரவணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism